வர்ணம் 6
அத்தியாயம் : 6
பாக்கியத்தை தனியாக அழைத்துக் கொண்டு சென்ற கருணை அம்மாள், "என்ன உன் பிரச்சனை அவங்களே கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லும்போது நீ ஏன் யோசிச்சிட்டு இருக்க??" என்று கேட்டார்.."எப்படி மா சுயநலமாக இருக்க முடியும்?? அந்த பொண்ணை பார்த்தா ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி இருக்கா அவன் வயசு என்ன இந்த பொண்ணு வயசு என்ன??" என்க
"உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? ஏன் வயசு வித்தியாசத்தில் யாரும் வாழ்றது இல்லையா? உனக்கும் உன் புருஷனுக்கும் வயசு வித்தியாசம் இல்லையா? இல்லை எனக்கும் உன்னோட அப்பாவுக்கும் வயசு வித்தியாசம் இல்லையா? இப்போ நடக்க வேண்டியது கல்யாணம் அப்படி இல்லைன்னா உன்னோட மகன் எப்பவும் இப்படியே தான் இருப்பான் பரவாயில்லையா?" என்று கருணை அம்மாள் கருணையே இல்லாமல் கேட்க,
அதைக் கேட்டு பயந்த பாக்கியம் யோசித்து,"எனக்கு என்னமோ தப்பா இருக்குற மாதிரி இருக்கு.. ஆனாலும் பொண்ணு மாறின விஷயத்தை அவன்கிட்ட சொல்ல வேண்டாமா?" என்று கூற,
"ஏண்டி கூறுகெட்டவளே அவன் தான் பொண்ணு போட்டோவையே பார்க்கலையே கல்யாணத்துக்கு சம்மதிப்பானா இல்லையான்னு தெரியல! என்ன நடக்கப் போகுதோ தெரியல இந்த கல்யாணம் மட்டும் ஆகலைன்னா என் பையன் வாழ்க்கை எப்படி போகுமோ தெரியலன்னு புலம்பி கொண்டு இருந்தியே? இப்போ என்ன அவன்தான் பொண்ணு யாரு பொண்ணு பேரு என்ன பொண்ணு எப்படி இருப்பா அப்படி என்று கூட பார்க்கலையே அப்புறம் என்ன கவலை பேசாமல் கல்யாணத்தை முடி மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்" என்று கூற
அதைக் கேட்டு பாக்கியம் தயங்க கருணை அம்மாள், "நான் சொல்றத மட்டும் செய்" என்று கூறிக்கொண்டு நேராக சாந்தி மற்றும் கயல் அருகே வந்தவர், "எங்களுக்கு இந்த கல்யாணத்தில் பெருசா உடன்பாடு இல்லை என்றாலும் நமக்கு வேற வழி இல்ல அதனால இந்த கல்யாணம் நடந்தே ஆகணும் என்னோட பேரபிள்ளையும், கல்யாணத்துக்கு விருப்பம் இல்லாமல் தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்.. அவன் உண்மையில் நிர்மலா முகத்தைக் கூட பார்க்கல.. அவன் இப்பவும் பழைய பொண்டாட்டி நினைப்பில் தான் இருக்கான் அதனால அவனை விட சின்ன பொண்ணு, படிச்சிட்டு இருக்க பொண்ணு ஏற்கனவே கல்யாணம் ஆகலை அப்படிங்கற விஷயத்தை அவன் கிட்ட நாங்க இப்போ சொல்ல போறது இல்ல நீங்களும் அதன் படி நடந்து கொள்ளுங்கள்" என்று கருணை அம்மாள் கூற,
அதைக் கேட்டு சாந்தி அதிர்ந்து, "என்னம்மா சொல்றீங்க? நிர்மலா முகத்தைக் கூட பார்த்ததில்லையா? ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன ஆகிறது? நான் என்னால உங்களுக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாதுன்னு சொல்லித்தான் என் பொண்ணை கொடுக்க முன்வந்தேன் நீங்க சொல்றத பார்த்தா மாப்பிள்ளைக்கு விருப்பமே இல்லை போல" என்று கூற
கருணை அம்மாள் சாந்தியின் கையை பிடித்துக் கொண்டு," சாந்தி நீ செஞ்சது பெரிய உதவி நான் அதை என்னைக்கும் மறக்க மாட்டேன்.. என்னை நம்பி உன் பொண்ணை கொடு அவளை நல்லபடியா பார்த்துக்கிறது என் பொறுப்பு என் பேர மகன் இவளை நல்லபடியா பார்த்துப்பான் அதுக்கு நான் பொறுப்பு அவளுக்கு தேவையான எல்லாத்தையும் நான் செஞ்சு கொடுக்கிறேன்.. ஆமாம் அவனுக்கு விருப்பம் இல்லாமல் தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருக்கான் அவனுடைய நிலைமை அப்படி ஆனால் கெட்டவன் எல்லாம் கிடையாது ரொம்ப ரொம்ப நல்லவன் அதனாலதான் இப்படி இருக்கான்.. கல்யாணம் நடந்தா எல்லாம் போக போக சரியாயிடும்" என்று கூற
கயலோ இவர்கள் பேசுவதெல்லாம் கேட்டு தலைசுற்றி போய் தன்னைச் சுற்றி என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ தெரியவில்லையே தன் மனதை பற்றி யாருமே இங்கு யோசிக்கவில்லையே, எல்லோருக்கும் அவரவர் தேவை தானே முக்கியம் தன்னை பற்றி யாருமே யோசிக்கவில்லை என எண்ணினாலும் இதுதான் தன் வாழ்க்கையோ என நொந்து போய், "அம்மா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனால் என்னால் படிப்பு எல்லாம் விட முடியாது எனக்கு படிப்பு தான் முக்கியம்" என்று கூற, கருணை அம்மாள், "அதுக்கு என்ன நான் படிக்க வைக்கிறேன் நீ கவலைப்படாதே உனக்கு என்ன தோணுமோ அதனை செய்யலாம் ஆனால் கொஞ்ச நாளைக்கு நீ காலேஜ் போற விஷயத்தை அவன் கிட்ட சொல்ல வேண்டாம்..
நாங்களே பக்குவமா பொண்ணு மாறின விஷயத்தை அவன் கிட்ட சொல்லிக்கிறோம் அதுவரை நீ கொஞ்சம் அமைதியா இருந்தா மட்டும் போதும் மா" என்று கருணை அம்மாள் கூற
சாந்தி தன் மகளை குழிக்குள் தள்ளி விடுகிறோமா என ஒரு நொடி யோசித்து, "அம்மா எந்த பிரச்சினையும் வந்துடாது இல்ல.. உங்கள நம்பி தான் என் பொண்ணை ஒப்படைக்கிறேன் சின்ன பொண்ணு படிச்சிட்டு இருக்கிற பொண்ணுமா அவள்" என்று கேட்க
"நான் இருக்கும் போது என்ன பிரச்சனை வரும் அவன் நிலைமை அப்படி இருக்குமா இந்த முகூர்த்தத்தை விட்டு அவனுக்கு கல்யாணமே ஆகாது என்று ஜோசியர் சொல்லிட்டாங்க.. அப்புறம் எங்க குடும்ப வேர் மண்ணோட மண்ணா போயிடும்" என்று கூற,
பிறகு சாந்தி என்ன எண்ணினாரோ இவர்கள் மீது உள்ள நம்பிக்கையில்,"சரிமா" என்று கூறிவிட்டார் பிறகு பாக்கியம் நிர்மலாவுக்கு என்று கொண்டு வந்த நகைகளை எல்லாம் அணிவித்து கயலை மஞ்ச நீர் தெளித்து கசாப்பு கடைக்கு அழைத்துச் செல்லும் ஆட்டை போல அனைவரும் அழைத்து செல்ல அவளும் பொம்மை போல சென்றாள்..
அவள் வாழ்கையே நொடி பொழுதில் மாறி விட்டது.. சுயநலம் நிறைந்த உலகில் அவரவர் அவரவர் தேவைக்கு சுயநலமாக இருக்க அதில் பலிகடா ஆனது என்னவோ கயல் மட்டும்தான்..
கயல் யாருக்கும் தீங்கு செய்யாத சுபாவத்தை கொண்ட ஒரு பெண் தன் அம்மா வருத்தப்படுவது அவளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை தன் அக்கா திடீரென இப்படி செய்வார் முதுகில் குத்தி விட்டுப் போவார் என எதிர்பார்க்கவில்லை தன் அம்மா நன்றி கடனை எப்படியாவது திருப்பி செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறார் அதற்காக அவளுடைய வாழ்க்கையை அவளை குழிக்குள் தள்ளிக் கொள்ள போகிறாள் என்பது மட்டும் உண்மை.. அதைவிட அவளின் ஆசையையும் இதோடு குழிதோண்டி புதைக்க போகிறாள்...
"நாழி ஆயிடுத்து பொண்ணை கூட்டிட்டு வாங்கோ" என்று மீண்டும் ஒருமுறை ஐயர் கூற அப்பொழுதுதான் நிமிர்ந்து நிரஞ்சன் பார்த்தான்..
அப்போது கயலை அனைவரும் சேர்ந்து அழைத்து வர அவனோ அவளை நொடி பார்த்தவன் இறுகி போய் இருக்க அவளால் நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை..அவன் அருகே போய் அமர அவன் கையில் ஐயர் தாலி எடுத்து கொடுக்க அவன் அவள் கழுத்தில் தாலியை கண்களை மூடி மனதில் ஜானகியை நினைத்து அவளுக்கு துரோகம் செய்கிறோம் தனக்கு அருகே இருக்கும் பெண்ணுக்கும் துரோகம் செய்கிறோம் என எண்ணி தாலியை கட்டினான்.. கயல் மனதுக்குள் கிஷோர் உனக்கு நான் துரோகம் பண்றேன் என்னை மன்னிச்சிடு என நினைத்து அவன் அனுபவித்த தாலியை வாங்கினாள்..
கட்டின மனைவி இறந்தும் அவள் நினைவில் வாழ்ந்து கொண்டு இருப்பவன் ஏன் இப்படி ஒரு காரியத்தை செய்தான்.. அதே போல அவனுக்கு மட்டும் தன் அருகே அமர்ந்து இருப்பவள் திருமணம் ஆகாத பெண் மட்டுமின்றி தன்னுடைய மாணவி என அறிய நேர்ந்தால் அவனின் நிலைமை எப்படி இருக்கும்???
