வர்ணம் 14
வர்ணம் 14
அவளின் அழுகையை பார்த்த கிஷோர், "சார் ப்ளீஸ் சார் அவளை விடுங்க சார் எல்லாம் என் தப்பு தான்" என்க
நிரஞ்சன் கிஷோரை பார்த்து முறைத்து, "உன்னை வாயை மூடிட்டு இருக்க சொன்னேன்" என்றவன்,
"ஓ படிக்கணும்னு இப்பத்தான் உனக்கு தெரியுதா இரண்டு பேரும் சேர்ந்து ஜூஸ் குடிச்சிட்டு இருக்கும்போது தெரியலையா? அதை பார்த்து கைதட்டி சிரிக்க இத்தனை பேர் அப்படி தானே இதுக்கு தான் உங்க வீட்டில உங்களை எல்லாம் அனுப்பி வைத்தார்களா?" என்க
அனைவரும் அமைதியாக இருக்க, "இதுதான் உங்களுக்கு நான் கொடுக்கிற கடைசி வார்னிங் இனி உங்களை கூட்டமா எங்கேயாவது பார்த்தேன் கொத்தோட தூக்கிடுவேன் சொல்லிட்டேன் போங்க" என்றான்..
அதை கேட்ட அனைவரும் செல்ல, "கிஷோர் அண்ட் கயல் நீங்க ரெண்டு பேரும் மட்டும் நில்லுங்க" என்று கூறினான்
கிஷோரை பார்த்து, "காலேஜ்ல ரவுடித்தனம் பண்ணிட்டு இருக்கிறது அவ்வளவு பெரிய கெத்தான விஷயம்னு நீ நெனச்சிட்டு இருக்க.. ஆனால் இந்த கேம்பஸ் விட்டு வெளியே போனா நீ ஒரு ஜீரோ படிச்சா மட்டும் தான் உன்னோட வாழ்க்கையை நீ வாழ முடியும்.. பணம் இருக்கு என்ன வேணா பண்ணிடலாம்னு உனக்கு நினைப்பு இருக்கலாம் ஆனால் என்னைக்கும் உனக்கு படிப்பு மட்டும்தான் கை கொடுக்கும்... இந்த தேவையில்லாத வேலை எல்லாம் இனி நீ செஞ்ச தொலைச்சிடுவேன் அவுட்" என்று கூற கிஷோர் அவமானத்தில் உழன்று கொண்டு இருந்தான்...
அதன் பிறகு கிஷோர் கயலை பார்க்க, நிரஞ்சன் அவனுடைய பார்வையின் பொருளை உணர்ந்து, "உன்னை போக சொன்னேன்?" என விரட்ட நிரஞ்சன் மீது கோபம் இருந்தாலும் அவன் சென்றான்...
பிறகு நிரஞ்சன் மற்றும் கயல் மட்டும் நின்று கொண்டு அவளோ அழுது கொண்டு இருப்பதை பார்த்து, "இதுதான் பியூட்டி பார்லரா?" என அவன் கேட்க,
"சார் அது வந்து.." என அவள் ஏதோ கூற வர, "நீ எதுவுமே பேசாத இந்த இடத்துல நீ நிக்கிறதுனால நான் அமைதியா இருக்கேன் இல்ல அவ்வளவுதான் சொல்லிட்டேன்" என்று தனக்குள் இருக்கும் ஆத்திரத்தை அவள் கண் முன்னே அவன் காட்ட அதில் பயந்து அவளோ மிரண்டு போய் நிற்க, "ஏண்டி உன்னோட வயசு என்ன என்னோட வயசு என்ன கொஞ்சம் கூட யோசிச்சு பார்க்க மாட்டியா?" என அவன் கொந்தளித்து கேட்டான்..
அவனால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை அவளை பார்க்க பார்க்க இந்த கையால் தானே அவளுக்கு தாலி கட்டினோம் என அவனுக்கே அவன் மீது கோபம் வந்தது.. எப்படி எதைப் பற்றியும் விசாரிக்காமல் இப்படி குடும்பத்தை நம்பி மட்டும் என் வாழ்க்கையை ஒப்படைத்து இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டேனே என அவன் நினைத்தான்..
"சார்.. நான் சொல்றதை கேளுங்க" என அவள் கூற, "வாயை மூடு என்ன அவன் கூட லவ்வா? இல்லை வேற ஏதாவதா?" என கேட்க அவள் தலை குனிந்தாள்..
"என்னடி நேத்து என் கையில தாலியை வாங்கிட்டு இன்னைக்கு இவன் கூட உட்கார்ந்து ஜூஸ் குடிச்சிட்டு இருக்க..அதுவும் ஒரே ஜூஸில் இரண்டு ஸ்ட்ரா போட்டு குடிச்சிட்டு இருக்க எப்பேர்பட்ட ஆளா இருப்ப நீ? அசிங்கமா இருக்கு.. இதுக்குத்தான் காலேஜ் வரியா?" என்றவன் அவளை பார்க்க அவளுக்கு கண்ணீர் மட்டும் வர, அவனோ அவளை பார்த்து எச்சரிக்கும் குரலில்,"இனி நான் உன்னை சும்மா விடுவேன் என்று மட்டும் நினைக்காதே.. சுத்தி இருக்குறவங்களுக்கு தான் நான் ஒரு ப்ரொபசர் உனக்கு கிடையாது.." என்றவன், "சாயந்திரம் வீட்டுக்கு வா இருக்கு உனக்கு" என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்.. அவன் பார்க்க அவளை எச்சரிக்கை செய்வது போலத்தான் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் அவன் பேசியதை யாரும் கேட்டிருக்க மாட்டார்கள்..
அவளுக்கோ அவன் பேசியதை கேட்டு அவ்வளவு வருத்தமாக இருக்க, எந்த தவறும் செய்யாமல் அவன் முன்னே இப்படி குற்றவாளியாக நிற்கும் அவளின் நிலைமையை எண்ணி அவளுக்கே மிகவும் பரிதாபமாக இருந்தது..
அவனுக்கு அனைத்தும் தெரிந்ததை விட அவன் தன் குணத்தை கேவலமாக பேசியதை தான் அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை..
மதிய வகுப்புகள் எல்லாம் அவன் கவனிக்க கூட இல்லை.. அவன் தலைக்குள் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்பது மட்டும் தான் சுற்றிக் கொண்டிருந்தது..
அதனால் வகுப்புகள் எடுக்கும் மனநிலை இல்லாத அவன் பாடம் எடுக்காமல் அமைதியாக இருந்தான்..அவனின் செய்கையை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம் தான்
அப்படி இருக்க மாலை ஆனதும் நேராக வீட்டுக்கு செல்ல அங்கு கருணை அம்மாள் மற்றும் பாக்கியம் அமர்ந்து இருக்க கலையரசன் பின்பக்க தோட்டத்தில் ஏதோ வேலையில் மூழ்கி இருந்தார்..
நேரமாக அவன் வந்ததை பார்த்து பாக்கியம், "வாப்பா நேரமா வந்துட்ட" என கூற,
அவனும் ஆத்திரத்தோடு வந்தவன் முன்னே இருந்த டேபிளை காலால் எட்டி உதைக்க அது கண்ணாடி டேபிள் ஆதலால் அந்த டேபிள் சுக்கு நூறாக உடைந்தது.. விஷயம் அறிந்தது முதல் அவன் இறுக்கிப் பிடித்து வைத்திருந்த அவனுடைய கோபம் எல்லாம் அந்த டேபிளை உடைக்கும் பொழுது வெளிப்பட்டது..
அவனி ன் செய்கையை பார்த்த பாக்கியம், "என்னப்பா ஆச்சு என்ன? ஏன் இப்படி கோபமா இருக்க?" என கேட்க அதற்குள் அவன் கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் கீழே தூக்கி எறிந்து உடைத்தான்.. அவனை இந்த செயலை கண்ட கருணை அம்மாள் மற்றும் பாக்கியம் இருவரும் அதிர, கலையரசன் சத்தம் கேட்டு ஓடி வந்தவர் அவனை தடுத்தார்..
அவனோ, "என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? எனக்கு பொம்பள தேவைன்னு தோணுதா இல்ல கூட படுக்க ஆள் இல்லைன்னு சொல்லி சின்ன வயசுல ஒரு பொண்ணை எனக்கு செட்டப் பண்ணி கொடுத்தீர்களா?" என்று அவன் அவர்களைப் பார்த்து கேட்க பாக்கியம் காதை பொத்திக் கொண்டார்.. கேட்கக்கூடாத கேள்வி தெரிந்தே தான் கேட்டான் அவ்வளவு ஆத்திரம் அவனுள் இருந்தது...
கருணை அம்மாள் அவன் பேச்சில் அதிர்ச்சி அடைந்து அவனுக்கு உண்மை தெரிந்து விட்டதோ என பார்க்க, "யாரை கேட்டு 19 வயசுல ஒரு பொண்ணு எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க நான் உங்ககிட்ட என்ன சொன்னேன் நீங்க என்ன செஞ்சிருக்கீங்க?" என கொந்தளித்தான்..
"எனக்கு இருக்கிற பிரச்சனை போதாதா? இது வேற இழுத்து விட்டு இருக்கீங்க உங்களை நம்பி நீங்க என் கழுத்தை நல்ல வெச்சு அறுத்துட்டீங்க!" என்று அவன் கூறினான்..
அவன் பேச்சிலேயே அவனுக்கு உண்மை தெரிந்து விட்டது உணர்ந்த பாக்கியம், "தம்பி நிரஞ்சன் நான் சொல்றதை கேளுப்பா உனக்கு இப்ப கல்யாணம் ஆகலேன்னா திரும்ப கல்யாணமே ஆகாதுன்னு சொன்னாங்க அதனாலதான்" என்று கூற, "அதுக்குன்னு 19 வயசுல ஒரு பொண்ணை பார்ப்பீங்களா இத்தனைக்கும் அவள் என்னோட காலேஜ்ல தான் படிக்கிறா நான் என்ன வேலைக்கு போக வேண்டாமா? இனி நான் எப்படி எல்லாரும் முன்னாடியே முழிப்பேன்? எல்லாருக்கும் ரோல் மாடலா இருக்க வேண்டிய நான் பாடம் எடுக்கிற கல்லூரியில் ஒரு மாணவியை கல்யாணம் பண்ணி இருக்கேன்னு தெரிஞ்சா எல்லாரும் என்னை எப்படி மதிப்பாங்க? அதுவும் இரண்டாவது கல்யாணம் நான் தான் ஏற்கனவே கல்யாணம் ஆனவன் தானே இனி ஆனா என்ன ஆகலனா என்ன?" என்று அவன் கொந்தளித்துக் கேட்டான்.. அவனால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..
"நீ சொன்ன மாதிரி தான் பா பார்த்தோம் கயலோட அக்கா நிர்மலா நீ சொன்ன மாதிரி புருஷனை இழந்த பெண் தான் ஆனால் பொண்ணு கடைசி நேரத்துல மாறிப் போயிடுச்சு அந்த பொண்ணு ஓடிப் போயிட்டா அதனால தான் வேற வழி இல்லாமல் இந்த கல்யாணத்தை பண்ண வேண்டியது போயிடுச்சு" என பாக்கியம் மகனின் கோபத்தை கண்டு பதறி கூற,
அதைக் கேட்ட அவன், "அவளோட அக்கா ஓடிப் போனா அப்படியே விட வேண்டியது தானே உங்களை யாரு டிராமா பண்ணி வேற கல்யாணம் பண்ணி வைக்க சொன்னது? உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா?" என ஆத்திரமாக கேட்டான் அவன் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே கயல்விழி வீட்டுக்கு வந்தாள்...
அவளைக் கண்டதும், "வாடி வா உனக்காக தான் காத்துட்டு இருந்தேன் என்ன ஜூஸ் குடிக்க அவன் கூட போகலையா போயிருக்க வேண்டியதுதானே?? எத்தனை பொய் பேசின என்கிட்ட நீ பேசினதெல்லாம் உண்மைன்னு நினைச்சேன் டி" என நடந்த சம்பவத்தை எண்ணியும் காலையில் அவன் அவளிடம் பேசியதை எண்ணியும் அவன் கொந்தளித்து கேட்க அவளோ மேலும் உடைந்து போனாள்..
"தாலி கட்டும்போது என்னை பார்த்திருப்ப தானே எனக்குத்தான் உன்னை தெரியாது உனக்கு என்னை நல்லா தெரியும் இல்ல அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்ட? அப்போ நீயும் இவங்க கூட துணையாக இருந்திருக்க அப்படித்தானே" என அவன் கேட்டான்
பாக்கியம் அதிர்ந்து, "நிரஞ்சன் அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நாங்க எல்லாரும் நிர்பந்திச்சு தான் அவ உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை" என்று கூற மேலும் அவன் இடிந்து போய் அமர்ந்தான்...
"ஏன்மா ஏன் எனக்கு இப்படி பண்றீங்க நான் அனுபவிச்ச வலி எல்லாம் போதாதா? பொண்டாட்டியை இழந்து பெத்த புள்ள என் கூட இருக்கணும் என்ற ஒரே காரணத்துக்காக ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன்.. ஆனால் என்னை விட 14 வயசு கம்மியான பெண்ணை அதுவும் கல்யாணமே ஆகாத ஒருத்தியை என் தலையில கட்டி வச்சிட்டீங்களே அப்படி என்னம்மா நான் செஞ்ச உங்களுக்கு சொல்லுங்கம்மா நான் இனி எப்படி எல்லோரும் முன்னாடி முழிப்பேன்?" என அவன் கேட்டான்..
அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்க திராணியில்லாமல் நிற்க அவள் செவிகள் மட்டும் அவன் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தது...அவனின் வலியான வார்த்தைகளும் அவன் தன்னை பற்றி யோசிக்கிறான் என்பதை அவளுக்கு விளங்கினாலும் அவன் மனதில் நான் தவறான பெண் தானே என கயல் நினைத்தாள்..
