நெஞ்சமெல்லாம் 14
அத்தியாயம் - 14
இறுதியில் அனைவரும் உணவை உண்ண துவங்கினர். அப்பொழுது தான் அந்த பிரச்சனை துவங்கியது. அவன் வாங்கி வந்த உணவுகளை கடை பரப்ப அதில் சிக்கன் மற்றும் பர்கர் கண்ட அவள் வாயை பிளக்க கே.கே "இதுதான் பர்கர் எடுத்து சாப்பிடு" என்று கூறி அவளுக்கு ஒன்றை கொடுக்க
அவளோ அதை பார்த்து சுற்றி முற்றி பார்த்தாள். அனைவரும் அந்த உணவை உண்ண துவங்க... இவளோ அந்த பர்கர் மேலே வைத்திருக்கும் இரண்டு பன்களை தனித்தனியாக பிரித்து எடுத்து வைத்தவள் அவர்களை பார்க்க துருவனும் இவளை பார்த்து முறைத்தான்.
‘என்ன செய்கிறாள் டேபிள் மேனர்ஸ் கூட இல்லாத பெண்ணிவள்’ என்று அவன் கோபமாக இருக்க… அவளோ அவனை பார்த்து பல்லைக் காட்டினாள்.
‘எப்போ பார் மாமாவுக்கு என்னை பார்த்து முறைக்கிறது தான் வேலை’ என எண்ணி பர்கரை உண்ண துவங்கினாள்.
கே.கே அவளது செய்கையை பார்த்து "இரண்டு பிரெட்டும் சேர்த்து வைத்து சாப்பிடு" என்று கூற அவளோ எல்லாம் தெரிந்தவள் போல சிரித்தவள், "உங்களுக்கு தான் ஒண்ணுமே தெரியல இதை இப்படி சாப்பிட கூடாது. இந்த பன்னு போய் இப்படி இலை தழை கூட வை ச்சு சாப்பிடுறீங்களே?? இதை எப்படி சாப்பிடணும் தெரியுமா??" என்று கூறியவள், அந்த இரண்டு பன்களை தனித்தனியாக எடுத்தாள். அதை காபியில் முக்கி சாப்பிட அதைப் பார்த்து இவனுடைய இந்திய நாட்டு நண்பர்கள் அருவருப்பாக முகத்தை வைக்க வெளிநாட்டு நண்பர்களோ சிரித்தனர்.
இதை கண்டு துருவனுக்கு மிகவும் அவமானமாக இருக்க.. அவளோ கே.கேவை பார்த்து, "இந்த ரொட்டி காய்ச்சல் வந்தா எங்க ஊர்ல இப்படி தான் சாப்பிடுவோம். இதை போயி வடை கூட வச்சு சாப்பிட சொல்றீங்களே??" என்று கூற கேகேவிற்கே ஒரு நொடி புரையேறியது.
ஏனெனில் அவளது செய்கையும் அது போலத்தான் இருந்தது.
"என்னது பர்க்கர் வடையா??" என அவன் வாயை விட்டு கூற அவளும் "ஆமா இதை பாருங்க வடை மாதிரி தான் இருக்கு. இதை விட மொறு மொறுப்பாக நான் செய்வேன். இதை போய் காசு கொடுத்து வாங்கிட்டு வந்து இருக்காங்களே… எங்க மாமாவுக்கு எதுவுமே தெரியாது. நான் சொல்லல பாருங்க. எப்படி ஏமாந்து போய் இருக்காருன்னு. நமத்து போன வடையை போய் வாங்கிட்டு வந்து இருக்காரு" என்று கூற அதைக் கேட்ட கே.கே துருவனை பார்க்க துருவனோ ஆத்திரம் மிகுதியில் இருந்தான்.
அவனது பார்வையே எரிச்சல் மிகுதியில் இருப்பதை உணர்த்த கே.கே ஏதோ ஒன்று செய்ய நினைத்து ஏதோ ஒன்றாக மாறப்போகிறது என எண்ணும் முன் நண்பர்களும் விடாமல் சிரிக்க ஆத்திரம் கொண்டவன்,
அவர்கள் முன் இன்னும் இவளது பைத்தியகாரத்தனம் வெளியே வர வேண்டாம் என எண்ணியவன், "உள்ளே போ" என்று அவன் கூற அவளோ காதிலேயே வாங்காமல், “எதுக்கு சிரிக்கிறீங்க??" என்று கேட்டாள்.
அவர்களோ ஒன்றும் கூறாமல் மீண்டும் சிரிக்கவும் "எதுக்கு மாமா சிரிக்கிறாங்க?" என்று அவள் அவனிடம் எதார்த்தமாக வினவ..
அவனும் அவளைப் பார்த்து, "நான் உன்னை உள்ளே போன்னு சொன்னேன்" என்று கூறினான். அவளோ, “எப்படி மாமா போக? வந்தவங்களை அப்படியே விட்டுட்டு. பாதியில் போனா நல்லா இருக்காதே. சாப்பிட்டுட்டு இருக்கேன் மாமா. அவங்களும் சாப்பிடறாங்க எனக்கு உள்ள எந்த வேலையும் இல்ல மாமா" என்று கூறினாள்.
அவனோ, "உன்னை உள்ள போன்னு சொன்னேன்” என்று பலமாக கூற அதில், "ஒரு நண்பன் அப்போ இந்த வடையை எப்படி சாப்பிடுவீங்க??" என்று வேண்டுமென்றே கிண்டல் செய்ய… அதை கேட்டவளுக்கு கிண்டல் அடிக்கிறார்கள் என்பது புரிந்ததோ என்னவோ,
"அதுவா இப்படி சாப்பிடுவேன்" என்று கூறி அதையும் பொடித்து காப்பியில் கலக்க, அதை கண்ட நண்பர்கள் பலமாக சிரித்து, “செம்ம பர்க்கர் காபி... இப்போதான் நாங்க பார்க்கிறோம். டேய் துருவன் அடுத்தவன் கையால சாப்பிட்டா கூட மூஞ்சியை சுழிக்கிற உனக்கு நல்ல பொண்ணு மனைவியா கிடைச்சு இருக்கா டா" என்று கூறி அவர்கள் சிரிக்க,
அடுத்த நொடி அவளது கண்ணம் ஜிவ்வென எரிந்துக் கொண்டிருந்தது.
ஆம் தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் மனைவியை ஓங்கி நண்பர்கள் முன் அடித்திருந்தான் துருவன். துருவனின் இந்த செய்கையை யாருமே அந்த இடத்தில் எதிர்பார்க்கவில்லை.
அவனால் அவனது நண்பர்களை அடக்கவும் முடியவில்லை. தன் மனைவியின் இந்த செயலையும் நிறுத்தவும் முடியவில்லை. அதற்காக அவனது ஆத்திரத்தை அவள் மீதே காட்ட... அவளோ சுருண்டு அங்கேயே விழுந்தாள். நிலைமை மோசமாவதை பார்த்த கே.கே அவனது இதர நண்பர்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
அவளது கன்னம் திகுதிகுவென எரிந்துக் கொண்டிருந்தது. மெல்ல எழுந்து பார்க்க அங்கே ஆத்திரத்தோடு அமர்ந்திருந்த துருவன் அங்கே இருந்த டேபிளை தன் காலால் எட்டி உதைக்க அங்கு கடைபரப்பிய உணவுகள் எல்லாம் கீழே தெறித்து விழ, அவள் மீதும் சில உணவுகள் தெறிக்க, அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவளது சிகையை பிடித்து அவளை தூக்கினான் துருவன்.
அவளோ "எதுக்கு மாமா அடிச்சீங்க? விடுங்க மாமா வலிக்குது" என்றாள்.
"என்னடி என்னடி பண்ணிட்டு இருக்க? என்ன பைத்தியக்காரன் ஆக்கவே இங்க வந்திருக்கியா? நிம்மதியாக இருக்க விட மாட்டியா? ஒரு அறிவு இல்லையா? ஒன்னு மத்தவங்க முன்னாடி எப்படி நடந்துக்கணும்னு தெரிஞ்சியிருக்கணும். அப்படி இல்லனா வாய மூடிட்டு இருக்கணும். நான் தான் உள்ள போன்னு சொன்னேன்ல. அங்கே தான் அவமானப் படுத்துறீங்க அப்படின்னு இங்கே வந்தா இங்கேயும் வந்து என்னை அசிங்கப் படுத்துற. என்னடி நினைச்சிட்டு இருக்க என்னை தொல்லை செய்யணும்னு வந்திருக்கியா??" என்று அவன் வெடிக்க,
அவன் அடித்த அடியில் கன்னம் வீங்கினாலும் அவளோ, “மாமா நான் என்ன மாமா செஞ்சேன்? எதுக்கு மாமா கோபப்படுறீங்க?" என்று வினவினாள்.
அவனோ மேலும் கோபம் கொண்டு “நீ செய்யறனு உனக்கு தெரியலை அப்படி தானே? இதை நான் நம்பணும் அப்படி தானே?" என்று கூறி மேலும் அறைந்தான் அவளை.
அவளோ சுருண்டு கீழே விழுந்தாள். பாவம் அவளது அறியாமை என அவன் எண்ணாமல் அவள் மீது தன் மொத்த கோபத்தையும் காட்டினான் துருவன்.
மந்தாரம் தெளியும்..
