வர்ணம் 1
அத்தியாயம் : 1
பரபரப்பான காலை வேளையில் தன் தாயை அழைத்துக் கொண்டு பரபரப்பாக ஜோசியர் முன் அமர்ந்திருந்தார் பாக்கியம் பாக்கியத்தின் முகத்தில் நல்ல பதட்டம் காணப்பட்டது..
பாக்கியத்தின் அம்மா, கருணை அம்மாள் இத்தனை வயதாகியும் தன் மகளை தேற்றி கொண்டு இருந்தார்.. "பதட்டப்படாமல் இரு எல்லாம் சரியாக இருக்கும் எல்லாம் நல்லபடியா நடக்கும்" என்று கூற,
"எப்படிம்மா சாமி சொல்ற விஷயத்தில் தான் எல்லாமே அடங்கி இருக்கு.. நிரஞ்சன் அப்படி சொன்னதிலிருந்து எனக்கு கையும் ஓடல காலும் ஓடவில்லை" என்று மெல்லமாக முணுமுணுக்க, எதிரே பாக்கியம் கொடுத்த ஜாதகத்தை வாங்கி நன்றாக பார்த்த ஜோதிடர் ஜாதகத்தையும் பார்த்தார்.. அங்கே பதட்டத்தோடு இருக்கும் பாக்கியம் மற்றும் கருணை அம்மாள் இருவரின் முகத்தையும் பார்த்தார்..
அவரின் முகத்தை தீவிரமாக ஆராய்ந்த இருவரும் மேலும் பதட்டமடைய, அவரோ தன் மூக்கு கண்ணாடியை லேசாக மூக்கின் மீது இறக்கிவிட்டு, அவர்களைப் பார்த்து, "ஜாதகக்காரன் சுத்தக்காரன்..அதாவது நேர்மையா, நீதியா நடக்கணும்னு நினைப்பான்.. அநியாயத்தை தட்டிக் கேட்கணும்னு நினைப்பான்.. அதனால பல பிரச்சனையை சந்திப்பான்.. கோபம் மூக்குக்கு மேல வரும்.. உங்க குடும்பத்தோட ஆணிவேர் இவன் அதாவது உங்க குடும்பத்தின் வம்சம் இந்த ஜாதகக்காரன் அவனுக்கு ஏதாவது ஒன்னுனா உங்களால தாங்கிக்க முடியாது அவனை சுத்தி தான் இந்த உலகமே இருக்கு..
ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணி இருப்பான்.. ஆனால் மனைவியை பறிகொடுத்து இருப்பான்.. ஏன்னா முதல் கல்யாணம் அவனுக்கு நிலைக்காது.. நான் சொல்லல ஜாதகம் சொல்லுது..அவனுக்கு இரண்டாவது கல்யாணம் தான் நிலைச்சு நிற்கும் ஏன்னா இவன் இரண்டு கல்யாண ஜாதகக்காரன்" என அவர் கூற, அதை கேட்ட இருவரும் புட்டு புட்டு என தன் மகன் நிரஞ்சனை பற்றி தெளிவாக கூறவும் பாக்கியத்தின் முகம் மேலும் தீவிரமானது..
அவனுக்கு, "கல்யாணம் நடக்குமா சாமி..அவன் ஆசைப்பட்ட பொண்ணை தான் எங்க விருப்பத்துக்கு எதிரா கல்யாணம் பண்ணினான்..நாங்களும் ஆரம்பத்தில் கோபபட்டாலும் எங்களுக்கு இருக்கிற ஒரே ஒரு மகன் அவன் அவனுடைய சந்தோஷத்திற்காக அந்த கல்யாணத்தை ஏத்துக்கிட்டோம்.. ஆனால் அவள் பிரசவத்துல இறந்துட்டா.. அவள் போனதுக்கு பின்னாடி எனக்கு வாழவே வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கான்.. அவன் வாழ்க்கை இப்படியே இருந்திருமோன்னு பயமா இருக்கு" என அவர் கண் கலங்கி கூற
"இவன் ஜாதக பிரகாரம் பார்த்தா அவனோட மனைவியா இருந்த பொண்ணுக்கு ஆயுசு கம்மி மா அது தான் போய் சேர்ந்துட்டாங்க.. ஆனால் இரண்டாவது கல்யாணமெல்லாம் நடக்கும்.. ஆனால் அந்த கல்யாணத்துல சிக்கல் இருக்கு" என்க அதைக் கேட்டதும் பாக்கியம் சமாதானம் ஆனார்..
"என்ன சாமி சொல்றீங்க?? என்ன சிக்கல் நாங்களே அவனுக்கு ஏதாவது நல்லது நடக்குமா இல்லையா இப்படியே அவனுடைய வாழ்க்கை போயிடுமா அப்படின்னு தெரிஞ்சுக்கத்தான் உங்களை தேடி வந்தோம்" என பதறி கருணை அம்மாள் கேட்க,
"அம்மா நான் உண்மையைத்தான் சொல்லுவேன்.. உங்க பேர பிள்ளைக்கு கல்யாணம் நடக்கும் சொன்ன தேதியில கல்யாணம் நடந்தால் உங்க மகனுக்கு இரண்டாவது கல்யாண யோகத்துல ஆரம்பத்துல கஷ்ட நஷ்டங்கள் வந்தாலும் அமோகமா இருப்பான்.. அதுவே அந்த கல்யாணம் அந்த நேரத்துக்குள் நடக்காமல் போனால் வாழ்க்கையில உங்க மகனுக்கு கல்யாணமே நடக்காது" என்று அவர் கூற
"என்ன சாமி சொல்றீங்க ஒன்னும் புரியலையே!"
"அம்மா நான் ஜாதகத்துல இருக்குறதை சொல்றவன்.. அப்படியே நடக்க போற விஷயத்தை எல்லாம் எப்படி சொல்ல முடியும்? கல்யாணம் உங்க மகனுக்கு ஏற்பாடு பண்ணுங்க. அதுல ஏதாவது பிரச்சனை வந்தா என்ன பாடுபட்டாவது குறித்த நேரத்துக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடுங்க.. அப்படி அந்த நேரத்துக்குள் கல்யாணம் நடக்கல அப்படின்னா அவனுக்கு ஆயுசுக்கும் கல்யாணம் நடக்காது.. ஏன்னா இவர் ஜாதகப்படி கல்யாணத்துல சிக்கல் இருக்கிற ஜாதகம்.. அதனால தான் முதல் மனைவி தவறிட்டாங்க..அந்த பொண்ணுக்கும் ஆயுசு கம்மி எல்லாம் சேர்ந்து மகராசியா போய் சேர்ந்துட்டாங்க.. இப்போ இதுவும் அமையல அப்படின்னா உங்க மகனுக்கு கல்யாணமே நடக்காது.. அவரு விருப்பமே இல்லாம தான் கல்யாணமே செய்வார்" என ஒரு குண்டை தூக்கி அலுங்காமல் அவர் தூக்கி போட்டார்...
அதை கேட்டவர் அதிர, "என்ன சாமி கல்யாணம் ஆகுமா? ஆகாதா? ஏற்கனவே அவன் முதல் மனைவி இறந்த துக்கத்தில் இருந்து அவன் வெளியே வரல.. எப்படி இருந்த பையன் இப்போ என்னவோ மாதிரி ஆகிவிட்டான் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.. ஆனால் இப்போ ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கான்.. அதுக்காக தான் நாங்க ஜாதகத்தை பார்க்க வந்தோம்.. ஏதாவது ஆறுதலா நாலு வார்த்தை சொல்லுங்க சாமி ஏற்கனவே குழப்பத்தில் இருக்கும் மேற்கொண்டு நீங்களும் குழப்பாதீங்க" என்க
"அம்மா அந்த தேவி சொல்றா நான் உங்ககிட்ட சொல்றேன் மத்தபடி என்கிட்ட கேட்டீங்கன்னா நான் என்ன சொல்லட்டும் கல்யாணம் குறித்த நேரத்துக்குள் நடந்தால் உங்க மகனுக்கு நல்ல வாழ்க்கை இருக்கு.. அப்படி இல்ல அப்படின்னா கல்யாண வாழ்க்கையே அவன் ஜாதகத்தில் கிடையாது அவன் எப்பவும் தனியா தான் வாழணும்.." என்க
அதை கேட்டதும் பாக்கியத்துக்கு முணுக்கென்று கண்ணீர் வந்தது... கருணை அம்மாள் தான், "அவர் சொன்னதுக்கு எதுக்கு அழுகுற?" என்று கூறிவிட்டு, "சரி சாமி வரோம்" என்று அவர் எழ,
"அம்மா ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.. அப்படியே கல்யாணம் ஆனாலும் அவங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை சச்சரவுகள் இருக்கும்.. அதெல்லாம் கொஞ்ச காலம் தான் அதுக்கு பிறகு அவங்க சரி ஆகிடுவாங்க அவங்களை அவங்க போக்கில விடுங்க..நீங்க எதிலும் தலையீடாதீங்க" என்று மீண்டும் ஒரு பொடி வைத்து அனுப்பி வைத்தார் ஜோசியர்..
வெளியே வந்து காரில் ஏறியதும், "என்ன அம்மா இவரு இப்படி குழப்புறார்.. எல்லா இடத்திலும் கல்யாணம் நடக்கிறது பெரும் பாடா இருக்கு இவனுக்கு இரண்டாவது கல்யாணம் வேற.. அதுவும் கல்யாணத்துக்கு விருப்பமே இல்லாம இருக்கான்.. அப்படி இருக்கும்போது கல்யாணம் நடந்தா பரவால்ல கல்யாணத்துல பிரச்சனை நடக்கும்.. குறித்த நேரத்துல கல்யாணம் நடக்கலைன்னா கல்யாணமே அவன் வாழ்க்கையில கிடையாதுன்னு ஒரு குண்டை தூக்கி போடுறாரு.. இப்போ என்னம்மா செய்யறது? என் பையன் இப்படியே தனிமரமா இருந்துடுவானா மா? எனக்கு பயமா இருக்கு மா?" என அவர் கூற,
அதை கேட்ட கருணை அம்மா, "நீ ஒன்னும் கவலைப் படாத உன்னோட மகன் புத்தி தான் உனக்கு தெரியும்ல.. யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டான் அவன் என்ன செய்கிறானோ அதைத்தான் செய்வான் அதனால அவனுக்கு கல்யாணம் செய்யணும்னா யோசிச்சு தான் செய்யணும்.. இப்போ அவனா தானே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கான் இதுதான் சமயம் என்று சொல்லி அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுடுவோம் அதுதான் நல்லது இல்லைனா அவனோட மூத்த பொண்டாட்டியை நெனச்சு அவன் இப்படியே தான் வாழ்க்கையை ஓட்டுவான்" என்று கூறினார்..
"அம்மா அதுக்குன்னு அப்படியே விட முடியுமா? ஒரே ஒரு மகன் அவனுக்காக தான் வாழ்ந்துட்டு இருக்கோம் அவன் வாழ்க்கை இப்படி போயிடுச்சேனு எவ்வளவு வலி இருக்கு தெரியுமா அம்மா? இப்போ அவனா இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றான் அவன் சொல்லிட மாட்டானான்னு ஏங்கிட்டிருந்தேன் எப்படி அவளை மறந்து அவன் வேறொரு வாழ்க்கைக்குள்ள போவானோ நினைச்சிட்டு இருந்தேன்.. இப்போ அவனா சொல்லும்போது எனக்கு அதிசயமா தான் இருக்கு அவன் ஏன் சொல்றான்னு எனக்கு புரியுது இருந்தாலும் எல்லாம் நடந்து முடிகிறதுக்குள்ள எனக்கு என்ன எல்லாம் நடக்கப் போகுதுன்னு ஒரே பதட்டமா இருக்கு" என்று கண்களை துடைத்துக் கொண்டு பாக்கியம் கேட்க,
"யாருடி விட சொன்னா? நாம பொண்ணு பாக்குற கடமையை பார்ப்போம்! நல்ல பொண்ணா அமைஞ்சா கல்யாணத்தை முடிப்போம் அவன் தான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டானே அப்புறம் என்ன கவலை? நீ கவலைப்படாத எல்லாம் நல்லபடியா நடக்கும் அதுதான் அவர் சொல்றார்ல்ல கல்யாணம் நடக்கும் அப்படின்னு அவனுக்கு தகுந்த பொண்ணா நாம பார்த்து ஏற்பாடு பண்ணுவோம்" என்று கூறினார்
