நெஞ்சமெல்லாம் 26
அத்தியாயம் - 26
சிறு பெண் என்று இப்போது அவளை எண்ணி விட முடியாதே எப்படி எண்ணுவாய் அது தான் அவளுடன் ஒரு நாள் என்றாலும் வாழ்ந்து விட்டாயே என மூளை அவனை கடுப்படிக்க அவளோ அவன் முன்னே குனிந்து அந்த கண்ணாடி துகள்களை எல்லாம் பொறுக்கிக் கொண்டு இருக்க அவன் காலில் குத்தி விட கூடாது என சுத்தம் செய்தவளின் கையில் பதமாக கண்ணாடி துகள்கள் ஏறி விட அவளோ "ஆ... ஆ!" என்று அலறினாள்.
அதை கண்ட அவனோ ஓடி வந்து, "பார்த்து செய்ய கூடாதா உன்னை யார் இதை செய்ய சொன்னது நாசம் பண்ணின எனக்கு சுத்தம் செய்ய தெரியாதா??" என கூறி வேகமாக அவளை அழைத்துச் சென்று கையை கழுவ சொல்ல அவளோ அலற அவனுக்கு அவளது அழுகை பதற்றத்தை கொடுக்க,
"கொஞ்சம் பொறுமையா இரு டி சின்ன காயம் தான்" என கூறி அவனுடைய முதலுதவி பாக்ஸை எடுத்து மருந்து தடவ போக, அவளோ அவனை பார்த்து, "மாமா வேண்டாம் மாமா மஞ்ச பொடி வைச்சா சரியா போயிடும் மாமா இதுக்கு போய் மருந்து வைப்பாங்களா??" என்றாள்.
அவனோ அவள் பேசுவதை கேட்காமல் அவளை பார்த்து முறைக்க அவளோ "முறைக்காதீங்க மாமா நாங்க எல்லாம் காபி பொடி மஞ்சள் பொடி தான் வைப்போம்" என்று சற்று முன் எதுவுமே நடவாதது போல அவள் கூற அதை கேட்ட அவனோ, "அப்படியே கொஞ்சம் மிளகாய்தூள், பாலும் ஊத்து" என்று கடிந்துக் கொண்டே அவள் கையில் மிக மென்மையாக அவளுக்கு வலிக்காதது போல மருந்து தடவி பேண்டேஜ் ஒட்டி விட அதை பார்த்த அவளோ, "ஐயோ மாமா போய் கையை கழுவிட்டு வாங்க நான் வெறும் துணியை தான் கட்டி விட்டேன் இது போல மருந்து எல்லாம் போடல" என்றாள்.
அவள் கூறியதை பார்த்து அவனது முகம் மில்லி மீட்டர் சைஸில் விரிந்தது.
அதை பார்த்தவளோ "உங்களுக்கு இன்னும் என் மேல உள்ள பாசம் அப்படியே தான் மாமா இருக்கு"
என்றாள்.
அவள் கூறியதும் அவனோ அவளை பார்த்து முறைத்து, "பாசமும் இல்லை வேஷமும் இல்லை கண்டதையும் நினைச்சுட்டு இருக்காத ஒரு காயத்துக்கு மருந்து போட பாசம் வேணும்னு இல்லை மனித நேயம் இருந்தா கூட போதும்" என்று கூறி விட்டு அந்த அறையை விட்டு அவன் செல்ல எத்தனிக்கும் முன் அவளோ, "நீங்க என்ன சொன்னாலும் உங்களுக்கு என்னை பிடிக்கும்னு எனக்கு தெரியும். உங்களால என்னை உங்க மனைவியா ஏத்துக்க முடியாது. ஆனால் உங்க அஞ்சுமாவா உங்களால ஏத்துக்க முடியும் மாமா" என்றாள்.
அவனோ பதிலேதும் கூறாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தான். ஒவ்வொரு முறை அவள் இது போன்ற செயலால் தான் இன்னும் சிறு பெண் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டு இருந்தாள்.
மறுநாள் எப்பொழுதும் போல விடிந்தது. அவனும் என்னென்னமோ யோசித்து அவன் எப்பொழுதும் தீர்மானிப்பது போல என் வாழ்க்கை என் இஷ்டம் இடையில் யார் வந்தாலும் எனக்கு கவலை இல்லை இதுபோல சிம்பதிகளில் நான் வீழ்ந்து விட மாட்டேன் என்ற முடிவுடன் அவனுக்காக சூடாக ஆவி பறக்கும் காலை உணவை தயார் செய்து வைத்திருந்த மனைவியை கண்டுகொள்ளாமல் அவள் மாமா மாமா என்று அழைக்கும் அழைப்பை காது கொடுத்துக் கேட்காமல் அலுவலகம் சென்றான்...
ஆம் அவனை பொறுத்தவரை நேற்று அவள் காயத்திற்கு மருந்து இட்டது ஏதோ ஒரு மனிதாபிமான செயல் என அவன் நினைக்க அவளோ அதை பாசம் என பெயர் வைக்க அதனால் இனி இது போன்ற பேச்சுக்கு செவி சாய்க்க கூடாது என அவன் எண்ணி அவள் பேச்சை காது கொடுத்து கேட்காமல் சென்றான்.
அங்கு அவன் அந்த அலுவலகத்தை அடையும் பொழுது அலுவலகத்திற்கு முன்னாலேயே நின்றுக் கொண்டிருந்தாள் நிவேதா.
அவளுக்கு அவனை காண வேண்டும் அவனிடம் பேச வேண்டும் என துடித்து இரவோடு இரவாக அவன் எங்கே வேலை செய்கிறான் என நரேந்திரனிடம் கேட்டு வைத்துக்கொண்டு அவள் மறுநாள் காலை அவன் வரும் நேரம் அவனுக்காக அலுவலக வாயிலிலேயே காத்திருந்தாள்.
அவனும் ஏதேதோ எண்ணிக்கொண்டு காரிலிருந்து இறங்கியவன் அலுவலகத்தை நோக்கி வர அங்கே அவள் நின்றுக் கொண்டிருப்பதை பார்த்ததும் அவனுக்கு ஆத்திரம் தாளவில்லை. என்ன திமிர் இருந்தால் இவள் இங்கு வந்து நிற்பாள் என்று எண்ணிய துருவன் அவளை கண்டுகொள்ளாமல் அங்கே ஒருத்தி இருக்கிறாள் என்பதை கூட கருத்தில் கொள்ளாமல் அவன் செல்ல முனைய அவளோ அவனை பார்த்து, "துருவன் எனக்கு உன்கிட்ட பேசணும் ப்ளீஸ் ஒரு அஞ்சு நிமிஷம்" என்று கேட்டாள்.
"என்ன பேசணும் உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு??" சூடாக அவன் நிற்க, "தயவு செஞ்சு நான் சொல்றதை கேளு எனக்கு ஒரு அஞ்சு நிமிஷம் உன் கூட தனியா பேசணும் இல்லேனா நான் செத்துடுவேன்" என்று அவள் கூற
"அப்போ செத்து போ இன்னும் நீ பேசுற இந்த ட்ராமா எல்லாம் கேட்டுட்டு இருக்க நான் ஒன்னும் முட்டாள் துருவன் கிடையாது புரியுதா இங்க வச்சு சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்காத??" என்று கடினமாக கூறினான்.
"நீ என் மேல கோவமா இருக்கேன்னு எனக்கு தெரியும் தயவு செஞ்சு நான் சொல்றதை கேளு" என்று கூற அவனுக்கும் உள்ளுக்குள் ஆத்திரம் சுழன்றுக் கொண்டுதான் இருந்தது. இவளை இப்படியே விட்டுவிட கூடாது என்று மட்டும் அவன் எண்ணினான்.
அதற்காக இவளை வைத்து செய்தே ஆகவேண்டும் என முடிவு செய்தவன் அவனது அலுவலகத்தின் அருகே உள்ள காபி ஷாப்புக்கு இருவரும் சென்றனர். அங்கே அமர்ந்து அவன் அவனுக்கு தேவையான அவனுக்கு மட்டும் தேவையான ஒரு காப்பியை ஆர்டர் செய்தான். அவள் அதைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையுடன் "எப்படி இருக்க துருவன்?? உனக்கு என் மேல கோபம் இருக்கும்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா நான் உன்னை வேணும்னு ஏமாத்தல எனக்கு அந்த சூழலில் என்ன செய்யணும்னு தெரியல செத்து போகலாம்னுதான் நினைச்சேன்" என்று அவள் கூற
அதைக்கேட்ட அவனோ, "நீ செத்துப் போயிருந்தால் கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன் புரியுதா??" என்றான்.
"எனக்கு என்னோட காதலா இல்லை என்னோட குடும்பமானு யோசிக்கும்போது என்னோட குடும்பம் தான் முக்கியம்னு பட்டுச்சு துருவன் அதுனால தான்" என்று கூற அவனோ அவளை முறைத்தபடியே அமர்ந்திருந்தான்.
"இப்ப பாரு என்னோட அம்மா என் குடும்பம் எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்காங்க. என் மாமா என்னை நல்லா பார்த்துக்கிறார்" என்று அவள் குடும்ப பெருமைகளை அவள் கூறிக்கொண்டு இருக்க அதைக் கேட்ட அவனுக்கு காதில் புகை வர
"இப்ப நீ முடிவா என்னதான் சொல்ல வர நீ தப்பு பண்ணல ஆனா இப்படி எல்லாம் நடந்துருச்சு அதனால தான் நான் வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதனால தான் நான் இப்ப நல்லா இருக்கேன் அதனால தான் நான் வந்து உன்னை விட்டுட்டு போனேன். அதனால தான் நான் வந்து அப்படி நடக்க வேண்டியதா தான் போயிடுச்சு. ஆனால் என் மேல எந்த தப்பும் இல்லை இப்படி எல்லாம் சொல்ல போறியா??" என்று ஆத்திரத்தோடு கேட்க அவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தாள் நிவேதா...
மந்தாரம் தெளியும்...
