நேசம் 4
நேசம் : 4
கண்மணிக்கு ஒரு குணம் உண்டு.. அவள் ஏதாவது மனதில் நினைத்து இருக்க அனு வந்து அதை மாற்றி கூறினால் அது நடந்து விடும்... அனுவின் வாக்கு அப்படியே நடந்து விடும் என்பது அவளின் நம்பிக்கை...ஒரு முறை கண்மணி பன்னிரெண்டாவது படித்து முடித்து விட்டு மெடிக்கல் எடுக்க வேண்டும் ஒரு டாக்டர் ஆவதே என் வாழ்க்கை லட்சியம் என்று அவள் இரவு பகல் பாராது படித்தாள்... நுழைவு தேர்வும் எழுதி விட்டாள்... அவளுக்கு மெடிக்கல் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவள் காத்து கொண்டு இருக்க ஏதோ ஒரு விளையாட்டில் அனுவை கண்மணி அடித்து விட்டாள்... அனுவும் கோபத்தில் "உனக்கு மெடிக்கல் சீட் கிடைக்காது போடி"... என்று சபிக்க அவள் கூறியது போல மெடிக்கல் சீட் கிடைக்காமல் தான் இறுதியில் BDS எடுத்து படித்து வருகிறாள்...அது போல இன்றும் நடந்து விடுமோ என்ற பீதி அவளுக்கு இருந்தது...
எப்படி இந்த சடங்கை நிறுத்த போறேன்... அவனை பாரு ...ஆளும்...மூஞ்சியும்...ஓகே சொல்லிடுவானோ...எப்படியும் வெறுப்பேத்தி அனுப்பிடனும்...என்று அந்த பக்கம் இந்த பக்கம் நடந்து நடை பழகி கொண்டே வெற்றியை திட்டியும் என்ன செய்யலாம் என யோசித்து கொண்டு இருந்தாள்...
அங்கே தான் எதுக்காக வந்து இருக்கிறோம் என்று தெரியாமலே போனை பார்த்து கொண்டு இருந்த வெற்றியிடம் , விஜயராஜன் மற்றும் அங்குள்ள உறவினர்கள் பேச்சு கொடுத்தனர்...
அவனும் வயதானவர் தானே என கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் அளித்து கொண்டே அவர்கள் பேச்சை மேலும் இழுக்க கூடாது என்ற நோக்கில் மொபைலை பார்க்க தொடங்கி விட்டான்..அவர்களும் அப்படியே வேல்முருகனிடம் தாவி விட்டனர்..
எப்போதும் எல்லா தமிழ் திரைப்படங்களில் வரும் காட்சி போல ஒரு வயதான பெண்மணி வந்து , "விஜயா யாரு இதுல மாப்பிளை "...என்று சரவணன் மற்றும் வெற்றியை பார்த்து கேக்க ....விஜயராஜன் வெற்றியை காட்டி, "இது தான் மாப்பிளை நம்ம கண்மணியை பொண்ணு பார்க்க வந்து இருக்கும் மாப்பிளை"... என்று கூற
வெற்றி யாரை கூறுகிறார்கள் ..யார் மாப்பிளை...என்ன நடக்கிறது இங்கே...என்று நிமிர்ந்து பார்க்க அங்கே அனைவரும் வெற்றியை பார்த்து கொண்டு இருக்க அவன் கண்கள் மட்டும் அவனது குடும்பத்தை எரித்தது...வேல்முருகன் முன்னெச்சரிக்கை ஆக , "பின்னாடி என்ன தோட்டமா"... என்று மகனின் பார்வையை தவிர்த்து அங்கே இருந்த உறவினர் ஒருவரிடம் கேக்க அவரும் பெருமையாக, "ஆமா வாங்க வாங்க காட்டறேன் "...என்று கூற அவர் தப்பித்து விட்டார்...
வெற்றிக்கு தன் கண் முன்னால் வெளியே செல்லும் தந்தையை கண்டு முறைத்து உங்களுக்கு இருக்கு போங்க என்று மனதுக்குள் அவரை வறுத்தெடுத்து தன் தாயை பார்க்க அவரோ அவனை பார்த்தால் தானே , தன்னை பிளான் செய்து இந்த வலையில் விழ வைத்து இருக்கும் இவர்களை என்னவென்று சொல்வது...என் நிலைமை இப்போது என்ன..இப்போ இது எல்லாம் அவசியம் தானா...நான் எனக்கு திருமணம் செய்து வைங்க என்று இவர்களிடம் கேட்டேனா....
யாரை கேட்டு இவர்கள் என்னை இவ்வளவு தூரம் இழுத்து வந்து இருக்கிறார்கள்...அதும் விஜயராஜன் முகம் பார்க்கும் போதும், ஜானகியின் முகம் பார்க்கும் போதும் அவனுக்கு வருத்தமே...கண்களில் எதிர்பார்ப்பை தேக்கி வைத்து கொண்டு இருக்கிறார்கள்...இவர்களுக்கே இப்படி என்றால் அந்த பெண்ணுக்கு ...நினைக்கவே அவனுக்கு வருத்தமாக இருக்க அவளிடம் எப்படியாவது எனக்கு இதில் விருப்பம் இல்லை என்று கூறி விட வேண்டும் என நினைத்தவன் அதனால் மட்டுமே சபையில் வாயை திறக்காமல் அமைதியாக இருக்கிறான்... அனால் இதற்கு காரணமான என் குடும்பத்திற்கு வீட்டிற்கு சென்ற உடன் இருக்கிறது என்று நினைத்து கொண்டான்...அந்த கோபத்தில் தன் குடும்பத்தை விழிகளாலேயே எரித்து கொண்டு இருந்தான்..
ஆனாலும் அன்னத்திற்கு ஒரு தைரியம் மகன் அனைவரின் முன்னிலையில் தங்களை அவமானம் செய்ய மாட்டான் அதிலும் பொறுப்பு உள்ள போலீஸ் அதிகாரி வேறு என்று எல்லாம் சுயம் மனதை தேற்றி எதுவானாலும் வீட்டிற்கு சென்று பார்த்து கொள்ளலாம் என்று அவரும் விட்டு விட்டார்...
சரவணனோ தன் அண்ணன் தன்னை முறைக்கிறான் என்று தெரிந்தும் கண்களால் , "கொஞ்சம் பொறுமையா இரு டா"... என்று இறைஞ்சி கேட்க அவனின் கோபத்தை நாற்காலியில் அழுத்தம் கொடுத்து அடக்கினான் வெற்றி...
இருக்காதா அவனை கோவிலுக்கு என்று கூறி அழைத்து வந்து விட்டு இங்கே பெண் பார்க்கும் படலம் நடக்க இருப்பதை பார்க்கும் போது அவனுக்கு கோபம் எழுவதில் ஆச்சரியம் இல்லையே...
கோபத்தில் சிவந்து இருப்பவனிடம் கண்மணியின் உறவினர் ஒருவர் , "என்ன தம்பி வியர்க்குதுங்கலா"... என்று கேட்க அவனை ஒரு பார்வை பார்த்து முறைத்தான்...அவரோ என்ன இவன் இப்படி முறைக்கிறான் என்று நினைத்த ஒரு வேளை பொண்ணுக்காஅவரோக காத்து இருக்கிறாரோ என சுயம் நினைத்து, " எத்தனை நேரம் தான் இப்படியே இருப்பாரு மாப்பிளை ...பொண்ணை கூட்டிட்டு வாங்கோ"... என்று அவரால் முடிந்த வரை அவனை வெறுப்பேத்த அவனோ பல்லை கடித்து அமர்ந்து இருந்தான்...
விஜயராஜனும் , "அனு அக்காவை கூட்டிட்டு வா மா "...என்று கூற ஜானகியோ நல்லது நடக்கும் போது தான் எதற்கு என்று நினைத்து அடுக்களை வாயிலேயே நின்று கொண்டு இருந்தார்...
கண்மணியை அழைக்க அனு செல்ல அங்கே கண்மணி தன் கையில் இருக்கும் பத்து விரல்களையும் கடித்து மென்று கொண்டு இருந்தாள்...உள்ளே வந்த அனு, "உன்னை கூப்பிடுறாங்க வா".. என்று அழைக்க அவளோ, " அனு.. அனு என் செல்லம் ல கொஞ்சம் மாத்தி சொல்லு டி".. என்று பச்சை பிள்ளை போல கேட்க அதற்குள் , "கண்மணி வா மா "...என்று ஒரு பாட்டியும் பின்னாலே வந்து விட்டார்...
அவர் கையில் வேறு ஒரு தட்டில் டீ அடங்கிய தம்பளர்கள் இருக்க, " பாத்து போ மா கொட்டிடாதே"... என்று கூறினார்....
கண்மணிக்கு கவனம் முழுவதும் அவள் கையில் கொடுக்க பட்டு இருக்கும் ட்ரேயில் இருக்க தலை குனிந்து மெல்ல நடந்து வந்தாள்....வந்தவளை அன்னம், வேல்முருகன் மற்றும் சரவணன் எல்லோரும் பார்க்க வெற்றி மட்டும் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்து இருந்தான்...
