Share:
Notifications
Clear all

மந்தாரம் 19

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

மந்தாரம் : 19

அந்தி மாலை பொழுது..

விதுவை பார்த்துக் கொண்டு அவன் அருகாமையை ரசித்துக் கொண்டு, இனி ஒரு வாரம் தான் அவன் இருப்பானா என்ற வருத்ததோடு, அவன் நடக்கும் போது அறியாமல் ஏற்படும் சிறு சிறு உரசல்களை ரசித்தபடி மலை ஏறிக் கொண்டு இருந்தாள் தேவிகா..

இந்த நொடி அவளுக்கான நிமிடங்கள்.. அவனோடு இருக்கும் ஒவ்வொரு நொடிகளும் அவளுக்கு மிக முக்கியமானவைகளாக அவளுக்கு இருந்தது..

ஆனால் அவனோ மிகவும் தீவிரமாக இருந்தான்.. அவன் இங்கிருந்து விடை பெற வேண்டிய சமயம் வந்து விட்டதால் அவனுடைய வேலைப்பளு சற்று அதிகம் ஆகி இருந்தது..அந்த நெருக்கடியில் விது இருந்தான்..

அவனுக்கு துணையாக தேவிகா இருப்பது அவனுக்கு அவ்வளவு ஆறுதலாக இருந்தது..

அப்படி மலை ஏறிக்கொண்டு இருக்கும் போதே, "நல்லவேளை தேவிகா உன்னுடைய கல்யாணம் அடுத்த வாரம் வச்ச.. இல்ல நான் அவ்வளவுதான்.." என்று அவன் கூறிக் கொண்டே அந்த மலை ஏறிக் கொண்டிருக்க,

அவளும் திருமணம் என்றதும் அவள் தொண்டையில் எழுந்த அழுத்ததைக் குறைக்க முடியாமல், "சார் ஒரு வாரம் முடிஞ்சா நீங்க போயிடுவீங்களா?? இனி உங்களைப் பார்க்கவே முடியாதா??" என உள்ளுக்குள் எழும் சங்கடத்தை அடக்க முடியாமல் அவள் கேட்டாள்..

"ஆமாம் நான் போயிடுவேன் தேவி.. இனி இந்த பக்கம் வர வேண்டிய வேலை இருக்காதுன்னு நினைக்கிறேன்.. இனி எதுவா இருந்தாலும் கொட்டேஷன் கொடுத்தா இங்க இருக்கவங்க செஞ்சு கொடுக்க போறாங்க.. அது மட்டும் இல்லாமல் ஏதாவது தேவைனாலும் என்கிட்ட வேலை செய்றவங்க வரலாம் நான் வரது சந்தேகம் தான்" என அவன் கூறினான்..

அதை கேட்டவள் இனி அவனை பார்க்கவே முடியாதா என எண்ணி, "அப்போ நீங்க என்னை மறந்துடுவீங்களா சார்??" என கேட்டாள்..

"அது என்ன அப்படி சொல்லிட்ட உன்னை எப்படி மறக்க முடியும்?? உன் மூலமா உங்க கிராமம் மூலமா கிடைச்ச பொருட்களை எல்லாம் பார்க்கும் போது உன் நியாபகம் கண்டிப்பா வரும்.." என்றான் இயல்பாக,

"சார் உங்ககிட்ட பேசணும் அப்படின்னா எப்படி பேசுறது சார்??" என அவள் கேட்கவும், அவனோ அவளைப் பார்த்து சிரித்தான்..

"சார் அப்போ நாம இனிமேல் பேசிக்கவே முடியாதா சார்??" என்றாள் ஒரு வித வலியோடு,

"அதுக்கு தான் போன் இருக்குல்ல அதுல பேசிக்கலாம் தேவி" என்று அவன் கூறினான்..

"சார் என்கிட்ட போன் எல்லாம் இல்லை சார்?? அப்போ என்ன சார் பண்றது??"

"உன்னோட கல்யாணத்துக்கு என்னோட கிப்ட்டா ஒரு போன் உனக்கு வாங்கி தரேன் போதுமா?? அதுல பேசலாம் ஓகே.." என அவள் ஒரு உணர்வில் பேச அவனோ அதை உணர்ந்து கொள்ளாமல் அவன் பதில் அளித்து கொண்டு இருந்தான்..

அவனும் அவளிடம், "உனக்குத்தான் அடுத்த வாரம் கல்யாணம் ஆகப்போகுது. நீ என்ன என்னை ஞாபகமா வச்சுட்டு இருக்க போற?? நீ எப்படி இருந்தாலும் என்னை எல்லாம் மறந்துட்டு உன் புருஷன் கூட ஒரு நல்ல வாழ்க்கை வாழ போற.. இதுல எங்க என்னை எல்லாம் போய் நீ ஞாபகம் வச்சுக்க போற" எனக் கேட்டான்..

அதை எல்லாம் கேட்கும் போதே அவளுக்கு துக்கம் தொண்டை அடைத்தது..என்ன வார்த்தை சொல்லி விட்டான்.. அவனை அவள் மறப்பதா?? அது இந்த ஜென்மத்தில் நடக்காதே?? அவளின் மனதை பறித்தவன் முகத்தை அவளால் மறக்க இயலுமா என்ன??

அவளுக்கு தெரியும் அவன் ஒரு எட்டா கன்னியென்று ஆனால் அவன் மீது ஆசை கொண்டு விட்டாலே அவளால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை..

அவள் நெஞ்சம் ஊமையாக அழுதது.. அதை அந்த இயற்கை கேட்டதோ என்னவோ வானம் தீடிரென இருட்டுக்கட்ட ஆரம்பித்து விட்டது..

அவனை விட அவளுக்கு மனமில்லை.. அவன் எட்டா கனி தான் அவனிடம் தன் காதலை பகிர கூட அவளுக்கு ஒரு மாதிரியாக தான் இருந்தது.. ஏனெனில் அவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் அவளுக்கு தெரியாமல் இல்லை.. மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் தான் அவளுக்கும், அவனுக்கும் இருக்கிறது என தெரியும்..

ஆசை யார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் வைக்கலாம்.. ஆனால் அதை சொல்ல வேண்டும் என்று இல்லையே அவளுடைய காதல் சொல்லாத காதலாக இருந்து விட்டுப் போகட்டும் என அவள் எண்ணிக் கொண்டாள்..

அப்படி இருக்கும் போது அவனை விட்டு விலகவும் முடியாமல், அவனிடம் மனதை பறி கொடுக்கவும் செய்து அவனிடம் அவள் மனதை வெளிக்காட்ட முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் தருணத்தில் அவள் உள்ளம் கதறிக் கொண்டிருப்பதை அவள் மட்டும் அறிய இயற்கையும் அவளோடு கூடிக் கொண்டதோ என்னவோ மழை வர துவங்கியது..

தீடிரென மழை வரவும், "விது என்ன மழை வந்துடுச்சு இன்னும் நாம முடிக்க வேண்டிய வேலை இன்னும் இருக்கே" என்று அவன் எரிச்சலாக கூறினான்...

அவளோ திடீரென மழையை பார்க்க மழை பெரிதாக வருவது போல அவளுக்கு தோன்றியது..

"சார் மழை பலமா வரும் போல.. இப்போ நாம இந்த மலையில் இருந்து இறங்க ஆரம்பிச்சா தான் இன்னும் ஒரு மணி நேரத்தில் ஊருக்கு போக முடியும்.. மிச்சத்தை நாளைக்கு பார்த்துக்கலாம்" என தேவிகா அவனிடம் கூறினாள்..

அதை கண்டு கடுப்பான அவன், "உனக்கு என்ன மழை ஜோசியம் தெரியுமா?? என்ன லைட்டா தானே மழை வருது.. அதெல்லாம் போயிடும் இத்தனை நேரம் வெயிலா தானே இருந்துச்சு அதெல்லாம் வராது" என்று அவளை இழுத்துக் கொண்டு அவன் மேலே செல்ல முயன்றான்..

அவளோ, "இல்ல சார் கண்டிப்பா மழை வரும் நான் இத்தனை நாள் இங்கே இருந்து இருக்கேன் எனக்கு தெரியாதா??" என்று அவள் கூறும் பொழுதே மழை பட படவென பெய்ய துவங்கியது..

"டாமிட் இவ்வளவு தூரம் மலையேறி வந்துட்டு இப்போ மழை வந்துடுச்சு கொஞ்ச நேரம் நின்னுட்டு போகலாம்.." என அவன் கூறினான்..

"சார் மழை வேகமா வர மாதிரி இருக்கு.. பாருங்க காத்து பலமா இருக்கு" என அவள் கூற,

"இதுக்கு மேல என்னால இங்கே ஏறி வர முடியாது.. இன்னும் வேலை நிறைய இருக்கு" என்று அவன் ஒரு மரத்தடியில் அவளைப் பிடித்து நிற்க வைத்தான்..

அவளோ, "சார் இங்கே நிக்கறதில் எந்த பிரோயஜனமும் இல்லை.. மேகம் பாருங்க அந்த பக்கம் வானம் கருத்திட்டு இருக்கு.. அங்கே இருந்து நல்லா மழை பெய்யற மாதிரி தான் இருக்கு இங்கேயும் வரும் அதுக்குள்ள நம்ம கீழே இறங்கிடலாம்" என்று அவள் துரிதப்படுத்த அவனோ கேட்பதாக இல்லை..

"அதெல்லாம் பார்த்துக்கலாம்.. நீ கொஞ்சம் வாய மூடிட்டு நில்லு" என கூறி நிறுத்தி அவள் சொன்னது போல இடியோடு கூடிய பெரிய மழை ஒன்று பெய்தது.. அந்த மழை சற்று நேரத்தில் அதீத சக்தியோடு கொடும் மழையாக மாறியது...

அந்த மழையால் அவர்களுக்கு நிற்க கூட இடம் இல்லாமல் போக அப்படியே அவர்களை இருள் சூழ்ந்தது போல அப்படியே அந்த இடம் முழுவதும் இருள துவங்கியது..

மழை குறையாமல் செல்ல முடியாது என்பது போல இயற்கை அவர்களிடம் விளையாட அவர்கள் அப்படியே தொப்பலாக நனைந்து விட்டனர்.. ஒதுங்க கூட இடம் இல்லாமல் ஒரு சிறிய மரத்தின் ஓரத்தில் ஒதுங்கி நின்றனர்..

காற்றும், மழையும் அவர்களை தாக்க இனி இந்த இடத்தை விட்டு ஒரு அடி கூட நீங்கள் அகல முடியாது என்பது போல அந்த இடம் காட்சி அளித்தது.. அவர்கள் வந்த பாதையே மறையும் அளவுக்கு சேரும், சகதியும் நிரம்பி வழிந்தது.. அவர்களுக்கு எதிரே மரங்களும் பலத்த காற்றால் ஆடிக்கொண்டு இருந்தது..

இவளோ அந்த சூழலை கண்டு பயந்தவள், "நான் சொல்லும் போதே வந்து இருக்கலாமே சார்.. இப்போ பாருங்க" என மழையில் ஒதுங்க இடமின்றி அவன் பின்னால் நின்று கொண்டு நடுங்கிக் கொண்டே அவள் கூறினாள்..

அதை கேட்டு அவனோ கடுப்பாக, "சரி என்னையே கார்னர் பண்ணாதே.. இப்போ மழை போகாமல் நம்மால் மலை இறங்க முடியாது.. நான் என்ன இவ்வளவு ஸ்பீடா மழை வரும்னு கனவா கண்டேன்??" என்று கூறியவனுக்கு உடலும் குளிர துவங்கியது..ஆனாலும் அவள் சொன்னது போல இறங்கி இருக்கலாமோ என எண்ணி குளிரை பொருட்படுத்தாமல் விரைப்பாக நின்றான்..

கொட்டும் மழையில் இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.. அங்கு குளிரில் அவர்கள் உயிரை காப்பாற்றி அவர்களால் மழையில் இருந்து ஒதுங்கி நிற்கத்தான் முடியுமே தவிர அவர்களால் மலை இறங்க முடியாது.. ஏனெனில் மழையின் சக்தியில் அவர்களது கண்கள் கூட சரியாக தெரியாத அளவுக்கு அந்த இடம் முழுவதும் மழையால் ஆக்கிரமித்து இருந்தது..

பின் மலையின் ஒரு பக்கம் மலை சரிவு வேறு ஆகி இருந்தது.. இருக்கும் இந்த இடத்தை விட்டு வேறு எங்கும் செல்ல முடியாது என்ற நிலையில் இருவரும் மாட்டிக் கொண்டனர்..

அதே நேரம் மழை வேறு வருகிறது இருட்டி விட்டது.. இன்னும் இந்த தேவியை காணவில்லையே என பாட்டி அவளை தேடி விது தங்கி இருந்த இடத்திற்கே அந்த கொட்டும் மழையில் பாட்டி வந்து விட்டார்..

ஆனால் அங்கு வீடு பூட்டி இருக்க கொட்டும் மழையில், "இந்த புள்ளகிட்ட சொன்னா கேட்கிறாளா??" என அழுதுக்கொண்டே எங்கு தேடுவது என தெரியாமல் சென்றார்.. அவர் மனதில் ஏதாவது நடக்க கூடாத சம்பவம் நடந்து விடுமோ என்ற பதட்டம் வந்தது..

ஏனெனில் திருமண புடவை பாட்டி எடுக்கலாம் என எண்ணி இருக்க குமரேசன் அவன் வாங்குவதாக கூறி அதை வாங்கி மாலை வீட்டுக்கு வந்து இருந்தான்..

அப்படியே தேவியை பார்க்கலாம் என அவன் வந்து இருக்க அவளோ இல்லை..

பாட்டியிடம், "அவள் எங்கே??" என கேட்க அதற்கு பாட்டி வேலைக்கு சென்று இருக்கிறாள் என கூறி இருக்க அதற்கு அவனோ, "கல்யாணத்துக்கு பத்து நாளை வச்சிட்டு அவளை வீடு வீடா அனுப்பிட்டு இருக்கியா??" என கடிந்தான்..

அவரோ, "பஞ்சாயத்து உத்தரவு அதை மீற முடியாது.. அதனால தான் போயிருக்கா" என்று கூறினார்..

"உனக்கு எப்படியோ எனக்கு பொண்டாட்டியா வரவ.. இப்படி வேலைக்கு போறது எனக்கு பிடிக்காது சொல்லிட்டேன்" என கடுமையாக கூறியவன் அவளை பார்த்து விட்டு தான் செல்வேன் என்பது போல இருந்தவன் கிட்டத்தட்ட மழை பேய் மாரியாக வரும் போது தான் சென்றான்..

அதுவரை அவள் வீட்டுக்கு வரவில்லை என பாட்டியை கடிந்து கொண்டே இருந்தான்.. பாட்டிக்கு அவனை கண்டு சற்று பயமாக தான் இருந்தது..

அவன் சென்றதும் அவருக்கு தேவி எங்கு சென்று இருக்கிறாளோ என வருந்திக் கொண்டு இருக்க சமயம் ஆக ஆக அவருக்கு பயம் தொற்றிக் கொண்டது..

அதுவும் மழை வலுக்க அவன் வீட்டில் அவள் இருப்பாள் என பாட்டி நினைத்து அந்த மழையிலேயே தன் பேத்தியை தேடி சென்றார்..

ஆனால் அங்கு வீடு பூட்டி இருக்க பக்கத்து வீடான ஊர் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் கேட்டு பார்க்கலாம் என அங்கு சென்றார்.

அந்த மழை என்றும் பாராமல் அவர் கதவை தட்ட கதவை திறந்த பஞ்சாயத்து தலைவரிடம், "தேவியை இன்னும் காணலை.. அந்த வீடு வேற பூட்டி இருக்கு" என பாட்டி கேட்க,

"அவங்க இரண்டு பேரும் உச்சி மலைக்கு போனாங்க.. இன்னும் வரலையா??" என பஞ்சாயத்து தலைவர் சந்தேகமாக கேட்டார்..

அதனை கேட்டதும் பாட்டிக்கு தலை சுற்ற துவங்கியது..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top