நெஞ்சமெல்லாம் 19
மந்தாரம் : 19
அழகே உருவாக அழகுப் பதுமை போல பச்சையும் சிவப்பும் கலந்த சுடிதாரில் தனது சுருள் சுருளாக உள்ள சுருண்ட முடியை கிளிப்க்குள் அடக்கி மெலிதான பொட்டு வைத்து யாராவது தன்னை ராக் செய்து விடுவார்களோ என பயந்து பயந்து அந்த கல்லூரிக்குள் நுழைந்தாள் அவள்...
அவளது பயம் கலந்த பார்வை அவனை ஈர்த்தது என்றே கூறலாம்... அவள் கல்லூரியில் கால் எடுத்து வைக்கும் போதே அவன் கண்டு கொண்டான் என்று கூற வேண்டும்.
இது போன்ற ஒரு பெண்ணை அவன் இதுவரை கண்டதில்லை எனக் கூறலாம் அத்தனை அழகையும் ஒருங்கே பெற்று இருந்தாள் அவள்.
அது இல்லை இந்த இரண்டு வருட காலம் கண் திறந்து எந்த பெண்ணையும் நிமிர்ந்து பார்க்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்ததால் தானோ என்னவோ முதன்முதலாக இவளை பார்க்கும் பொழுது இவள் அழகாக தெரிகிறாளோ என தெரியவில்லை...
அவன் கண்ணுக்கு அவள் அழகாக தெரிந்தாள்...மேலும் அவளிடம் ஒரு கண்ணியமும் அழகும் ஒருங்கே இருப்பது போல அவன் உணர்ந்தான். அவளும் பயந்து பயந்து உள்ளே நுழைந்துக் கொண்டு இருக்க நிவேதா எதிர்பார்த்தது போல அவனது நண்பர்களில் ஒருவன் அவளை ராகிங் செய்ய அழைத்தான்.
அவளோ பயந்து இருக்க, "டேய் விடு மச்சான் போகட்டும்" என்று அவள் பயப்படுவதை உணர்ந்து துருவன் கூற, "என்ன மச்சான் பொண்ணுங்க எல்லாம் பார்க்குற தப்பாச்சே" என்று கூட இருந்த நண்பன் கிண்டல் செய்தாலும் நிவேதாவை அழைத்தனர்.
அவளோ அவர்களை பார்த்ததும் பயந்து கையை பிசைந்துக் கொண்டே வந்து நிற்க,அவர்கள் அவ்வாறு கூறியதும் தன் வாயை மூடிக்கொண்டவன், "டேய் விடுடா அதுதான் ரொம்ப பயப்படுறாங்கல்ல நீங்க போங்க" என்று கூற, "அதெல்லாம் போக கூடாது டேய் துருவா கம்முன்னு இரு" என்று கூறியவர்கள் "ஒரு பாட்டு பாடினா தான் நாங்க விடுவோம்" என்று நண்பர்கள் தொல்லை செய்யவும் அவளோ தயங்கி தயங்கி நின்றுக் கொண்டிருந்தாள்.
விட்டால் அழுது விடுவாள் போலும் அவளது வீட்டாரை விட்டு வந்தது ஒரு புறம் அதில் வேறு இவர்கள் ராக் செய்யவும் நிவேதாவுக்கு கண்களை கரித்துக் கொண்டு வந்தது.
அதை கண்ட துருவனும், "கண்ண மூடிட்டு ஒரு ரெண்டு வரி பாடிட்டு போயிடுங்க இல்லைனா இன்னும் நிக்க வச்சுட்டு இருப்பாங்க" என்று கூறவும் அவள் கண்களை மூடி அவளுக்கு பிடித்த பாட்டை இருவரி பாடவும் அந்த குரலிலும் முதன்முதலாக அவள் குரலை கேட்டு மேலும் மயங்கினான் துருவன்...
ஆம் அவள் வாயே திறக்காமல் இருந்தவள் பாடவும் அவன் மேலும் மயங்கி தான் போனான்.
பிறகு அவள் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு என்னவோ அவளை ரொம்ப பிடித்துப் போனது. அந்த பருவ மாற்றத்தில் காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் காமத்தை உபயோகித்தவன் இப்பொழுது நிவேதாவை துளிகூட காமம் இன்றி விரசம் இன்றி பார்க்கவும் அவனுக்கே அவன் புதிதாக தெரிந்தான்.
அதிலும் அவளது முகம் எப்பொழுதும் அவனை கவர்ந்து இழுத்துக் கொண்டே இருக்க அவள் மீது அவனுக்கு விருப்பம் உண்டானது. சிலரை பார்த்ததும் விருப்பம் கொள்வோமே அதுபோல அவளைக் கண்டதும் காதல் வயப்பட்டான் துருவன்.
ஆனால் அவளிடம் அதை சொல்வதில் அவனுக்கு மிகுந்த தயக்கம் இருந்தது. இப்படியே ஒரு மாத காலமாக யாருக்கும் தெரியாமல் நிவேதாவை பின்தொடர்ந்தான் துருவன். அவளும் அவனைப் போல ஹாஸ்டலில் தங்கித்தான் கல்லூரியில் பயில வருவாள் போலும்.
அவள் எந்த நேரத்திற்கு கல்லூரிக்குள் நுழைகிறாள் எந்த உடை எந்த ஹேர் பேண்ட் என்ன உணவு உண்கிறாள் என்பதுவரை எல்லாம் அத்துப்படியாக கவனித்து வந்தவனுக்கு அவளிடம் பேசும் தைரியம் மட்டும் இல்லை அது எதனால் என புரியவில்லை.
பயம் என்பதைவிட ஒருவித தயக்கம் அவனை ஆட்கொண்டது. அதற்கான சந்தர்ப்பமும் அவனுக்கு வந்தது என்றே கூறலாம்.
என்னதான் ஒரு மாதம் காலம் கல்லூரியில் புதிதாக வந்த மாணவர்கள் பயில தொடங்கியிருந்தாலும் இன்னும் ராகிங் மட்டும் துருவன் படிக்கும் கல்லூரியில் நின்ற பாடில்லை.
அதிலும் சில குறும்புக்கார மாணவர்கள் அழகாக இருக்கும் பெண்களை பார்த்தாலே வேண்டுமென்றே அவர்களிடம் வம்பு செய்வர் ராகிங் என்ற பெயரில். அவர்களை தங்களுடன் எப்படியாவது பேச வைப்பர். நிவேதாவும் யாரிடமும் சிக்காமல் ஒரு மாத காலமாக சுற்றிக் கொண்டு இருந்தவள் வசமாக ஒரு சீனியர் கும்பலிடம் மாட்டினாள்.
"என்ன பாப்பா கண்டுக்காம போற??" என்று கூற அவளோ 'ஐயோ வசமா மாட்டிகிட்டேனே!' என எண்ணினாள்.
அவர்களோ அவளைப்பார்த்து, "என்ன முழிக்கிற??" என்று கேட்க அவளோ திருதிருவென விழித்தாள்.
"உன்னை ராக் பண்ணலாம்னு பார்த்தா சிக்காமல் சுத்திட்டு இருக்க இன்னைக்கு வசமா மாட்டினியா??" என்று கூட்டத்தில் ஒருவன் கூற அவளோ, "சீனியர் என்னை விட்டுடுங்க சீனியர்" என்று பாவமாக கூறினாள்.
அதைப்பார்த்த அவனோ, "எல்லாரையும் பாவம் பார்த்தா நாங்க பாவம் இல்ல" என்று கூறியவன் அவளைப் பார்த்து, "ரொம்ப அழகா இருக்க உன்னை அப்படியே விட மனசு இல்ல அதனால நீ என்னை பார்த்து ஐ லவ் யூ அப்படின்னு சொல்லிட்டு போ" என்று கூற அவளோ அதிர்ந்தாள்.
எப்படி முன்பின் தெரியாத ஒருவனிடம் இந்த வார்த்தையை கூறுவது என அவள் மறுத்தாள்.
அவர்களோ முதலில் பொறுமையாக கூறினர் பிறகு குரலில் அழுத்தத்தை கூட்டினர். அப்பொழுதும் அவள் கூறாமல் இருக்கவும் அவர்களுக்கு கோபம் வந்தது. "நாங்க சொல்லிட்டு இருக்கோம். சொல்லுடி இல்லை ஒரே அடி உன் வாயில இருக்கிற எல்லா பல்லும் விழுந்திடும்" என்றனர்.
அவளோ பதில் அளிக்காமல் மறுத்துக் கொண்டிருக்க அவளுக்கு பயமாகவும் இருந்தது. ஆனால் அவர்கள் கூறும் விஷயத்தை அவளால் செய்ய முடியவில்லை.
"மச்சான் இவளுக்கு திமிரை பார்த்தியா இவளை சும்மா விடக்கூடாது டா" என்று கூறிய அந்தக் கூட்டத்தை கவனித்தான் துருவன்.
இவளை தேடித்தான் அவன் கண்கள் அலைந்து திரிந்துக் கொண்டிருக்க இவளோ இங்கு இருக்கவும் என்னதான் நடக்கிறது என இரண்டு வினாடிகள் கவனிக்க அவளது முகமே கூறியது அவள் வருத்தத்தில் இருக்கிறாள் என்று...
மேலும் அந்த கூட்டம் இவளை ராக் செய்வதை கண்ட துருவன் நேராக அவர்களிடம் போய் நின்றவன் அவளருகே உரிமையாக நின்றுக் கொண்டான்.
