Share:
Notifications
Clear all

மந்தாரம் 42

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 483
Thread starter  

மந்தாரம் : 42

    தேவிகாவின் ஒவ்வொரு கேள்வியும் விதுவின் இதயத்தில் ஈட்டியாக குத்தியது... அவளின் கேள்விகளுக்கு பதில் தான் இல்லை..

"சொல்லுங்க சொல்லுங்க என் மகன் எனக்கு திரும்ப கிடைப்பானா?? எதுக்கு அவனுக்கு ஆப்ரேஷன் பண்றாங்க.. நானா அவனை கொன்னுட்டேனா?? நான் என்னோட காதலுக்கான அடையாளத்தை தொலைச்சிட்டேனா?? சொல்லுங்க.. உங்களுக்கும் எனக்கும் இடையேயான உறவு முடிஞ்சு போச்சா??" என பைத்தியம் பிடித்தவள் போல கதறினாள்..

அதை எல்லாம் வேடிக்கை பார்த்த ராம் மோகன் தம்பதியினர் இருவருக்கும் தர்ம சங்கடமான நிலை தான் ஏற்பட்டது இருந்தாலும் இப்படி பேசியாவது மனதில் உள்ள பாரத்தை அவள் இறக்கி வைக்கட்டும் என அவர்களுக்கு இடையே செல்லாமல் இருக்க, அவள் அழுகையோடு பேசும் போது விதுவுக்கு அப்போது நெற்றி பொட்டில் அடித்தது போல ஒரு உண்மை விளங்கியது..

ஆம்.. அவள் புலம்புவதாக அவளின் காதலின் ஆழத்தை அவனுக்கு விளக்கி கொண்டு இருக்கிறாள் அவள் அறியாமல்.. இத்தனை நாட்கள் இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் இருந்தவன் இன்று புரிந்துக் கொள்ள விழைகிறான்.. ஆம்.. அவளின் உண்மையான கண்ணீர் அவனை ஏதோ செய்கிறது.. முட்டாள்.. இங்கே பார் என கூறுவது போல இருந்தது..

மகனை கண்டதும் அவன் மீது அவனுக்கு வந்த ஈர்ப்பு இவள் மீது அவனுக்கு எப்போதும் இருந்தது இல்லை..

தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டாள் என்ற கோபம் அவனுக்கு எப்போதும் இருந்தது உண்டு.. அதோடு நில்லாமல் அவளோடு கூடிக் கழித்ததும் குழந்தை அவள் வயிற்றில் கருவாக சுமந்து கொண்டிருக்கிறாள் என அவள் கூறும் போதும் சரி தனக்கு செய்ததற்கு கைமாறு என்றுதான் அவன் எண்ணி இருந்தான்..

அவனை பொறுத்தவரை தேவிகா ஒரு ஏமாற்றுக்காரி, தன்னிடம் உள்ள பணம், அழகு, வசதிக்காக திருமணம் செய்து இருக்கிறாள் என அவன் எண்ணி, அவளுக்கு இதுவும் வேண்டும்.. இன்னமும் வேண்டும் என்ற மனநிலையில் தான் இவ்வளவு காலம் இருந்தான்..

குழந்தையை அவளோடு அவன் வீட்டுக்கு அழைத்து வரும் போதும் எந்த விதமான எண்ணங்களும் அவனிடம் இல்லை.. அவனுடைய பிரச்சனையை இவர்களை வைத்து தீர்த்து கொள்ள வேண்டும் என்று தான் இருந்தது..

ஆனால் அதன் பிறகு அக்குழந்தையின் முகமும், அவனுடைய குறும்பும், அவனுடைய விளையாட்டும், அவனோடு அவனுடைய பெற்றோர்கள் மகிழ்ச்சியோடு விளையாடும் போது அவர்கள் கண்ணில் தெரிந்த மகிழ்ச்சியும் எல்லாம் கலந்து அவனுக்கும் ரூபன் மீது ஆசை வந்து விட்டது..ஆனால் அதை வெளியே சொல்லாமல் மறைத்து வைத்து இருந்தான்..

அதோடு மட்டுமின்றி இவள் இவனிடம் குழந்தையை விடாமல் பொத்தி பொத்தி வைக்கும் போதே அவனுக்கு குழந்தையிடம் சென்றால் என்ன என்ற எண்ணம் கூட எழுந்தது உண்டு.. இப்படி பல வித காரணங்களால் அவன் மீது பாசத்தை யாரும் காணாமல் ஒளித்து வைக்க தெரிந்த விதுவுக்கு தன் பின்னால் ஒரு காலத்தில் நாய் குட்டி போல சுற்றி திரிந்த இவளை பொய் சொல்லி தன்னை திருமணம் செய்து கொண்டால் என்ற ஒரு காரணத்திற்காக ஒதுக்கி வைக்க தெரிந்த அவனுக்கு, இப்பொழுது தன் குழந்தையின் தாயாக குழந்தைக்கு என்ன ஆகிவிடுமோ என்ற பதைபதைப்பில், அவள் மனதில் உள்ள விஷயத்தை எல்லாம் கொட்டும் பொழுது அதில் ஒளிந்து கிடந்த அவன் மீதான உண்மையான காதல் அப்பொழுதுதான் விதுவுக்கு புரிந்தது..

அவளின் காதலின் பொக்கிஷம் அந்த குழந்தை என்று கூறும் பொழுது அவனுக்கு உண்மையில் அவள் அவள் காலில் கிடக்கும் செருப்பை கழட்டி அவன் முகத்தில் அடித்தது போலத்தான் அவன் உணர்ந்தான்..

அக்குழந்தை அவனுடைய அகம்பாவத்துக்கும் திமிருக்கும். இவளை பழிவாங்கும் நோக்கத்தில் வந்தது என அவனுக்கு நன்றாகத் தெரியும்.. ஆனால் அதைக் கூட அவள் காதலாக பார்க்கிறாள் என நினைக்கும் பொழுது உண்மையில் இப்படியும் பெண்கள் இருப்பார்களா என அவனை ஒரு நொடி யோசிக்க வைத்து விட்டாள் தேவி.. அவள் முன்னால் அவன் ரொம்ப சிறுமைப்பட்டு போனான்..

அழுகையோடு அவனைப் பார்த்து அவனுடைய சட்டையை பிடித்தவள், "அப்படி நான் என்ன பண்ணிட்டேன்?? ஆமாம் தராதரம் இல்லாமல் உங்களை எல்லாம் நேசித்தது தப்புதான்.. நான் கிராமத்துல வாழ்ந்தவ மனதில் ஒருத்தனை வச்சுகிட்டு வேறொருத்தன் கூட என்னால வாழ முடியாது.. அது இந்த ஜென்மத்துக்கும் நடக்காது..நான் தாலி கட்டி முடிச்சதும் சொன்னேன்ல உங்களுக்கு பொருத்தமான ஒரு வாழ்க்கையை தேடி போங்க.. நான் செஞ்சது தப்பு தான் என்னை மன்னிச்சிடுங்க அப்படின்னு சொன்னேன்ல..

நீங்கதான் என்னை உங்க வீட்டு வேலைக்காரியா கூட்டிட்டு வந்தீங்க.. அப்ப கூட உங்களை வாழ்நாள் முழுவதும் பார்த்துட்டு இப்படியே இருந்து விடலாம் அப்படின்னு தான் நான் இருந்தேன்..

நீங்க எப்படி வேணாலும் என்னை தொட்டு இருக்கலாம்.. ஆனா நான் சந்தோஷமா தான்  உங்களோட இருந்தேன்.. சந்தோஷமாத்தான் குழந்தையை பெத்துக்கிட்டேன்.. அப்படிப்பட்ட குழந்தையை தொலைத்துவிடுவேன் என்று பயமா இருக்கு.. இப்போ வரைக்கும் உங்களை மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் உங்களைப் பார்த்து வர கோபத்தை அடக்கவும் முடியாமல் எனக்கு கிடைத்த பொக்கிஷத்தோட வாழ்ந்துட்டு இருக்கேன்.. அவனுக்கு ஏதாவது ஆச்சு அவ்வளவு தான்.. என்னை நானே அழிச்சுப்பேன்.. எனக்குன்னு அவன் மட்டும் தான் இருக்கான் அவன் கிடைச்சிடுவானா??" என்று புலம்பினாள்..

அதைக் கேட்டவன் மனதுக்குள் எங்கேயோ ஒரு பக்கம் வலி வந்தது.. அந்த வலி எதனால் என அவனுக்கு தெளிவாக புரிந்தது... அவன் அவளுக்கு கொடுத்த கஷ்டமெல்லாம் அவன் கண்முன் வந்து அவனை தொல்லை செய்தது..

நீ எல்லாம் ஒரு மனிதன் தானா இப்படி ஒரு பெண் உனக்கு வாழ்க்கையில் கிடைப்பாளா.. கிடைத்த பொக்கிஷத்தை இழக்க பார்க்கிறாயே?? குழந்தை வேண்டும் ஆனால் குழந்தையின் அம்மா வேண்டாமா??

தன்னை இந்த அளவுக்கு நேசிக்கும் இவளை இனியும் விட அவனுக்கு மனம் இல்லை..

அவள் உயிர் வாழ்வது அந்த குழந்தைக்காக தான் என்பதை விது புரிந்து கொண்டான்.. என்ன ஆனாலும் சரி குழந்தையை காப்பாற்றிய அவள் கையில் ஒப்படைக்க வேண்டும் என எண்ணியவன் அதே நேரம் இனி நீ அனாதை இல்லை உனக்கு நான் இருக்கேன்.. போனது போகட்டும் இனி உன்னை நான் இழக்க மாட்டேன் என்று மனதுக்குள் எண்ணி கொண்டவன், இவளை போய் இப்படி நோகடித்து விட்டேனே என எண்ணியவனுக்கு தந்தை அன்று தன் தாயைப் பற்றி கூறியது வேறு நினைவு வந்து தொல்லை செய்தது.. அவனை எண்ணி அவனே வெட்கி போனான்.. போனது போகட்டும் இனி உள்ள வாழ்க்கையாவது அவளை சிறப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்தான்..

அதனால் அவளைப் பார்த்து, "குழந்தைக்கு எதுவும் ஆகாது.. கவலைப்படாதே" என்று அவன் ஆறுதல் கூறினான்..

அவளோ மேலும் பயந்து போய் அங்கும் இங்கும் நடக்க அவனும் அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு தன் பக்கமாக இழுத்தவன் கண்கள் வெளிறி போய் இருக்கும் அவளை பார்த்து, அவள் தோள் மீது கையை போட்டு அவளை தன் கைக்குள் அடக்கி பிடித்து ஒரு வித உரிமை கலந்த நேசத்தோடு பார்த்து, "நீ இப்படி கத்துறதுனாலயோ இல்ல அழுகுறதனாலையோ எதுவும் மாறிடாது.. ரூபன் நல்லபடியா உன் கைக்கு வருவான்.. கொஞ்சம் அமைதியா இரு.. டாக்டர் வர வரை இப்படியே இரு" என்று அவன் அவளைப் பார்த்து கூற,

அதைக் கேட்ட அவளுக்கு சற்று திகைப்பாக இருந்தாலும், அவனின் அருகாமையோ அல்லது அவனின் வார்த்தைகளோ ஏதோ ஒன்று அவளை சாந்தப்படுத்தியது.. அவள் கொஞ்சம் அமைதி ஆனாள்..

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு பிறகு மருத்துவர் வெளியே வர வேகமாக விது அவர்களிடம் செல்ல, "மிஸ்டர் விது.. உங்க பையன் நல்லா இருக்கான்... கொஞ்சம் கிரிட்டிக்கல் ஆப்ரேஷன் தான் மூக்குல போட்ட கடலை உடைந்து, ஒவ்வொரு பீஸ் பீஸா வெளில வந்திருக்கு.. அதுனால கொஞ்சம் மூக்குல இன்ஃபெக்சன் ஆகி இருக்கு.. பயப்பட வேண்டாம் மருந்து கொடுத்து இருக்கோம்.. ஒரு டு டேஸ் கழிச்சு நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்க்கலாம்" என்று மருத்துவர் கூறிவிட்டு சென்றார்..

அப்போதுதான் அவனுக்கு உயிரே வந்தது.. அவளோ அப்போதுதான் மருத்துவர் கேட்டதும் மீண்டும் உயிர் வந்தது போல கண்களில் கண்ணீரோடு, "குழந்தையை பார்க்கலாமா??" என கேட்க, "எஸ் போய் பாருங்க.. குழந்தை தூங்கிட்டு இருக்கான் டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க" எனக் கூற அவர்கள் அனைவரும் செல்ல அங்கு குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்..

அவனை அந்த கோலத்தில் பார்க்க விரும்பாத தேவி மகன் அருகே சென்று அவனை என்னவோ புதிதாக பார்ப்பது போல அவனுடைய கையை தடவி பார்த்துக் கொண்டு இருக்க, அவள் அருகே இருந்த விது அவள் தோளை தொட அவளோ அவனை நிமிர்ந்து பார்க்க, "அவன் நல்லாகியிட்டான்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் எழுந்துடுவான்.. பயப்படாத" எனக் கூற அவளும் அதை மருத்துவர்கள் அவனிடம் கூறும் போது கேட்டாள் அல்லவா?? அதனால் அவளுடைய உடலும் சரி மனமும் சரி கொஞ்சம் அமைதியாக இருந்தது...

அப்பொழுதுதான் அவளுக்கு அவனுடைய அருகாமையில் அவள் இருக்கிறாள் என்பதே உரைக்க, ஆறுதலுக்காக அவனிடம் சரண் அடைந்து விட்டேனா??? என எண்ணியவள் தன்னை எண்ணியே  வெட்கி போனாள்.. எவ்வளவுதான் பட்டாலும் அவன் அருகே வந்ததும் இப்படி உருகி குலையும் அவளை என்னவென்று சொல்வது என அவளுடைய மனசாட்சியே அவளை கேள்வி கேட்டது..

அப்படி இருக்க, இதை இப்போதே கத்தரித்து விட வேண்டும் என எண்ணி, "உங்க உதவிக்கு ரொம்ப நன்றி.. என் மகனை காப்பாத்தி கொடுத்துட்டீங்க.. இனி நான் உங்க வீட்டில் இருக்கிறதில் எந்த அர்த்தமும் கிடையாது.. நாங்க இங்கே இருந்தே கிளம்புறோம்.. என்னால இந்த மாதிரி அழுத்ததுக்குள் எல்லாம் இருக்க முடியாது.. நான் போறேன்.." என அவள் அவனிடம் இருந்து விலக முயன்று கூறினாள்..

அதை கேட்டவன் அவள் மீது கை வைத்து இருந்த அவனுடைய பிடியை விடாமல் அழுத்தி பிடித்தவன் அதே அழுத்தமான விழிகளோடு, "என்னால உன்ன மாதிரி பக்கம் பக்கமா எல்லாம் பேசிட்டு இருக்க முடியாது.. இனி உன்னையும் சரி நம்ம மகனையும் சரி விடறதா இல்ல.. இனி என்ன ஆனாலும் சரி உங்களை நான் விடமாட்டேன்.. அதனால மகன் கண் முழிச்சா அவன் கிட்ட என்ன பேசலாம் அவனுக்கு என்ன சாப்பிட கொடுக்கலாம்னு மட்டும் யோசிக்கிற வழியை பார்.. நான் டாக்டரை பார்த்துட்டு வந்துடறேன்" என கூறி விட்டு அவ்விடம் செல்ல அவளோ அதை கேட்டு அவன் என்ன சொல்கிறான் என்பது போல அதிர அதை கவனித்தவன், "நான் தான் வேணும்னு ரொம்ப ஆசைப்பட்டில.. இனியும் உன்னால நான் இல்லாமல் வாழ முடியாதுன்னு எனக்கு தெரியும்.. உனக்கும் தெரியும்... போற பேச்சை விட்டுட்டு என் கூட சேர்ந்து இருந்து சண்டை போடுற வழியை பார்" என கூறி விட்டு சென்று விட்டான்.. அதை கேட்ட அவள் அப்படியே திகைத்து போய் அமர்ந்து விட்டாள் தேவி..

 



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top