வர்ணம் 17
அத்தியாயம் : 17
அவனுடைய பிளாட்டுக்கு அழைத்து சென்றான்..அவளுக்கோ எல்லாம் திக்கென்று இருந்தது..அவனோ காரில் வரும் போதெல்லாம் எதுவும் பேசவில்லை..அவனால் நடந்த காரியத்தை ஜீரணிக்க முடியவில்லை..
அவளோ அவன் கோபப்பட்ட விதத்திலும் அவனுடைய ஆக்ரோஷத்திலும் பயந்து தான் போயிருந்தாள்..இதோ அவனுடைய பிளாட்டுக்கு வந்து விட்டான்..
காரை நிறுத்தவும் அவனுக்கு பல எண்ணங்கள் சுழன்று ஓடியது..வேறொரு பெண்ணுடன் இதே இடத்தில் அவன் நிற்கிறான் என்ற யோசனையே அவனுக்கு தலை வலியை கொடுக்க கூடவே, ஒரு தலை வலியை அவன் கொண்டு வந்து இருக்கும் போது இதெல்லாம் எம்மாத்திரம் என நினைத்து காரில் இருந்து கீழே இறங்கி அவளை பார்க்க அவளோ இறங்கவா வேண்டாமா என்பது போல முழிக்க, "இங்கேயே குடி இருக்கிறதா உத்தேசமா கார்ல இருந்து இறங்கு" என்று கூறவும் பட்டு என்று காரில் இருந்து இறங்கிக் கொண்டாள்..
பிறகு அவனோ பின்னால் ஒருத்தி வருகிறாள் என்ற எண்ணம் கூட இல்லாமல் முன்னே செல்ல அவளும் அவன் பின்னாலேயே ஓடினாள்..
அவனுடைய பிளாட்டை அடைந்ததும் அவளைப் பார்த்து, "உள்ளே வா" என அழைத்து அவன் சுவற்றில் மாட்டி வைத்திருக்கும் அவனுடைய மனைவியின் புகைப்படத்தை பார்த்தான்..அதில் ஜானகி அழகாக சிரித்து கொண்டு இருக்க, ஏற்கனவே தன்னை ஏமாற்றி தன்னை விட வயதில் ரொம்ப குறைவான பெண்ணை மனம் செய்து விட்டார்கள் என்ற எண்ணத்தில் இருப்பவனுக்கு, அவனும் ஜானகியும் வாழ்ந்த இந்த இடத்தில் வேறொரு பெண்ணை அவன் அழைத்து வந்தது வேறு அவனுக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது.. இந்த இடம் அவனும், ஜானகியும் காதலில் கசிந்துருகி வாழ்ந்த இடம் அப்படி இருக்க அந்த இடத்தில் அவன் வேறொரு பெண்ணை அழைத்து வந்ததை அவனுடைய மனம் ஏற்றுக்கொள்ள முடியாமல் தத்தளித்தது..
அவளோ அந்த வீட்டுக்குள் நுழைந்தது முதல் ஜானகியை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.. அந்த அறை முழுவதும் எங்கு பார்த்தாலும் ஜானகி மற்றும் அவனின் புகைப்படம் தான் நிறைந்து இருந்தது.
ஜானகி, கயலின் கண்களுக்கு மிக அழகாக தெரிந்தாள்.. பாவம் இறந்துவிட்டார் என நினைக்க, அவனின் தவிப்பை இன்று நேரடியாக பார்த்த அவளுக்கு ஏனோ பாவமாக இருந்தது.. சற்று முன் அவன், அவனுடைய அம்மா மற்றும் பாட்டியிடம் சண்டை போட்டது நினைவுக்கு வந்தது.. அவனுக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை.. அவனும் ஏமாற்றப்பட்டு இருக்கிறான்.. சொந்த வீட்டாரிடம் ஏமாற்றப்பட்டு இருக்கிறான் அந்த வலி அவனுடைய கண்களில் அவளால் பார்க்க முடிந்தது.. அதனால் அவன் கோபம் கொள்ளும் போது கூட அந்தக் கோபத்தின் நியாயத்தை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.. அதனால் ஏனோ அவள் அமைதியாக நின்று கொண்டிருக்க,
அவனோ, 'இப்படி ஒரு சூழல் வரும்னு நான் நினைச்சு கூட பார்க்கல எல்லாத்துக்கும் காரணம் நீ தான்.. நீ மட்டும் தான் சந்தோஷமா இதை பார்த்துட்டு இரு' என்று தன் முதல் மனைவியோடு மானசீகமாக சண்டை போட்டவன்,
அழுத்தமாக தன் கண்களை மூடிக்கொண்டு தன்னை நிலைப்படுத்திய பின் கண்களை திறந்தவன் அவள் பக்கமாக திரும்பி, "இதோ பார் அவங்க தான் சொன்னாங்க அப்படின்னா உனக்கு அறிவில்ல.. ஊர், பெயர் எதுவுமே தெரியாமல் என்னை யார் என்று கூட தெரியாம எப்படி நீ இரண்டாவது கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன?" என கேட்டான்..
அவன் கொஞ்சம் கோபத்தை குறைத்து அவளிடம் கேட்கவும் அவளும் பயந்து கொண்டே,"சார் என்னோட அம்மா தான் சார் கம்பெல் பண்ணாங்க அப்புறம் உங்க பாட்டியும் நான் இருக்கேன் நான் பார்த்துக்குறேன் எதுவும் நடக்காது என்னுடைய பேரன் ரொம்ப நல்லவன் நல்லா பார்த்துப்பான் அப்படி எல்லாம் சொன்னாங்க" என்று கூற,
"அவங்க சொன்னா உனக்கு அறிவு இல்ல? நீயும் ஒரு வகையில அவங்க செயலுக்கு கூட்டு தான்.. இன்றைக்கு காலைல கூட உன்கிட்ட நான் நல்லா பேசினேனே அப்ப கூட நீ உண்மையை சொல்லலையே பியூட்டி பார்ல வேலை செய்றேன் தானே சொன்ன?" என்று அவன் கேட்டான்..
"இல்லை சார் அது வந்து உங்க பாட்டியும் அம்மாவும் தான் சொல்ல வேண்டாம் அப்படின்னு சொன்னாங்க" என்று கூற அதைக் கேட்டு அவனுக்கு கடுப்பானது..
"உனக்குன்னு சுய அறிவு இல்லையா? எது சரி? எது தப்புன்னு தெரியாதா? அவங்க சொன்னாங்க அவங்க சொன்னாங்கன்னு சொல்லி நாளைக்கு வேற ஏதாவது செய்ய சொன்னா நீ செய்வீயா?" என அவன் கேட்டான்..
அவளோ தலை குனிந்து, "என்னை மன்னிச்சிடுங்க சார்" என்று கூற, "உனக்கு எல்லாம் மன்னிப்பே கிடையாது நீ எவ்வளவு பெரிய செயல் செஞ்சிருக்கேன்னு உனக்கு தெரியல நீ என்னோட எதிக்ஸ் ஐ டச் பண்ணி இருக்க நான் ஒரு சில விஷயங்கள் செய்ய கூடாதுன்னு முடிவு பண்ணி வைத்திருந்த விஷயத்தை நீ செஞ்சிருக்க அதுக்கான தண்டனையை நீ என் கூட இருந்து அனுபவிச்சே ஆகணும் உனக்கு வேற வழியே இல்ல.." என்றான் அழுத்தமாக..
"சார் அவங்க தாங்க சார் சொன்னாங்க யாரும் என் பேச்சை கேட்கவே இல்லை சார் நானும் எவ்வளவோ சொல்லி பார்த்தேன் என்னோட அம்மா உங்க தாத்தா செஞ்ச உதவிக்கு கைமாற நான் உன்னை கல்யாணம் பண்ணி கொடுப்பேன்னு முடிவா இருந்தாங்க இல்லைன்னா செத்து போயிடுவேன்னு மிரட்டினாங்க சார்" என அவள் அழுது கொண்டே கூற,
அதை பார்த்து அவனுக்கு எரிச்சல் தான் வந்தது.. "ஆயிரம் பேர் ஆயிரம் விதமா சொல்லுவாங்க.. இது என்ன சினிமா படமா அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு கதையா சொல்லிட்டு இருக்க..இதை எல்லாம் நான் நம்ப மாட்டேன்.. உங்க அம்மா சொன்னதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட ஆனால் உங்க அம்மாவுக்கு தெரியுமா நீ கல்லூரியில் காதல் பாடம் படிச்சிட்டு இருக்கேன்னு" என்றவன் அவள் முன்னே மார்பில் கையை கட்டி கேட்க அவள் முகம் வெளுத்தது ..
அதை பார்த்தவன்,"இதோ பார் உன்னோட காதல், கத்திரிக்காய் எல்லாம் உன்னோட இருக்கட்டும் அதை பத்தி எனக்கு எந்த கவலையும் கிடையாது.. ஆனால் என்னோட விஷயத்தில் நீ தொடங்கி வைத்ததை நீயே முடிச்சு வை" என்று மீண்டும் கூற அவளுக்கு சுத்தமாக விளங்கவில்லை..
"சார்" என்க
"என்ன புரியலையா? நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட அது உன்னோட விதி. எனக்கும் அதுக்கும் சம்பந்தம் கிடையாது நான் உன்னை நிர்பந்திக்கவும் கிடையாது அதனால இந்தப் பிரச்சினையில் எனக்கு சம்மதம் கிடையாது..
ஆனால் நான் இரண்டாவது கல்யாணம் பண்ணினதே என்னுடைய மகள் என் கைக்கு வரணும்னு தான்.. எனக்கு தேவை என்னுடைய மகள் என்னுடைய மகளை வாங்கி என் கையில் கொடுக்கும் வரை நீ இருந்தே ஆகணும் அதுக்கப்புறம் நீ உன்னோட காதலனை தேடி போனாலும் சரி என்ன ஆனாலும் சரி அதை பத்தி எனக்கு கவலை இல்லை ஆனால் அதுவரை நீ இங்கேதான் இருந்தாகணும்" என்க அதை கேட்டு அவள் அதிர்ந்தாள்...
அவளின் அதிர்ச்சியை பார்த்து, "என்ன அதிர்ச்சி அடைய வெளி உலகத்துக்கு நீயும் நானும் கணவன் மனைவிதான அப்புறம் ஏன் இந்த அதிர்ச்சி?" என கேட்டான்..
அவளோ அமைதியாக இருக்கவும் அதை கண்டு அவனோ நக்கலாக, "எனக்கு தேவை என்னுடைய குழந்தை என் குழந்தை கைக்கு வந்ததும் நீ உன் காதலனுடன் போகலாம் அது வரை உனக்கு பிடிக்குதோ, பிடிக்கலையோ நீ இங்கதான் இருந்து ஆகணும்" என்று கூற அதைக் கேட்டு அவள் என்ன பதில் சொல்வது என தெரியாமல் இருந்தாள்..
ஏனெனில் உண்மையில் அவள் இது தான் வாழ்க்கை இந்த வாழ்க்கை தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற நிலைமைக்கு அவள் வந்திருக்க இவன் இப்படி கூறவும் அவளுக்கு குழப்பமாக இருந்தது...
