மோகம் 2
மோகம் : 2
சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருந்த காளியம்மாள் அருகே நின்று கொண்டு இருந்தார் மனோன்மணி..
"எப்போ வருவான் ஆதி?? நாளைக்கு கல்யாணம் அது உன் மகனுக்கு ஞாபகம் இருக்கா??"
அம்மாவிடம் என்ன சொல்வது என்ன தெரியாமல்,"இருக்குமா கொஞ்சம் வேலை அதிகமா இருக்குன்னு சொன்னான்..அதனால அவன் வேலைய முடிச்சுட்டு இன்னைக்கு வந்துடுவான்" என்றார் மனோன்மணி..
மகள் கூறியதைக் கேட்டு, "தாலி கட்டுறதுக்குள்ளயாவது வர சொல்லு.." என பெரியவரும் சந்தேகமாக கூறினார்.. அதைக் கேட்டு மனோன்மணிக்கு பைத்தியம் பிடிப்பது போலத்தான் இருந்தது..
ஏற்கனவே இதையெல்லாம் பேசி வைத்தது தானே இப்பொழுது இதற்கு இவன் நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறான் என்று தான் கடுப்பாக அவர் அழைத்தால் அவன் போன் எடுக்க மாட்டான் அதனால் மகனின் நண்பனை அழைத்து விஷயத்தை கூறி போனை வைத்து விட்டார் மனோன்மணி..
அந்த சமயம் பார்த்து தீவிரமாக வேலைகளில் மூழ்கி இருந்தான் ஆதி.. அவனுக்கு செய்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன.. அதை நோக்கி அவன் சென்று கொண்டிருந்தான்..
"ஆதி கல்யாணத்துக்கு போகலையா??" என நாளை திருமணத்தை வைத்துக்கொண்டு இன்னும் அதைப் பற்றிய எண்ணமே இல்லாமல் இருக்கிறானே என அவனுடைய நண்பன் விக்கி கேட்டான்..
"போலாம்.. போலாம்.. என்ன அவசரம் தாலி கட்டும் போது நான் இருந்தா போதும்ல.. அப்புறம் என்ன??" என்று விட்டேத்தியான பதில் ஒன்றை ஆதி கடுப்பாக அளித்தான்..
"டேய் அம்மா ரொம்ப டென்ஷனா இருக்காங்க.. எனக்கே 10 போன் பண்ணிட்டாங்க.. நீ இன்னும் அவங்க போன் எடுக்கல.. அவங்க கேள்வி மேல கேள்வி கேட்கிறாங்க.. பதில் சொல்ல முடியல.. கிளம்பிட்டியா?? இல்லையா?? நீங்க என்ன பண்றீங்க.. நான் கிளம்பி வரவா?? அவன் வரலன்னா நான் ஏதாவது செய்துப்பேன் அப்படின்னு கேக்குறாங்க.. எதுக்கு இப்படி அவங்கள கஷ்டப் படுத்துற??" என்று விக்கி கூறினான்..
அவனுக்கோ அம்மாவுக்கும், மகனுக்கும் இடையில் தான் அல்லல் படுகிறோம் என்ற எண்ணம் இருந்தது.. அதனால் அவன் கேட்டான்...
அதை கேட்ட தன்னுடைய அம்மா மீது உள்ள கோபத்தில் நண்பனை அழுத்தமாக பார்த்து, "அவங்க மட்டும் தான் கஷ்டப்படுறாங்களா?? ஏன் நான் கஷ்டப்படலையா?? இந்த கல்யாணம் எனக்கு பிடிக்கலைன்னு சொல்லியும் இவளை கட்டித்தான் ஆகணும்னு டார்ச்சர் பண்றாங்க.. இதுக்கு என்ன சொல்றது??
சரி கல்யாணம் பண்ணிக்கலாம் அப்படின்னு பார்த்தா எனக்கும், சைந்தவிக்கும் ஏழாம் பொருத்தம்..
கல்யாணம் முடிவு பண்ணி இன்னைக்கு வரை அவள் கூட நான் பேசல.. அவளும் பேசல.. அவள் நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டா.. சின்ன வயசில் இருந்து நானும் அவளை மதிச்சது இல்லை..
அவளும் நானும் கீரியும், பாம்பும் மாதிரி தான் இருக்கோம்.. என்னை மாதிரி அவளுக்கும் இதில் விருப்பம் இல்லை அப்படின்னு எனக்கு நல்லா தெரியும்.. அவளாவது கொஞ்சம் இன்ட்ரஸ்ட் காட்டி இருந்தா நான் என் மனசை மாற்றி இருப்பேன்.. அதுதான் என்னை ரொம்ப யோசிக்க வைக்குது..இதுக்கு இடையில எங்களுக்குள்ள கல்யாணம் வேற?? " என ஆதி புலம்பினான்..
அதைக் கேட்ட விக்கி, இவனிடம் என்ன சொல்லி சமாளித்து இவனை கல்யாணத்திற்கு அழைத்து செல்வது என கருதி, "அதெல்லாம் வீட்ல இருக்குறது தான்.. அதுக்குன்னு நாம ஒதுங்கி இருக்க முடியுமா.. வீட்ல ஆல்ரெடி பேசி வச்ச கல்யாணம் தானே?? அதெல்லாம் கல்யாணம் பண்ணினா போக போக சரியாயிடும்..
நீ இவ்வளவு சொல்ற.. உனக்கும் சைந்தவிக்கும் கல்யாணம் அப்படின்னு சொன்னதும் சைந்தவி சரின்னு சொல்லிட்டாளே.. அப்போ அவளுக்கும் அதில் விருப்பம் இருக்கு அப்படித்தானே அர்த்தம்.. என்னதான் நீங்க சண்டை போட்டுக்கிட்டாலும் அவள் உங்க வீட்ல எடுத்த முடிவை மதிச்சு கல்யாணத்துக்கு தயாராகிட்டு இருக்கா.. நீதான் அடம் பண்ணிட்டு இருக்க..நீ ரெடியாகற வழியை பாரு போலாம்" என்று விக்கி அவனை துரிதப்படுத்த தொடங்கினான்..
ஏனெனில் இவன் போன் எடுக்காததில் ஆதியின் அம்மா இவனைத்தான் டார்ச்சர் செய்து கொண்டிருந்தார்..
அதனாலேயே விக்கி எப்படியாவது ஆதியை அங்கு கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் என எண்ணி கொண்டு இருந்தான்..
ஏனெனில் ஆதியின் கோபம் அவன் நன்றாக அறிவான்.. அதனாலேயே அவன் போக்கிலேயே போய் தான் அவனை அவனுடைய வீட்டிற்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என விக்கி எண்ணிக் கொண்டான்..
இவன் ஏதாவது பேசப்போய் அவனுக்கு கோபம் ஆகிவிட்டால் பிறகு என்ன ஆனாலும் அவன் செல்ல மாட்டான் என்பது உறுதி.. அப்படி இருக்க, கொஞ்சம் அமைதியாகவே ஆதியை கையாண்டான் விக்கி..
விக்கி சொன்னதைக் கேட்டு ஆதிக்கும் ஒருவேளை சைந்தவிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் தானோ.. நான் தான் மனதை போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறேனோ என்னவோ ஆகட்டும் என் தலையில் எழுதி இருப்பது போல நடக்கட்டும்.. என எண்ணி ஒரு வழியாக திருமணத்திற்கு செல்ல முடிவு செய்தான்...
அதே நேரம் அங்கே அந்த பெரிய வீட்டில் கல்யாண கலை வந்து இருந்தது..
சைந்தவிக்கு இரண்டு கைகளிலும் கால்களிலும் மெஹந்தி போட்டுக்கொண்டு இருந்தார்கள்.. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள் கண்மணி..
அவளுக்கும் மெஹந்தி போட்டுக்கொள்ள மிகவும் ஆசையாக இருந்தது.. ஆனால் அம்மா அதை பார்த்துவிட்டால் அவ்வளவுதான்... 'யாரைக் கேட்டு போட்ட??' என அடி விழுந்தாலும் விழும் என்பதை எண்ணி கண்களில் ஆசையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அவளின் கண்களில் தெரிந்த ஆசையை உணர்ந்த சைந்தவி, "நீயும் மெஹந்தி போட்டுக்கோ கண்மணி" என கூறினாள்..
"இல்லக்கா வேண்டாம்" என வருத்தமாக மறுத்தாள்.. அவள் ஏன் மறுக்கிறாள் என நன்றாக சைந்தவிக்கு தெரியும் இருந்தாலும் கண்டுகொள்ளாமல், "எனக்கு நாளைக்கு கல்யாணம்.. அப்போ நீயும் போடு..என் பக்கத்தில் நிற்க போற நீ அழகா இருக்க வேண்டாமா?? அடுத்தது பியூட்டிஷன் வருவாங்க.. ஃபேஷியல் எல்லாம் பண்ணிக்கோ" என்று வம்படியாக அமர வைத்து சைந்தவி அவள் கைகளுக்கும் மெஹந்தி போட சொல்ல மெஹந்தி போடும் பெண்ணும் அவளுக்கும் போட்டு விட்டாள்..
அவளுக்கு ஒரு பக்கம் இதையெல்லாம் கேட்டு ஆசையாக இருந்தாலும் அம்மாவை நினைத்தால் பயமாக இருந்தது... என்ன இருந்தாலும் இங்கே வைத்து அம்மா அடிக்க மாட்டார்கள் என கருதி அவளும் கையை நீட்டி விட்டாள்.. இதோ மெஹந்தி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்..
அந்த தருணம் பார்த்து வந்த மாலதி கண்களில் மகள் கைகளில் மெஹந்தி போட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை கண்டதும், "யாரை கேட்டு நீ இதை போடுற??" என எப்போதும் போடும் சத்தத்தை அங்கேயும் போட உடனே பதறிய கண்மணி எழுந்து நின்று விட்டாள்.. அவளுடைய அம்மா மீது உள்ள பயத்தில் கை கால் எல்லாம் கண்மணிக்கு நடுங்க துவங்கியது..
அதை கண்ட சைந்தவி, "சித்தி நான்தான் போட சொன்னேன்.. இப்ப என்ன?? நாளைக்கு எனக்கு கல்யாணம் இவளும் மெஹந்தி போட்டிருக்க வேண்டாமா?? விடுங்க எதுக்கு சின்ன சின்ன விஷயத்துக்கு கூட அவளை திட்டிட்டு இருக்கீங்க??.. அதனாலதான் அவளை சுற்றி என்ன நடக்குது அப்படின்னு கூட தெரியாம இன்னும் ஒரு கூட்டுக்குள்ளயே இருக்கா.. இப்படி சும்மா சும்மா கண்ட்ரோல் பண்ணாதீங்க சித்தி.. அவளோட வாழ்க்கை வாழ விடுங்க" என்று சைந்தவி முந்திக்கொண்டு வந்து பதில் கூறினாள்..
இங்கு கண்மணிக்கு அக்கா பேசப்பேச, தன் அம்மாவை பார்த்து பயமாக இருந்தது.. சைந்தவி பேசவும் கண்மணியை பார்த்து தான் மாலதி முறைத்தார்..
அம்மாவை கண்டதும் படக்கென எழுந்து நின்றவள், "நான் இல்லைம்மா அக்கா தான் போட சொன்னாங்க" என பதறி பதில் அளிக்க மாலதி கண்மணியை பார்த்து கண் உருட்டி முறைத்தார்..
உடனே மாலதி அவளை பார்த்து முறைத்து, "உனக்கு எப்படியோ சைந்தவி நீ உன்னோட அம்மா பேச்சை கேட்க மாட்ட.. ஆனால் நான் அப்படி கிடையாது என் பேச்சை மீறி கண்மணி எதுவும் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன்.. அவள் என் பேச்சைக் கேட்டு வளர்ந்தால் போதும்" என்று சைந்தவியை கடிந்தார்..
அதைக் கேட்ட சைந்தவி ஏதோ சொல்ல வர கண்மணி கண்களாலேயே வேண்டாம் அக்கா என்று கெஞ்சினாள்.. அதனால் சைந்தவி வாயை மூடி கொண்டாள்..
ஏனெனில் இந்த கல்யாணம் நடப்பது மாலதிக்கு சுத்தமாக விருப்பமில்லை.. ஆம் ஏனோ அவருக்கு சைந்தவி சுத்தமாக பிடிக்காது சைந்தவி எதற்கெடுத்தாலும் குதர்க்கமாக பேசுவது மாலதிக்கு எரிச்சலை கொடுக்கும்..
அதுமட்டுமின்றி மனோன்மணியின் இரண்டு பிள்ளைகளில் ஆதி தான் மிகவும் அழகாக இருப்பான்..அவன் படித்தவன், பண்பானவன்.. அவன் பேச்சுக்கு அந்த வீட்டில் எப்பொழுதும் ஒரு மதிப்பு இருக்கும்.. அவனை மாலதிக்கு ரொம்ப பிடிக்கும்.. ஆம் பெரிய கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தவன் அவன் இருக்கும் இடத்திலேயே பெரிய பிளாட்டை சொந்தமாக இப்போதே வாங்கி விட்டான்.. அதன் மதிப்பு பல லட்சங்கள் பெறுமாம்.. மனோன்மணி கூறி மாலதி கேட்டிருக்கிறார்..
கார், வீடு என்ன சகல வசதியும் அவனுக்காக அவன் உருவாக்கிக் கொண்டான்.. பெற்றவர்கள் பணத்தில் இல்லாமல் சுயமாக நிற்கிறான்.. இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு புதிதாக தொழில் துவங்கி அதிலும் சாதித்துக் கொண்டிருக்கிறான்.. இப்படி அவன் மீது அடுக்கடுக்காக நல்ல அபிப்பிராயங்கள் மாலதிக்கு உண்டு..
அவனுக்கு போய் இவள் மனைவியாக வரப் போகிறாளா என மாலதி நினைக்கிறார்..
அதே சமயம் விஷ்வா கொஞ்சம் கருப்புதான்.. வெளிநாட்டில் இருந்தாலும் ஆதி அளவுக்கு அவன் இல்லை.. அப்படி இருக்க விஷ்வாவுக்கு தானே கண்மணியை பேசி வைத்திருக்கிறார்கள்.. அந்த கல்யாணமும் மாலதிக்கு கடுப்பை தான் கொடுத்தது..
எப்படியாவது வீட்டின் சொத்தை வாங்கிக் கொண்டு இவளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும்.. இவர்கள் குடும்பத்தோடு ஒட்டும் வைக்க கூடாது உறவும் வைக்க கூடாது என்று தான் மாலதி எண்ணிக் கொண்டிருக்கிறார்..
அப்படி மாலதி தன் பேச்சு முடிந்தது என கருதி கண்மணி பக்கம் கண்மணி திரும்ப அவளோ சைந்தவி பின்னால் ஒளிந்து கொள்ள, "கண்மணி இங்க வா" என கூறினார் மாலதி..
அவளோ பயந்து போய் நிற்கவும் அதற்குள் அங்கு வந்த மனோன்மணி "என்ன மாலதி அவளை திட்டிட்டு இருக்க??" என கூறியதும் உடனே தன்னுடைய பத்ரகாளி முகத்தில் இருந்து சாந்த முகத்துக்கு மாறிய மாலதி, "ஒன்னும் இல்ல அண்ணி என்னை கேட்காமல் மெஹந்தி போட்டுட்டு இருக்கா அது தான்.. இதெல்லாம் சேராது" என மென்மையாக பதில் கூறுவது போல நடித்தார் மாலதி...
"மெஹந்தி தானே போடுறா.. இது ஒரு பெரிய விஷயமா? கல்யாண வீடு அப்படின்னா பொம்பள புள்ளைங்க இதெல்லாம் போடறது தானே.. அப்பதானே அழகா இருப்பாங்க.. அவ மெஹந்தி போடட்டும்.. புரியுதா" என்றவர் கண்மணியை பார்த்து, "கை, கால் எல்லா இடத்திலும் போட்டுக்கோ கண்மணி.. உன்னோட அக்கா கல்யாணத்தில் நீ நல்ல அழகா இருக்கணும்.. பியூட்டிஷன் வேற வருவாங்க.. உனக்கு என்ன வேணுமோ செஞ்சுக்கோ.. நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் ஜொலிக்கணும்" என மனோன்மணி அவருக்கு பெண் குழந்தைகள் இல்லாத குறையை இவர்கள் இருவரிடமும் தீர்த்துக் கொள்ள அவர் கூற அதை கேட்டதும் கண்மணி மெல்லிய புன்னகை உதிர்த்தாள்..
மாலதிக்கு உள்ளுக்குள் கடுப்பாக இருந்தாலும் மனோன்மணியிடம் கொஞ்சம் நல்ல விதமாக இருந்தால் தான் அவருடைய காரியமெல்லாம் நடக்கும்.. அதனால் மாலதி அவருடைய வீட்டிற்கு போய் வைத்துக் கொள்ளலாம் என அமைதியாக இருந்து விட்டார்..
அம்மா சென்றதும் தான் கண்மணிக்கு சமாதானமே வந்தது.. இதையெல்லாம் பார்த்த சைந்தவிக்கு கடுப்பு தான் வந்தது..
இதுதான் பிரச்சனை.. இந்த வீட்டில் என்ன இருந்தாலும் மனோன்மணி அத்தை முடிவு தான் இறுதி முடிவாக இருக்கும்.. பாட்டி, அத்தை இருவரும் என்ன முடிவு செய்கிறார்களோ அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்... அவளின் அப்பா இறந்தது முதல் இப்போது வரை அவள் என்ன படிக்க வேண்டும்.. என்ன உடை உடுத்த வேண்டும்.. என்ன செய்ய வேண்டும்.. என்பதை எல்லாம் இவர்கள் தான் முடிவு செய்கிறார்கள்..
இவ்வளவு ஏன் படித்து முடித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்ற அவளுடைய கனவை பொய்யாக்கி இதோ வீட்டிலேயே இருவருடம் முடக்கி அமர வைத்திருக்கிறார்கள்...
ஆண் பிள்ளைகள் தான் வேலைக்கு செல்ல வேண்டும்.. பெண் பிள்ளைகள் வீட்டில் இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை கொண்ட இவர்களை என்ன சொல்லித் திருத்துவது?? அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை...
ஆனால் இந்த நொடி வரை அவள் திருமணத்தில் விருப்பம் இல்லாதது போல யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை.. அவள் இந்த வீட்டு ஆட்களுக்கு கொடுக்கப் போகும் அடி பேரடியாக இருக்க வேண்டும் என சைந்தவி நினைத்துக் கொண்டிருக்கிறாள்..
ஏனெனில் ஏதாவது அவள் செய்தால் அது அவளுக்கு பின்விளைவாக இருக்கும்.. இந்த வீட்டு ஆண் பிள்ளைகள் எல்லாம் காட்டான்கள்.. பேசுவதற்கு முன் கைதான் பேசும்.. அதுவும் அந்த ஆதி மாமா அவ்வளவு தான்.. கோபம் வந்தால் யாரையும் பார்க்க மாட்டான்.. அடி தான்..
அதனாலயே அவள் வாயை திறக்காமல் இருக்கிறாள்.. நாளை காலை வரை எப்போதும் போல இருந்துவிட்டு இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் அவளுடைய எண்ணமாக இருந்தது..
அதனாலேயே தன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சைந்தவி அமைதியாக இருக்கிறாள்..
ஆனால் சைந்தவி இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி இருந்தால் கூட திருமணம் நின்றிருக்குமோ என்னவோ ஆனால் இவன் செய்யப் போகும் காரணத்தினால் பாதிக்கப்பட போவது என்னவோ பாவம் அந்த கண்மணி தான்...
அறிந்தும், அறியாமலும் கண்மணிக்கு ஒரு துரோகத்தை இழைக்க இருக்கிறாள் சைந்தவி.. இது ஏதும் அறியாத கண்மணி தன் இரு கைகள் நிறைய வைத்திருக்கும் மருதாணியின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கிறாள்..
அதே நேரம் ஆதியின் கார் உறுமி கொண்டு அந்த பெரிய வீட்டின் உள்ளே நுழைய அவனின் கார் சத்தத்தை வைத்து அவன் வந்து விட்டான் என்றதும் சைந்தவிக்கு கடுப்பாக இருந்தது என்றால் கண்மணிக்கு அவளின் ஆதி அண்ணா வந்துவிட்டான்..
இனி அவளைக் கண்டால் கேள்வி மேல் கேள்வி கேட்பான்.. அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அவளுக்கு சத்தியமாக விடை தெரியாது...
பதில் சொல்லவில்லை என்றால் அவனுடைய முறைப்போடு ஒரு கிள்ளும், அடியும் பரிசாக கிடைக்கும்.. அப்படி இருக்க, "அக்கா... ஆதி அண்ணா வந்துட்டாங்க" என ஆதி மீது உள்ள பயத்தில் கண்மணி கூற,
"அதுக்கு என்ன கண்மணி வந்தா வந்துட்டு போறாங்க.. நீ உன் வேலையை பாரு" என்ன சைந்தவி விட்டேத்தியாக பதில் கூறினாலும் கண்மணி என் மனம் ஆறவில்லை..
ஆம்.. போன முறை ஆதி அவளிடம் கணக்கு பாடத்தில் உள்ள அத்தனை பார்முலாக்களை கேட்டு இருக்க அவளுக்கோ பதில் தெரியவில்லை..
அவன் அடுத்த முறை வரும்போது கண்டிப்பா கேட்பேன் என்று அவளை உறுத்து விழித்திருந்தான்.. அந்த பயம் அவளுக்கு ஏனோ நேரம் கெட்ட நேரத்தில் வந்து தொலைத்தது..
மேலும் அவளின் அம்மா முதல் யாருக்குமே தெரியாத ஒரு தவறை அவள் செய்து இருக்கிறாள்.. ஆம்.. அது மிக சரியாக ஆதியின் கண்களில் பட்டு தொலைக்க..வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக அவள் செய்த தவறு அது தான்..
அது சரியாக அவளின் ஆதி அண்ணா கண்களிலா பட வேண்டும்.. என்ன பலமுறை அவள் யோசித்து இருக்கிறாள்.. அதனால் தானே ஆதியைக் கண்டாலே அவள் தலை தெறிக்க ஓடுகிறாள்..
ஆதி பிறரிடம் மென்மையாக பேசினாலும் அவளிடம் என்னவோ கடுப்பாகத்தான் பேசி இருக்கிறான்..
ஆரம்பத்தில் அவளிடமும் மென்மையாகத்தான் இருந்தான்.. ஆனால் அவளின் செய்த ஒரே ஒரு விஷயம் ஆதிக்கும், அவளுக்கும் மட்டுமே தெரிந்த ஒரு விஷயம் வேறு கண்மணிக்கு அறிந்தோ அறியாமலோ இப்போது நினைவுக்கு வந்து அவளுக்கு தொல்லை கொடுத்தது...
இப்போது எப்படி ஆதி அண்ணா முகத்தில் முழிப்பது?? அண்ணா கணித பாடத்தில் கேள்விகள் கேட்டால் என்ன செய்வது?? எப்படி பதிலளிப்பது?? தெரிந்தோ தெரியாமலோ 12 ஆம் வகுப்பில் இறுதி தேர்வுக்கு மாலதி அவன் வீட்டிலிருந்த சமயம் பார்த்து அவளை அனுப்பி அவளுக்கு தெரியாதது சொல்லிக் கொடு என கூறியிருக்க அவனும் அவளுக்கு பாடம் எடுத்திருந்தான் தான்..
இப்போது பரீட்சையும் முடிந்து அவள் அதில் ஓரளவு தேர்ச்சி பெற்று காலேஜ் வேறு சென்று கொண்டிருக்கிறாள்.. அதன்பிறகு இப்போதுதான் அவனை பார்க்கிறாள்.. மீண்டும் அந்தக் கேள்விகள் எல்லாம் கேட்பானா?? இல்லையா?? மீண்டும் அடி விழுமா?? இதெல்லாம் தான் கண்மணி என் கவலைகளாக இருக்க,
ஆனால் விடிந்ததும் கண்மணி வாழ்க்கையே புரட்டிப்போடும் அளவுக்கு ஒரு விஷயம் நடக்க இருக்கிறது என இந்நேரம் கண்மணி அறிந்தால் கணக்கு பாடத்தை பற்றி எல்லாம் யோசித்துக் கொண்டிருக்க மாட்டாளோ என்னவோ???
