மோகம் 6
மோகம் - 6
ஆதித்யா இறுகிய முகத்தோடு கண்மணி கழுத்தில் தாலி கட்டினான்.. அவளோ குனிந்த தலை நிமிராமல் இருந்தாள்.. அவள் கழுத்தில் தொங்கிய தாலியை கண்டதும் ஏனோ அவளுக்கு இலேசான கண்ணீர் வந்தது..
அவனுக்கோ மனதில் அவ்வளவு வருத்தமாக இருந்தது..இது போல நடந்திருக்க கூடாது என வருந்தினான்.. ஆனால் அவனுள் இருக்கும் வலிக்கு சம்பந்தமே இல்லாமல் அருகில் அமர்ந்திருக்கும் அவள் மீது கோபம் கொண்டிருந்தான்..
பெரியவர்கள் அனைவரும் இந்த திருமணம் நடந்ததில் சந்தோஷமாக இருக்க மங்கையர்கரசிக்கு தன்மகள் செய்தது சரி இல்லை என்பதால் எழுந்த வருத்தம் தான் ஒழிய வேறொரு பெண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்திருப்பதில் அவருக்கு மகிழ்ச்சி தான்..
அப்படி மொத்தத்தில் பெரியவர்கள் எல்லாம் குறித்த நேரத்தில் கல்யாணம் நடந்து விட்டது.. சைந்தவி ஓடி போனதில் பெரிய சலசலப்பு அந்த குடும்பத்தில் நடந்தாலும் அவர்களைப் பொறுத்தவரை கல்யாணத்தை நிறுத்தாமல் நடத்தி விட்டார்கள் என்ற பெருமையோடு அவர்கள் இருந்தார்கள்..
அகிலன், வினோத், விஷ்வா மூவரும் அங்கு நின்று கொண்டு இருந்தாலும், இதில் விஷ்வா குடும்பத்தில் எந்த பிரச்சனை என்றாலும் அவன் கண்டு கொள்ள மாட்டான்.. அவன் உண்டு அவன் வாழ்க்கை உண்டு என இருந்து கொள்ளும் ரகம்..
அகிலன் பள்ளி செல்லும் சிறுவன் தன் அக்காவுக்கு திருமணம் நடக்கிறது என அந்த அளவுக்கு மட்டும் தான் அவன் யோசிக்கிறான்..
ஆனால் வினோத் எப்படி சைந்தவிக்கு அவன் ஒரு சகோதரனோ அதேபோலத்தான் கண்மணிக்கும் அவன் சகோதரன்.. அவனால் சரி எது தவறு எது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்..
அவனுக்கு மட்டும் அந்த திருமணத்தில் பெரிதாக உடன்பாடு இல்லை.. காரணம் அவன் அக்கா... அக்கா இருக்கும் இடத்தில் கண்மணி இருக்கிறாள் என்பது அல்ல.. ஆனால் கண்மணிக்கு இந்த திருமணத்தில் துளியும் விருப்பமில்லை இவர்கள் நிர்பந்தித்துதான் திருமணம் செய்து வைக்கிறார்கள் என்பதுதான் அவனுக்கு கஷ்டமாக இருந்தது..
ஆனால் அங்கு பேசும் வாய்ப்பை சைந்தவியால் அவன் இழந்து நிற்பதால் அமைதியாக இருந்தான்.. ஆனால் ஒரு நொடியாவது தன் தங்கையிடம் பேச வேண்டும் என எண்ணிக்கொண்டு இருந்தான் வினோத்..அவனுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி.. அதை அவளிடம் பேசி தீர்க்க வேண்டும் என கருதினான்..
சடங்குகள் எல்லாம் சம்பிரதாயத்துக்கு நடந்தது.. யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை..இறுகிய முகத்தோடு இருந்தவன் எல்லாம் முடிந்ததும் வீட்டுக்கு வந்தாலும் அவனுடைய அறையில் இருந்தான்.. ஆத்திரத்தின் பிடியில் இருந்தான்.. ஆறடி வளர்ந்து இவ்வளவு தூரம் அவனுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பதில் அர்த்தமே இல்லை என்பது போல அவன் எண்ணினான்..
அவன் வாழ்க்கையில் நிகழும் ஒரு முக்கியமான முடிவை அவனால் எடுக்க முடியவில்லையே என்ற எண்ணம் அவன் நெஞ்சை சுக்கு நூறாக்கி கொண்டு இருந்தது.. அதிலும் கண்மணியின் வயது அவனை முள் மீது நிற்க வைப்பது போல அவனை நிற்க வைத்துக் கொண்டு இருந்தது..
அவனுடன் விக்கி இருக்கிறான்.. அவனுக்கும் அந்த சூழலில் தன் நண்பனிடம் என்ன பேசுவது என தெரியவில்லை..
சரி நிலைமை சரியாகட்டும் இப்போ நாம செல்லலாம் என எண்ணி, "ஆதி நான் கிளம்பட்டுமா??" என கேட்டான்..
அவனும் யார் மீது பாயலாம் என்று இருந்த கடுப்பில் தன் நண்பனை பார்த்து, "என்ன இனி எதுவும் சொல்லாமல் போற??" என அழுத்தமாக கேட்டான்..
என்ன சொல்வது என விக்கிக்கும் தெரியவில்லை என்றாலும், "என்ன சொல்றது?? நடந்தது எனக்கும் அதிர்ச்சி தான்.. இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை" என கூறினான்.. அவனுக்கு இங்கு நடந்த விசயங்கள் எல்லாம் அதிர்ச்சியை தான் கொடுத்தது..
அப்படி இருக்க, "பார்த்தியா 18 வயசு பொண்ணை கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க.. இதுக்குத்தான் நான் தனியா இருக்கிறது..எனக்கு இதுல உடன்பாடு இல்லை.. எனக்கு அவகிட்ட இருந்து விவாகரத்து வேண்டும்.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேண்டும்.. உனக்கு தெரிஞ்ச ஒரு வக்கீல் இருக்கான்ல அவனோட போன் நம்பர் அனுப்பி விடு.. இவளை என் வாழ்க்கையில் இருந்து ஒழிச்சே ஆகணும்" என அவன் கூறினான்..
அதற்கு நண்பனும் அவனுடைய நிலைமையை பார்த்து, "கொஞ்சம் பொறுமையா இரு நாம பேசிக்கலாம்" என்றான் அவனை சமாதானம் செய்யும் விதமாக,
"பொறுமையாயெல்லாம் இருக்க முடியாது.. எனக்கு எவ்வளவு சீக்கிரம் இதிலிருந்து வெளியே வரணுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியே வரணும்"
"டேய் புலம்பாம இருடா.. தாலி தான கட்டிருக்க இன்னும் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணல தானே.. அதுனால பிரச்சினை இல்லை.. அவள் இன்னும் அஃபிசியலா உன்னோட பொண்டாட்டி இல்ல" என விக்கி கூறினான்..
அதை கேட்டு அவனும் யோசித்தான்.. அப்போதுதான் அவனுக்கும் ஒரு உண்மை வெளிப்பட்டது.. ஆம் லீகலாக எதுவும் நடக்கவில்லை.. அதை கேட்டு அப்போ பார்த்து கொள்ளலாம் என அவனுக்கு தோன்ற அப்போது தான் அவனுக்கு கொஞ்சம் சமாதானம் ஆனது..மனம் அமைதி உற்றான்..
அதே நேரம் மாலதி மிகுந்த மகிழ்ச்சியோடு சுற்றிக் கொண்டு இருக்க, திருமணம் முடிந்ததும் கண்மணி தனியாக அமர்ந்து அவளுடைய அறையில் இருந்தாள்.. அந்த சமயம் பார்த்து வினோத் அவளுடைய அறைக்குள் வந்தான்..
அவன் வரவும் அவளோ நிமிர்ந்து அவனை பார்க்க அவளோ கலங்கிய விழிகளோடு இருந்தாள்.. ஆதி அவளுக்கு அணிவித்த பொன் மஞ்சள் தாலியும், வகிட்டில் செந்தூரமும் சேர்ந்து அவள் பெரிய மனுஷி போல இருக்க அவனை கண்டதும் பொங்கிய கண்ணீரை அடக்கினாள் கண்மணி..
அவள் அழுவதை அம்மா எங்கேயாவது பார்த்தால் அவளுக்கு திட்டு விழுமோ என்ற பயம் அவளுள் இருந்தது..
அதனால் வேகமாக கண்ணீரை அடக்கியவள், "என்ன வினோத் அண்ணா??" என கேட்க, அவனோ வாஞ்சையாக அவளின் அருகே வந்து அவளின் கன்னத்தை தொட்டு, "உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா கண்மணி??" என கேட்டான்..
அவளோ கசந்த ஒரு சிறிய முறுவல் கொடுத்து, "அதுதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சுல வினோத் அண்ணா.." என கூறவும், அவனோ அவளின் வார்த்தைகளை கேட்டு, "நான் வேணும்னா சித்திகிட்ட பேசவா??" என்றான்..
"ஐயோ அண்ணா தயவு செய்து வேண்டாம்.. அப்போ அம்மா என்னை கொன்னே போட்டுடுவாங்க..எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் தான்" என பீதியில் கூறியவள், "திடீர்னு கல்யாணம் ஆனதனாலதான் எனக்கு வருத்தமே ஒழிய வேற எந்த பிரச்சினையும் இல்ல.. நம்ம ஆதி அண்ணா தானே எனக்கு புருஷன்.. அதனால எனக்கு வருத்தம் எல்லாம் இல்லை சந்தோசம் தான் வினோத் அண்ணா" எனக் கூறினாள்..
அவள் கண்களில் அவளுக்கு நடந்த திருமண பயத்தை விட வினோத் எங்கேயாவது அம்மாவிடம் இதைப் பற்றி கேட்டு சண்டை போட்டு விடுவானோ என்ற பதட்டம் நிறைந்து இருந்தது..
ஆனால் அவனுடைய அக்கா செய்து விட்ட செயலால் தானே இது போல நடந்தது.. இவள் வாழ்க்கையையும் அவள் நாசமாக்கி விட்டு தானே சென்று இருக்கிறாள் என்ற குற்ற உணர்ச்சியோடு அவன் இருந்தான்..
அதனால் தங்கைக்காக அவன் போராடச் சென்றாலும் அங்கு அவனுடைய வார்த்தைகள் எடுபடாது..
அப்படி இருக்க, "நான் வேணும்னா ஆதி அண்ணா கிட்ட நான் பேசட்டுமா??' அவளோ, "வேண்டாம் அண்ணா" என மறுத்தாள்..
"உனக்கு இந்த கல்யாணம் ஓகே தானே??"
"என்னோட படிப்பு போயிடுமோன்னு தான் பயமா இருக்கு.. திடீர்னு கல்யாணம் நடந்ததுனால அந்த அதிர்ச்சியை ஏத்துக்க முடியல.. மத்தபடி எனக்கு பிரச்சனை ஒன்னும் இல்ல.. ஆதி அண்ணா வெளியூர்ல தான வேலை செய்றாங்க.. நான் இங்கே இருக்கிற காலேஜ்ல படிக்கிறேன்.. கல்யாணம் பண்ணினா புருஷன் கூட தானே பொண்டாட்டி இருக்கணும்.. அப்போ என்னையும் ஆதி அண்ணா கூட தானே அனுப்பி வைப்பாங்க..அப்போ படிப்பு என்ன ஆகும் அது தான் யோசனையாக இருந்தது" என்று அவள் கூறிக் கொண்டு இருக்கும் போதே மாலதி மற்றும் மனோன்மணி வரவும் பேச்சுத்தடைப்பட்டது..
தன் அக்காவின் செயலால் இவளுக்கு இப்படி நேர்ந்து விட்டது என்ற குற்ற உணர்ச்சியில் வினோத் ஆதியைக் காண சென்றான்.. செல்லாமல் இருந்திருக்கலாம் ஆனால் சென்று விட்டான்..
ஆதியின் அறையை தட்ட விக்கி தான் வந்து கதவை திறந்தான்.. விக்கியை கண்டதும், "ஆதின்னா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என கூறவும் விக்கி வெளியே சென்று விட்டான்..
"சொல்லு டா" என தனக்குள் அவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் வினோத்திடம் அவன் பேசினான்..
"அண்ணா நான் இதை சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.. எனக்கு இதை சொல்லணும்னு தோணுச்சு.. மத்தபடி ஒன்னும் இல்ல.. திடீர்னு இந்த கல்யாணம் நடந்ததுனால என்ன நடக்குதுன்னு தெரியல எல்லாம் காரணம் சைந்தவி என்று மட்டும் தெரியுது.. ஆனா பாவம் கண்மணி இடையில மாட்டிக்கிட்டா அவளுக்கு இந்த கல்யாணத்துல பெருசா விருப்பம் இல்ல போல.. நீங்க அவளை கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க.. படிப்பை மட்டும் பாதியில நிறுத்திட வேண்டாம் ஆதி அண்ணா.. அவள் முடிஞ்சா இங்கே இருந்து படிக்கட்டும்.." என்று அவன் கூறவும் இவனுக்கு வினோத் பேசிய எதுவும் காதில் விழவில்லை..
அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை.. அது மட்டும் தான் அவன் காதுகளில் விழுந்தது.. அது அவனுக்கு கோபத்தை கொடுத்தது..
அதை கேட்ட ஆதி வினோத்திடம் எதுவும் பேசவில்லை.. மாறாக எவ்வளவு தடவை அவளிடம் கேட்டேன் ஆனா எதுவுமே சொல்லாமல் சம்மதம் சம்மதம்னு தலையாட்டிட்டு இவன்கிட்ட சம்மதம் இல்லைன்னு சொல்றாளா என்ற கடுப்பு அவள் மீது வர அவனின் முகம் அழுத்தமாக மாறியது..
வினோத் ஆதியின் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்க இவன் எதுவும் பதில் சொல்லாமல் நிற்கவும் வினோத்திற்கு ஒரு மாதிரியாகிவிட, "அண்ணா" என்று கூற,
அப்போதுதான் நினைவு வந்தவன் போல, "நான் பார்த்துக்கிறேன்" என்று கூறி வினோத்தை அனுப்பி வைத்தான்..
அதற்குள் அவளுக்கு பட்டு புடவை எல்லாம் கட்டி சாந்தி மூகூர்த்ததுக்கு தயார் செய்து இதோ அவளுக்கு பல புத்திமதிகள் என்ற பெயரில் மிரட்டல்கள் விடுத்து மாலதி கண்மணியை தயார் செய்து அவளை அவனுடைய அறைக்குள் விட அங்கோ அவனோ வெறிக்கொண்ட புலி போல ஆதி அவளுக்காக காத்து இருந்தான்..
ஏனெனில் இவள் தானே அனைவர் முன்னிலையில் திருமணத்துக்கு சம்மதம் என கூறினாள்.. அவள் ஒரு வார்த்தை கூறியிருந்தால் இது நடந்திருக்காதே என்ற ஆத்திரம் வரட்டும் அவளுக்கு இருக்குது என்று கடுப்பாக அவன் இருக்க அவளும் பால் தம்பளரோடு அவள் அவனுடைய அறைக்குள் நுழைந்தாள்..
அவள் உள்ளே நுழையும் கடுப்போடு திரும்பி ஆதித்யா கண்களில் அவளின் உடையும், அலங்காரமும், கையில் இருக்கும் பால் தம்பளரை கண்டவனுக்கு அவளை கொல்லும் ஆத்திரம் தான் வந்தது..
