நெஞ்சமெல்லாம் 2
அத்தியாயம் - 2
கணவர் சொல்லுக்கு எல்லாம் தலையாட்ட வேண்டியது தான் ஆனால் எல்லாத்துக்கும் தலையாட்டினால் என்ன நடக்கும் என்பதை கண் கூட கண்டு வரும் தாய் தான் கற்பகம்.
அய்யர் "பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ" என்று மீண்டும் குரல் கொடுக்க விடாப்படியாக அவள் கூறிய எந்த மேக்கப்பையும் போட விடாமல் காவ்யாவை அழைத்து வருவதற்குள் கற்பகத்திற்கு போதும் போதும் என்றாகி விட கனகா கூறியது போல மாப்பிள்ளை மட்டும் இல்லை அந்த மண்டபத்தில் இருந்த அனைவரும் பெண்ணை கண்டு மயக்கம் போடாத குறையாக தான் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
கத்தரி பூ வண்ண நிற புடவை அணிந்து தலை நிறைய பூ வைத்து அதில் தலையை தேட தான் வேண்டும் மேக்கப் என்ற பெயரில் ஏதோ செய்திருக்க அங்கு இருப்பவர்கள் எல்லாம் ஒரு மாதிரியாக பார்க்க துருவனோ அவளை கண்டால் கொன்றே போட வேண்டும் திமிர் எடுத்தவள் பார்க்க ஒன்றுமே தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்து கொண்டு என்னை எங்கே கொண்டு வந்து வைத்து விட்டாள் பார் என எண்ணிக் கொண்டிருந்தவன் அய்யர் கூறிய மந்திரங்களை ஜெபித்துக் கொண்டே அவள் வரும் அரவம் கேட்டு அவளது முகத்தை கண்டதும் துருவனுக்கு தூக்கி வாரி போட்டது...
அவள் மேக்கப் எதுவும் செய்யாமல் மிக சாதாரணமாக இருந்தாலே நன்றாக இருக்கும் இது யார் பார்த்த வேலை என்று தான் அவனுக்கு தோன்றியது.
அவளை பார்த்ததும் முறைக்க வேண்டும் என எண்ணியவனுக்கு அவளது உடையை பார்த்ததும் தலை சுற்ற தன் தாய் மற்றும் தங்கையை ஓரக்கண்ணால் பார்வையிட்டான் துருவன். கிட்டத்தட்ட முறைத்தான் என்றே கூறலாம்.
என்ன இதெல்லாம் என்பது போல பார்க்க அவர்களுக்கும் அதிர்ச்சி தான் இருந்தாலும் இதை வைத்து அவன் திருமணத்தை நிறுத்தி விட கூடாது என்பது அவர்களுக்கு இந்த நொடி வேண்டுதலாக இருக்க அவனது சுடும் பார்வையை எதிர் கொண்டும் காணாதது போல நின்றுக் கொண்டிருந்தனர்.
அவளை மேடைக்கு அழைத்துக் கொண்டு வர திருமணத்துக்கு வந்திருந்த அவனது நண்பர்களில் ஓரிருவர் துருவனுக்கு பயந்து கொடுப்புக்குள் சிரிப்பது நன்றாக அவனுக்கு விளங்க மிகுந்த அவமானமாக இருக்க அவனுக்கு தன்னருகில் வந்து அவள் அமரவும் அவளை ஓரக்கண்ணால் பார்க்க காவ்யாவுக்கு அவனது அருகாமையே ஒரு வித கிளுகிளுப்பை கொடுக்க, "என்ன கருமத்தை டி தேய்ச்சிட்டு வந்து இருக்க?" என்று ஆரம்பத்திலே காய்ந்தான் துருவன்.
"ஏன் மாமா நல்லா இல்லையா?" என்க
"வெள்ளை அடிச்ச மாதிரி இருக்கு நான் உனக்கு தாலி கட்ட இன்னும் இரண்டு நிமிஷம் இருக்கு அதுக்குள்ள இந்த கருமத்தை எல்லாம் துடைச்சு இருக்க இல்லை நான் எழுந்து போய்ட்டே இருப்பேன்" என்று கூறியவன் அவனது தங்கையை பார்த்து கண்களாலேயே அழைக்க அவளும் வேகமாக ஓடி வந்தவள் தன் அண்ணனின் பார்வையில் எல்லாம் புரிந்துக் கொண்டு அவளது முகத்தில் அதிகமாக படிந்து இருப்பதை எல்லாம் துடைக்க காவ்யாவோ, "அக்கா கொஞ்சமா துடைங்க அக்கா" என்று துருவனுக்கு கேட்காத குரலில் கூற மென்மையாக சிரித்த நித்யாவோ அவள் முகத்தில் படிந்து இருக்கும் எக்ஸ்ட்ரா புட்டியை எல்லாம் துடைத்து எடுத்த பின் தான் அவள் முகம் பளிச்சென்று ஆக அதை கண்டவனின் முகம் அப்போது தான் தெளிந்தது...
மேக்கப் போய் விட்டதே என எண்ணி வருந்தினாலும், "இப்போ போதுமா மாமா?" என்க அவனோ முறைத்தான்.
'எதுக்கு இப்போ முறைக்கிறாரு கேட்க தானே செய்தேன்??' என்று எண்ணியவளோ,
"ஏன் மாமா நான் உங்களை விட அழகா தெரிய கூடாதுன்னு தானே நீங்க என்னோட மேக்கப்பை கலைக்க சொன்னீங்க இப்போ என் அழகுக்கு நீங்க மேட்சா இருக்கீங்களா மாமா?" என்க அதை கேட்டவனுக்கு அப்படியே இவளை அப்படியே இந்த ஹோம குண்டத்துக்குள் தள்ளி விட்டால் என்ன என்று தோன்றியது.
பிறகு "கெட்டி மேளம் கெட்டி மேளம்" என்று ஐயர் கூறவும் துருவனின் அப்பா வணங்காமுடி தாலி எடுத்து கொடுக்க அதை வாங்கியவனின் கண்கள் தன் தந்தையை ஒரு நொடி பார்த்தது. அவரும் அவனை வலி நிறைந்த விழியால் கண்டாரோ என எண்ணியவன் நொடி பொழுதில் தன் பார்வையை மாற்றிக் கொண்டான்.
இந்த ஒற்றை மனிதன் தான் அவனின் வாழ்க்கையில் நிகழும் அனைத்து பரிமாணங்களை கண்ட ஒருவர் இப்போதும் அவனை இந்த இன்னலில் தன்னுடைய உடல்நலனை காரணம் காட்டி இந்த திருமணத்தை நடத்துகிறார் என அறிந்தும் அவர் மீது அவனுக்கு இருக்கும் கோபத்தை விட அவர் மீது அவன் வைத்திருக்கும் அன்பு ஜெயிக்க அமைதியாக தாலியை வாங்கியவனுக்கு தன்னருகே அமர்ந்து இருப்பவளின் மீது தான் அத்தனை ஆத்திரம் வந்தது.
எந்த தைரியத்தில் என்னை திருமணம் செய்து கொள்கிறாள் என்ற ஆத்திரத்தில் மீண்டும் ஒரு முறை அவன் நினைக்க அதையே தான் அந்த கூட்டத்தில் ஒருவன் நினைத்து மணப்பெண்ணின் தந்தையான சாரங்கபாணியின் பின்னால் வந்து நின்றான் நரேன் என்னும் நரேந்திரன்.
சாரங்கபாணியின் வீட்டின் அருகில் இருப்பவன் உறவினனுக்கு என்ன மதிப்பு சாரங்கபாணியிடம் இருக்கிறதோ அதே அளவு அன்பை பெற்றவன் தான் நரேன்.
லண்டனில் வேலை செய்பவன் விடுமுறைக்காக வந்தவனுக்கு இந்த திடீர் திருமணம் அதிர்ச்சி கொடுத்தாலும் மாப்பிள்ளை யார் என்று பார்த்தவனுக்கு அதிர்ச்சி தான் அவனால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
ஒரு பெண்ணின் வாழ்க்கை போகிறதோ என எண்ணி, "ஏங்க மாமா என்ன செய்யறீங்க சின்ன புள்ளைய போய் இவனுக்கு கட்டி கொடுக்கறீங்க??? வேற ஆம்பிளையே கிடைக்கலையா??" என்று வினவ
"ஏனுங்க தம்பி என்ன ஆச்சு??" என்று வினவினார்.
"அட என்னங்க மாமா இவன் என்னதான் உங்க சொந்தமா இருந்தாலும் ஒரு பொம்பளை பொறுக்கி மாமா இவனை நம்பி போய் அந்த சின்னபிள்ளையை கொடுக்கறீங்களே??" என்று கூற இப்படி முகத்தில் அடித்தது போல கூற அதை கேட்ட சாரங்கபாணியின் முகம் கருத்து தான் போனது.
இருந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் நரேன் அவரிடம் வினவ அவரோ, "பையன் நம்ம வணங்காமுடி பையன் அப்படி எல்லாம் இருக்க மாட்டான் பா,அப்படியே இருந்தாலும் அதெல்லாம் கல்யாணம் ஆனா சரியாகிடுவான் பா எல்லாம் மகமாயி பார்த்துப்பா எங்க அம்மாவோட கடைசி ஆசை பா நடத்தாமல் இருக்க முடியாது" என்று அவர் கூற
அவரின் பொறுப்பு இல்லாத பேச்சை பார்த்து அவனுக்கு கோபம் எழுந்தது. அந்த பெண்ணின் வாழ்க்கையையே பிறந்த நொடி முதல் கெடுத்த பெருமை பெற்ற அப்பனான இவரை நன்றாக சேரும்.
மூத்த மகள் மட்டும் நன்றாக படித்து நல்ல நிலையில் திருமணம் செய்து கொடுத்து அருமையான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்க இந்த பெண் மட்டும் இனியும் இந்த காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று கூட தெரியாமல் வெள்ளந்தியாக இருக்கிறாளே என்று அவன் எப்போதும் வருந்தியது உண்டு.
இந்த ஒருத்திக்கு மட்டும் எல்லோரும் சேர்ந்து ஓரவஞ்சனை செய்கிறார்களோ என்ற எண்ணம் அவனுக்கு எப்போதும் தோன்றுவது போல இருக்கும்.
தோன்றுவது என்ன அது தான் உண்மை அப்படி இருக்க இப்போது இப்படிப்பட்ட ஒருத்தனுக்கு இந்த சிறு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க எப்படி தான் மனம் வந்ததோ என்று எண்ணியவனுக்கு இவர்கள் தான் இவளை பெற்றவர்கள் தானோ என அவன் நினைக்க இன்னும் இங்கே இருந்தால் ஏதாவது பேசிக் கொண்டிருப்பான் என எண்ணிய சாரங்கபாணி, "அங்கே போய் உட்கார் பா எல்லோரும் கலந்து எடுத்த முடிவு தான் பா இது" என்று கூற இவனுக்கு இவரை ஓங்கி அடித்தால் என்ன என்று கூட தோன்றியது.
பிறகு காவ்யாவை பார்க்க அவளும் சிரித்த முகமாக தான் இருப்பது போல நரேனுக்கு தோன்ற இவர்களுக்கே சரி என்னும் போது நான் என்ன சொல்வது என்று எண்ணி அவன் அவ்விடத்தை விட்டுச் சென்று விட்டான்.
அதற்குள் அவளது முகத்தை மீண்டும் மீண்டும் நன்றாக துடைத்தும் அவளது கனகா அக்கா அடித்த பெயிண்ட் குறையவில்லை என்றாலும் ஒரு மாதிரியாக நித்யா அவளது முகத்தை வெளி கொணர்ந்து விட அதற்குள் வணங்காமுடி தாலி எடுத்து கொடுக்க அதை வாங்கியவன் இப்போவே இந்த திருமணம் நின்றால் எப்படி இருக்கும் என்று துருவன் நினைக்க அவளோ தன் மாமனை கட்ட போகிறோம் என்ற முனைப்பில் இருக்க...
மண்டபத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருந்த வயதான பெண்மணிக்கு வேண்டி தான் அந்த அவசர திருமணம் நடைபெற அந்த வயதான பெண்மணியோ லொக் லொக் என இரும அதற்குள் அவருக்கு உடல்நிலை நிமிடத்துக்குள் மோசமாகி விட அந்த மண்டபம் முழுவதும் பதற்றம் தொற்றிக் கொள்ள தயாராக வைத்திருந்த மருத்துவர் அவரை பரிசோதித்து அவருக்கு ஆக்சிஜன் பொறுத்தி அந்த பெரியவரின் மூச்சு திணறலை கட்டுக்குள் கொண்டு வந்தார்...
அங்கே கூடி இருந்த அனைவருக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டு திருமணத்தை கூட விட்டுவிட்டு வணங்காமுடி மற்றும் சாரங்கபாணி இறங்க தாலியை கையில் பிடித்துக் கொண்டு துருவன் திருமணம் நின்று விடுமா என எதிர்பார்க்க அவன் அருகே அமர்ந்து இருந்த அவளோ, "ஐயோ கிழவி இப்போவே போய் சேர்ந்து தொலைஞ்சிடாதே மாமா தாலி மட்டும் கட்டிடட்டும்" என மனதுக்குள் பேசுகிறேன் என வாய் வழியாக கூற அதை எவன் கேட்க கூடாதே அவன் கேட்டு விட தாலியோடு அவன் அவளை பார்க்க...
அவளோ ஐயோ தன் குட்டு வெளிப்பட்டு விட்டதே என்று தன் நாக்கை கடித்துக் கொண்டாள்.அவனோ அவளை பார்த்தும் அவள் கூறியதை கேட்டும் ஏகத்துக்கும் எரிச்சல் அடைய அவனது மனசாட்சியோ இதற்கே இப்படி என்றால் எப்படி என எண்ணி கொக்கரித்தது.
மந்தாரம் தெளியும்...
