நெஞ்சமெல்லாம் 21
மந்தாரம் : 21
ஆம் நிவேதாவின் ஊரைத் தேடி வீட்டை தேடி அலைந்து வந்தவனுக்கு நிவேதா அவன் கண்ணில் பட்டாளோ இல்லையோ காவ்யாவும் அவளது பாட்டியும் கண்ணில் பட்டார்கள். அவர்களை கண்டதும் இவன் வசமாக மாட்டிக் கொண்டோமே என மனதுக்குள் நினைத்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் அவர்களிடம் சென்று, "பாட்டி நல்லா இருக்கீங்களா??" என்று கேட்டான்.
அவனை ஏற இறங்க பார்த்த பாட்டியோ "யார் அது?" என்று கேட்க "கிழவி உனக்கு இது யாருன்னு தெரியலையா? இது நம்ம வணங்காமுடி மாமா பையன் துருவன்" என்று அறிமுகப்படுத்தினாள் 11 அல்லது பன்னிரண்டு வயதான காவ்யா.
அவளைக் கண்டதும் அவளது கன்னத்தை லேசாக தட்டிக் கொடுத்த துருவன், "பரவாயில்லையே என்னை இன்னும் ஞாபகம் வைத்து இருக்கியே??" என்றான்.
அவளோ, "உங்களை போய் மறக்க முடியுமா மாமா?? எத்தனை சாக்லேட் வாங்கிட்டு வந்து இருக்கீங்க??" என்க அதைக்கேட்ட அவனும் சிரித்தான். மானசீகமாக தன் கையில் தற்பொழுது ஒன்றும் இல்லையே என்பதை குறித்தும் கொண்டான்.அவளுக்கு ஏதாவது வாங்கி கொடுத்து விட்டே இங்கே இருந்து செல்ல வேண்டும் என எண்ணிக் கொண்டான் துருவன்.
"ஆமாம் நீங்க தான் இங்க எல்லாம் வர மாட்டீங்களே இந்த ஊருக்கு வந்து ரெண்டு வருஷம் ஆச்சு எங்களை எல்லாம் பார்க்க மாட்டேன்னு இருந்தவங்க இப்போ இங்கே எதுக்காக வந்து இருக்கீங்க??" என்று பாட்டி சுப்பம்மாள் கேட்க வேண்டிய கேள்வியை காவ்யா பெரிய மனுஷி போல வினவினாள்.
அதைக்கேட்ட அவனோ தலையை சொரிந்துக் கொண்டு "அது வந்து உங்களையெல்லாம் பார்த்துட்டு போலாம்னு தான் வந்தேன்" என்று வாய் கூசாமல் பொய்யுரைத்தான் துருவன்.
பாட்டி சந்தேகமாக பார்க்க அவனும், "என்ன பாட்டி அப்படி பார்க்கறீங்க??" என்று கேள்வி கேட்க கிழவி முறைத்துக்கொண்டு, "உனக்கெல்லாம் இங்கே வழி தெரியாது அதனாலதான் அப்படி பார்க்கிறேன். உங்க அப்பன் இங்கே கொண்டுவந்து உன்னை தள்ளிவிட்டு அவன் பாட்டுக்கு போயிட்டான். நீ இங்கே இருக்கிற மனுஷங்களை மதிக்காமல் பார்க்காம இருக்க?? உன் அப்பனுக்கு அப்படி என்னடா வைராக்கியம் இங்கே வராமல் இருக்கான்.
அவ்வளவு பெரிய மனுஷன் ஆகிட்டானா அவன் சரியா ஒண்ணுக்கு அடிக்க தெரியாமல் இருந்த பையன். அவன் கூப்பிட்டா நான் இதை சொன்னேன்னு சொல்லு வளர்த்த என்னையே மதிக்காமல் இருக்கானுங்க" என்று வாசலில் வைத்தே சண்டை போட்டுக் கொண்டிருக்க இவனுக்கு ஏன் தான் வந்தோம் என்று இருந்தது.
அவன் தந்தை துருவன் செய்த செயல்களில் மன உளைச்சலில் இருக்கிறார் என அவனால் கூற இயலாதே அதனால் வாயை மூடிக் கொண்டு நின்றுக் கொண்டான் துருவன்.
அந்த சமயம் பார்த்து தான் கீதா சாரங்கபாணி மற்றும் அவரது மனைவி தன் தாயைப் பார்க்க வீட்டிற்கு வந்தனர். அவர்களுக்கும் இவனது வரவு அதிசயமாக இருக்க கீதாவின் பார்வை மட்டும் அவன் மீது ஒரு மாதிரியாக விழுந்தது. அவளுக்கு அவனது அழகு மிகவும் பிடித்திருந்தது.
துருவனுக்கோ அந்த சூழ்நிலை மிகுந்த கடுப்பை கொடுக்க மனதுக்குள் 'அடியே நிவேதா நீ இருக்க வேற ஊரே கிடைக்கலையா இந்த ஊர் தான் கிடைத்ததா??' என்று பேசினான். அது அவளுக்கு கேட்டதோ என்னவோ அவளும் அவளது அம்மாவும் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் துருவனை சந்தித்தனர்.
துருவனை கண்டதும் அவளது கை கால்கள் நடுங்கியது. அவளிடம் நான் வருவேன் என்று கூறியிருந்தான் தான். ஆனால் இப்படி வந்து நிற்பான் என அவள் எதிர்பார்க்கவில்லை என அவள் முகம் கூற தன் தாய்க்குப் பின்னால் இவர்கள் யாரையுமே தெரியாது என்பது போல நின்றுக் கொண்டாள் நிவேதா.
நிவேதாவை தேடி வந்தவனுக்கு நிவேதாவை பார்க்கும் பாக்கியம் கிடைக்க இவர்கள் முன்பு அவனாலும் தைரியமாக பேச முடியவில்லை. பேச முயன்றாலும் நிவேதா விட்டு இருக்க மாட்டாள் அது வேறு விஷயம்.
அதிலும் காவ்யா நிவேதாவை பார்த்து "நிவேதா அக்கா பார்த்தீங்களா இதுதான் என்னோட மாமா லண்டன்ல இருந்தாரு. இப்போ இங்க வந்து படிக்கிறாங்க மாமாக்கு அங்கே படிச்சு போர் அடிச்சு போச்சு. அதான் இங்கே வந்து இருக்காங்க எப்படி எங்க மாமா சினிமா ஹீரோ மாதிரி இல்லை" என்று அவள் அறிமுகம் செய்து வைக்க அவனும் நிவேதாவின் அம்மாவை பார்த்து சிரித்தான்.
அவளைப் பார்த்து சிறிய கண் சிமிட்டல் உடன் சிரித்து வைக்க அவளோ தன் தாய் முன்னே நிமிர்ந்து பார்த்தால் தானே குனிந்த தலையோடு நின்றுக் கொண்டாள் நிவேதா.
அதில் காவ்யாவின் அக்கா கீதாவின் பார்வை துருவனின் மீதே இருக்க அவள் அவனைக் கண்டு வெட்கப்பட்டு சிரித்தாள். அதை எல்லாம் அவன் எங்கே பார்க்கிறான் அவன் பார்வையோ நிவேதாவின் மீதே இருக்க அதை கண்டதும் இவளுக்கு காதில் புகை வர துவங்கியது. எப்போதும் கீதாவுக்கு தாழ்வுமனப்பான்மை சற்று அதிகம் அழகுக்கும் அறிவுக்கும் குணத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை போட்டு தன்னைத்தானே குழப்பிக் கொள்வாள்.
அப்படிப்பட்ட குணத்தை உடைய கீதாவிற்கு அவனைக் கண்டதும் ஆசை வந்தது என்னவோ உண்மை தான். ஆனால் அவன் பார்வை நிவேதாவின் பக்கம் செல்வதை கண்டவள் முகம் அஷ்ட கோணலாக மாறியது. அதனால் ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொண்டு பின் நின்றுக் கொள்ள நிவேதாவின் அம்மாவும் மரியாதை நிமித்தமாக ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு பின் சென்றனர்.
இவ்வளவு எளிதாக இவளை காண இயலும் என அவன் நினைக்கவில்லை. அதிலும் துறு துறு சிறு பெண்ணான காவ்யாவை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த வீட்டிலேயே அவளைத்தான் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவனது அத்தையும் மாமாவும் ஒரே ஒரு நாள் தங்கியிருந்து பின் கீதாவுடன் மறுநாள் சென்றுவிட்டனர். பாட்டி சுப்பு இவனை எந்த சமயமும் சந்தேக கண்ணோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரது கண்ணில் அகப்படாமல் நிவேதாவை காண செல்வது என்பது இவனுக்கு அரிதான காரியமாக இருந்தது. மேலும் சுப்பு வயதுக்கு வந்த ஆண்மகனை பேர மகனாக இருந்தாலும் வீட்டில் தங்க வைக்க அனுமதிக்க மாட்டார்.
ஒரு இரவு அல்லது இரண்டு நாட்கள் அதற்கு மேல் அவன் இங்க இருக்கக் கூடாது என்று கூறியிருக்க வணங்காமுடிக்கு தன் அத்தையின் குணம் தெரிந்தாலும் மகன் அவர்கள் வீட்டிற்குச் சென்று இருக்கிறானே என்ற சந்தோஷத்தில் மேலும் தான் பெரிய அளவில் அவர்களுடன் உரையாடவில்லை என்றாலும் மகன் அவர்களுடன் இணைந்து இருப்பது அவருக்கு சந்தோஷத்தை கொடுத்தது.
மேலும் எல்லோரிடமும் இணங்கி இருப்பது அவருக்கு மகிழ்ச்சியை தான் கொடுத்தது. அந்த குடும்பத்திலேயே காவ்யா அவள் ஒருத்தியைத் தான் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். சிறுபெண் துறுதுறுவென எதார்த்தமாக வெள்ளந்தியாக சுற்றி திரியும் அவளை அவனுக்கு ரொம்ப பிடிக்கும் படிக்காமல் சுற்றித்திரியும் அவளை அவன் இடையிடையே கண்டிப்பான்.
அப்பொழுதெல்லாம் அவள் "மாமா என்னால படிக்க முடியல சத்தியமா என் தலையில அது ஏற மாட்டேங்குது. நான் என்ன செய்யறது நான் ஸ்கூலுக்கு போறதே இந்த கிழவி தொல்லை வீட்டில இருக்கும் அப்படின்னு சொல்லிட்டு தான் நான் போறேன் நீங்களும் என்னை திட்டிக்கிட்டே இருக்காதீங்க" என்று அவள் கூறுவாள்.
Currently viewing this thread 1 guest.
