நெஞ்சமெல்லாம் 33
மந்தாரம் : 33
அதேநேரம் காவ்யா மாமாவை தேவையில்லாமல் துரத்தி விட்டேன் என்று தன்னைத் தானே குற்றம்சாட்டி கொண்டு இருந்தாள் அவள். அமைதியா இருந்த அவரை நான் தான் இப்படி செய்துட்டேன் பாவம் மாமா எல்லோர்கிட்டேயும் தப்பா நடந்து இருக்காங்க அது புரியாமல் நான் இப்படி பேசிட்டேனே என்று வருந்திக் கொண்டிருந்தாள்.
அவளது வருத்தம் அவனுக்கு கேட்டதோ என்னவோ கடந்த ஒரு வாரமாக வீட்டிற்கு வராதவன் அன்று வீட்டிற்கு வந்தான். அவன் வந்து இருக்கிறான் என்று கூட தெரியாமல் நித்யா காவ்யாவிடம், "அண்ணி நீங்க அழகா மாறிடுங்க அண்ணா பாருங்க அசந்து உங்களை சுத்தி சுத்தி வர போறாரு" என்று கூறி அவள் முகத்தில் ஏதோ ஒரு ஃபேஸ் பேக்கை போட்டுவிட்டு இருக்க அதை தேய்த்துக் கொண்டு கண்களை மூடி அவள் அமர்ந்திருந்தாள்.
நித்யா அதற்குள் போன் வந்தது என்று சென்று விட அந்த சமயம் பார்த்து தான் துருவன் வந்து இருக்க,
அவள் முன்னே கையை கட்டி நின்றுக் கொண்டிருக்க கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகியும் அவள் கண்களை திறக்கவில்லை. ஆனால் கண்களின் ஓரம் மட்டும் கசிந்துக் கொண்டே இருக்க அதை பார்த்தவனுக்கு மெல்லிய புன்னகை வந்தது.
அதற்குள் ஏதோ போனை எடுத்துக் கொண்டு சென்ற நித்யா திரும்ப வந்து, "அண்ணி முகத்தை இன்னும் நீங்க கழுவலையா கழுவிடுங்க" என்று கூற,
தன் தங்கையை பார்த்து முறைத்த துருவன், "என்ன நித்யா இதெல்லாம் ??" என்று கேட்டான்.
"இல்லை அண்ணா உங்களுக்காக அண்ணியை கொஞ்சம் ஸ்டைல் ஆக்குவோம்ன்னு தான்" என்றாள்.
"அவ என்ன ஆடா மாடா மாத்த அவ ஒரு உயிர் அவளுக்குன்னு விருப்பு வெறுப்பு இருக்கு அவளுக்கு எப்படி இருக்க தோணுதோ அப்படி இருக்கட்டும். எனக்கு பிடிக்கும் படி மாற அவ என்ன பொம்மையா அவ மனுஷி அவளுக்கு நீ செய்யறது பிடிக்குதோ இல்லையோ பார் அழுதிட்டு இருக்கா" என்றான்.
"சாரி அண்ணா" என்க மகனின் குரலை கேட்டு ஓடி வந்த தாமரையை பார்த்து, "நீங்களும் ஏதோ பாடம் எல்லாம் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்து இருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். எதுக்கு மா அவளை ஃப்ரீ ஆஹ் விடுங்க எனக்காக அவளை அதை செய் இதை செய்னு சொல்லாதீங்க" என்றான்.
அவனது குரலை கேட்டதும் வேகமாக அவளும் கண்களைத் திறந்து பார்க்க அங்கு தன் கணவன் நின்றுக் கொண்டிருப்பதை பார்த்ததும், "மாமா வந்துட்டீங்களா??' என்று சுற்றுப்புறம் மறந்து அவனை ஓடிச்சென்று அணைத்துக்கொண்டாள்.
"என்னை மன்னிச்சிடுங்க மாமா எல்லாம் தெரிஞ்சும் கல்யாணம் செய்த நான் உங்ககிட்ட அப்படி நடந்துக்க கூடாது. உங்களை நான் விலக்கியது தப்புதான் அதுக்காக நீங்க என்னை விட்டு விலகி மட்டும் இருக்காதீங்க மாமா என்னால அதை தாங்கிக்க முடியாது" என்றாள்.
அவன் தாய் மற்றும் தங்கையை பார்த்து, "முகத்தை கழுவிட்டு ரூமுக்கு வா" என்று கூறிவிட்டு அவனது அறைக்குள் சென்றான். தாமரை மகனின் பேச்சையும் மருமகளின் செய்கையையும் பார்த்து வேகமாக கண்களை துடைத்துக் கொண்டார்.
அவனுக்கு அவளிடம் பேச வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும் என்று இருக்க அவளை வரச் சொல்லிவிட்டு அவளுக்காக காத்திருந்தான் துருவன்.
அவளும் வேகமாக முகத்தை கழுவி விட்டு துடைக்க கூட மனமின்றி தன் ஆடையிலேயே முகத்தை துடைத்து விட்டு வேகமாக ஓடி வந்தவள் அவனை கட்டி அணைத்தாள்.
"மாமா நான் உங்கள விலக்கினது தப்புதான் மாமா அதுக்காக என்னை விட்டு விலகி மட்டும் இருக்காதீங்க மாமா என்னால தாங்கிக்க முடியலை மாமா" என்றாள்.
அதைக்கேட்ட அவனும் அவளை இறுக்கி அணைத்தவன், "உன்னை விட்டு என்னால விலகி இருக்க முடியும்னு நீ நினைக்கிறியா அஞ்சு மா..? உன்னை எனக்கு எப்போவும் பிடிக்கும். ஆனால் இடையில் நீ செய்தது தான் என்னால ஏத்துக்க முடியல. நீ எப்பவும் என் கிட்ட ஒரு கேள்வி கேட்ப என்னை நீங்க மனைவியா ஏத்துக்கிட்டீங்களா அப்படின்னு நான் அந்த நிமிஷம் உன்னை சத்தியமா ஏற்றுக்கொள்ளல.
என்னால உன்னை மாதிரி உடனே ஏத்துக்கவும் முடியாது. ஆனா எனக்கு சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது அதுக்காக நான் எடுத்துக்கிட்ட சமயம் தான் இது. உன்னை என்னுடைய மனைவியா ஏத்துக்க நான் எடுத்துக்கிட்ட சமயம் கிடையாது. என்னை நானே திருத்திக்க என் மனசில் உள்ள எல்லாத்தையும் ஒதுக்கி வைக்க நான் எடுத்துக் கொண்ட சமயம் தான் இது. உன்னைவிட எனக்கு ஒரு அன்பான வாழ்க்கை துணை கிடைக்க மாட்டாங்க.
நீ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் உன்னால மட்டும்தான் என்னை அளவுக்கு அதிகமா நேசிக்க முடியும். இதே வெள்ளந்தி குணத்தோடு நேசிக்க முடியும் ஒருவேளை நீ என்னை தேடி இவ்வளவு முயற்சி செய்து திருமணம் செய்யல அப்படினா நான் இன்னமும் இப்படியே தான் சுத்திட்டு இருந்திருப்பேன். ஆனால் இப்ப வரையும் நீ எப்படி என்னை போல ஒருத்தனை கல்யாணம் செய்து கொண்டாயோன்னு நான் ஆச்சரியப்பட்டு இருக்கேன். நமக்கு இடையில் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கு.
ஆனால் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நேசத்தை தூவினால் நம்ம வாழ்க்கை அழகாக மாறும் அப்படின்னு நீ எனக்கு ஒவ்வொரு நொடியும் புரிய வச்சுட்டு இருக்க வெறும் உணர்வுகளோட பிளம்பா மட்டும் என்னோட வாழ்க்கை ஆரம்பிக்கக் கூடாது அப்படின்னு தோணுச்சு. அதனால என் மனசுல இருக்கிற குப்பைகள் எல்லாத்தையும் ஒதுக்கி வைக்க நான் எடுத்துக்கிட்ட சமயம்தான் இது... அன்னிக்கு மாதிரி உணர்வுகளோடு மட்டும் நம் வாழ்க்கை இருக்க கூடாதுன்னு நினைச்சேன்.
அதனால தான் நான் எல்லாரிடமும் இருந்தும் விலகி இருந்தேன் மற்றபடி எதுவும் இல்லை என்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் உன்னை மாதிரி மனைவி இருக்கிறதே பெருசு இதில் கோபப்பட என்ன இருக்கு?? தயவு செய்து எனக்காக நீ மாறாத இந்த முகத்தை தான் நான் நேசிக்கிறேன் இந்த குணத்தை தான் நேசிக்கிறேன்" என்று கூறி சிரித்தான்.
அதைக்கேட்ட அவளோ, "மாமா உங்களை போய் யாரு மாமா வேணாம்னு சொல்லுவா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் மாமா, எனக்கு என் மாமா எனக்கு மட்டும் தான் இருக்கணும்னு ஆசை. அதுனால மட்டும் தான் நான் அப்படியெல்லாம் செய்தேன். நிவேதா அக்கா பத்தி இப்போதைக்கு பேசக் கூடாதுன்னு தான் நினைத்திருந்தேன். ஆனால் அந்த அக்கா உங்கள விட்டுட்டு போனதும் நல்லதுதான் மாமா இல்லைனா எனக்கு என் மாமாவை கிடைச்சு இருக்க மாட்டாரே.
மாமா நீங்க இன்னிக்கு மட்டும் என்னை பார்க்க வரலனா கே.கே அண்ணாவை இழுத்திட்டு நானே வந்து இருப்பேன். உங்களை தேடி அப்படி எல்லாம் விட்டுட்டு அழுதிட்டு உட்கார்ந்து இருக்க மாட்டேன் மாமா" என்று கூறியவள் அவனைப் பார்த்து சிரித்தாள்.
அவனோ அவளை பார்த்து சிரித்தவன், "அப்போ நான் வரும் போது அழுதிட்டு இருந்தியே??" என்று கேட்டான்.
"அதுவா நித்யா அக்கா எதையோ பூசி விட்டாங்களா அதுல கண்ணுல இருந்து தண்ணீர் வந்துடுச்சு மாமா, அத்தையும் தினமும் வந்து அழாத மா நான் அவனை கூட்டிட்டி வரேன்னு சொல்லுவாங்க" என்று கூற அதை கேட்டவன் மேலும் சிரித்தான்.
"அடிப்பாவி நான் கூட நீ வருத்தப்பட்டுட்டு இருக்கன்னு நினைச்சு வந்தேன்" என்றான்.
"அந்த வேலை எல்லாம் என்கிட்ட இல்லை மாமா உங்களை தூக்கிட்டு வந்தாவது என்கூட இருக்க வைச்சிடுவேன் மாமா" என்றாள்.
அவனோ அவளை பார்த்து சிரித்து அணைத்தான்...அணைத்தவனின் கைகள் அவளை இறுக்கி அணைக்க, "இப்போ சொல்லு நான் உன்னை அணைக்கலாமா எத்தனையோ முறை உன்கிட்ட அனுமதி இல்லாமல் உன்னை அணுகி இருக்கேன் இப்போ கேட்கிறேன் சொல்லு?" என்று கேட்டான்.
"எதுக்கு மாமா இதெல்லாம் என்கிட்ட கேட்கறீங்க?? என்கிட்ட கேட்காதீங்க மாமா" என்று அவன் அணைப்புக்குள் கட்டுண்டு கிடந்தவள் அவன் இத்தனை எளிதாக மாறுவான் என நினைத்து கூட பார்க்கவில்லை. அவனுக்கும் அது தெரியவில்லை. அவனது இந்த மாற்றத்தை அவனாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தான் கூற வேண்டும்.
இதெல்லாம் கடந்த 10 நாட்களாக அவன் சுய அலசலில் ஈடுபட்டு இவள் தான் இனி அவன் வாழ்க்கை என முடிவெடுத்து பின்னரே அவன் இந்த அளவுக்கு மாறி இருக்கிறான்.
அவள் எதற்காக இதை செய்கிறாள் இப்படி இருக்கிறாள் என்று யோசித்து அவனுக்கு கிடைத்த விடை அவன் மேல் வைத்த அவளது அளவு கடந்த அன்பு தான் என்பது புரிப்பட எல்லாம் சுகமாக நடந்தது.
Currently viewing this thread 1 guest.
