மன்மதன் 43
அத்தியாயம் : 43
மன்மதன் தேசத்து மல்லிகை
"என்னடி அந்த அண்ணா இப்படி பார்க்கிறாங்க".. என்று தன் தங்களுக்கு பின்னால் இருந்து தாங்கள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த மனுவை திரும்பித் திரும்பி பார்த்தபடி கேட்டாள் வனிதா..
நிலாவோ மெல்ல திரும்பி அவனை பார்க்கவும் நண்பர்கள் வட்டத்துக்குள் இருந்தாலும் மனுவின் பார்வை அவளை தான் சுற்றி கொண்டு இருக்க அதே நேரம் காலையில் அவனது அருகாமையில் முக்குளித்த தருணங்களை நினைவுக்கு கொணர்ந்தவளின் மனம் பல வித உணர்ச்சிகளை கொடுத்தாலும் அதே நேரம் மனு அன்று அவள் கூறினால் என்பதற்காக அவளது வீட்டாரை அனுப்பி வைத்தும் அவளுக்கு ஆதரவாக நின்றது மட்டுமின்றி இன்று வரை மனு மிக கண்ணியமாக நடந்து கொண்டதை எண்ணி அவளுக்கு ஒரு பக்கமாக அவன் மீது நல்ல அபிப்பிராயம் எழ அதே நேரம் அவன் இதோ சற்று முன் அவளது அண்ணனிடம் சண்டை இட்டது அவளுக்கு சற்று நெருடலை கொடுத்தது..
இயல்பிலே யாரிடமும் சண்டை இட்டு பழகியிராத அவளுக்கு அவனுடனும் சண்டையிட தோன்றவில்லை ஏனெனில் அவன், " உன் தேவையை நான் கவனித்து கொள்கிறேன்".. என்று கூறிய போது அவன் கண்களில் ஒரு தீவிரத்தை கண்ட அவளுக்கு அவள் மீதான அவனின் அக்கறை புரியவே செய்தது...
அது மனதிற்குள் ஏதோ ஒரு மூலையில் மகிழ்ச்சியை அளிக்க தன் அண்ணனிடம் கூட தன்னை விட்டு கொடுக்கவில்லை என்று அவள் மகிழ்ந்த அந்த நொடி அவளுக்கு மாயாவின் எண்ணம் சட்டென்று வரவும் அவள் நான் என்ன நினைத்து கொண்டு இருக்கிறேன்..அவன் அவள் ஆட்கள் முன் நடிக்கிறான் என்று அவள் நினைக்க அவள் இதயம் இரண்டாக பிளப்பது போல வேதனை அளித்தது..
இருவரும் ஒன்றாக இருந்த சமயத்தில் இருந்து பெண்களுக்கே உரித்தான மஞ்சள் கயிறு மேஜிக் நிலாவுக்கு வேலை செய்து கொண்டு தான் இருந்தது..ஆனால் எப்போதும் அவளை தடை செய்யும் மாயா மந்திரம் இன்றும் அவளை சந்தோசிக்க விடாமல் தடை செய்தது..தன் விதியை எண்ணி நொந்த படி தோழியின் கேள்விக்கு பதில் அளிக்காமல் இலேசாக சிரித்தபடி தோழியுடன் அவளது வகுப்புக்கு சென்றாள் வெண்ணிலா
மாயா இருவரையும் ஒன்றாக கண்டவளுக்கு மனுவின் சுவாபம் தெரியுமாதலால் ஒருவேளை நிலாவை வளைத்து விட்டானோ என்று அவள் முதலில் நெனைத்தவள் இதை பற்றி மனு தனியாக கிடைத்ததும் பேச வேண்டும் என நினைத்து கொண்டாள்..
இந்த வருடம் மனுவிற்கு கடைசி வருடம் என்பதால் இந்த செமெஸ்டர் அவர்களுக்கு ப்ரொஜெக்ட் சமயம் என்பதால் அதிகமாக அவர்களுக்கு காலேஜ்க்கு வர வேண்டிய அவசியம் இராது..
இன்று அதாவது கல்லூரியின் முதல் நாள் கூட அவர்கள் ப்ரொஜெக்ட் செய்ய போகும் நிறுவனத்தை பற்றிய அறிவிப்பை வழங்குவதற்காக தான் அவர்கள் கல்லூரிக்கு வந்ததே
அதன் படி காலை கல்லூரி தொடங்கியது முதல் பிசியாக இருந்ததால் மாயாவால் மனுவிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை..
அதற்குள் ஆசிரியர் வரவும் அவர்கள் பணி செய்ய இருக்கும் நிறுவனத்தை பற்றிய அறிவிப்பை வழங்க துவங்கி விட்டார்..
அதன் படி மனு மற்றும் மாயா, குமார் ,ராம், அசோக் அனைவரும் பணி புரிய போவது சமீப காலமாக அதி விரைவாக தொழில் சாம்ராஜ்யத்தில் கோலோச்சி வரும் four square குரூப் ஆப் கம்பெனிஸ் அதன் நிறுவனர் பிருத்திவிராஜ் ...(மனம் விரும்புதே மாயவா கதையின் நாயகன் )
ஆம் பிருத்திவியின் நிறுவனத்தில் தான் இவர்கள் அனைவரும் ப்ரொஜெக்ட் செய்ய இருக்கிறார்கள்..
அவனை பற்றி மனுவும் நிறைய கேள்வி பட்டு இருப்பதாலும் அவனுக்கு அந்த கம்பெனி பெயரை கேட்டதும் மிகவும் குஷியாகி போனது..பின்னாளில் அவரை போல பெயர் வாங்க வேண்டும் என்பது மனுவின் கனவுகளில் ஒன்று...
அப்படி இருக்க காலை முதல் மாலை வரை எப்படி போனது என்றே தெரியாமல் இருக்க மாலை வரை மனு மற்றும் நிலாவிற்கு அமைதியாக கழிந்தது..
இதற்கு இடையே அஷோக் தன்னுடைய காதலை நிலாவிடம் கூற தயாராகி விட்டான்...மாலையானதும் விரைவாக யாரிடமும் கூறாமல் கார் பார்க்கிங்கிக்கு விரைந்தான் அசோக்..
ஆம் அவன் இரண்டு நாட்கள் முன்னே ஆர்டர் செய்து இருந்து பூங்கொத்தை அவனுடைய காரில் இருந்து எடுத்தவன் , "வெண்ணிலா ரொம்ப நாளா நான் உன்கிட்ட இதை சொல்லணும்னு நெனைச்சுட்டு இருக்கேன்..இதை விட நல்ல நாள் இனி கிடைக்காது "..என்று மனதில் நினைத்தவனுக்கு அருள் புரியும் விதமாக நிலா வந்து கொண்டு இருந்தாள்..
தூரத்தில் இருந்து வெண்ணிலாவை கண்ட அசோக் வனிதாவுடன் வருவதை பார்த்தவனுக்கு ஒரே குஷியாகி போனது..
அதற்குள் நிலா வனிதாவிடம் என்ன கூறினாளோ வனிதா அப்படியே திரும்பி சென்று விட்டாள்..நிலா மட்டும் கார் பார்க்கிங் இருக்கும் பகுதிக்கு வந்து கொண்டு இருந்தாள்..
கல்லூரி முடிந்ததும் மனு கார் பார்க்கிங்கில் காத்து இருக்க சொல்ல அதற்காக பார்க்கிங் அருகில் வந்து கொண்டு இருந்தாள்..
காலையில் எப்படி பார்த்தானோ அதே போல புத்தம் புதிய மலரை போல இருப்பவளை கண்ட அசோக், " வெண்ணிலா".. என்று அழைக்க
வெண்ணிலாவோ அவனை கண்டதும் மலர்ந்த முகத்துடன் அவன் அருகே வந்தாள்..
"என்ன இந்த பக்கம் அசோக் "...என்று வெண்ணிலா கேட்க
"நான் கேட்கணும் நீ எங்கே இங்கேன்னு "..என்று அசோக் சிரிக்க
தீடிரென அவன் கேட்கவும் மனுவின் பெயரை கூற முடியாமல் தவித்தவள், "அது நான் காலேஜ் முடிஞ்சதும் ..நா..ன் அ..வ..ர் ஒரு..த்தர் ஒருத்..தவங்க வரேன்னு சொல்லி இருக்காங்க அதான்"..அவனுக்கு அவளும் குழம்பி குழப்பிய பதிலை அவனுக்கு அளித்தாள்..
"ஓ ..இன்னிக்கு கிளாஸ் எப்படி போச்சு...அப்புறம் வெண்ணிலா எனக்கு காலேஜ் ப்ரொஜெக்ட் தொடங்க போறாங்க இனி எப்போவும் போல காலேஜ்க்கு வர முடியாது".. என்றதும் நிலாவின் மனதிலோ,
" ஓ அப்போ அவங்களும் வர மாட்டாங்களா? "..என நினைத்தவள் அதை வெளிப்படுத்தாமல் அசோக்கை பார்க்க அவனது கையில் பூங்கொத்து ஒன்று இருந்தது..
அதுவும் சிவப்பு வண்ண நிற மலர்களை உள்ளடக்கிய பொக்கே அவளை பார்த்து சிரிக்க இவளும் இதன் அழகில் மெய் மறந்து, " என்ன அசோக் பூ எல்லாம் வெச்சு இருக்கீங்க".. என்று அவள் ஆசையாக கேட்க
"எல்லாம் உனக்கு தான்".. என்றான்..
"என்னது எனக்கா!!"...
"ஆமாம் பூ மாதிரி இருக்கிற உனக்கு என்னோட இந்த குட்டி பரிசு "...என்று சிரித்தபடி அவள் முன்னே நீட்ட
அவளும் அதை சிரித்தபடியே பெற்றாள்.. இந்த காட்சி மிக அருமையாக வெண்ணிலாவின் கணவன் மனுவின் கண்களுக்கு பதிந்து போனது..
