நெஞ்சமெல்லாம் 28
அத்தியாயம் - 28
அங்கு வீட்டிற்கு தேவையான பொருட்கள் எல்லாம் அடங்கி இருக்க அதுவும் ஒரு அறையை எவ்வாறு செட் செய்ய வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இணங்க அங்கு எல்லாம் செட் செய்து வைக்கப்பட்டிருந்தது. அதையெல்லாம் பார்த்து வாயைப் பிளந்துக் கொண்டே வந்துக் கொண்டிருந்தாள்.
கே.கேவும் அவளை அழைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக சுற்றி காட்டிக்கொண்டே துருவனின் அறைக்கு எந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் செட் எடுக்கலாம் என பார்த்துக்கொண்டே வர அவளோ தூரத்தில் தெரிந்த ஒரு ஆளுயர கண்ணாடியை பார்த்தாள்.
அது அவளுக்கு பிடித்திருக்க அதை நோக்கிச் சென்றாள் காவ்யா.அது மர வேலைப்பாடுகளுடன் அழகாக இருந்தது அது காவ்யாவின் கண்ணை பறிக்கவும் செய்தது.
அந்த திசையை நோக்கி அவள் செல்ல கே.கேவும் போனை காதில் வைத்துக் கொண்டு யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். அவள் அந்த கண்ணாடியை தொட்டு பார்த்துக் கொண்டிருக்க கண்ணாடியில் அவள் முகம் தெரிந்தது. அதைப்பார்த்து பளிச்சென சிரித்து பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே அவளுக்குப் பின்னால் நிவேதாவின் முகமும் தெரிந்தது.
அது நிவேதா தானா என சற்றென்று திரும்பி பார்க்க ஆம் அவளேதான் காவ்யாவை இந்த நொடி பார்ப்பாள் என எதிர்பார்க்கவில்லை நிவேதா. காலையில் தான் துருவனிடம் முயற்சி செய்து தோற்றுப் போய் இங்கு வந்து இருக்க அடுத்து காவ்யாவை பார்க்கவும் அவள் முகம் முதலில் பிரகாசித்தது.
காவ்யாவுக்கும் அவளை பார்த்தது இலேசான அதிர்ச்சி தான் என்றாலும் மெல்லிய சிரிப்பை உதிர்த்து, "நிவேதா அக்கா நல்லா இருக்கீங்களா??" என்று வினவ, "நான் நல்லா இருக்கேன் காவ்யா உன்னை நான் இங்கே சந்திப்பேன்னு எதிர்பார்க்கவே இல்லை" என்று கூற பதிலுக்கு காவ்யாவும், "நானும் உங்களை இங்கே சந்திப்பேன்னு நினைக்கல அக்கா வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா??" என்று பொதுவான கேள்விகளை கேட்டாள்.
அதற்கான பதிலையும் பெற்றுக்கொண்டு தான் இப்பொழுது மேற்படிப்பு எல்லாம் முடிந்து கதிருக்கு உதவுவதாகவும் மேலும் அவர்களது குடும்ப தொழிலை விரிவாக்க சில நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் அதற்காக தற்போது இங்கு வந்து இருப்பதாகவும் கூறிக் கொண்டிருக்கும் பொழுது தான் நிவேதா தான் மீண்டும் இவளிடமும் ஆரம்பித்தாள்...
"நீ துருவனை கல்யாணம் செய்துக்கிட்ட அப்படின்னு கேள்விப்பட்டேன். துருவனை இன்னைக்கு கூட பார்த்தேன் ஆனால் அவன் என்னை புரிந்துக் கொள்ளவே இல்லை.அவனுக்கு ஏன் புரியவே மாட்டேங்குது அன்னைக்கு நான் எவ்வளவு வேதனையை அனுபவித்தேன் நீ நேர்ல பார்த்த தானே??" என்று கேட்டாள்.
அதைக்கேட்ட காவ்யா, "அதை பத்தி எல்லாம் ஏன் அக்கா பேசிக்கிட்டு இருக்கீங்க நடந்து முடிந்த விஷயத்தை அப்படியே விட்டு விடலாம் தானே??" என்றாள்.
"நீ சொல்றது உண்மைதான் காவ்யா ஆனால் என்னால அவன் கிட்ட மன்னிப்பு கேட்காமல் இருக்க முடியல.நடந்தது அவனுக்கும் புரியணும்ல காவ்யா" என்று கூற அதை கேட்ட அவளோ, "அவர் புரிஞ்சு நீங்க இப்போ என்ன பண்ண போறீங்க அக்கா?? அவர் உங்களை மன்னிப்பார்னு எனக்கு தோணல அவர் எதற்காக உங்களை மன்னிக்கணும் அக்கா??" என்று கேட்டாள் காவ்யா.
"என்ன காவ்யா இப்படி சொல்லிட்ட. அவனை நான் நினைக்காத நாளே இல்லை தெரியுமா அன்னைக்கு இருந்த நிலைமை என்னை அப்படி செய்ய வைத்தது என்னமோ நான் கொலை குற்றம் செஞ்சது போல பேசிட்டு போறான் எனக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு தெரியுமா??" என்று அவளாவது தன் மனதை புரிந்துக் கொள்ள மாட்டாளா என எண்ணி நிவேதா கண்களில் நீர் துளிர்க்க கேட்டாள்.
அதைக் கண்டு காவ்யா, "அக்கா நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கவா? உங்கள பத்தி மட்டுமே நீங்க யோசிச்சிட்டு இருக்கீங்களே நீங்க ஏன் அக்கா என்னோட மாமா பத்தி யோசிக்கவே இல்ல? என் மாமா சொல்றதுல கோபப்பட்டதுல என்ன தப்பு இருக்கு சொல்லுங்க பார்ப்போம். இப்போ நீங்க நல்லா இருக்கீங்க நல்லா இருங்க. என் மாமா நல்லா இல்ல அக்கா அது உங்களுக்கு தெரியுமா?? நீங்க அவரை காதலிச்சுட்டு உங்க குடும்பத்துக்காக விட்டுட்டு போய் இருக்கீங்க. உங்க அளவில் நீங்கள் யோசித்தது சரி.
என் மாமா அளவில் நீங்க செஞ்சது தப்பு மிகப் பெரிய தப்பு. அதுக்கான கோபம் என் மாமா கிட்ட இருக்கும் தானே நீங்க ஒரே இரவில் உங்க மனசை மாத்திக்கிட்டு கதிர் அண்ணாவை கல்யாணம் செய்துக்கிட்டீங்க. ஆனால் என் மாமா எவ்வளவு சங்கடப்பட்டார்ன்னு நேரில் பார்த்த எனக்கு மட்டும்தான் தெரியும். என்னமோ சொல்றீங்க உங்களுக்கு மட்டும்தான் வலி இருக்கிற மாதிரி ஏன் என் மாமாக்கு வலி இருக்காது அன்னைக்கு என் மாமா தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும்தான் தெரியும். உங்களுக்கு நீங்க செய்தது சரி அப்படின்னா என் மாமா இப்போ உங்கள ஒதுக்குவதும் சரிதான்.
தயவு செஞ்சு இதை பத்தி பேசாதீங்க வேற ஏதாவது பேசுங்க எனக்குமே நீங்க செய்தது நம்பிக்கை துரோகமா தான் தோணுச்சு. எனக்கு அந்த வயசுல அப்படி தோணுச்சு அப்படினா என் மாமாவுக்கு தோன்றுவதில் தவறில்லையே??" என்று வினவ இதையெல்லாம் தூரத்திலிருந்து அவளுடன் வந்து கேட்டுக்கொண்டிருந்த நரேந்திரன் காவ்யாவிடம் வந்து, "உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு அவனுக்கு போய் வக்காலத்து வாங்கிட்டு இருக்க? நானும் உன் கல்யாணம் நடக்கும் பொழுது உன் அப்பாகிட்ட சொன்னேன். ஆனால் அந்த மனுஷன் உன்னை இவன் தலையில கட்டி வச்சுட்டாரு அப்படின்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்.
நீ அவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு இருக்க ஓ காதலிச்ச பொண்ணு விட்டுட்டு வேற கல்யாணம் குடும்பத்துக்காக செய்துக்கிட்டா மத்த பொண்ணுங்க கூட பொறுக்கித்தனம் பண்றதுதான் வருத்தப்பட்டு இருக்கிறதா சொல்லு காவ்யா, இப்படித்தான் செய்வாங்களா இவனை போய் நல்லவன்னு சொல்லிட்டு இருக்க உன் புருஷன் ஒரு நாளைக்கு ஒரு பொண்ணு கூட இருப்பான் தெரியுமா? எப்படியோ இவங்க தப்புச்சுட்டாங்க அப்படின்னு நான் சந்தோஷம்தான் படறேன் இப்போ அவங்க நிம்மதியா இருக்காங்க" என்று நரேந்திரன் நிவேதாவுக்கு துணையாக பேசினான்.
அதைக்கேட்ட அவளோ நரேந்திரனை பார்த்து முறைத்து, "அவங்க நல்லா இருக்க வேண்டாம்னு என் மாமாவும் நானும் நினைக்கலையே. அவங்களும் நல்லா இருக்கட்டும்னு தானே நாங்க சொல்றோம். எங்க கிட்ட வந்து நியாயம் பேசிட்டு இருக்க வேண்டாம்னு தானே நாங்க சொல்லிட்டு இருக்கோம்.
அப்புறம் என் மாமா எப்படி வாழணும்னு அவருக்கு தோணுதோ அப்படி வாழ்வார் அதைப்பத்தி உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம் நரேந்திரன் அண்ணா.அவர் ஒன்னும் ரோட்டுல போற பொண்ணுங்க கையை பிடிச்சு தவறா நடக்கலையே. அப்படி செய்யவும் மாட்டார் என்னமோ ஊர்ல நடக்காததை செய்தது போல குதிச்சிட்டு இருக்கீங்க?? நான் ஆசைப்பட்டு தான் என் அப்பாவும் என் மாமாவும் எனக்கு என் மாமாவை கல்யாணம் செய்து வைச்சிருக்காங்க அவங்க அப்படி கல்யாணம் செய்து வைக்கல அப்படினாலும் நானே என் மாமாவை கட்டி இருப்பேன்.
என் மாமா என்ன செய்கிறார் ஏது செய்றாருனு தெரிஞ்சு தான் நான் கல்யாணம் செய்து இருக்கேன். அதனால என் மாமாவை பத்தி பேசற வேலை யாருக்கும் வேண்டாம் புரியுதா? அதற்கான அருகதையும் உங்க யாருக்கும் கிடையாது" என்று கூற இவள் பேசுவதை எல்லாம் போனை பிடித்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தான் கே.கே.
அப்படியே போன் மூலம் தன் நண்பன் துருவனை திட்டுவதற்காக அழைத்த கே.கே துருவனின் மனைவி துருவனுக்கு மற்றவர்களிடம் சண்டை போடுவதை கேட்கவும் வைக்க அவள் பேசுவதை எல்லாம் ஒன்றுவிடாமல் கேட்டான் துருவன்...
மந்தாரம் தெளியும்...
