மந்தாரம் 26
மந்தாரம் : 26
ராம் மோகன் மற்றும் ரேவதி இருவரும் சுற்றுலா சென்று விட்டனர்.. வேலையாட்கள், விஷ்வா மற்றும் விது மட்டும் தான் வீட்டில் உள்ளனர்..
விஷ்வா என்ன தான் அவ்வளவு நல்ல முறையாக அந்த குடும்பத்தோடு இருந்தாலும் அவன் அவுட் ஹவுஸில் தான் இங்கு வந்தால் தங்கிக் கொள்வான்.. அவனுடைய இடம் அது தான்..
யார் என்ன சொன்னாலும் அதிலிருந்து மாறவே மாட்டான்..
ரேவதி மற்றும் ராமோகன் இருந்தால் மட்டும்தான் வீட்டில் உணவு உண்பான்.. மற்றபடி அவன் உணவை அவுட் ஹவுஸ் அங்கு கொண்டு வரச் செய்து உண்டு கொள்வான்.. தன் எல்லை எதுவோ அதிலேயே நிற்கும் குணத்தை கொண்டவன்..
அவனை பொறுத்தவரை அவன் ஒரு தொழிலாளி.. ராம் மோகன் அவர்களுக்காக வேலை செய்பவன்.. அவர்கள் குடும்பத்துக்காக வேலை செய்பவன் என்பதை தெளிவாக உணர்ந்து இருப்பான்..
தேவிக்கு காலை முதல் மாலை வரை எதுவுமே தெரியாது.. மிக அழகாக இருக்கும்.. யாருமே இருக்க மாட்டார்கள் வீட்டில் பெரிதாக வேலை இருக்காது.. வீட்டை மட்டும் சுத்தம் செய்து பாதுகாத்தால் போதும். மாலை ஆனதும் ஒவ்வொருவராக வருவார்கள் அப்படி விஷ்வாவின் கார் வீட்டுக்குள் நுழைவதை கண்டதும் அவள் வேகமாக அவனுக்கு இன்று செய்து தருவதாக கூறிய கார கொழுக்கட்டையும், சூடான காபியை எடுத்துக் கொண்டு ஓடினாள் தேவி..
என்னவோ அவனின் இயல்பான பேச்சு அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது.. எப்போதும் பயந்து போய் வாழும் இந்த வாழ்க்கையில் அவளின் பாட்டி மறைவுக்கு பிறகு அவள் சிரித்தே பல நாட்கள் ஆகியது போல ஒரு உணர்வு அவளுக்கு இருந்தது.. அது என்னவோ இவனிடம் பேசும் போது ஒரு சிறு ஆறுதல் கிடைத்த உணர்வு..
அவள் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் மறந்து போய் இருப்பது போல ஒரு உணர்வு அவளுக்கு கிடைக்கிறது என்னவோ உண்மை தான்...
அப்படி அவன் கேட்ட கொழுக்கட்டையை செய்துக் கொண்டு அதை கொடுக்க தேவி செல்ல அங்கு அவன் அவனுடைய துணிகளை துவைத்து காய போட்டுக் கொண்டிருந்தான்..
"ஐயோ சார் நீங்க ஏன் இதெல்லாம் செய்றீங்க?? நான் செஞ்சு தரேன் அதுக்குத்தானே நான் இருக்கேன்.." என்று அவள் கூறினாள்..
"ஓ கொழுக்கட்டை வந்துடுச்சா அங்க வச்சுடு இந்த வேலையை முடிச்சுட்டு வரேன்.. எனக்கு என் வேலையை நான் செஞ்சா தான் எனக்கு பிடிக்கும்.. யாரும் செய்யக்கூடாது.. அது மட்டும் இல்லாம உன்னை மாதிரி நானும் ஒரு வேலைக்காரன் தான்.. எனக்கு போய் நீ இந்த வேலை எல்லாம் செஞ்சு தரலாமா??" என்று அவன் கேட்டான்..
"என்னது நீங்க வேலைக்காரனா??" என்று தேவி கேட்க, "ஆமாம் நான் வேலைக்காரன் தான்" என்றான் அவனும்..
"இல்லையே நீங்க ஐயா கூட எல்லாம் நல்லா பேசுறீங்களே"
"ஐயா கூட நல்லா பேசுறவங்க எல்லாம் அவரோட சொந்தக்காரங்க ஆகிட முடியாது தானே" என அவனும் கூறினான்..
அவளோ குழம்பிய பார்வை பார்க்க, "அவர் எனக்கு கடவுள் மாதிரி.. என்னோட அப்பா, அம்மா இறந்ததுக்கு அப்புறம் என்னை படிக்க வைச்சு இந்த அளவுக்கு ஆள் ஆகி இருக்கார்.. நான் இப்போ அவர் கிட்ட வேலை செய்யறேன்" என விஷ்வா தன்னை பற்றி கூறினான்..
அதை கேட்டதும் அவளோ அவளை போலவே ஒருவன் என எண்ணி, "உங்களுக்கு என்னை மாதிரி யாரும் இல்லையா??" என அவள் கேட்க அவனும் அதை கேட்டு, ஆமாம்.. உனக்கும் யாரும் இல்லையா??" என கேட்டான் விஷ்வா..
"அம்மா, அப்பா இல்லை..இல்லை பாட்டி இருந்தாங்க.. அவங்களும் இறந்துட்டாங்க.. இப்போதைக்கு எனக்கு யாரும் இல்லை" என அவள் கூறினாள்.. ஆனால் அவளின் கழுத்தில் தாலி விஷ்வாவின் கண்களுக்கு தென்பட்டாலும் அதை அவன் கேட்டுக் கொள்ளவில்லை..
அப்படி இருவரும் பேசி பேசி நட்பாகி விட்டனர்.. விஷ்வாவுக்கும் அவளோடு பேசுவது இனிமையான பொழுதுபோக்காக இருந்தது.. இருவருக்கும் இடையே யாருமில்லை என்ற விஷயத்தை இருவரும் கேட்டதும் ஒரு படி கொஞ்சம் மேலே போய் பேச துவங்கி விட்டனர்..
அதன் அர்த்தம் அவர்கள் தவறாக ஒன்றும் பேசவில்லை.. இருவருக்கும் இடையே உள்ள நட்பில் இருந்து அண்ணன், தங்கை என்ற உறவுக்குள் வந்து விட்டனர்.. அவளும் அவனை சார் என்பதில் இருந்து அண்ணா என அழைக்க துவங்கி இருந்தாள்..
இப்படி இருவரும் பேசி சிரித்து கொண்டு இருப்பதை தான் அன்றைய தினம் அலுவலகத்தில் இருந்து வேகமாக வீட்டுக்கு வந்த விதுவின் கண்களுக்கு தெரிந்தது..
அவர்கள் சிரிப்பதை பார்த்து அவனுக்கு அவ்வளவு ஆத்திரம்.. அதுவும் அவள் இயல்பாக சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்து முதலில் அவன் நினைத்தது என்னவோ விஷ்வாவை மடக்கத்தான் அவள் இந்த வேஷம் போடுகிறாள் போல என எண்ணினான்..
இதேபோல தானே தன்னிடமும் சிரித்து சிரித்து பேசினாள் அடுத்தது விஷ்வா வா என்ற எண்ணம் அவனுக்கு ஓங்கியது....
அவனுடைய காரை பார்த்ததுமே அவளுக்கு அப்படியே சிரிப்பு அடங்கி போக அதையும் விது கண்களில் இருந்து தப்பவில்லை...
அப்படி இருக்க அவனை கண்டதும் விஷ்வா ஹாய் என இயல்பாக கை காட்டினான்.. பதிலுக்கு அவனும் ஹாய் என காருக்குள் இருந்து கை காட்டினாலும் அவனுடைய தீ பார்வை என்னவோ தேவியைத்தான் சுட்டுக் கொண்டிருந்தது..
"சரி அண்ணா நான் வரேன் சாருக்கு காபி போடணும்" என்று கூறிக்கொண்டு அவள் மெல்ல நகர, "சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு" என்று விஷ்வாவும் அவனுடைய அறைக்கு சென்று விட்டான்..
அவள் அவுட் ஹவுஸில் இருந்து தோட்டம் வழியாக நடந்து வந்து அப்படியே கார் பார்க்கிங்கை தாண்டி அவள் வீட்டுக்குள் செல்வதற்குள் அவள் இதயம் படபடவென துடித்தது.. அவனின் துளைத்தெடுக்கும் பார்வையை நேராக பார்க்க முடியாமல் குனிந்த தலை நிமிராமல் அவள் நடந்தாள்..
அவன் காரில் இருந்து இறங்கும் முன் உள்ளே சென்று விட வேண்டும் என அவள் எண்ணி இருந்தது தவிடு பொடியாக்கும் விதத்தில் நொடிக்குள் காரில் இருந்து இறங்கியவன்,"ஏய்" என்று அவளை அழைத்தான்..
அவனின் முகத்தை அவள் பார்க்கவில்லை என்றாலும் அவன் தன்னைத்தான் அழைக்கிறான் என்பதை புரிந்து கொண்டு அப்படியே அவனுக்கு முதுகு காட்டி அவள் நிற்க, "எனக்கு ஒரு கப் காபி வேணும் நீ போட்டு என் ரூமுக்கு எடுத்துட்டு வா" என்று கூறினான்..
அதைக் கேட்டதும் ஏதோ நடக்கப் போகிறது என அவளின் உள் மனம் கூற அவளும் மனதுக்குள் எப்படி இருந்தாலும் அவருக்கு என்னை பிடிக்காது.. என எண்ணி எதற்கும் தயாராக தான் அவனுக்கான காபியை தயாரித்து கொண்டு அவனை தேடி சென்றாள்..
இதோ அவனுடைய அறையும் வந்து விட்டது.. அவளுடைய உள்மனம் ஏதோ படபடத்தாலும், 'நான் இந்த வீட்டு வேலைக்காரி தானே வீட்டு வேலையை செய்ய வந்திருக்கிறேன் அவ்வளவுதான்' என்று அவளுக்கு அவளை தைரியம் கூறிக்கொண்டு ஆழ்ந்த பெருமூச்சு ஒன்று இழுத்து விட்டவள் அவனுடைய அறைக்குள் நுழைய அவளுக்காக காத்திருந்த அவனின் துளைத்தெடுக்கும் பார்வையால் வெளியே அவள் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த தைரியமெல்லாம் பனியாக கரைந்து போனது..
"காபி" என அவன் முன்னே நீட்ட அதை அவள் மீது இருந்த ஆத்திரத்தில் தட்டி விட மீண்டும் காபி கப் கீழே விழுந்தது..
அவளோ அவனின் செயலில் அதிர்ந்து அப்போது தான் நிமிர்ந்து அவனை பார்க்க அவனோ அவளை அழுத்தமாக பார்த்து, "என்ன டி பார்க்க வாட்ட சாட்டமா எவன் கிடைத்தாலும் அவனை வளைச்சு போடணும்னு நினைப்ப போல.. முதலில் நான்.. இப்போ விஷ்வா வா?? விஷ்வா கிட்டயும் என்கிட்ட பேசின மாதிரி பல்லை காட்டி காட்டி பேசிட்டு இருக்க.. என்ன விஷயம்?? அவனையும் கைக்குள்ள போட முடிவு பண்ணிட்ட போல..எப்படி இந்த ஊர்ல பஞ்சாயத்து எல்லாம் கூட்ட மாட்டாங்க.. போலீஸ் ஸ்டேஷன் தான் இருக்கு.. நீ ஏதாவது பண்ணி எங்களையெல்லாம் போலீஸ் ஸ்டேஷன் நிற்க வைப்ப போல.." என அவன் நக்கலாக கேட்டான்..
அவனின் பேச்சு அவளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.. அவளின் வார்த்தையின் வீரியத்தால் அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது..
அதை எல்லாம் பார்த்து அவன் மனம் சற்றும் இளகாமல், "என்ன போற இடத்துல எல்லாம் ஒருத்தனை பிடிக்கலாம்ன்னு நினைப்பா?? எப்படி என்னை நான் உன் கூட இருந்தேன்னு சொன்ன?? விஷ்வாவுக்கு என்ன குழந்தை வயிற்றில் இருக்குன்னு சொல்ல போறியா??" என அவன் மேலும் கேட்கவும், அவள் அவனின் பேச்சை தாங்கிக் கொள்ள முடியாமல்,
அவன் அணிவித்த தாலியை இறுக பற்றிக் கொண்டு, "போதும் நிறுத்துங்க..எவ்வளவு கொச்சையா பேசுறீங்க?? நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை.. இவ்வளவு கேவலமான வார்த்தைகளை பேசி உங்களை நீங்களே தாழ்த்திக்காதீங்க.. இவ்வளவு நடந்தும் என் மனசுல இன்னும் நீங்க உயரத்தில் தான் இருக்கீங்க.. உங்க வார்த்தைகளால் இறங்கிடாதீங்க.. இவ்வளவு கஷ்டத்திலும் நீங்க தான் வேணும் அப்படின்னு உங்க கையால தாலி வாங்கிட்டு உங்க பின்னாடியே வந்து இந்த வீட்டு வேலைக்காரியா வேலை செஞ்சிட்டு இருக்கேன்..
தேவை இல்லாமல் வார்த்தைகளை பேசி உங்களை கொச்சையாகிக்காதீங்க" என்று அவள் கூறினாள்..
"என்ன டி பண்றதை எல்லாம் பண்ணிட்டு என் மேல பழியை தூக்கி போடுறியா?? எப்படி விஷ்வா நல்லா பேசுறானா?? பாவம் அவனுக்கு தான் உன்னை பத்தி தெரியாதே.. அவனையாவது விட்டு வை டி.. பாவம் நிறைய கனவுகளோடு வாழ்ந்துட்டு இருக்கான்.. யாரும் இல்லாதவன்.. அவனுக்கு ஏதாவது ஒன்னுனா நாங்க தான் வரணும்" என நக்கலாக கூறினான்..
அதைக் கேட்டதும் அவளுக்கு கோபம் வந்துவிட்டது.. இவன் என்னவோ அவள் ஒரு ஆண் பைத்தியம் பிடித்து பல ஆண்கள் பின்னால் சுற்றுபவள் போல அவளை உருவகப்படுத்துவதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
இவன் மீது காதல் கொண்டு தான் அவள் இவன் கையால் தாலி வாங்கி இருக்கிறாளே ஒழிய வேறு யாரையும் இதுவரை நிமிர்ந்து பார்த்ததில்லை அது இவனுக்கு சொன்னாலும் புரியாதே..
அப்படி இருக்க, "போதும் நிறுத்துங்க உங்க எல்லை என்னவோ அதோட நிறுத்திக்கோங்க.. இதெல்லாம் சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை..உங்களை பொருத்தவரை நான் உங்க வீட்டில வேலை செய்யறேன் அவ்வளவு தான்.. வேலையில் ஏதாவது குறை அப்படின்னா அதை மட்டும் சொல்லுங்க.. நான் யார் கூட பேசணும்.. யார் கூட பேச கூடாது அதை நீங்க சொல்ல கூடாது.. அதுக்கு உங்களுக்கு உரிமை இல்லை.. இப்போ என்ன இன்னும் அவர் கூட பேசுவேன்.. பேசிட்டே இருப்பேன்.. பேசுறது என்ன?? என்ன வேணாலும் செய்வேன்.. அதை நீங்க கேட்க கூடாது அதுக்கு உங்களுக்கு உரிமை இல்லை" என அவள் கொந்தளித்து கூறினாள்..
அதை கேட்டவனோ அவள் தன்னை தரம் தாழ்த்தி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாதவன் அகங்காரம் அவளை அடக்கி ஆக வேண்டும் என எண்ணியது..
அவள் பேசியதில் கோபம் கொப்பளிக்க, "என்ன டி சொன்ன?? என்ன வேணாலும் பண்ணுவியா?? செஞ்சு பாரு டி.. அப்புறம் இருக்கு உனக்கு" என அவளை நோக்கி ஒரு நொடியில் நெருங்கியவன் அவள் கையை பிடித்து இழுக்கவும் அவள் அவன் மீது மீண்டும் சரிந்தாள்..
