நெஞ்சமெல்லாம் 9
அத்தியாயம் : 9
"அண்ணா நீ எங்கே இருக்க.? இப்படி அண்ணியை ஹோட்டல்ல விட்டுட்டு போய் இருக்க? எப்படி உன்னால போக முடிஞ்சது? அவங்களே வெகுளின்னு உங்களுக்கு தெரியும்ல. இருந்தாலும் இப்படி சொல்லாமல் கொல்லாமல் போய் இருக்கீங்க???" என்று தங்கை வினவ..
"அவளை நான் விட்டுட்டு வந்து அவ ஒன்னும் செத்து கித்து போயிடலையே நித்தி? அவ எங்கே இப்போ?? உங்ககிட்ட தான் இருப்பானு தெரியும். அவளை கூப்பிடு… அவ செஞ்ச வேலைக்கு அவளை தயவு செய்து வெகுளின்னு மட்டும் சொல்லாதே நித்தி" என்று கூற தங்கையோ அவன் எதை கூறுகிறான்? எதற்காக கோபமாக இருக்கிறான் ? என்பதை உணர்ந்து அமைதியாகி விட
"யாரு போன்ல அவனா இங்கே தா??" என்று வணங்காமுடி ஆத்திரத்தில் போனை வாங்க, அவளும் கொடுத்து தள்ளி நின்றுக் கொண்டாள்.
போனை வாங்கியதும் வணங்காமுடி, "என்ன பண்ணி வச்சு இருக்க? கட்டின பொண்டாட்டியை இப்படி விட்டுட்டு போய் இருக்க? அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆகிட்டா யார் பொறுப்பு அறிவு கொஞ்சமாவது இருக்கா தம்பி உனக்கு??" என்று கேட்டார்.
"அப்பா எனக்கு அறிவே இல்லை... நீங்க சொல்றதை ஒவ்வொரு முறையும் செய்ய கூடாதுன்னு நினைச்சு… உங்க முகத்தை பார்த்ததும் செய்யாமல் இருக்க முடியாமல் செய்யற எனக்கு சுத்தமா அறிவு இல்லை. இதோ இப்போ நான் செய்தது அறிவுகெட்ட மடத்தனம். ஒரு பைத்தியத்தை கட்டி வச்சி இருக்கீங்க. கேட்டா வெகுளின்னு சொல்றிங்க? இந்த தண்டனையை எதுக்கு பா எனக்கு கொடுத்தீங்க? அவ வெகுளியா?? உலகம் ஃபுல்லா என்னை காணோம்ன்னு வீடியோ போட்டு என்னை அசிங்கப்படுத்தி இருக்கா.. அவ வெகுளியா பா சொல்லுங்க? போதும் எல்லாமே போதும்... இனி என்னை விட்டுடுங்க" என்றான்.
அதை கேட்டு வணங்காமுடி உடைந்தார். அவரால் மகன் பேசும் வார்த்தைகளை மிக தெளிவாக புரிந்துக் கொள்ள முடிந்தது, போனை நித்தியிடம் கொடுத்து விட்டு சோபாவில் அப்படியே அமர்ந்தார்.
அடுத்து கோபத்தோடு வந்த சாரங்கபாணி மீண்டும் போனை வாங்கி, "என்னங்க தம்பி இப்படி பண்ணிட்டீங்க? உங்களுக்கே இது நியாயமா படுதா?? நீங்க போய்ட்டா என் பொண்ணு நிலைமை?? இப்படி பொறுப்பு இல்லாமல் இருக்கீங்களே தம்பி" என்றார்.
"பொறுப்பை பத்தி நீங்க பேசாதீங்க... இத்தனை நாள் பெத்த பொண்ணு நிலைமையை பத்தி கவலைபடாத நீங்க சுத்தமா பேசாதீங்க..! அதான் உங்க அம்மாவுல இருந்து உங்க மக வரை எல்லோரும் நல்லாதானே இருக்காங்க.. யாருக்கும் எதுவும் ஆகலையே. எத்தனை நாளைக்குங்க மத்தவங்க மனசை புரிஞ்சுக்காமல் பெரியவங்க கடைசி ஆசைன்னு இப்படி ஒரு கல்யாணத்தை பண்ணுவீங்க??
நான் மட்டும் அங்கே இருந்தேன் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. இப்போ என்ன உங்க அம்மாவோட கடைசி ஆசை நடந்திடுச்சா எல்லோரும் சந்தோசமாக தானே இருக்கீங்க. அதுல ஒன்னும் குறைவு இல்லையே? நான் என்ன செய்யணும் என்ன செய்ய கூடாதுன்னு இங்கே யாரும் சொல்லாதீங்க! நான் விட்டுட்டு வந்ததில் இருந்தே தெரியலையா உங்க பொண்ணு கூட எனக்கு வாழ பிடிக்கலன்னு... எல்லோரும் சேர்ந்து ஒரு கிறுக்கியை கட்டி வைச்சிட்டு என்கிட்ட நியாயம் பேசறீங்களா?? உங்க பொண்ணு எங்கே அவகிட்ட எனக்கு பேசியே ஆகணும் எங்கே அவ??" என்று துருவன் கூற
சாரங்கபாணியால் மேற்கொண்டு எதுவுமே அவனிடம் பேச முடியவில்லை போனை தன் மனைவியிடம் கொடுத்து, "உன் பொண்ணுகிட்ட கொடு" என்று மட்டும் கூறியவருக்கு சின்னப்பையன் இந்த பேச்சு பேசிட்டானே என்று தான் அவர் நினைத்தார்...
அவரால் அவன் கேட்ட கேள்விகளுக்கு பதிலே கொடுக்க முடியவில்லையே என்று நினைத்தவர் அவனிடம் போய் என்ன பேசுவது என்று தெரியாது அமைதியாக தான் இருக்க முடிந்தது.
அப்படியே வணங்காமுடியை பார்க்க… அவரும் ஒரு ஓரமாக அமர்ந்து இருப்பதை பார்த்ததும் சாரங்கபாணிக்கு புரிந்து போனது. அவருக்கும் அவருடைய மகனிடம் இருந்து நல்ல தரமான முறையில் கிடைத்து இருக்கிறது என்று மட்டும் புரிய... அவரும் அமைதியாகி விட்டார்
கற்பகம் போனை எடுத்துக் கொண்டு அவளை தேட... அவளோ சுப்பு பாட்டியுடன் மல்லுக்கட்டி கொண்டிருந்தாள்.
"கிழவி இன்னும் இரண்டு நாள் படுத்து இருக்க வேண்டியது தானே? இப்போ பார் மாமா போய்ட்டார்" என்று கேட்டாள்.
அவரோ "அவன் போனதுக்கு நான் என்ன டி பண்ணுவேன் சிறுக்கி?உனக்கு அவனை முடிஞ்சு வைச்சுக்க உனக்கு தெரியல… நீ தான் தேடி போகணும். அவன் வர மாட்டான்" என்றார்.
அவளோ அதை ஏற்றுக் கொள்ளாமல், "கிழவி ஓவரா பேசின நானே உன் குரல் வளையை கடிச்சு துப்பிடுவேன். என் மாமனை எப்படி வளைக்கணும்னு எனக்கு தெரியும்" என்று கூற அப்போது தான் அதைக் கேட்டு கொண்டே கற்பகம் வர போனில் துருவனும் கேட்டு விட்டான்
அதை கேட்டவனுக்கு “ஏன் டி இத்தனை செய்தது உனக்கு பத்தலையா? என் கையில நீ சிக்குன அடுத்தது உன்னை கொன்னே போடுவேன்” என்று வரிந்துக் கொண்டு இருக்க,
"இந்தா போன் துருவன் தம்பி பேசுறாங்க" என்று கூற
அதை கேட்டதும், "என்ன.. என்னோட மாமாவா? ஹே கிழவி பார்த்தியா என்னோட மாமனை எனக்கு கூப்பிட்டு இருக்கார் பார்" என்று கூறியவள் தன் தாயிடமிருந்து போனை வெடுக்கென பிடுங்கியவளின் கைப்பட்டு போன் ஸ்பீக்கரில் ஆனாகி போக... அவள் பேசுவது முதல் அவன் பேசுவது வரை அனைவருக்கும் கேட்க துவங்கியது.
"ஐயோ மாமா நீங்களா? எங்கே மாமா போனீங்க?" என்று கூறியவளுக்கு நேற்றைய இரவு வேறு ஞாபகம் வந்து போக இலேசாக அவள் வெட்கப்பட... அதை அவன் உணர்ந்தானோ என்னவோ அவளது குரலே அவனுக்கு கொடுக்க, "என்ன டி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல ?? என்னை அசிங்கப்படுத்தணும்னு எத்தனை நாள் நினைச்சிட்டு இருந்த? முதலில் இந்த கல்யாணம் அப்புறம் ஊர் முழுசும் என்னை அசிங்கப்படுத்திட்ட... அந்த வீடியோவை போட்டு இருக்க? இன்னும் என்ன எல்லாம் டி செய்ய நினைச்சி இருக்க?" என்றான் கோபமாக.
அவன் பேசுவது புரியாமல் முழித்தவள் வீடியோ என்றதும் அவளுக்கு கருப்புவின் ஞாபகம் வர "ஐயோ மாமா அதுவா... எங்கே மாமா போனீங்க??? கருப்பு சொன்ன மாதிரியே நீங்களே கூப்பிட்டுட்டீங்க மாமா... அவன் தான் மாமா அந்த வீடியோவை போட்டான்" என்றாள்.
"வாயை மூடு டி! நீ பக்கவா என்னை அசிங்கப்படுத்தி இருக்க… நீ கேனச்சி எல்லாம் இல்லை டி. நீ சரியான கேடி டி. ஊர் முழுசும் என்னை அசிங்கப்படுத்திட்டல்ல இடியட் உன்னை சும்மா விட மாட்டேன் டி"
"இல்லை மாமா… நான் எதுவும் பண்ணல. உங்களை தேட தான் நான் அப்படி செய்தேன் " என்றான்.
"சீ வாயை மூடு டி. நேத்தே உனக்கும் எனக்கும் உள்ள உறவு எல்லாம் முடிஞ்சிடுச்சு. இனி புருஷன் பொண்டாட்டி எந்த உறவும் நமக்குள்ள கிடையாது. அதை சொல்லி இனி ஏதாவது செய்த உன்னை தேடி வந்து கொன்னுட்டு போய்ட்டே இருப்பேன். உனக்கு நான் என்ன டி பாவம் பண்ணினேன்? உன்னோட ஊருக்கு எப்போ எல்லாம் வரேனோ அப்போ எல்லாம் ஏதாவது ஒரு தலைவலி எனக்கு காத்திருக்கு.உங்களுக்கு எல்லாம் அப்படி என்ன டி நான் செய்துட்டேன்" என்று கேட்டான்.
"இல்லை மாமா நான் வேணும்னு செய்யல. நீங்க போனதும் எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. நேத்து கூட என்கூட நல்லாத்தானே மாமா இருந்தீங்க?" என்று கேள்வி கேட்கவும் இவனுக்கு சுர்ரென்று ஏறியது.
"என்ன டி நேத்து நடந்ததை வைச்சு உன் மேல ஆசைப்பட்டு உன்னை தொட்டேன்னு நினைச்சிட்டு இருக்கியா?? நீ செய்ததை திருப்பி உனக்கு தர வேணாமா??? அது தான் உன்னை தொட்டேன்" எனவும் அவள் அதிர “மாமா…” என்று அவள் குரல் கம்ம அவளோடு சேர்ந்து அனைவரும் அதிர்ந்தனர்.
அவனோ, "வாயை மூடு டி. நீ எந்த தைரியத்தில டி என்னை கல்யாணம் செய்த?? உனக்கு என்னை கல்யாணம் செய்துக்க என்ன தகுதி இருக்கு?? நீ மட்டும் ஆசைப்பட்டா போதுமா? உன்னோட தகுதி உனக்கு என்னன்னு தெரிய வேணாமா? நான் என்ன கல்யாணம் செய்துக்க பொண்ணு கிடைக்காமல் இருக்கேன்னு நினைப்பா?? எனக்கு பிடிக்கல. உன்னை சுத்தமா பிடிக்கல." என்றவன் வெடித்தான்.
"அப்புறம் எதுக்கு மாமா நேத்து இராத்திரி என்கூட அப்படி இருந்தீங்க? உங்களால எப்படி மாமா பிடிக்காமல் என்கூட இருக்க முடிஞ்சது" என்று வினவியவளுக்கு அவன் கூறுவதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அவனுக்கு அவளை பிடிக்கும். அது அவளுக்கும் தெரியும். இருந்தும் ஏன் இவன் இப்படி கூறுகிறான் என அவள் நினைக்க இவள் பேசுவதை எல்லாம் கேட்டு கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
தன்னை சற்று முன் வாயே திறக்க விடாமல் செய்த மருமகனிடம் வாயாட ஒரு வாக்கியம் கிடைத்து விட்டதே எல்லோரும் அவன் பேசுவதை கேட்பது போல அவரும் கேட்க சும்மா விடுவாரா? வேகமாக தன் மகளிடம் இருந்து போனை வாங்கி,
"யப்பா இது நல்லா இருக்கா? பொண்ணு வேண்டாமாம் அவ கூட வாழ்ந்து இருக்காராமாம்? இப்போ என்னப்பா சொல்ற பெரிய யோக்கியன் மாதிரி பேசிட்டு இருந்த… ஆனால் சில்லறை வேலை பண்ணி இருக்க??" என்று கூற அங்கே கூடி இருந்த எல்லோரும் அதிரத்தான் செய்தனர்.
வணங்காமுடிக்கு என்ன பேசுவதென்று விளங்கவில்லை. மகன் தற்போது செய்துக் கொண்டிருப்பது தவறு தான் என்றாலும் அவன் கூறுவது அவனை இந்த பாதைக்கு இழுத்து வந்தது நான் அன்றோ என அவர் நினைக்க,
"என்னப்பா நீயும் சின்ன பையன் கூட மல்லுகட்டிட்டு இருக்க.. எல்லாம் சரியாகிடும் பா. அவன் கிட்ட நான் பேசுறேன்" என அவர் கூற
"நீ என்ன பேசுறது? என்னமோ உன் பையன் பெரிய யோக்கியன் மாதிரி கத்திட்டு இருக்கான். பொறுக்கி பய… பொறுக்கி வேலைத்தனம் பண்ணிட்டு இருந்தவனுக்கு தங்கம் மாதிரி என் பொண்ணை கொடுத்தா... தூக்கி வீசிட்டு போறான். அதுவும் ஒரு ராவு இருந்துட்டு போறான்னா அவனுக்கு என்ன கொழுப்பு இருக்கணும்? வேண்டாம்னா கம்முன்னு போய் இருக்கணும்" என்று சாரங்கபாணி கூற
அது அவனது செவியில் நன்றாக விழவும் அவன் அவமானமாக உணர்ந்தான்.
