மந்தாரம் 20
மந்தாரம் : 20
"என்ன உச்சிமலைக்கு போனாங்களா ஐயோ..இந்த மழைக்குள்ள எங்கேன்னு தேடுவேன்" என்று அவர் பதற, பஞ்சாயத்து தலைவர், "இந்நேரம் வந்திருக்கணும் ஏன் இன்னும் வரல??" என்று அவர் பாட்டியிடமே கேள்வி கேட்டார்..
"நான் தான் படிச்சு படிச்சு சொன்னேனே ஒரு வயசுக்கு வந்த பிள்ளையை ஆம்பள பையன் கூட அனுப்பாத அனுப்பாதே என்று நீ தான் ஊரு அது இதுன்னு சொல்லி இப்படி ஆக்கி வச்சிட்ட.. இன்னும் பத்து நாள்ல அவளுக்கு கல்யாணம் இன்னும் அவளைக் காணோம் வேறொருத்தன் கூட இருக்கா...
இப்ப நான் அவளை எங்கன்னு போய் தேடுவேன்.." என்று பாட்டி அவரிடம் புலம்ப அதற்கு அவரோ, "அதுக்கு உன் பேத்தியை நீ கண்டித்து வைத்திருக்கணும்.. இங்கே வந்து புலம்பிட்டு இருக்க போ போ அதெல்லாம் வந்துடுவாங்க" என்று அவர் கூறி விட்டு கதவை அடைத்து விட்டார்..
பாட்டிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.. இந்த கொட்டும் மழையில் தன் பேத்தியை எப்படி தேடுவது என தெரியாமல் உச்சிமலை நோக்கி நடக்க துவங்கினார்..
அவருக்கு அழுகை அழுகையாக வந்தது.. அவர் எல்லாம் இந்த கிராமத்தை விட்டு எங்கேயும் வந்தது இல்லை.. வெளி உலகம் தெரியாது.. அவருக்கு தெரிந்தது எல்லாம் இந்த ஊரும் அவர் வீடு மட்டும் தான்.
அப்படி இருக்க பொட்டை பிள்ளை வீட்டில் விளக்கு வைக்கும் வீட்டுக்குள் வந்திருக்க வேண்டும் என்ற கோட்பாட்டில் தான் அவர் வாழ்ந்து வந்து இருக்கிறார்..
தேவிகா ஒரு நாள் கூட அந்த நடைமுறையை தவறவிட்டதில்லை. எங்கே விளையாட சென்றாலும் சரி எங்கே வேலைக்கு சென்றாலும் சரி பாட்டி திட்டுவார் என்று கூறி விளக்கு வைக்கும் முன் வீட்டுக்கு வந்து விடுவாள்..
இன்று அவள் வராமல் இருக்கவும் அவளுக்கு ஏதோ ஒன்று நடந்து விட்டதோ என்று தான் பாட்டியின் உள் மனம் பதறியது..
கால் போன போக்கில் எவ்வளவு நேரம் அவர் நடந்து இருப்பார் என அவருக்கே தெரியாது.. வெகுநேரம் நடந்தார்..ஒரு குடையும் பிடித்து அவர் நடக்க கொட்டும் மழையில் வழியெங்கும் இருட்டாக இருக்க மனதுக்குள் என்னவோ பாட்டிக்கு இனம் புரியாத படபடப்பு எழ பேத்திக்கு எதுவோ ஆகி விட்டது என்றே அவர் முடிவு செய்து விட்டார்..
அப்படி பதறி அவர் நடக்கும் போது அங்கு ஒரு பெரிய கல் இருப்பதை உணராத பாட்டி அந்த கல் இடறி கீழே விழுந்தவர் தலை மற்றொரு கல்லில் பட்டு அங்கேயே மயங்கி போனார்..
இரவெல்லாம் கொட்டிய மழையில் பாட்டி கேட்பாரற்று கிடந்தார்.. கல்லில் அவருடைய தலை அடிபடவும் அவருக்கு பின்பக்கம் மண்டையிலிருந்து ரத்தம் கொட்ட துவங்கியது.. அந்த மழையோடு மழையாக அவருடைய ரத்தமும் கலந்து அவர் சம்பவ இடத்திலேயே தன் உயிரை விட்டிருந்தார்.. கீழே விழுந்ததும் யாராவது அவரைக் காப்பாற்றி இருந்தால் அவர் உயிர் பிழைத்து இருக்க முடியுமோ என்னவோ ஆனால் இரவு முழுவதும் அவர் அப்படியே கிடக்கவும் அவர் உயிர் விண்ணுக்கு சென்றது..
இரவு முழுவதும் அடித்து பெய்த மழை காலையில் கொஞ்சம் ஓய்ந்து போனது.. அதற்குள் பாட்டி உயிரை விட்டு இருக்க அதை கண்ட ஊர் மக்கள் பதற பஞ்சாயத்து தலைவர் பாட்டியின் நிலையை கண்டு உள்ளுக்குள் அவருக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது..
தன்னால் தானோ பாட்டிக்கு இந்த நிலைமை என அவர் நினைத்தார்.. அவர் தன்னுடைய தீர்ப்பை மீறி பாட்டி நடக்கிறாரா என்ற வைராக்கியத்தில் தான் பாட்டி எவ்வளவு தூரம் கேட்டும் அவர் சம்மதிக்காமல் இருந்தார்..
ஆனால் பாட்டிக்கு இந்த நிலைமை ஏற்படும் என அவர் கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார்..அதனால் பஞ்சாயத்து தலைவர் உள்ளுக்குள் மிகவும் வருந்தினார்.. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தார்..
ஊரே கூடி பாட்டியின் நிலையை கருதி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, அதில் ஒருவர், "நேத்து இரவு அந்த புள்ள தேவியை காணோம் அப்படின்னு பாட்டி தேடிட்டு இருந்தாங்க" என்று ஒருவர் கூற,
"அந்தப் பெண்ணும் அந்த புதுசா வந்திருக்க சாரும் உச்சிமலைக்கு போய் இருக்காங்க" என்று வேறொருவர் கூற,
" இன்னும் வீட்டுக்கு வரலையா??" என்று ஒரு ஆள் போய் விது பிரதாப் தங்கி இருந்த இடத்தை அலசி ஆராய்ந்து விட்டு வர அங்கு அவனையும் காணவில்லை என்றதும், உடனே ஊர்க்காரர்கள் அனைவரும் சேர்ந்து தேவியையும் விது பிரதாப் இருவரையும் தேடி உச்சிமலைக்கு செல்வதாக முடிவு செய்தனர்..
அதற்குள் அந்த கிராமத்தில் வெளிச்சம் வந்து விட்டது.. மழை வேறு நின்று விட்டது.. ஊர்க்காரர்களில் ஒரு பத்து பேர் அவர்கள் இருவரையும் தேடி உச்சிமலை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்..
இரவெல்லாம் குளிரில் நடுங்கி இருந்தவர்கள் உயிரோடு இருப்பதே பாக்கியம் என்ற நிலையில் தான் அவர்கள் இருவரும் இருந்தார்கள்.. ஆம் இரவெல்லாம் அடித்த அந்த காற்றும் மழையும் அவர்கள் இருவரையும் வெகுவாக அச்சுறுத்தி இருந்தது.. அதில் அவர்களின் கோலம் தான் அலங்கோலம் ஆகி இருந்தது..மழை நின்ற பின் தான் ஆளுக்கு ஒரு பக்கம் கொஞ்சம் இளைப்பு ஆறினர்..
அவர்கள் இருவரையும் ஊர் மக்கள் தேடி வருகிறார்கள் என்பது கூட தெரியாமல் அவர்கள் இருவரும் நேற்று இரவு மழையில் ஒருவருக்கொருவர் பின்னி பிணைந்த கைகளோடும் அவள் எங்கேயும் அடித்து சென்று விட கூடாது என அவளின் தாவணியின் ஒரு பகுதியை அவன் கைகளில் கட்டி, அப்படியே உறங்கி இருக்க அதே பின்னிப்பிணைந்த கைகளை இப்பொழுதும் விடாமல் உறங்கிக் கொண்டிருந்தனர்..
அவனோ அடுத்த கட்டமாக உறக்கத்தில் அவனின் மறு கையை அவளின் இடையில் போட்டு படுத்துக் கொண்டு இருந்தான்..
இருவரும் எப்படி மழை ஒதுங்கியதும் உறங்கினார்கள் என தெரியாது.. விடியும் போது அவள் அருகே அவன் படுத்து கிடக்க அதுவும் ஆழ்ந்த உறக்கத்தில் அவனையறியாமல் அவளை அணைத்து கொண்டு அவன் படுத்து இருக்க, அதை கண்ட அவளுக்கு அந்த நொடி லேசான அதிர்வுகள் இருந்தாலும் உள்ளுக்குள் அவளுக்கு அவன் மீதான காதல் எட்டிப் பார்த்தது என்னவோ உண்மைதான்..
அவனின் அருகாமை அவளுக்குள் சொல்ல முடியா தவிப்பை கொடுத்தது...அதுவும் அவனின் வலிய கரத்தில் அவன் அணைத்து இருப்பது உனக்கு நான் இருக்கிறேன் என அவன் கூறுவது போல அவளுக்கு தோன்றியது..
காதல் செய்த மனம் என்ன வேண்டுமானாலும் நினைக்கும் அல்லவா அதுபோன்ற நிலையில் தான் தேவிகா இருந்தாள்..
சந்தர்ப்ப வசத்தால் நேற்று அவளும் அவளும் ஒரு பொழுதை கழிக்க வேண்டி இருந்தது.. ஆனால் அந்த நிமிடங்களும் உயிரே இயற்கையின் பிடியில் போனாலும் அவனோடு சென்று விட வேண்டும் என்று தான் அவள் வேண்டிக் கொண்டிருந்தாள்..
அந்த அளவுக்கு அவன் மீது அவளுக்கு பைத்தியம் ஏன் என்று தெரியவில்லை ஏன் என்று புரியவில்லை அவன் என்றால் அவளுக்கு கொள்ளை இஷ்டமாகி போய்விட்டது காதல் செய்து விட்டாலே என்ன செய்ய இயலும்??
அதே நேரம் பாட்டியின் நியாபகம் வர அவர் தன்னை எண்ணி வருத்தப்பட்டு கொண்டிருப்பார்களே.. அங்கே என்ன பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்களோ என நினைக்கும் பொழுது அவளுக்கு பயமாக இருந்தது..
இனி வீட்டுக்கு போனால் என்ன நடக்குமோ என்று அவள் பதறி, "சார் சார் எந்திரிங்க போகலாம் விடிஞ்சிடுச்சு" என்று அவள் பதட்டப்பட்டாள்.. அவன் அவளின் தாவணி அவன் கையில் சிக்கி இருப்பதால் அவளால் அவனை விட்டு எழ முடியாது.. அவனுடன் படுத்து கிடக்க தான் முடியும்.. அந்த தருணத்தில் அவனை அணுஅணுவாக ரசித்துக் கொண்டு அவ்வளவு நேரம் இருந்தவள் அவனுடைய மெல்லிய அசைவும், பாட்டியை நினைத்து பயமும் வர அவள் அவனை எழுப்பினாள்..
அதை கேட்டு அவன் உறக்கம் கலைந்தவன் அவன் எங்கு இருக்கிறான் என பார்க்க அந்த இடத்தையும் சுற்றத்தையும் பார்த்து தனக்கு இந்த நிலையை கொடுத்த தன் தந்தை மீது கோபம் எழ, அவள் அருகே அவனும் அவள் மீது கையை போட்டும் அவளுடைய தாவணியை அவன் கையில் அவளும், அவனும் பிரிந்து விட கூடாது என கட்டி இருந்தான்.. அதை கண்டவன் வேகமாக கையை எடுத்தவன் அவன் கையில் கட்டி இருந்த அந்த முடிச்சையும் அவிழ்த்து கொடுத்தவன் மனம் எரிச்சலின் விளிம்பில் இருந்தது..
அவளை பார்த்து, "என்ன என் முகத்தை பார்த்திட்டு இருக்க எந்திரி.. இந்த ஊர்ல அடுத்த பூகம்பம் வெடிக்கிறதுக்குள்ள இங்கே இருந்து போகணும் ஊரா இது!! ச்சை" என அவனின் அழுக்கு உடையை பார்த்து அவன் கூற அவளும் பட்டென்று எழுந்து விட்டாள்..
பிறகு அவனோ கடுப்பாக அவனுடன் ஒருத்தி இருக்கிறாள் என்ற உணர்வே இல்லாமல் நடக்க துவங்க அவனின் தீடிர் கோபத்தை கண்டு அவளுக்கு ஒன்றும் விளங்காமல் அவன் பின்னால் நடக்க துவங்கினாள்..
அப்போது தான் அவள் ஒன்றை கவனித்தாள்.. அவளின் ரவிக்கை மற்றும் தாவணி கிழிந்து இருந்தது..
ஆம் நேற்று என பார்த்து அவள் அணிந்து இருந்தது ஒரு பாவாடை தாவணி அணிந்து இருக்க அவர்கள் மழையில் அங்கும் இங்கும் இருட்டில் தங்க இடம் தேடி அலையும் போது அங்கே இருந்த மரக்கிளையில் மோதி அவளின் ஜாக்கெட் கிழிந்து விட்டது...
இதோடு இவர் கூட எப்படி போறது?? அவர் பார்த்திருப்பாரா? என மனதுக்குள் அவள் கேள்வி கேட்க அவளின் மனசாட்சியோ, "ஆமா போ நேத்து இரவு இதெல்லாம் பார்த்து இருக்க மாட்டாரா?? அதுதான் அவர் பக்கத்திலேயே அவர் மூச்சை சுவாசிச்சிட்டு தானே தூங்கிட்டு இருந்த அப்புறம் என்ன??" என்று அவள் மனசாட்சி அவளை கேலி செய்ய அதில் மூண்ட சின்ன சிரிப்பை அவன் காணாமல் அடக்கிக் கொண்டவள் அவனோடு நடக்க துவங்கினாள்..
அதேநேரம் அவளைத் தொட்ட விது மட்டும்தான் அவளுடைய கணவன் என்ற நிலைக்கு அவள் சென்று விட்டாள்.. ஒரே இரவில் இனி அவள் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை விதுவை எண்ணி வாழ்க்கையை வாழ போகிறேன் என என்னவோ அவனோடு திருமணம் முடிந்து முதல் இரவு முடிந்தது போல அவள் எண்ணிக் கொண்டு இருந்தாள்..
அவனோ எதை பற்றியும் யோசிக்காமல் அவன் வாழ்ந்து கொண்டு இருந்த வாழ்க்கைக்கு இதெல்லாம் தேவையா தொழில் எனக் கூறி தன் தந்தை தன்னை இப்படி ஒரு இக்கட்டில் மாட்டி விட்டு விட்டாரே என கருதி அவன் கால் போன திசையில் நடந்தான்..
ஆனால் அதுவும் அங்கு மிகவும் கடுமையாக தான் இருந்தது.. மரங்கள் எல்லாம் விழுந்து பாதை எல்லாம் மூடி இருந்தது.. அவனுக்கு அதற்கு மேல் எப்படி செல்வது என தெரியவில்லை..
அவளுடைய துணை தேவைப்பட்டது..அவனோ கடுப்பாக திரும்பி பார்த்து, "இன்னும் மெதுவா அசைஞ்சு வர?? இங்கே இருந்து போகணும்னு நினைப்பில்லையா??இனி எப்படி போகணும் சொல்லு" என்றான்..
அவளோ சுற்றும் பார்க்க அந்த அழகான மலை இப்போது கோர முகமாக காட்சி அளிக்க அவளோ சுற்றும் முற்றும் பார்க்க, "என்ன பார்க்கிற எப்படி போகலாம்னு சொல்லு இல்லை இங்கேயே இருக்கலாம்னு நினைச்சிட்டு இருக்கியா??.. ஒரு வாரம் இருக்கலான்னு பார்த்தேன் நேத்து ஒரு ராத்திரியே எனக்கு போதும் போதும் ஆயிடுச்சு இன்னைக்கே நான் இந்த ஊரை விட்டு கிளம்பிடுவேன் சீக்கிரம் சொல்லு" என கடுப்பாக கேட்டான்..
அவனின் தீடிர் கோபத்தின் காரணம் புரியாதவள் எதுவும் பேசாமல் என்ன அவன் இன்றே சென்று விடுவானா என்ற வருத்தத்தில், "இப்படி போலாம் சார்" என அவள் காலை வைக்கவும் கால் இடறி அவள் விழவும் சரியாக இருந்தது..
அவள் விழுந்து விட போகிறாள் என அவளின் கையை பற்றியவன் அப்படியே வேகமாக அவளின் கைகளை பிடிக்க அவனும் அவள் விழுந்த விசையில் அவள் மீது விழுந்தவன் ஒருவர் மீது ஒருவர் விழுந்து அப்படியே அவர்களை சறுக்கி விட மலை சரிவில் உருண்டு கொண்டு இருந்தனர்..
அப்படி இருவரும் உருண்டு உயிர் பிழைப்போமா இல்லையா என தெரியாமல் ஆபத்துக்கு பாவம் இல்லை என பயத்தில் அவள் அவனை அணைத்து கொள்ள அவனும் அவளை காப்பாற்ற அணைத்து கொண்டு உருள இறுதியில் இருவரும் ஒரு கரையை அடைந்தனர்..
அப்போது தான் அவர்களின் உலகமே இருள துவங்கியது ..ஆம் அவர்கள் கரையை அடையவும் அவர்கள் இருவரை தேடிக் கொண்டு இருந்த ஊர்மக்கள் வரவும் சரியாக இருந்தது...
