மன்மதன் 34
அத்தியாயம் : 34
மன்மதன் தேசத்து மல்லிகை
செழியனுக்கு திருமணம் ஆன விஷயமறிந்த மனுவுக்கு அவன் யாரை திருமணம் செய்தான் என்று தெரியாது அதனாலே அவன் நொடி பொழுதில் குழப்பமாகி நிற்க வெண்ணிலாவே அண்ணி என்றழைத்து அவனுக்கான விடையை அளிக்க , "வாங்க உள்ளே வாங்க".. என்று மனு ஒரு மாதிரியாக தனது அதிர்ச்சியை மறைத்து அவர்கள் இருவருக்கும் வழி விட மாலதி உள்ளே நுழையாமல் இருந்தாள்...
அவளது பார்வை மனு மற்றும் வெண்ணிலா மீதே நிலைத்து இருந்தது...இவர்கள் இருவரும் இங்கே என்ன செய்கிறார்கள் என்பதே அவளது பார்வைக்கான கேள்வி..என்ன தான் இருந்தாலும் மாலதி அவர்கள் இருவரின் ஆசிரியர் அல்லவா தன் மாணவர்கள் இப்படி ஒரே வீட்டுக்குள் இருப்பது அவளுக்கு சரியாக படவில்லை ஆனால் செழியனின் அமைதியை கண்டு என்ன விஷயம் என்று புரியாமல் அவள் அமைதியாக இருந்தாள்...
அப்போது செழியனோ , "உள்ளே வா"... என்று கூற
மாலதி மறுத்து, "எனக்கு போகனும்"...என்றாள்...
"கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம்..ரெஸ்ட் எடு..நானே கொண்டு போய் விடறேன்"...
"அதெல்லாம் தேவையில்லை எனக்கு போகனும் "...என்று முறைத்தபடி சொன்னதையே சொல்லிக்கொண்டு இருந்த மாலதி மனுவை பார்த்து, " மனு என்னை என்னோட வீட்டில் ட்ராப் பண்ண முடியுமா??"... என்று கேட்க,
அவனோ ,"கண்டிப்பா"... என்று கூறி தயங்கியபடியே வெண்ணிலாவை பார்க்க அந்த நேரம் வெண்ணிலாவும் அவனது பார்வையின் பொருள் அறிந்து செழியனை பார்க்க அவனோ மாலதியை அழைத்து செல்லும் படி கூறியவன் யாருடைய பதிலுக்கும் கேள்வியான பார்வைக்கும் இடமே அளிக்காமல் உள்ளே சென்று விட்டான்...மனுவும் இருவரையும் பார்த்து குழப்பதுடனே மாலத்தியுடன் சென்றான்...
மனுவுடன் வெண்ணிலாவும் வர மாலதியின் வீட்டை நோக்கி பயணம் ஆனது...மாலதி இவர்களின் பார்வை பேச்சை தவிர்க்கும் பொருட்டு வேதனை அளிக்கும் கையை பார்த்தபடி அமர்ந்து இருக்க மனுவோ இதெல்லாம் அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்று ஒதுங்கி கொண்டான்..
ஆனால் வெண்ணிலாவோ , "அண்ணி என்றழைக்க
கண்களை ஒரு முறை மூடி திறந்து அவளை பார்த்த மாலதியிடம் , "எப்படி அடிப்பட்டுச்சு??"..
"விபத்து என் வாழ்க்கையிலே எல்லாமே விபத்தா தானே நடக்குது...அதில் ஒரு விபத்து தான் இன்னிக்கு நடந்தது "...என்று விரக்தி மொழியில் அவள் கூற
"அண்ணி நான் சொல்றதை கேளுங்க அண்ணி அண்ணா ரொம்ப நல்லவர் அண்ணி இன்னிக்கு வரைக்கும் உங்களை தான் நெனைச்சுட்டு இருக்கார்"... என்று கூற
மாலதியோ பதில் அளிக்காமல்," நீ எப்படி மனு கூட ??"...என்று எதிர்கேள்வி கேட்க
வெண்ணிலா கடகடவென நடந்த விஷயத்தை எல்லாம் கூற அதை கேட்ட மாலதிக்கு மேலும் கோபம் தான் வந்தது..
என் வாழ்க்கையோடு சேர்த்து இந்த இருவரின் வாழ்க்கையும் கெடுத்து விட்டார்களே என நொந்தவள் மேற்கொண்டு எதுவும் அவளிடம் பேச முற்படவில்லை..
ஆனால் வெண்ணிலாவோ அவளின் அண்ணனை பற்றி மேலும் மேலும் பேசி கொண்டு இருக்க மாலதியோ முடிவாக ,"வெண்ணிலா இது எனக்கும் உன் அண்ணனுக்குமான விஷயம் அதில் நீ தலையிட வேண்டாம் நாங்...நான் பார்த்துக்கறேன்"....என்று கூற அதன் பிறகு வெண்ணிலா மேற்கொண்டு எதுவும் பேசவில்லை...மனுவும் அவர்களது சம்பாஷணை காதில் விழுந்தாலும் ஒதுங்கியே இருந்தான்...
அதே நேரம் மனுவின் வீட்டில் சோபாவில் படுத்து கொண்டு விட்டத்தை வெறித்து கொண்டு இருந்த செழியனின் மனமோ ஒரு வருடத்திற்கு முன் சென்றது..
செழியன் 30 வயது வாலிபன் பன்னிரெண்டாம் வகுப்போடு படிப்பின் மேல் விருப்பம் இல்லாமல் நிறுத்தியவன் கடந்த பதினெட்டு வருடமாக அப்பாவின் தொழிலான விவசாயத்தை கவனித்து கொண்டு இருந்தான்...
அவனது குடும்பமே பாரம்பரியமாக விவசாயத்தை உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்து வரும் குடும்பம்...அவன் வீட்டுக்கு ஆண்களுக்கு படிப்பை விட உழைப்பே கைகொடுக்கும் என்ற வகையை சேர்ந்தவர்கள் அதற்காக படிக்கவே கூடாது என்று ஒதுக்கவும் மாட்டார்கள்..
விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக படிக்கலாம் அதற்கு மிக சிறந்த உதாரணமாக பல்லவி மற்றும் இதோ இந்த காலத்து வெண்ணிலாவை கூறலாம் அவர்களும் படித்தவர்கள் மற்றும் படித்து கொண்டு இருப்பவர்கள் தானே..
அதே போல உதவி புரிவதிலும் பெயர் போன குடும்பம் அவனுடையது...அவனுடைய தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த மாயன் தீடிரென மாரடைப்பால் இறந்து விட மாயனின் மனைவி தாமரை மற்றும் அவரது மகளான மாலதிக்கு வேண்டிய உதவி செய்து அவர்களின் தோட்டத்து வீட்டிலே தங்க வைத்து இருந்தனர்...
தந்தையின் மரணத்தின் போது அழுது கொண்டு இருந்த அந்த சிறு பெண்ணை பருவ வாலிப பையனான செழியனுக்கு பிடித்து இருந்தது...ஆனால் அவன் யாரிடமும் வெளிக்காட்டியது இல்லை...
மாலதியும் தனது குடும்ப சூழ்நிலை கருதி நன்றாக படிக்க அப்போது தான் தாமரையின் அம்மா வயது முதிர்வால் தனியாக தவிக்கிறார் என்ற தகவல் வர பல்லவத்தேவனும், சண்டித்தேவனும் அவர்கள் இருவரையும் தாமரையின் வீட்டுக்கு அனுப்பி வைக்க அவர்கள் அங்கேயே தங்கினர்...
அப்போதும் மாலதியின் படிப்பும் அங்கேயே தொடர்ந்தது அந்த சமயத்திலும் தாமரையை கை விடாமல் அவர்களது செலவை செழியனின் குடும்பம் ஏற்று கொள்ள தாமரைக்கும், மாலதிக்கும் பெரிதாக யார் காலிலும் விழ வேண்டியது இல்லாமல் அவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்..இதற்கெல்லாம் செழியனும் ஒரு காரணமே..
மாலதி சென்ற ஒரு வருடத்தில் அவன் பன்னிரெண்டாவது படிப்பை முடித்துவிட்டு விவசாயம் ,கணக்கு வழக்கு எல்லாம் பார்த்துக்கொள்ள அவன் தான் இன்று வரை மாலதி குடும்பத்துக்கு கூடுதலாக பணமும் அனுப்பி கொண்டு இருந்தான் ..
அந்த நேரம் பார்த்து செல்லக்கிளி செழியனின் ஜாதகத்தை பார்க்க செழியனுக்கு கல்யாணம் யோகம் கூடி வந்து இருப்பதாக கூற பல்லவதேவன் அவரது வசதிக்கு தகுந்த பெண்ணை பார்க்க முற்பட செழியனின் பார்வை போன திருவிழாவிற்கு வந்த மாலதியின் மீது இருப்பதை புரிந்து கொண்ட செல்லக்கிளி மெல்ல மாலதியின் பேரை இழுத்து விட பல்லவதேவன் மறுத்தார்..
"அவ படிச்சுட்டு இருக்கா அதெல்லாம் சரி வராது"... என்று கூற
"என்ன பொல்லாத படிப்பு அது தான் அவ ஒரு மாசத்துல படிச்சிட்டு முடிக்க போறான்னு தாமரை சொன்னால பொறவு என்ன??"..
"அவங்களும் நம்ம இனம் தான் பணம் தான் இல்ல அது தான் நம்ம கிட்டே இருக்கே பொறவு என்ன??"... என்று எல்லோர் முன்னிலையிலும் வெட்டு ஒன்னு துண்டு இரண்டாக போட எல்லோரும் பணத்தின் பின்னால் செல்பவர்கள் அல்ல என்பதால் அனைவரும் ஒத்து கொண்டனர்..
ஆனால் விஷயமறிந்த மாலதியோ வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க தொடங்கி விட்டாள்..
"அம்மா என்னால கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன் "..
"ஏன் செழியன் தம்பிக்கு என்ன குறைச்சல்?"..
"எல்லாமே குறைச்சல் தான் "..என்று கடந்த வருடம் நடந்த திருவிழாவில் அவள் கண் முன்னே சிலரை அவன் புரட்டி எடுத்து கொண்டு இருந்ததை இப்போது நினைத்து பார்த்தவள் அப்படியே தன் தாயிடம் கூற
அதை கேட்ட தாமரையோ, "அந்த தம்பியை பத்தி ஊர்ல போய் கேட்டுப்பார் சொக்கத்தங்கம் டி ..அப்படியே நீ சொல்ற மாதிரி ரௌடித்தனம் பண்ணினாலும் நியாயமான விஷயத்துக்கு தான் அந்த தம்பி சண்டை போட்டு இருப்பாங்க "...என்று கூற
அவளோ , "அம்மா நான் இப்போ தான் படிச்சு முடிக்க போறேன் ..இன்னும் முடிக்கல"..
"அது தான் இந்த மாசம் முடிஞ்சிடுமே"..
"அம்மா உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது"..
"என்ன டி சொல்ல போற ..உனக்கு தான் எதுவும் புரியல..அவரை வேணாம்னு சொல்ல ஒரு காரணம் சொல்லு "..
"அவர் படிக்கல "..என்று ஒரு வழியாய் அவள் மனதில் செழியனை குறித்து அரித்து கொண்டு இருந்த விஷயத்தை மாலதி கூற
"நீ படிச்ச படிப்பே அவர் போட்ட பிச்சை தான் அதை மறந்துடாத"...என்றார் தாமரையும் விடாமல்,
"அம்மா நான் அந்த பணத்தை திருப்பி
கொடுத்துடுவேன் "..என்று மாலதி ரோசமாக கூற,
"என்ன டி திருப்பி கொடுப்ப பணத்தையா அன்னிக்கு எங்கே டி கை நீட்டி வாங்கும் போது போச்சு இந்த ரோஷம்???.. படிக்காத கைநாட்டா டி அந்த தம்பி..படிக்கலன்னு சொல்லி வேலைக்கு போகாம இருக்கா இல்ல சம்பாதிக்காமல் இருக்கா???
உன்னை உக்கார வெச்சு சோறு போடுற அளவுக்கு அந்த தம்பிக்கு தெம்பு இருக்கு..அதை விட நல்ல மனுசன் அதை புரிஞ்சுக்கோ "...என்று கூற
அவளோ , "என்னால முடியாது மா எனக்குன்னு கனவு இருக்கு எனக்கு வர போற கணவன் எப்படி இருக்கனும்னு ஆசை இருக்கு படிக்காத ஒரு ரௌடியை கல்யாணம் பண்ணிக்க முடியாது"... என்று அவள் மீண்டும் குதிக்க
அவளை எப்படி வளைப்பது என்று தெரிந்த தாமரை அவளை வளைத்து உருட்டி , மிரட்டி இதோ திருமணமும் தன் மகளுக்கு நடத்தி வைத்தார்...
