Share:
Notifications
Clear all

மந்தாரம் 41

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 483
Thread starter  

மந்தாரம் : 41

மருத்துவமனையில் அனைவரும் பதைபதைப்போடு காத்துக் கொண்டு இருந்தனர்..அனைவருக்கும் ஒரு வித பதட்டம் தென்பட்டது.. ரூபன் அங்கு அவசர பகுதியில் அனுமதிக்கப்பட்டு இருந்தான்..குழந்தையை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை.. ஒரு பரபரப்பான சூழலில் அனைவரும் இருந்தனர்..

விதுவின் முகம் இறுகி போய் இருந்தது.. தன்னுடைய உணர்வுகளை அவன் அடக்கியபடி இருக்கிறான்..அவனுடைய குழந்தை  நல்ல படியாக அவன் கையில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது.. என்ன இருந்தாலும் அவனுடைய ரத்தம் அல்லவா.. தான் ஆடாவிட்டாலும் தன்னுடைய தசை ஆடும் அல்லவா என்பது போல இது நாள் இல்லாத ஈர்ப்பும், அக்கறையும் இப்போது வந்து இருக்க, குழந்தைக்கு ஒன்று என்றதும் அவன் உள்ளம் துடிக்கிறது என்பதை அவனே உணர்ந்து கொண்டு இருந்தான்.. குழந்தை நல்ல படியாக அவர்களின் கையில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கு வந்தது..

ஆனால் தேவி அவளுடைய உணர்வுகளை அடக்க முடியாமல் அழுகையில் வெடித்துக் கொண்டிருந்தாள்.. அவளால் நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

குழந்தைக்கு இப்படி ஆகிவிட்டது என்ற வருத்தத்தில் பெரியவர்கள் இருந்தாலும் தேவியை எப்படி சமாளிப்பது என தெரியாமல் தடுமாறி போய் அவர்களும் இருந்தார்கள்..

ஆம்.. அவள் குழந்தையை யாரிடமும் கொடுக்காமல் இங்கு விது எடுத்து கொஞ்சி குழந்தை அவன் பக்கம் திரும்பி விடுமோ என்ற பயத்தில் அன்றைய பிரச்சனைக்கு பிறகு குழந்தையை அவள் கைக்குள்ளேயே வைத்திருந்தாள்..

அப்படி இருக்க, சம்பவத்தின் போதும் குழந்தை அவளுடன் தான் இருந்தான்.. அதுவும் அவள் அவனுக்காக நிலக்கடலை வறுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு கொடுத்து இருக்க, அவள் பார்க்கும் போது ஒவ்வொரு கடலையாக தின்று கொண்டு இருந்த குழந்தை அப்படியே  அக்கடலையில் விளையாடிக் கொண்டே அப்படியே முகத்தை நோக்கி நிலக்கடலை கிண்ணத்தை கவிழ்த்து விட அதில் ஒரு கடலை குழந்தையின் மூக்கின் உள் பகுதிக்குள் சென்று விட்டது..

குழந்தையோ மூக்கில் சுவாசிக்க ஏதோ தடையாக இருப்பது போல உணர்ந்தவன் மூச்சை உள்நோக்கி இழுத்து விட அக்கடலை அப்படியே மூக்கின் உள்ளே ஆழமாக சென்று விட குழந்தைக்கு மூச்சு விட முடியாமல் தவித்து போய் மயக்க நிலைக்கு சென்ற பின், அதை கண்ட அவள் அலறிய பின் தான்  குழந்தையை விது மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைவாக அழைத்து வந்தனர்..

அவளுக்கோ தன்னுடைய கவன சிதறல் காரணமாக தான் இப்படி நடந்து விட்டதோ என் கையிலேயே என் மகனுக்கு ஆபத்து வந்து விட்டதே என்றெல்லாம் எண்ணி அழுது கொண்டு இருந்தாள்.. அவளுக்கு எல்லாம் அவளுடைய மகன் மறுபடியும் திரும்ப அவள் கைக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் அவளுக்கு இருந்தது

குழந்தையை பரிசோதனை செய்ததில் மூக்கில் இருக்கும் கடலை குழந்தையின் மூக்கின் சுவாசிக்கும் உள் பகுதியில் தடையாக இருப்பதால் ஒரு மைனர் சர்ஜரி மூலம் தான் கடலையை அப்புறப்படுத்த இயலும் என்று கூறி விட ஐந்து வயது குழந்தைக்கு சர்ஜரி யா என தேவி அப்படியே ஆடி போய் விட்டாள்.. அதுவும் அவள் காரணமாகத்தான் இதெல்லாம் ஏற்பட்டது என அவள் நொந்து போய்விட்டாள்..

அங்கிருக்கும் நிலைமை விதுவுக்கு தெளிவாக புரிந்து இருந்தது.. ஆனால் தேவிக்கு சுத்தமாக விளங்கவில்லை.. அவர்களின் ஊர் பக்கம் எல்லாம் மருத்துவமனைக்கு சென்றாலே ஏதாவது ஆகி விடும் என்ற நம்பிக்கையில் பிறந்த அவளுக்கு அவளுடைய மகன் பிழைப்பானா மீண்டு வருவானா என பயந்து போய் அவள் மதியிழந்து அந்த உடலில் வெறும் உயிர் மட்டும் தான் எஞ்சி இருப்பது போல அவள் துடித்துக் கொண்டு இருந்தாள்..

அந்த இடத்தையே அவள் கதறி அழுது கிட்டத்தட்ட ஆர்பாட்டம் செய்து கொண்டு இருந்தாள்..

அதுமட்டுமில்லாமல் வருகிற போகிற மருத்துவர்கள் காலில் எல்லாம் அவள் விழுந்து கொண்டிருந்தால் அதைக் கண்ட ராம்மோகன் அம்மா ஒன்னும் ஆகாது அம்மா  என கூற அவளோ கேட்பது போல இல்லை.. "ஐயோ என் மகனுக்கு நானே எமன் ஆகிட்டேன்" என புலம்பி அழுதாள்..

அதை கேட்ட ரேவதியும் அவளை பார்த்து, "தேவி பயப்படுற மாதிரி எதுவும் கிடையாது நம்ம ரூபன் நல்லபடியா வருவான்.. சாதாரணமா குழந்தைகள் ஏதாவது மூக்குல போட்டுப்பாங்க.. ஆனால் இவனோடது கொஞ்சம் ரிஸ்க் ஆயிடுச்சு.. அவ்வளவுதான்.. ஆனால் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என டாக்டர் சொல்லிட்டாங்களே.. நீ வருத்தப்படாத சின்ன சர்ஜரி தான் சரியாகிவிடும்" என்று ரேவதியும் அவளின் அழுகையை பார்த்து ஒரு தாயாக மனம் வெதும்பி அவளுக்கு ஆறுதல் கூறினார்.. ராம் மோகனும் அதை தான் அவளிடம் கூறினார்..

ஆனால் அவள் கேட்பதாக இல்லையே.. "நான் அவனை கவனிக்காமல் விட்டுட்டேன்" என்று கதறினாள்..

அதுமட்டுமில்லாமல் அந்த பக்கம் வரும் ஒவ்வொரு மருத்துவர்கள் காலிலும் அவள் விழுவதை கண்ட அவனுக்கு அந்த நொடி அவள் மீது இரக்கம் தான் வந்தது.. கூடவே அவளின் செயலால் அவள் மீது கோபமும் வந்தது..

அந்த குழந்தை மீது அவள் கொண்டுள்ள நேசம் அவனுக்கு புரிந்தது.. ஆனாலும் அவளின் இந்த ஆர்பாட்டம் இந்த இடத்துக்கு தேவை இல்லாதது எனக் கருதி, ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவன் நேராக அவள் அருகே சென்றான்..

அந்த நேரம் அவளோ ஒரு மருத்துவரின் காலை பிடித்துக் கொண்டு, "ஐயா நீங்க தான் என் மகன் உயிரை காப்பாற்றிக் கொடுக்கணும்" என கூற,

அவரோ, "யார் மா நீங்க என் காலை விடுங்கமா.. நான் உங்க மகன் கேசை பார்க்கல..ஆனந்தன் டாக்டர் பாக்குறாங்கல்ல.. உங்க மகனுக்கு ஒன்றும் ஆகாது விடுங்கம்மா.. நீங்க டென்ஷன் ஆகாதீங்க" என்று அவரோ தர்ம சங்கடமாக சுற்றி இருக்கும் அனைவரையும் பார்த்து தேவிகாவை அகற்றும்படி பார்வையாலேயே கேட்டுக் கொண்டு இருந்தார்..

அவனுக்கோ அதுக்கு மேல் பொறுமை இல்லாமல் அவள் அருகே சென்றவன், "சாரி டாக்டர்" என்றவன், "தேவி எழுந்திரு.." என கூற அவளோ கேட்பதாக இல்லை.. அவனோ, "தேவி ரூபனுக்கு ஒன்னும் ஆகாது" என திடமாக கூறினான்..

அப்போதும் அவனுடைய பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல் அவள் மருத்துவரை விடாமல் அவரை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கி கொண்டு இருந்தாள்..

அவனுக்கோ அதை கண்டு சற்று கடுப்பாக இருந்தது.. இவள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறாள் என எண்ணியவன் அதற்கு மேல் இது எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு பொறுமை இல்லை..

அவளுக்கு விருப்பம் இல்லையென்றாலும் அவளுடைய கையை பிடித்து இழுக்க அவளோ அவனுடைய பக்கம் அவன் இழுத்த விசைக்கு அவன் பக்கம் வந்து விட்டாள்..

அந்த மருத்துவரோ விட்டால் போதுமென்று ஓட்டம் எடுத்து விட்டார்.. அவளோ அவன் இழுக்கவும் வேகமாக அதிர்ந்த பார்வையோடு எழுந்தவள் அவனை பார்த்து கண்ணீரோடு முறைக்க, அவனோ, "உனக்கு அறிவே இல்லையா?? எதையும் யோசிக்க மாட்டியா?? ரூபனை ஆப்ரேஷன் தியேட்டருக்கு கூட்டிட்டு போயிருக்காங்க.. அங்கே தானே அவன் இருக்கான்..

போறவங்க, வரவங்க எல்லோரையும் இப்படி தொல்லை பண்ணிட்டு இருக்க??.." என அவன் கேட்டான்..

அதுவரை அவள் அடக்கி பிடித்து வைத்திருந்த அவளுடைய ஆத்திரத்தை கொட்டி விட்டாள் அவனை பார்த்ததும், "யார் தொல்லை கொடுக்கிறா?? நீங்க தான் எங்களுக்கு தொல்லை  கொடுக்கறீங்க?? என் மகன் படுத்து கிடக்கிறான்.. வேடிக்கை பார்க்க சொல்றீங்களா உங்களை மாதிரி??

என் மகனுக்கு நான் மட்டும் தான் இருக்கேன்.. அவனுக்கு என்ன ஆச்சோ ஏதாச்சும் தெரியாம கலக்கத்தில் இருக்கேன்.. நீங்க இதுவும் பேசுவீங்க இதுக்கு மேலயும் பேசுவீங்க..

எங்களை சும்மா விட்டிருந்தா கூட நாங்க அப்படியே நிம்மதியா இருந்திருப்போம்.. எங்களை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் தொல்லை கொடுக்கிறதே நீங்கதான்..

எங்க வாழ்க்கையை வாழ விட்டிருந்தா நாங்க ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்துட்டு போயிருப்போம் இல்ல.. அதை விட்டுட்டு போன உறவை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து வச்சு இப்படி தொல்லை பண்ணிட்டு இருக்கீங்க...

ஆனால் உங்க சுயநலத்துக்காக எங்களை கூட்டிட்டு வந்து, இப்படி என் மகனை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டீங்க இல்ல இப்போ உங்களுக்கு சந்தோஷமா??.. சொல்லுங்க.. எனக்குனு அவன் மட்டும் தான் இருந்தான் அவனையும் பறிச்சிட்டீங்க தானே?? போதுமா?? உங்களுக்கு??" என அவள் வெடித்து கேட்டாள்..

அதை கேட்டு அவன் அதிர்ந்தான்.. ஒரு தாயின் தவிப்பை கண்டவனுக்கு என்ன சொல்வது என தெரியாமல் அவன் தடுமாறி இருக்க, அவளோ கோபத்தின் வீரியத்தில் துவங்கியவள் அழுகையில் வெடித்தாள்.

"உங்களுக்கு இது சாதாரண விஷயமா இருக்கலாம்.. ஏன்னா உங்களுக்கு இந்த பிள்ளை முக்கியம் கிடையாது.. இவனுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை வீட்டை விட்டு வெளியே போ அப்படின்னு சொன்னவங்க தானே நீங்க.. உரிமையான நீங்களே எனக்கும் அதுக்கும் எந்த விதமான உரிமையும் இல்லை.. வெளியே போ சொல்லி எங்களை அனுப்பின உங்களுக்கு என்னோட வலி புரியாது..

உங்களுக்கு தான் யாருடைய உணர்வும் அதோட வலி உங்களுக்கு தெரியாது..

ஆனால் நான் இன்னும் உயிர் வாழ்ந்துட்டு இருக்கேன் அப்படின்னா அதுக்கு காரணம் என்னுடைய மகன் மட்டும்தான்.. அவனுக்கு ஏதாவது ஒன்னு நான் என்னால தாங்கிக்க முடியாது..

என்ன பாக்கறீங்க?? என்னுடைய தூய்மையான காதலுக்கு கிடைத்த பரிசு அவன்.. என்னுடைய காதல்.. நான் உங்களை நேசிச்ச என்னுடைய காதலுக்கு கிடைச்ச பொக்கிஷம் அவன்.. அவனுக்கு ஏதாவதுன்னா என்னால தாங்கிக்க முடியாது தெரியுமா???" என அவள் அழுகையில் வெடித்தாள்..

அவளின் வார்த்தைகளை கேட்ட அவன் மேலும் அதிர்ந்தான்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top