Share:
Notifications
Clear all

நெஞ்சமெல்லாம் 4

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  


அத்தியாயம் - 4

அதற்குள் துருவனுக்கு எட்டு வயது ஆகியும் விட்டது.இப்போது ஒன்றுக்கு மூன்று ஹோட்டலை அங்கே துவங்கி விட்டார் வணங்காமுடி. தாமரை வேறு இரண்டாவது கர்ப்பம் தரித்து நித்யா என்ற மகவை ஈன்றும் விட்டார்.

இங்கே சாரங்கபாணியின் தொழில் பெரிதாக மெச்சும்படி இல்லை என்று தான் கூற வேண்டும். அவரோ காளி தேவியின் பக்தன் அவர் தேவியின் பக்தன் என்பதால் கோவில் விழாக்களில் ஏதாவது பூஜை என்றாலே அவருக்கு சாமியின் அருள் வந்து சாமியாட துவங்கி விடுவார்.

அப்படி இருக்கையில் அவருக்கு ஒரு நாள் ஒரு கனவு வந்தது அதில் ஒரு பிறந்த குழந்தை அவரது கழுத்தை நெறித்து கொல்வது போல இருக்க அவரோ பயம் கொண்டார்.

மேலும் அவருக்கு இந்த ஜாதகம் அதில் எல்லாம் நம்பிக்கை அதிகமாக இருக்க மனைவி வேறு இரண்டாவது குழந்தை பெற நிறைமாத கர்ப்பிணியாக இருக்க அந்த நேரம் பார்த்து தான் அவர் ஜாதகம் பார்க்க செல்ல அங்கே அவரது ஜாகத்தை கணித்த ஜோசியரோ, "நீங்கள் ஊரே மெச்சும்படி ஆவீங்க. நீங்க கும்பிடுற சாமி உங்களுக்கு கைகொடுக்கும். ஆனால் உங்களுக்கு பிறக்க போகிற இரண்டாவது குழந்தையை நீங்க தானம் செய்யணுமே…
அப்போ தான் உங்க பேர் சொல்ல ஆம்பிளை பிள்ளையும் பிறப்பான் அவன் பிறந்த நேரம் நீங்க உச்சத்தில் இருப்பீங்க" என்று ஒரு குண்டை தூக்கி போட...

அவரோ, "என்ன சாமி சொல்றீங்க பிறக்க போற குழந்தையை தானம் செய்யவா??" என்று அதிர்ந்து வினவினார்.

"ஆமாம் நீங்க அப்படி செய்தா தான் உங்களுக்கு நல்லது நடக்கும் இப்போ பிறக்கிற குழந்தையால உங்களுக்கு எந்த நல்லதும் நடக்க போறது இல்லை உங்க உசுருக்கு தான் ஆபத்து" என்று கூற அதை கேட்டு அதிர்ந்த சாரங்கபாணி யாரிடமும் கூறாமல் விஷயத்தை தன்னிடமே வைத்துக் கொண்டார்.

இது எங்கேயாவது அவரின் அம்மா சுப்புவின் காதுக்கு சென்றால் அவ்வளவு தான் திருக்கை மீனை அரிவது போல சாரங்கபாணி மற்றும் அந்த ஜோசியர் தலையை அரிந்து விடுவார். அதனால் அவர் எப்போதும் போல அமைதியாக இருக்க அந்த சமயம் பார்த்து தான் கற்பகம் மற்றும் சாரங்கபாணிக்கு காவ்யா பிறந்தாள்...

அப்போது தான் சுப்புவிற்கு புதிய தலைவலி ஒன்று தொடங்கியது… ஆம் சாரங்கபாணி மற்றும் வணங்காமுடி இவர்கள் எல்லாம் இப்படி மணம் ஆனவுடன் அவர்களுக்கு எல்லாம் குழந்தை பாக்கியம் இருக்க இவர்களுக்கு எல்லாம் முன்பு திருமணம் செய்த சாரங்கபாணியின் அக்கா கல்பனாவுக்கு திருமணம் ஆகி இத்தனை வருடம் ஆகியும் இனியும் குழந்தை பாக்கியம் அமையவில்லை.

சுப்புவும் தன் மகளை அழைத்துக் கொண்டு எங்கே எங்கேயோ சென்று பார்த்து வந்து விட்டார் அவருக்கு குழந்தை பாக்கியம் மட்டும் அமையவில்லை.

அதனால் அவர் தன் தாயிடம் காவ்யாவை காண வந்து வருந்தி பேசிக் கொண்டு இருக்க அதை கேட்டு தாளாத தமையனுக்கு அந்த நேரம் பார்த்து ஜோசியர் கூறியது நினைவு வர அவரோ, "அக்கா உனக்கு என்ன குழந்தை தானே வேணும் இதோ இனி இந்த குழந்தை உன்னோடது" என்று கூறி தொட்டிலில் உறங்கிக் கொண்டு இருந்த குழந்தையை தூக்கி கொடுத்தார்.

யாருமே இதை எதிர்பார்க்கவில்லை... சுப்பு கூட, "உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு குழந்தையை தூக்கி கொடுக்கிற பெத்தவ மனசு என்ன பாடுபடும்ன்னு நினைச்சு பார்த்தியா??" என்றார்.

கற்பகமோ அதிர, "என் மனைவி சொன்னா புரிஞ்சுக்குவா" என கூறி கற்பகத்தை தனியாக அழைத்துச் சென்று தனக்கு வந்த கனவை பற்றியும் தான் ஜாதகம் பார்த்ததை பற்றியும் மூன்றாவது நமக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்பதை எல்லாம் கூற பழமையில் ஊறிய ஆளான கற்பகமும் கணவன் சொல்லுக்கு எதிர் பேச்சு பேசியிராத கற்பகம் ஒத்துக் கொண்டாலும் பெற்ற பிள்ளையை பெற்று பத்து நாட்கள் கூட ஆகாமல் எப்படி ஒரு தாயாய் குழந்தையை பிரிவேன் என வருந்தினார்.

சாரங்கபாணி அவருடைய அக்காவின் நிலையை கூறி, "அவள் வாழ்க்கை இனி உன் கையில தான் இருக்கு குழந்தை இல்லாட்டி அவ செத்துடுவா" என்று கூறி வருத்தப்பட குழந்தையை கொடுக்க சம்மதித்தார் கற்பகம்.

அப்படியே தாயையும் அது இது என்று கூறி சமாளித்து அவர் கும்பிடும் காளிதேவியின் கோவில் முன்னால் குழந்தை காவ்யாவை தத்து கொடுத்தார் சாரங்கபாணி.

விஷயம் அறிந்து தாம்தூம் என குதித்த வணங்காமுடி எவ்வளவு தூரம் கூறியும் இப்படி செய்து விட்டார்களே என வருந்தி அவரது சொந்த ஊருக்கு வருவதை கூட நிறுத்தி விட்டார். அவரால் தாள முடியவில்லை என்னதான் ஆயிரம் காரணம் கூறினாலும் தான் பெற்ற செல்வத்தை எப்படி கொடுக்க மனது வந்தது என்பது அவருக்கு எரிச்சலாக இருக்க அதனால் சில காலம் சரிவர உரையாடாமல் இருந்தார் வணங்காமுடி...

காவ்யாவை தத்து எடுத்த நொடியோ என்னவோ தெரியவில்லை குழந்தை பாக்கியமே இல்லாமல் தவித்து வந்த கல்பனா தன்னுடைய 40 வயதில் கருவுற எல்லாம் காவ்யா வந்த நேரம் என்று கூறி மகிழ்ந்தார் அவர்.

சாரங்கபாணியின் மனைவி கற்பகமும் அதே நேரம் கருவுற்று இருக்க இருவரும் கிட்டத்தட்ட ஒரு மாதம் வித்தியாசத்தில் குழந்தையை பெற்றனர் இருவருக்கும் ஆண் குழந்தை வேறு பிறக்க இரு குடும்பமும் மகிழ்ச்சியில் திளைத்தது.

இதில் என்னவென்றால் கல்பனா தனக்கு குழந்தை இல்லாதது வரை காவ்யாவை கொஞ்சி மகிழ்ந்தவர் தனக்கு என்று ஒரு குழந்தை பிறந்ததும் நான்கு வயதான காவ்யாவை ஒதுக்க துவங்கி விட அதிலும் காவ்யா நின்றால் குத்தம் நடந்தால் குத்தம் என்றாகி விட்டது.

ஏனெனில் தம்பியின் தொழில் மேலோங்கி சென்றுக் கொண்டிருக்கும் வேளையில் ராசுகண்ணுவின் தொழிலோ இறங்கிக் கொண்டு போக இதற்கு எல்லாம் காரணம் காவ்யா தானோ என எண்ணி அவசரக்காரி கல்பனா பஞ்சாயத்தை சுப்புவின் வீட்டில் கூட்டி விட இரு தரப்புக்கும் அந்த குழந்தையை ஏற்றுக் கொள்ள தற்சமயம் மனமில்லை.

சாரங்கபாணி நான் தத்து கொடுத்து விட்டேன் என்று தன் மனைவி பதறிக் கொண்டு இருக்கிறாள் என்பதை அறிந்தும் அறியாதது போல அவர் கூற இந்த பக்கம் கல்பனாவோ, "எனக்குன்னு என் மவன் இருக்கான் குழந்தையை பெத்தவங்ககிட்ட ஒப்படைக்க வேண்டியது தான்" என்று அவர் ஒரு பக்கம் நிற்க கடைசியில் சுப்பு தான் தனது இரு மக்களை பார்த்தும், "இந்த புள்ள யாருக்கும் வேணாம்ல நான் பார்த்துக்கிறேன் இனி இந்த குழந்தை என்னோடது" என்று கூறி அன்று தன் மகனின் வீட்டில் இருந்து படியிறங்கி தன் கிராமத்துக்கு காவ்யாவை தூக்கிக் கொண்டு சென்று விட்டார்.

அவர் தான் அவளை இந்த அளவுக்கு வளர்த்தவர் கடந்த ஓரிரு வருடங்களாக தான் உடலுக்கு முடியாமல் சாரங்கபாணியின் வீட்டில் இருக்கிறார்.

காவ்யாவை வளர்த்தது என்னவோ சுப்பு தான் என்றாலும் காவ்யா தான் இப்படி வளர்ந்து நிக்கிறாள். அதற்கு அவரை குறை சொல்ல முடியாதே பெற்றவர்களே குழந்தையை வேண்டாம் என்று கூறும் போது அந்த வயதான பெண்மணி என்ன செய்வார்? கற்பகம் தான் மனது கேட்காமல் இடையிடையே வந்து காவ்யாவை பார்த்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

ஆனால் காவ்யாவுக்கு அவர்கள் யாரும் வேண்டாம் அவள் அவளுடைய உலகத்தில் சஞ்சரித்து வருகிறாள் பெரிதாக படிக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.

அவளுக்கு அதில் நாட்டமும் இல்லை இவளது குணத்தை பார்த்து அவளை தன் கைக்குள்ளேயே வைத்து வளர்த்துக் கொண்டார் சுப்பு. அவர் வேறு அந்த காலத்து மனுஷி அதனால் அவருக்கும் காவ்யாவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கும்.

அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று அவளுக்கே தெரியாது ஆள் வளர்ந்து இருக்கும் அளவுக்கு அறிவு இல்லை என பிறர் கூறுகின்றனர். ஆனால் அவள் பல சமயத்தில் செய்யும் வேலைகள் யாவும் அவள் தெரிந்து செய்கிறாளோ இல்லை தெரியாமல் செய்கிறாளோ தெரியாது ஆனால் அபரிமிதமாக இருக்கும். இதோ இப்போது கூட பாட்டியை வைத்து தன் மாமனை கரம் பிடித்து விட்டாளே அது போல தான்.

இங்கு திருமணம் முடிந்ததும் எழுந்து ஓட முயன்றவனை சுற்றி வளைத்த உறவினர்கள் கூட்டமும் போட்டோ எடுப்பவர்களும் மொய்த்துக் கொண்டனர்.

இவளும் தன் மாமனை உரசி உரசி நின்று பல போஸ்கள் எல்லாம் கொடுத்தவள், "அண்ணே நாங்க இரண்டு பேரும் ஒரு மலைக்கு நடுவில உட்கார்ந்துட்டு சூரியனை பார்த்து சாமி கும்பிட்டு இருக்கிற மாதிரி எடுக்கறீங்களா அண்ணே வாணி அக்கா வீட்டுல பெரிய சைஸ்ல அப்படி ஒரு போட்டோ வைச்சு இருந்தாங்க உங்களால அது போல செய்ய முடியுமா அண்ணே" என்று துருவனின் மானத்தை வாங்கிக் கொண்டு இருக்க…

அவர்களோ, "சிறப்பா செய்திடலாம் தங்கச்சி நீ மச்சான் தோள் மேல கையை போட்டு நில்லு" என்று கூறினர்.

அவளோ கிளுக்கி சிரித்தாள்.அவள் முகம் சிவக்க இவனுக்கோ அதை கண்டதும் ஓங்கி அறையலாம் என்ற கோபம் தான் வந்தது.

"அண்ணே எல்லோரும் பார்க்கிறாங்க அண்ணே எனக்கு வெட்கமா இருக்கு" என்றாள்.

அந்த போட்டோ எடுப்பவரோ, "அப்போ மச்சானை உன் மேல கையை போட சொல்லு" என்று கூற இங்கு துருவனோ யாருக்கு யார் டா மச்சான் என்று எரிச்சல்பட்டுக் கொண்டு இருக்க, "மாமா" என்று அழைத்தாள்.

அவனோ சட்டென்று அவளை பார்த்து முறைக்க, "அது தான் அந்த அண்ணன் சொல்றாங்கல்ல என் மேல கையை போட்டு நில்லுங்க மாமா" என்றாள்.

முதலிலேயே கேனச்சிறுக்கி மாதிரி இருந்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்டாளே என்று எண்ணிக் கொண்டு இருந்தவனுக்கு இவளது பேச்சு வேறு எரிச்சலை சகட்டு மேனிக்கு கிளப்பி விட அப்படியே கிளம்பி விடலாமா என எண்ணியவனுக்கு தூரத்தில் துருவனை பார்த்து நின்றுக் கொண்டு இருக்கும் அவனது தந்தை கண்ணில் பட அமைதியாக இருக்க அவளோ மீண்டும் அதையே கூற...

அவளது காதுக்கு அருகில் குனிந்து, "வாயை மூடிட்டு நில்லு என்ன டி எல்லாம் நடந்துச்சுன்னு மிதப்புல இருக்கியா இனி தான் என் ஆட்டம் ஆரம்பம் என்னமோ தாலி கட்டினா எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சிட்டு இருக்கியா? பார்க்க கேனச்சி மாதிரி இருந்துட்டு நான் சொன்னது எல்லாத்துக்கும் சரி மாமா சரி மாமான்னு சொல்லிட்டு இங்க வந்து ஜாலியா இருக்க கல்யாணத்தையும் நடத்திட்ட. அப்படின்னா நீ பக்காவா பிளான் பண்ணி தான் டி என்னை கல்யாணம் செய்து இருக்க. யூ டாமிட் உன்னை சும்மா விட மாட்டேன்.

என்னை பார்த்தா உனக்கு எப்படி டி இருக்கு வெய்ட் அண்ட் சீ டாமிட் என்னை இடியட் ஆக்கலாம்னு பார்த்த உன்னை நான் சும்மா விட மாட்டேன். சின்ன பொண்ணுன்னு நான் பார்த்தா எனக்கே மிளகாய் அரைக்க பார்த்த உன்னை அவ்ளோ சீக்கிரம் விட மாட்டேன் இடியட்" என்று அவளது காதில் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூற தன் குட்டு வெளிப்பட்டு விட்டதோ என்று அவனை பாவமாக பார்க்க அவளை தன் பார்வையாலேயே எரித்தான் துருவன்...

மந்தாரம் தெளியும்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top