நேசம் 12
அத்தியாயம் : 12
நேசமடி நேசம்
உற்றார் உறவினர்கள் சூழ்ந்து அணி திரண்டு இருந்த அந்த மண்டபத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக திருமண சடங்குகளை கண்டு கழித்து கொண்டு இருந்தனர்....ஆனால் மகிழ்ச்சியாக தங்கள் வாழ்வை தொடங்க வேண்டிய வெற்றி மற்றும் கண்மணி இருவர் மட்டும் யாருக்கோ நடக்கும் நிகழ்வு போல சடங்குகளை செய்து கொண்டு இருந்தனர்...இருவரின் மனதிலும் போராட்டங்கள் பிடிக்காத நிகழ்வை நாம் செய்யும் போது நமக்கு எப்படி ஒரு மனகஷ்டத்தை கொடுக்குமோ அது போன்றதொரு மனநிலையில் இருந்தனர்...மருந்துக்கு கூட அவர்கள் இருவரின் முகத்திலும் சிரிப்போ மகிழ்ச்சியோ இல்லை...கண்மணி தலை கவிழ்ந்து அமர்ந்து கொண்டு இருக்க வெற்றியின் முகம் கல் போல இறுகி வாய் மட்டும் மந்திரங்களை முணுமுணுத்து கொண்டு இருந்தது...
அதும் இருவர் சேர்ந்து செய்ய வேண்டிய சடங்குளில் ஐயர் வெற்றியின் கை மீது கண்மணியின் கை வைக்க அவளோ அவன் கை மீது தன் கை பட்டால் தீட்டு என்பது போல அவன் கையின் மீது படாமல் சடங்குகளை செய்தாள்...
இவளின் நடவடிக்கைகளை கண்டு கொதித்து இருந்த வெற்றிக்கு அவனின் தன்மானம் தூண்டி விட்டு கொண்டே இருந்தது... நேற்றில் இருந்து இவள் அவனை எரிச்சல் மூட்டி கொண்டே இருக்கிறாள்...இவளின் இது போல செய்கைகளை பார்க்கும் போது தான் வெற்றிக்கு அவளை சீண்ட வேண்டும் என்றே தோன்றும்....அது போல தான் நேற்று இரவு கூட ஒரு சம்பவம் நடந்தது....
இவர்கள் குல வழக்கப்படி கல்யாணத்தின் முதல் நாள் தான் நிச்சயம் நடக்கும்...அதுபோல நேற்று இரவு நடந்த நிச்சயத்தின் போது இருவரிடமும் பெரியவர்கள் மோதிரம் பரிமாறி கொள்ள சொல்ல இவளோ அவன் விரலை தொட்டால் கூட ஏதோ பாவம் போல பட்டும் படாமல் அணிவித்தாள்... அதை கூட அவன் பொறுத்து கொண்டான்...ஆனால் அவளின் விரலை இறுக்கி மடக்கி திறக்கவே மாட்டேன் என்பது போல அவள் இறுக்கி வைத்து இருக்க இங்கே வேறு அவனின் உறவினர்கள் அனைவரும் அவனிடம் அணிவிக்க சொல்ல இவள் கையை காட்டினால் தானே...
கண்மணியின் உறவினர் வெற்றியின் பாஷையில் கூற வேண்டும் எனில் அவளின் குசும்பு மாமா, "பொண்ணே மோதிரத்தை போட்டிடுச்சு மாப்பிளை போலீஸ்ஸா இருந்துட்டு பொண்ணு கையில மோதிரம் போட வைக்கப்படுறாரு "...என்று கேலி செய்கிறேன் பேர்வழி என அவனை கடுப்பாகி விட வெற்றிக்கு வந்த கோபத்தில் வெடுக்கென்று அவளின் விரலை பற்றி இழுத்து, அவள் மடக்கி வைத்து இருந்த விரலை ஒரு இழு இழுத்தான் இழுத்த விசையில் அது நீண்டு கொண்டது... அதன் பின் அவளின் விரலை அழுத்தமாக பிடித்து மோதிரத்தை அதே அழுத்தத்துடன் அணிவித்து விட்டான்...அவளுக்கு தான் அவனின் செய்கை வலியை கொடுத்தது...
அவளோ அவனை பார்த்து முறைத்து கொண்டே யாரும் அறியா வண்ணம் முகம் மாறாமல் அவளின் கையை தேய்த்து விட்டு கொண்டாள்... ஆனால் அவள் தன் விரலை தேய்த்து கொண்டு இருப்பதை கண்ட அன்னம், " என்ன மா மோதிரம் டிசைன் நல்லா இருக்கா "...என்று கேட்க அவளும் வெக்க படுவது போல தலையை தாழ்த்தி கொண்டாள்....வெற்றிக்கு தெரியாதா அவள் ஏன் இப்படி செய்கிறாள் என்று அவனும் படட்டும்...அப்போ தான் கொழுப்பு குறையும் என்று விட்டு விட்டான்...
இந்த நிகழ்வோடு அவர்களின் போர் முடியவில்லையே...தொடங்கி அல்லவா இருக்கிறது... திருமணம் என்றால் ஒரு பெண்ணையும் ஆணையும் இணைத்து வைப்பது என்னவோ அவர்களின் குடும்பமாக இருந்தாலும் அவர்களுக்கு இடையே உள்ள நெருக்கத்தை இணைப்பதன் முதல் பங்கு என்னவோ புகைப்படக்காரர்க்கு மட்டுமே...
ஆம் அது போல நிச்சயம் முடிந்த பின் அவர்கள் இருவரையும் அப்படி நிற்க வைத்து இப்படி நிற்க வைத்து என போட்டோ எடுக்க, அவர்கள் இருவருக்கு அடுத்த தலைவலி தொடங்கியது...அதும் வெளியே சொல்ல கூட முடியாத அவஸ்தையில் தான் இருந்தனர் இவர்களின் போஸை எல்லாம் ஏதோ உலக அதிசயம் நடந்து கொண்டு இருப்பது போல விருந்தினர்கள் அனைவரும் கண்டுக்களித்து கொண்டு இருந்தனர்...அதனால் முறைக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் தடுமாறி கொண்டு நின்றனர்...
அதிலும் ஒரு போஸ் வெற்றியின் அருகே அவளை நிற்க சொல்லி அவனின் இதயத்தில் கண்மணியை கை வைக்க சொல்ல அவளும் எல்லோரும் நம்மை கவனித்து கொண்டு இருக்கிறார்களே என அவனின் இதயத்தில் கையை வைத்து விட்டாள்... அந்த மண்டபத்தின் களேபரத்திலும் அவனின் இதயம் துடித்து கொண்டு இருப்பதை அவளின் கைகள் உணர்ந்தது... அந்த துடிப்பு வேறு அவளுக்கு குறுகுறுப்பை கொடுத்தது....அடுத்த டாஸ்க் வெற்றிக்கு அவளின் இடுப்பில் கை வைக்க சொல்ல அவனோ தடுமாறி கொண்டே மாட்டேன் என்று தவிர்த்து கொண்டு இருந்தான்...மேலும் அவர் நிர்ப்பந்திக்க அந்த போட்டோ எடுப்பவரை பார்த்து அவன் முறைத்தான்...
அவனோ "சார் கை வைங்க சார் மேடம் கூட இப்போ நல்லா போஸ் பண்றாங்க...இந்த போஸ் நல்லா இருக்கும் ..அவங்க இடுப்பில் கை வைங்க சார்"...என்று கூறினான்...
வெற்றியோ இடுப்பை பிடிக்கலாமா வேண்டாமா என்று அவளை பார்க்க இதயத்தில் கை வைத்து இருந்தவள் நிமிர்ந்து அவனை பார்த்து கண்களாலேயே, " இடுப்பை தொட்ட கொன்னுடுவ "...என்று தன் முட்டை கண்ணை உருட்டினாள்... அவனோ நிலைமையோ மோசமாகி இருக்க நல்ல சமயத்தில் வந்தார் நாரதர் ...."என்ன மாப்பிளை "....என்று அவர் தொடங்க போகும் முன்னே வெற்றி தன் முன்னால் விழி கத்தியால் குத்த தயாராக இருப்பவளை கண்டு கொண்டே அவளின் இடையை பிடித்து தன்னோடு சேர்த்து இழுக்க கண்மணிக்கும் , அவனுக்கும் இருந்த ஒரு இஞ்ச் இடைவேளை இப்போது சரி ஆகிவிட்டது...இருவரின் தேகம் முழுவதும் ஒட்டி உரசியது...அவனின் கை அவளின் இடையில் ஒரு அழுத்தம் கொடுக்க அவளோ நெளிந்து கொண்டே இருந்தாள்...அவளின் நெளிச்சலின் மூலம் அவனின் இரு விரல்கள் அவளின் வெற்றிடையில் உரசியது....வெற்றியின் விரல்கள் அவளின் வெண்ணெய் குழைத்த இடையின் வழுவழுப்பை உணர்ந்தான்....
அந்த உரசலில் ஷாக் அடித்த போல அவள் பார்க்க அவனுக்கு தெரியாதா தன் கை பட்ட இடம் ஏது என்று இருந்தாலும் அவனும் அவளின் பார்வையை எதிர் கொண்டு தான் இருந்தான்...இரு வினாடி பார்வைகள் தம்மில் பரிமாறி கொள்ள இந்த அழகிய காட்சியை புகைப்படக்காரர் இன் காமிரா அழகாக படம் எடுத்தது..."சூப்பர் சார் "...என்று கூற அங்கே கூடி இருந்த இளசுகள் ஆரவாரம் செய்ய அப்போது தான் நினைவு வந்த இருவரும் பதறி விலகினர்.....அதன் பிறகு சில பல போட்டோக்கள் எடுத்த அவர் அதன் பின் தான் அவர்கள் இருவரையும் விட்டார்....
நேற்று இரவு நடந்த இந்த நிகழ்வு ஏனோ அவளுக்கு தாலி கட்ட போகும் முன் வெற்றியின் மனதில் ஓடியது...அவளின் இடையின் வளவளப்பு இனியும் அவனின் விரலை விட்டு போகாதது போல ஒரு உணர்வை அவனுக்கு கொடுக்க வலுக்கட்டாயமாக மேடையில் அமர்ந்து கொண்டு கீழே அமர்ந்து இருப்பவர்களை பார்வை இட்டான்....
அங்கே விஜயராஜன் தன் வயதிற்கு மீறி அங்கே இங்கே என ஓடி கொண்டு இருந்தார்...அன்னம் மற்றும் வேல்முருகன் மகிழ்ச்சியில் மணமேடையில் நின்று கொண்டே வருபவர்களை வரவேற்று கொண்டு இருந்தனர்...மகிழ்ச்சியின் பிடியில் இருந்த அவர்களின் மனங்களின் பிரதிபலிப்பு, அது அவர்கள் முகத்தில் புன்னைகையாக ஒளிர்ந்து கொண்டு இருந்தது...
ஜானகி முதல் வரிசையில் அமர்ந்து இருந்தார்....ஆம் மகளுக்கு நடக்கும் சடங்குகளில் தான் கலந்து கொள்வது நாம் வாழும் சமூகத்துக்கு அதிருப்தி யை தரும் என்பதாலும் அவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டும் அமைதியாக அமர்ந்து இருந்தார்....அவருக்கு ஓடி வேலை செய்ய வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் தன் உடல் நிலையை கருத்தில் கொண்டு கண்களாலேயே மகளை வருடி கொண்டு இருந்தார்...தன் மகளை இந்த கோலத்தில் காண அவருக்கு கண்கள் இரண்டும் போதவில்லை எனலாம்...
பொங்கி வழியும் ஆனந்த கண்ணீரை துடைத்து கொண்டே தன் மகளை பார்த்து ரசித்து கொண்டு இருந்தார்.... இந்த திருமணத்திற்கு எல்லாம் மூல காரணம் ஆன நரசிம்மன் முதல் வரிசையில் கம்பீரமாக அமர்ந்து சடங்குகளை பார்த்து ரசித்து கொண்டு இருந்தார்...அவரை பார்க்க பார்க்க வெற்றிக்கும், கண்மணிக்கும் பொங்கும் கோபத்தை அடக்க முடியாமல் மந்திரங்களை ஓதி கொண்டு இருந்தனர்...
