மன்மதன் 51
அத்தியாயம் : 51
மன்மதன் தேசத்து மல்லிகை
மாலதி மாலை வேலை விட்டு வரும் சமயம் செழியனின் கார் வீட்டு வாசலில் நிற்க," அவர் எதுக்கு வந்து இருக்காங்க "..என்று யோசித்து கொண்டே உள்ளே நுழைந்தாள் மாலதி..
அங்கே ஹாலில் மாலதியின் அம்மா தாமரை ஏதோ குற்றவாளி போல கையை பிசைந்து கொண்டு நிற்க செல்லக்கிளி மற்றும் செழியன் அங்கே இருந்த சோபாவில் அமர்ந்து இருந்தனர்..மாலதிக்கு செல்லக்கிளியின் வரவு குழப்பத்தையே கொடுத்தது..
மாலதி வரவை கண்டும் அவளை கண்டு கொள்ளாத செல்லக்கிளி, " என்ன தாமரை நான் சொன்னதை யோசிச்சு பார்த்தியா??"..
அவரோ பதில் அளிக்காமல் கண்களில் நீர் வர நிற்க
அவரோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் , "நீ வர சொல்லி தான் நான் இவ்வளவு தொலைவு வந்து இருக்கேன்..இப்படி அழுதுட்டு இருந்தா என்ன அர்த்தம் தாமரை "... என்று கூற
"தெரியும் அம்மா"... என்று மட்டும் தாமரை கூற இங்கே என்ன கூத்து நடக்கிறது என்று புரியாமல் முழிக்க
"இந்தா தாமரை இது தான் விவாகரத்து பத்திரம் இதுல உன் பொண்ணு கிட்ட கையெழுத்து வாங்கி கொடு..பொறவு செழியன் கையெழுத்து போடுவான்".....என்க
மாலதியின் கண்கள் அதிர்ச்சியாக செழியனை பார்க்க செழியனும் அதிர்ந்து தனது பாட்டியை பார்த்தான்..
"என்ன அப்படி பார்க்கிறீங்க என்ன தாமரை நீ ஏதும் சொல்லலையா உன் மவளுக்கு??.. எத்தனை நாள் இப்படியே இருக்கிறது என் பேரன் செஞ்சது என்ன குத்தம் என்ன அடிச்சானா இல்லை கொடுமைப்படுத்தினானா??.. என்ன செஞ்சான் ??...இவளுக்கு அவன் கூட வாழ பிடிக்கல அவன் வாழ்க்கை இப்படியே போக நான் விட மாட்டேன் ..
இது தான் நல்ல முடிவுன்னு எனக்கு தோணுச்சு இந்த பத்திரத்துல கை எழுத்து போட்டு குடுக்க சொல்லு நான் போய்கிட்டு இருக்கேன் அப்படியே என் பேரன் கட்டின தாலி அவ கழுத்துல தான் கிடக்கு அதையும் கழட்டி கொடுக்க சொல்லு "...என்று ஒரு போடாக போட செழியன் மற்றும் மாலதி அதிர்ந்து சிலைபோல நின்றனர்
"பாட்டி என்ன பண்றீங்க இதுக்குதான் என்னை இங்க வரனும்னு சொன்னீங்களா???"... என்று செழியன் காட்டு கத்து கத்த
"அவங்கல திட்டாதீங்க மாப்பிள்ள நான்தான் வர சொன்னேன்"..என்று தாமரை இருவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்..
"உங்களுக்கும் ஒரு வாழ்க்கை வேணும் மாப்ள நீங்க ஒரு தப்பும் பண்ணல .. இந்த சிறுக்கினால தான் நீங்க வந்து பட்ட மரமாய் நிக்கிறீங்க அது காட்சி பூத்து குலுங்க வேண்டாமா
இது இப்படியே திமிர் எடுத்து திரியட்டும் நீங்களாவது நல்லா இருங்க மாப்பிள்ளை"... என்று கூற மாலதி அதிர்ந்தாள்...செழியனோ என்ன இப்படி செய்து வீட்டீர்கள் என்பது போல பார்த்தான்..
"என்னடி அப்படி பார்க்குற ஆமா நான்தான் வர சொன்னேன் அதுக்கு என்ன இப்போ உன்னால இது தம்பி இப்படி கிடக்குது ..அது ஒரு வாழ்க்கை வேண்டாம் அப்படியே இருந்தா போதுமா சொல்லு அவங்களாவது நல்லா இருக்கட்டும் அதுக்காக நான்தான் வர சொன்னேன் இந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடு நீ கட்டி இருக்க தாலிய அவுத்து கொடு "... என தாமரை படபடவென கூற கண்கள் கலங்க மாலதி செழியனை கேள்வியாக பார்த்தாள்..
பாவம் செழியனுக்கு இந்த விஷயமே தெரியாது அது வேறு விஷயம்.. பாட்டி சென்னை போக வேண்டும் என்று கூறவும் அவன் நிலாவின் வீட்டிற்கு தான் போக வேண்டும் என்று கூறவே செழியன் அழைத்து வந்தான்..
ஆனால் இங்கே வந்ததும், " வண்டியை திருப்பு தாமரை பார்க்கணும்".. என்று கூற ,பாட்டியை சாக்கிட்டு ஒரு முறையாவது மாலதியை பார்க்கலாமே என்று நினைக்க ஆனால் பாட்டியோ தனது ராஜ தந்திரத்தை காட்டுவார் என செழியன் நினைக்கவே இல்லை..
"பாட்டி நான் உங்க கிட்ட இவளை விவாகரத்து செய்யறேன்னு சொன்னேனா நான் இப்படியே இருந்துட்டு போறேன்..கவலையை விடுங்க நீங்க "...என்று செழியன் கூற
"அப்படி எல்லாம் இருக்க முடியாது செழியா ஒன்னு இவ கூட வாழு இல்லையா இவளை தலை முழுகிட்டு வேற பொண்ணை பாரு ..இந்த இரண்டுல ஒன்னு நடந்தே ஆகனும்"..என்று கூறியவர் அதிர்ச்சியாகி நிற்கும் மாலதியை பார்த்து ,
"என்ன தாயி வீட்டை விட்டு போக மட்டும் தெரிஞ்சது தாலியை கழட்டி வெச்சிட்டு போக தெரியாதா உனக்கு"... என்று கேட்க
என்ன தான் பட்டணத்து வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தாலும் மாலதியும் பிறப்பால் ஊர்க்காரி ஆகிற்றே..
"அது வந்து"... என்று வார்த்தையை மென்று முழுங்க
"என்ன முழுங்கிட்டு இருக்க நான் தெரியாம தான் கேக்கிறேன் இவ படிக்கலன்னு சொல்லி தராதரம் இல்லாமல் நடந்துகிட்டானா.. இல்லை உன்னை பார்த்ததும் கையை பிடிச்சு இழுத்தானா..இல்லை உன்கிட்ட தப்பா நடந்துகிட்டானா??" என்று கேட்க
அவளிடம் பதில் இல்லை தலை குனியவே முடிந்தது இதை ஒன்றும் அவன் இன்று வரை அவளிடம் செய்யவில்லையே...
"பாட்டி நீ கிளம்பு போலாம் "...
"என்ன உன் பொண்டாட்டிய கேள்வி கேட்டுட்டேன்னு நீ அவளுக்கு துணைக்கு வரியோ??..அப்போ அவளை கையெழுத்து போட சொல்லு நான் வரேன் இல்லாட்டி நான் பேசிட்டி தான் இருப்பேன் செழியா"..என்று முடிவாகவே நின்றார்...
"உனக்கோ இல்லை உன் பொண்டாட்டிக்கோ ஒன்னும் இல்லாமல் இருக்கலாம் எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு.. நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு..அது உங்க இரண்டு பேரால கெட்டு போக நான் விட மாட்டேன்...கல்யாணம் ஆகியும் இவ உன் கூட வாழாம இங்கே இருந்தா என்ன அர்த்தம்"..மாலதியை தாக்கி கொண்டே இருந்தார் ..
அதில் கடுப்பான மாலதி, "உங்களுக்கு என்ன கையெழுத்து தானே போடனும் தாங்க கையெழுத்து போட்டு தரேன் "...என்று மாலதி கூற
"கூடவே தாலியையும் உன் கையால கழட்டி கொடுத்திடு ..அதையும் மறந்துடாத"..என்று அவள் ஒதுக்கிய விஷயத்தை எடுத்து கொடுக்க மாலதிக்கு அது மட்டும் ஒரு உறுத்தலாக இருந்தது..
"என்ன முழிச்சுட்டு இருக்க அது தான் மாப்பிள்ளையை வேணாம்னு சொல்லிட்டியே பொறவு என்ன"... என்று தாமரை கூற
அவளோ பொறுத்து பார்த்தவள் முடியாமல் போகவே மனதை கல் ஆக்கி கொண்டு தாலியை அவிழ்க்க போனாள் அதை கண்டு அதிர்ச்சியான செழியனோ, " கொஞ்சம் நிறுத்து மாலதி..நான் இன்னும் சாகல செத்ததுக்கு பின்னாடி அவிழ்த்துக்கோ "..என்று கூறியவன் அங்கே இருந்த அனைவரையும் பார்த்து,
"உங்களுக்கு எல்லாம் இப்போ என்ன நான் கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்டேனா இல்லை இவ தான் கேட்டாளா??
என்னை பொறுத்தவரைக்கும் இவ என்னை விவாகரத்து பண்ணினாலும் சரி பண்ணலனாலும் சரி எனக்கு இவ தான் பொண்டாட்டி..
நான் ஒன்னும் இவளை எல்லோரும் சொன்னாங்கன்னு சொல்லி கல்யாணம் பண்ணல..இல்லை இவ சொல்ற மாதிரி பணத்துக்காக அடிமை மாதிரி விலை கொடுத்து வாங்கல காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..
எப்போ காதலிச்சேன்னு எனக்கு தெரியல இதோ இவ அப்பா இறந்த அப்போ அழுத்துட்டு நின்னுட்டு இருந்தா அப்ப தோணுச்சு இவளை இவளோட அப்பா உயிரோடு இருந்தா எப்படி பார்த்துப்பாரோ அப்படி பார்த்துக்கனும்னு இந்த நொடி வரை அப்படி தான் நான் பார்த்துட்டு இருக்கேன்..
நான் படிக்கலை அது அவளுக்கு பிடிக்கலை அவ சொல்றதும் நியாயம் தானே என் கூட ஜோடியா நடக்க அவளுக்கு எப்படி மனசு வரும்.. குறைச்சலா தான் இருக்கும்"... என்று கசந்த குரலில் கூற
"உனக்கு என்ன அய்யா நீ ராசா யா உன்னோட அருமை இந்த பாவி மகளுக்கு புரியலயே".. என்க..
"இல்ல பாட்டி அவளுக்கு புரியும் பாட்டி.. புரியாட்டியும் பரவாயில்லை அவளை நிம்மதியா இருக்க விடுங்க அவளை நேசிட்டுட்டே என் வாழ்க்கையை நான் ஓட்டிடுவேன் ..ஆனால் வேற ஒரு பொண்ணு மட்டும் ஏன் வாழ்க்கையில் நுழைய முடியாது".. என்று கூற
தாமரையோ உடைந்து அவளிடம் வந்து , "பாரு டி பாரு அந்த மனுசன் சொன்னதை கேட்டியா இந்த மாதிரி உனக்கு புருஷன் கிடைக்க கொடுத்து வெச்சு இருக்கனும் டி..நாங்க இத்தனை பேர் சொன்னது உனக்கு புரியலையா..அப்படி என்ன டி உனக்கு பிடிவாதம்..அந்த மனுசனை மாதிரி ஒருத்தனை உன்னால தேட முடியுமா..உன் வாழ்க்கையை நாசமாக்கிட்டு இருக்கிறது பத்தாதுன்னு எதுக்கு அவரோட வாழ்க்கையை அழிக்கற"...என்று அவர் பங்கிற்கு குமுற
இது நாள் வரை இவனை பொறுக்கி என்று நினைத்து இருந்தவளுக்கு அவனது மறுபக்கம் தெரிய தன்னை ஒருத்தன் உயிருக்கு உயிராக காதலிக்கிறான் என்பதே எதிராளிக்கு கிடைத்த வரம் அல்லவா..
காதலிக்கிறோம் என்பதை விட காதலிக்கப்படுகிறோம் என்று கூறுவது எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கும் என்பது அவளுக்கு அந்நேரம் புரிப்பட்டது..
தன் தாயோ இல்லை செல்லக்கிளி பாட்டி கேட்ட கேள்விகளோ அவளை மாற்றவில்லை அவன் கூறிய அவள் மீதான நேசமே மாலதியை சடுதியில் மாற்றியது..
அதிலும் தன் தந்தையை போல அவன் பார்த்து கொள்ள விரும்புவதாக அவன் கூறியதை கேட்டு மகிழ்ந்த மாலதி தன்னை விட்டு செல்லும் கணவனின் அருகே சென்று வார்த்தைகள் தடைப்பட்டு கையை பிடிக்க போனவள் விழிகள் கலங்க அவனை கண்டு அவளுக்கு பேச்சு தடைபட்டு இருந்தது..
ஆனால் அதற்கும் செழியனே பதில் கூறினான் , "அவங்க சொன்னாங்கன்னு சொல்லி இனி ஒரு தடவை என் வாழ்க்கையில் நுழைய முயற்சி செய்யாத மாலதி அதை என்னால தாங்கிக்கொள்ள முடியாது "...என்று கூறிய செழியன் கிளம்பி விட்டான்...
மாலதிக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியும் மறுபக்கம் அவனை இத்தனை நாட்கள் வருத்தப்பட வைத்ததை நினைக்கும் போது அவளுக்கு சங்கடமாக தான் இருந்தது..
இனி அவன் இல்லாமல் தான் இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டாள்..
ஆனால் அவனாக திரும்பி வர மாட்டான் என்பதை புரிந்து கொண்டவள் அவனை தேடி செல்ல முடிவெடுத்தாள்..,
அதன் படியே அவனது வீட்டுக்கு மறுநாளே சென்றவள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டாள் மாலதி..அனைவரும் அவளை மன்னிக்க செழியன் மட்டும் கண்டு கொள்ளாமல் இருந்தான்..
ஒதுங்கி செல்லும் அவனிடம் நேராக போய் நின்றவள், "உங்களுக்கு என்ன பிரச்சனை நான் திருந்தி வந்து இருக்கேன் என்னை எதுக்கு இப்படி கண்டுக்காமல் அவாய்ட் பண்றீங்க "...
"நீ மத்தவங்க விருப்பத்துக்காக வரலேயே "..
"இல்லை"..
"நான் படிக்கலை மாலதி "..
"அது தான் நீங்க கொடுத்த படிப்பு என் கிட்ட இருக்கே அது போதும் நமக்கு"... என்க
"இது சரி வராது மாலதி நாளைக்கு உனக்கு என்னை நாலு பேர் முன்னாடி நிறுத்தி இது தான் என் கணவன்னு சொல்ல உன்னால முடியாது"..என்றான் வேதனையோடு
