Share:
Notifications
Clear all

மந்தாரம் 18

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

மந்தாரம் : 18

"ஏய் புள்ள தேவிகா..
மாப்பிள்ளையை நிமிர்ந்து தான் பாரேன்.. விட்டா ஊரையே வித்திடுவ என்னமோ வெக்கப்பட்டு நிக்கிற??" என புரோக்கர் கூற அவளோ கடுகடுவென்ற முகத்தோடு நிமிர்ந்து பார்க்கவும் அங்கு அவளிடம் கோவிலில் வம்பு வளர்த்த குமரேசன் தான் மாப்பிள்ளையாக வந்து அமர்ந்து இருந்தான்..

அதை கண்டதும் அவளுக்கு எங்கிருந்து தான் ஆத்திரம் வந்ததோ தெரியவில்லை..அப்படி ஒரு கோபத்தில் தன் பாட்டியை பார்க்க அவரோ ஆயிரம் வாட்ஸ் பல்ப் எறிவது போல பல்லை காட்டிக் கொண்டு இருந்தார்..

அதைக் கண்டு மேலும் கடுப்பான அவளுக்கு வேற மாப்பிள்ளை இன்னும் கிடைக்கலையா இவனை தான் கூட்டிட்டு வரணுமா என இருந்தது..

அதே நேரம் அந்த புரோக்கரும் குமரேசனும் இருப்பதால் அவள் வாயை மூடிக்கொண்டு நிற்க,

கல்யாண புரோக்கரோ, "என்ன ஆத்தா சந்தோசமா நீதான் மாப்பிள்ளையை கொண்டு வா மாப்பிள்ளை கொண்டு வா என்று கத்திக்கிட்டே இருந்த.. இப்ப பாரு உன்னுடைய பேர பிள்ளைக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை கொண்டு வந்து இருக்கேன்.. மாப்ள நல்லா கை நிறைய சம்பாதிக்கிறான்.. டவுன்ல பெரிய மச்சு வீடு கட்டி வச்சிருக்கான்.. ஆள் பார்க்க நல்ல அம்சமா இருக்கான்.. இனி என்ன வேணும் சொல்லு.. இதுக்கு மேல ஒரு நல்ல மாப்பிள்ளை உன்னுடைய பேத்திக்கு கிடைக்கவே கிடைக்காது.. உன்னோட போட்டோவ காட்டுனதுமே மாப்ள மயங்கிட்டார்.. என்ன ஆத்தா நான் சொல்றது சரி தானே" என பாட்டியிடம் கேட்டான் அந்த கல்யாண புரோக்கர்..

அவன் கூறியதை எல்லாம் கேட்ட பாட்டி, "இப்படி ஒரு நல்ல வரன் அமைய தான் கல்யாணம் தள்ளி போனதோ என்னவோ" என கூறியவர், "என்ன குமரேசா பிள்ளையை பிடிச்சிருக்கா??" என்று கேட்கவும் அவன் ஒரு வழிந்த பார்வையை அவளிடம் வீச அதை கண்ட தேவிகாவுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை..

பல்லை கடித்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தாள்.. குமரேசன் பாட்டியை பார்த்து, "எனக்கு தேவி ரொம்ப பிடிச்சிருக்கு.. எவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை வச்சுக்க முடியுமோ வச்சுக்கலாம்.. கல்யாண செலவெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. என்னுடைய அடுத்த தலைமுறை வரை நான் சம்பாதித்து வைத்திருக்கிறேன் அதனால செலவை பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டாம்.. நான் சம்பாதிச்சு வச்சிருக்கறதும் சம்பாதிக்க போறதும் நீ யாருக்கு தேவிக்கு தானே.. கல்யாணத்தை மட்டும் ரெண்டு மாசத்துக்குள்ள முடிச்சிடுவோம்" என்று கூறிவிட்டு அவர்கள் கிளம்பி விட்டார்கள்..

உடனே பாட்டி அகம் மகிழ்ந்து போய் வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிக் கொண்டு இருந்தார். அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி முகத்தில் தாண்டவம் ஆடியது.. இப்படி ஒரு மாப்பிள்ளை எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டான் என்று தெய்வத்தை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தார்..

இங்கே இவளோ, எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல நின்று கொண்டிருந்தாள்..

பேத்தி அருகே வந்து, "மாப்ள நல்ல கலைய இருக்கான்.. என்ன நிறம் தான் கொஞ்சம் கம்மி நிறத்தில் என்ன இருக்க போகுது...எப்படியோ மூணு மாசத்துக்குள்ள கல்யாணத்தை பண்ணி வச்சுட்டேன் அப்படின்னா என்னுடைய கடமையை முடிஞ்சது" என்று கூற,

அவளுக்கு ஆத்திரம் தாங்க முடியாமல், "ஏன் பாட்டி இதுக்கு நீ எனக்கு விஷத்தை வைத்து கொன்னு இருக்கலாம்.. இந்த பொறுக்கியை தவிர வேறு யாருமே உனக்கு கிடைக்கலையா??

போன வருஷம் ஊர் திருவிழாவில் என்கிட்ட பிரச்சினை பண்ணினவனே இவன் தான்.. இவனுக்கு போய் கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு பேசிட்டு இருக்க.. காசு இருக்குன்னா எவன் தலையில வேணாலும் என்னை கட்டிடுவியா?? அப்படி நான் உனக்கு பாரமா போயிட்டேனா??" என்று அவள் கேட்கவும் இவருக்கு கோபம் வந்தது..

"வாயை மூடு கழுதை.. காசை பார்த்துட்டா நான் இதுதான் பண்ணிட்டு இருக்கேன்...ஏண்டி நானே ஒரு ஜாதகம் உனக்கு சேர்ந்து இருக்குன்னு சந்தோஷப்பட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா இப்படி பேசுற?? ஆம்பள பசங்க அப்படின்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாங்க.. அவனுக்கு அப்பா மட்டும்தான் வேற யாரும் கிடையாது.. கல்யாணம் பண்ணினா நீ நல்லா இருப்ப.. நீ போய் அவனுடைய குணத்தை மாத்து.. அவன் தான் உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்றானே இதுக்கு மேல என்ன வேணும்?? இதை விட உனக்கு நல்ல சம்பந்தம் வேற எங்கேயும் கிடைக்காது.. வாய மூடிட்டு அபசகுனமா பேசாம இரு.. இனி உனக்கு மாப்பிள்ளை தேட முடியாது..

இவன் தான் உனக்கு புருஷன் புரியுதா??" என்று அவரும் எங்கே இந்த திருமணம் நடந்து விடாமல் போய்விடுமோ என்ற பதட்டத்தில் குமரேசனின் நிறை குறைகளை எல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் பாட்டி தன் முடிவு தான் இறுதி முடிவு என்ற கோணத்தில் அவர் இருந்துவிட்டார்..

இவளுக்கு ஆத்திரமும் அழுகையும் தாங்க முடியாமல் இனி இங்கே இருந்தால் பாட்டியை ஏதாவது சொல்லி விடுவோம் என்று கருதி அவள் வேகமாக வேலைக்கு செல்ல ஆயத்தம் ஆக அதை கண்ட பாட்டி, "எங்க போற??" என்று கேட்கும் போதே அவள் பாட்டியை எரித்து விடும் பார்வை பார்த்து, "அதுதான் பொண்ணு பாத்துட்டல்ல.. கல்யாணம் நடக்க மூணு மாசம் இருக்குல்ல.. நான் வேலைக்கு போறேன்" என்று கூறிவிட்டு பாட்டியின் பதிலுக்கு காத்திராமல் அவள் வெளியே சென்று விட்டாள்..

"ஏய் இருடி சாப்பிட்டு போடி" என்று பாட்டி கூறுவது ஒன்றும் அவள் காதில் விழவே இல்லை..

ஆத்திரத்தோடு அவள் விதுவின் வீட்டுக்கு வந்தவள் அதே கோபத்தை அவன் வீட்டு பாத்திரங்களை உருட்டி கோபத்தை காட்டிக் கொண்டு இருந்தாள்..

அவன் ஏதோ போனில் இருந்தவனுக்கு ஆரம்பத்தில் எதுவும் புரியவில்லை ஆனாலும் அடுக்களையில் இருந்து தொடர் சத்தம் அதிகமாக வரவும் அவன் போய் பார்க்க அங்கு அவள் பால் பொங்குவது கூட தெரியாமல் அந்த பொங்கி வழிந்து கொண்டு இருக்கும் பாலையே பார்த்துக் கொண்டு இருப்பவளை பார்த்தவன் வேகமாக ஓடிச்சென்று அடுப்பை அணைத்து விட்டான்..

அந்த சமையல் அறை சிறிய சமையல் அறை ஒருவர் நின்றால் மற்றொருவர் வரும் அவர் மீதும் மோதும் அளவுக்கு இருக்கும் ஒரு சிறிய அறை..

அப்படி இருக்க, அவன் அவளின் பின்னால் நெருங்கி நின்று அடுப்பை அணைக்கும் போது தான் அவனுடைய உடல் அவள் தேகத்தில் உரச அதுவரை இருந்த கோபத்தால் எழுந்த அவளின் உடலின் வெப்பம் எல்லாம் அவனின் தொடுகையில் பனியாக உருகி திடுக்கிட்டு திரும்பி பார்க்கவும், அதுவும் எதிர்பாராத விதத்தில் அவளின் முன்னழகு அவன் மார்பில் உரச ஒரு நொடி அவள் பதறி விட்டாள்..

அவ்வளவு நெருக்கத்தில் அவன் அருகில் நிற்கும் பொழுது அவளை அறியாமல் அவளுடைய தேகம் முதல் அவள் மனம் வரை அவன் பக்கம் சரிவதை அவள் உணர்ந்து கொண்டுதான் இருந்தாள்..

ஒரு புரியாத உணர்வில் அவள் ஆட்கொண்டு இருக்கிறாள்.. ஆனால் அவனுக்கு அப்படிப்பட்ட உணர்வுகள் எதுவும் இல்லை போலும்.. எதார்த்தமாகவும் அதே சமயம் இவளுக்கு என்ன பிரச்சனை என்பது போல அவன் ஒரு பார்வை அவள் பக்கம் வீசினான் விது..

அவளுக்கு இருந்த உணர்வு சதிராட்டத்தில் அவள் அடுப்பு திட்டுக்குள் போய் விடுவாள் போல அப்படியே அவள் அவனுடைய அருகாமையை தவிர்க்க முடியாமல் மூச்சு முட்ட நிற்க, அவனும் வெகு இயல்பாக அவளுக்கு இப்படி ஒரு உணர்வுகள் எல்லாம் இருக்கிறது என்று கூட நினைக்காமல், "என்ன வந்ததுல இருந்து பாத்திரத்தை போட்டு உருட்டிட்டு இருக்க?? பால் பொங்குது கூட கவனிக்காமல் என்ன யோசனையில் இருக்க??" என்று அவன் கேட்டான்..

அப்பொழுதுதான் அவளுக்கு சுயநினைவு பெற்று திரும்பி பார்க்க அடுப்பை அணைத்து இருந்தான்..

மீண்டும் அவனின் நெருக்கத்தில் அவள் உறைந்து போய் நின்றாள்.. அவனோ அவளின் செய்கையில் தலையை குலுக்கி, "தேவி உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்.. என்ன ஆச்சு?? ஏன் இவ்வளவு கோபமா எதையோ யோசிச்சிட்டு இருக்க??" என்று அவன் கேட்டான்..

அவன் அருகே வந்ததும் தான் அவளுடைய கோபம் எல்லாம் பனி போல விலகி இருந்ததே அதை அவனிடம் கூற முடியாமல், "அது ஒன்னும் இல்லைங்க சார் எனக்கும் பாட்டிக்கும் சின்ன ஒரு பிரச்சனை அதுதான்" என்று அவள் கூற

"என்ன பிரச்சனை?? ஏதாவது மனசுக்குள்ள இருந்தா உனக்கு ஷேர் பண்ணனும்னு தோணுச்சுனா சொல்லு.. இல்லன்னா வேண்டாம்" என்று அவனும் கூறினான்..

அதற்கு அவளும், "வீட்ல மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க.. அது தான்.. எனக்கு பிடிக்கல பாட்டி சொன்னா கேக்க மாட்டேங்கிறாங்க" என்று அவள் கூறினாள்..

"இவ்வளவுதானா இதுக்குத்தான் இவ்வளவு கோபமா இருந்தியா? உனக்கு பிடிக்கலைன்னா கல்யாணம் பண்ணிக்காத.. கல்யாணம் பண்ணிக்க போறது நீ கல்யாணம் பண்ணனுமா வேண்டாமா? யாரை கல்யாணம் பண்ணனும் என்ன செய்யணும் அப்படிங்கற முடிவு உன்னுடையதா இருக்கனும்.. பாட்டி சொன்னாங்க.. தாத்தா சொன்னாங்க.. என் வீட்டு நாய்க்குட்டின்னு சொல்லுச்சுன்னு சொல்லிட்டு எல்லாம் கல்யாணம் பண்ணாத" என்று அவன் கூறினான்..

அவன் கூறியதைக் கேட்டு அவளுக்கு சிரிப்பு வர, அதை கண்ட அவன் இயல்பாக, "இவ்வளவுதான் விஷயம் இதுக்கு தான் இவ்வளவு கோபமா??
சரி.. உனக்கு கோபம் போயிடுச்சு தானே??" என்று அவன் கேட்க அவளும் ஆமாம் என்று தலையாட்டினாள்..

"சரி.. நான் இன்னும் சாப்பிடல எனக்கு ஏதாவது கிடைக்குமா?? இல்லை.. உன் பாட்டி மேல இருக்குற கோபத்துல காப்பியில் சக்கரைக்கு பதிலா உப்பை போட்டு வந்துடுவியா??" எனக் கேட்டான்..

அவளோ, "இல்ல சார் இப்ப தரேன்" என்று அவள் மென்மையாக சிரித்துக் கொண்டு அவள் வேலைகளில் மூழ்கினாள்..

அவன் சொன்னது போல அவளுக்கு பிடிக்கவில்லை.. அவளுக்கு இதோ விதுவைத்தான் பிடித்திருக்கிறது.. மனதில் விதுவை வைத்துக் கொண்டு வேறு யாரையும் அவளால் அவள் அருகே கூட நெருங்க விட அவளுக்கு மனம் இல்லை..

விது கூறியது போல, அவளுக்கு பிடிக்காத இந்த கல்யாணம் நடக்கவே கூடாது.. நான் எதற்கு பிடிக்காத கல்யாணத்தில் யாரோ சொன்னார்கள் என திருமணம் செய்து கொள்ள வேண்டும்?? கல்யாண சமயத்தில் எங்கேயாவது ஓடி விட வேண்டும்.. எனக்கு விதுவை தான் பிடிச்சிருக்கு.. அவருக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையா அது எனக்கு பிரச்சனை இல்லை.. என் வாழ்க்கையில் அவர் மட்டும்தான் என்றெல்லாம் அவள் முடிவு செய்து கொண்டே அவன் வந்து அவள் அருகே நின்றதும் அவன் உடல் அவள் மீது உரசி சென்றதை எல்லாம் அவள் எண்ணி அகம் மகிழ்ந்து அவனுக்கு தேவையான பணி விடைகள் செய்தவளை அழைத்து கொண்டு அவனுக்கு தேவையான வேலைகளில் மூழ்கினான் விது..

அவளுக்கு எதார்த்தமாகத்தான் அவன் ஒரு அறிவுரை கூறியிருக்க அவளோ அவன் மீது ஆசை கொண்டு தேவையில்லாத ஒரு வேலை செய்யப் போகிறாள் என அவனுக்கு அந்த நேரம் தெரியாது..

அப்படி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு, அவளுடைய பாட்டி அவளின் திருமண வேலைகளில் மூழ்கி இருக்க, அவளோ எதையுமே கண்டுக் கொள்ளாமல் தான் இருந்தாள்..

இந்த திருமணம் முடிவு ஆனதிலிருந்து பாட்டியும், அவளும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை..

ஆனால் பாட்டியோ ஆரம்பத்தில் கடுமையாக அவளிடம் இருந்தவர் திருமணம் முடிவு ஆனதிலிருந்து தன் கைக்குள் வளர்ந்த பிள்ளை தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற வருத்தத்தில் அவளிடம் சற்று அனுசரனையாகவே நடந்துக் கொண்டார்.. ஆனால் அவள் அதை எல்லாம் கண்டு கொண்டது போல தெரியவில்லை..

திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்கள் தான் உள்ள நிலையில் அவளிடம், "இனி வேலைக்கு போக வேண்டாம் வீட்ல இரு என பாட்டி" கூற,

அதைக் கேட்டு அவளோ, "வேலைக்கு போனாலும், போகாட்டியும் என்னை இந்த வீட்டை விட்டு பத்து நாள்ல துரத்த நினைச்சுட்ட.. இதுல நான் வீட்ல இருந்தா என்ன இல்லைன்னா என்ன.. அந்த சார் இன்னும் ஒரு வாரத்துல போயிடுவாரு.. அவருக்கு கொஞ்சம் முக்கியமான வேலையெல்லாம் இருக்கு.. நான் கூட இருந்து செய்யலைன்னா அவ்வளவுதான்.. என்னை நம்பித்தான் அவர் இருக்காரு.. கண்டிப்பா நான் போய் ஆகணும் அதுதான் கல்யாணத்துக்கு பத்து நாள் இருக்குல்ல அப்புறம் என்ன??" என்று கூறிவிட்டு இன்னும் ஒரு வாரத்தில் அவன் தன்னை விட்டு சென்று விடுவானே இனி அவனை காண முடியாதோ என்ற வருத்தத்தில் அவளும் இந்த ஒரு வாரமும் அவனுடன் தான் இருக்க வேண்டும் இந்த ஒரு வாரம் அவளை பொறுத்தவரை பொன்னான வாரம் இதைத் தவற விடக்கூடாது என கருதி அவள் பாட்டி கூறியதை மீறிச் சென்று விட்டாள்..

அதைக் கேட்டதும் பாட்டிக்கு மிகவும் வருத்தமாக போய்விட்டது.. இந்த பெண் தன்னை புரிந்து கொள்ளவே இல்லையே என்று எண்ணினார்.. என்னதான் இருந்தாலும் அவளுடைய கல்யாணத்தை பார்க்க வேண்டும் என அவர் நினைத்தார்..அதனால் இதர உள்ள கல்யாண வேலைகளில் மூழ்கினார் பாட்டி..

ஆனால் அதற்குள் எல்லாமே தலைகீழாக மாறும் என அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்..

ஆம் இது தான் பாட்டியும் பேர மகளும் இறுதியாக சந்தித்து கொள்வது என தெரியாமல் அவரவர் பாதையை நோக்கி அவர்கள் இருவரும் சென்றனர்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top