Share:
Notifications
Clear all

எனதுயிரே 24

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

 

அத்தியாயம் : 24

அகிலன் அதைக் கேட்டதும் சாணக்கியன் அவனுடைய சட்டையை பிடித்து, "யாரை பத்தி டா பேசுற" என  அடிக்க பாய பிறகு அங்கிருந்தவர்கள் எல்லாம் விலக்கி விட்டனர்.. அகிலனை அங்கிருந்து மாற்றினர்.. ஆனால் சாணக்கியன் மனதில் அது வடுவாக பதிந்து விட்டது இவன் ஏன் இப்படி கூறினான் என நினைத்தான்..

ஆனால் அப்பொழுதும் அவனுடைய அம்மாவையோ அல்லது அவனுடைய அப்பாவையோ சந்தேகப்படவில்லை...இவன் வேண்டும் என்று பேசுகிறான் என நினைத்தான்..

ஆனால் அந்த பேச்சு அவன் மனதுக்குள் குத்தி கொண்டு இருக்க, எப்படி இதை பற்றி தெரிந்து கொள்வது என தெரியாமல் இருந்தான்..

அன்றைய தினம் தாமரை மற்றும் நெடுஞ்செழியன் இவர்களின் திருமண நாள் அப்படி இருக்க நெடுஞ்செழியன் எப்பொழுதும் அரசியல் கட்சி கூட்டம் மீட்டிங் என அவரை பிடிக்கவே முடியாது ஆனால் தாமரைக்கு அன்றைய தினம் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று இருந்தது..

அதனால் தாமரை தன் மகன் சாணக்கியனிடம், "கண்ணா அம்மா கூட வாடா கொஞ்சம் கோவிலுக்கு போயிட்டு வரலாம்" என்று அழைத்தார்.. அவனும் இது தான் சமயம் இதை பற்றி பேசுவோம் என எண்ணி கொண்டே அவரை அவன் அழைத்து சென்றான்..

"அம்மா நீங்க எப்படி அப்பாவை கல்யாணம் செய்துகீட்டிங்க?" என கேட்டான்..

அதை கேட்டு சிரித்த தாமரை, "இப்போ எதுக்கு கண்ணா அதெல்லாம்?" என்க

"சொல்லுங்க அம்மா.. தெரிஞ்சுக்க தான் கேட்கிறேன்" என கூறினான்..

"நானும், அப்பாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம் சின்ன வயசில் இருந்து காதலிச்சு அப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டு அப்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்_ என்று கூற அதைக் கேட்ட அவன் எதுவும் பேசாமல் வாகனத்தை செலுத்தினான்..

"கோவில் வந்ததும் அம்மா நீங்க இறங்கி பூஜைக்கு வேண்டியது எல்லாம் வாங்கிட்டு நில்லுங்க நான் வண்டியை பார்க் பண்ணிட்டு வந்துடறேன்" என்று கூறவும் அவரும் சரி என இறங்கி கொண்டார்...

அந்த சமயம் பார்த்து அகிலனும் வர அவனை கண்டதும் தாமரையின் கால்கள் தள்ளாடியது.. வெகு காலத்துக்கு பிறகு அவனை காண்கிறார்..அவனுக்கு அவரை நன்றாக அடையாளம் தெரிந்தது..ஆனால் அவருக்கு இருக்குமா என நினைக்கும் போதே அவருடைய அதிர்ச்சியே அவனுக்கு உணர்த்தியது..அவருக்கு அவனை அடையாளம் தெரிந்து விட்டதென ஆம் சிறுவயதில் அறிவழகனை பார்த்தது போலவே அவன் இருந்தான்.. அகிலன் அப்படியே அறிவழகனை உரித்து வைத்து இருக்க அவனும் அவரை கண்டு திகைத்து இறுகி போய் நிற்க அவரையும் அறியாமல் தாமரையின் கண்கள் குளம் ஆகியது..

அவர் செய்த தவறில் ஒன்றே ஒன்று என அவர் உணர்வது அகிலனை பிரிந்தது மட்டும் தான்.. ஏனெனில் அவன் பிறந்த தினத்தில் தான் அவர் வீட்டை விட்டு ஓடிப் போய் நெடுஞ்செழியினை திருமணம் செய்து இருப்பார். அப்படி இருக்க பிறந்தநாள் அன்று கோவிலுக்கு வந்த அவனுக்கு காட்சி கொடுத்தது என்னவோ தாமரை அவரை பல சமயங்களில் டிவியில், கண்டு இருக்கிறான்... ஆனால் இதுவரை அவரின் முகத்துக்கு நேராக நின்றதில்லை இப்பொழுதுதான் அவன் நிற்கிறான் அவனுக்கும் ஒரு வித அழுத்தம் குடிபுகுந்து கொண்டது..

தாமரை திரும்பி சாணக்கியன் வருகிறானா என பதட்டத்தில் பார்த்து, "நீ அகி..அகிலன் தானே.." என கேட்டார்.. அவர் உள்ளம் ஏனோ அதை தெரிந்து கொள்ள வேண்டும் என துடித்தது..

ஆனால் அவனுக்கு அவரை பார்க்க வெறுப்பாக இருக்க, "என்னோட பேரு அகிலன் அறிவழகன்" என்று அவன் பதில் கூறினான்.. அதைக் கேட்டதும் தாமரையின் தலை குனிந்தது..

அவர் நினைத்தது போல அவன் அவருடைய மகன்தான் கண்களில் கண்ணீர் வந்தது.. அதை துடைக்க வேண்டும் என நினைக்காமல், "எப்படி இருக்க??" என்று சுருதி குறைந்த குரலில் கேட்டார்...அவரால் கேட்காமல் இருக்க முடியவில்லை..

"ஓ என்னை அடையாளம் தெரியுதா நான் தெரியலைன்னு நெனச்சிட்டு இருந்தேன் பெத்த பையனை அடையாளம் தெரியாமல் முழிச்சு நிப்பீங்கன்னு எதிர்பார்த்தேன் ஆனால் அடையாளம் கண்டுட்டீங்க அந்த அளவுக்காவது அமைச்சர் நெடுஞ்செழியனோட மனைவிக்கு என்னை எல்லாம் ஞாபகம் இருக்குறதுல சந்தோஷம்தான்.. எனக்கு என்ன ஓடி போனவள் பெத்த பையன் எப்படி இருப்பானோ அப்படி இருக்கேன்" என்றான்..

அந்த சமயம் பார்த்து காரை பார்க்க செய்து விட்டு வந்த சாணக்கியன் பார்வைக்கு இந்த காட்சி பட்டது.. அகிலனை பார்த்தால் கொல்லும் அளவுக்கு ஆத்திரம் அடைந்த அவன், "அம்மா கண்டவன் கிட்ட எல்லாம் உங்களுக்கு என்ன பேச்சு வாங்க" என்று கூறினான்...

சாணக்கியனை கண்டதும் தாமரை அப்படியே சிலை போல நிற்க, அவர் கண்கள் கலங்கி இருந்தது.. தன் தாயின் பதட்டத்தை பார்த்த சாணக்கியனுக்கு ஏதோ சரி இல்லை என தோன்றியது..

அகிலன் சாணக்கியனை சீண்ட வேண்டுமென்று, "கண்டவனா?? நானா எங்கே உன்னோட அம்மாவை பார்த்து அதை சொல்ல சொல்லு பார்ப்போம்.. உனக்கு முன்னாடி அவங்க வயித்துல வந்தவன் எங்கே உன்னோட அம்மாவை கேட்டுப்பார் ஆமாவா இல்லையான்னு?" என்று நக்கலாக கூறினான்..

அதை கேட்டு கொந்தளித்து, "என்ன சொல்ற?" என சாணக்கியன் கூற,

"அன்னைக்கு பாதி தானே பேசினேன்.. மிச்சத்தை பேசுறதுக்குள்ள என்னை வெளியே அனுப்பிட்டாங்க.. அன்னைக்கு நான் சொன்னதை கேட்டதும் அப்படியே பொங்கின? இப்போ பார் நான் இதை சொன்னதும் உன்னோட அம்மா அமைதியா இருக்கிறதை பார்த்தாலே தெரியலையா? உன்னோட அம்மா கிட்ட நான் யார் அப்படின்னு கேளு...

அதே மாதிரி நான் சொன்னேன் இல்ல உன்னோட அம்மா ஏற்கனவே ஒருத்தனுக்கு பொண்டாட்டியா இருந்தவங்க அப்படின்னு அது உண்மையா இல்லையா அப்படின்னு கேளு... அப்படியே உங்க அம்மா வேற ஒருத்தருக்கு மனைவியா இருக்கும் பொழுது அதுல ஒரு குழந்தை பிறந்து அந்த குழந்தை கூட வேண்டாம்னு சொல்லி உன்னோட அப்பனோட காசுக்கு ஆசைப்பட்டு உன்னோட அப்பன் பின்னாடி போனவங்க தான் இந்த அம்மா நான் சொன்னது சரியா இல்லையா அப்படின்னு அவங்க கிட்டயே கேளு..

இதெல்லாம் பொய்யின்னு உன்னோட அம்மா நிரூபிச்சா அதுக்கப்புறம் நீ என் மேல கையை வை... என் மேல இப்ப கையை வெச்சா உன்னோட அப்பனோட வண்டவாளம் எல்லாம் தெருவுக்கு வந்துடும்.. அதனால பப்ளிக் பிளேஸ்ல வச்சு வாய் சவடாலோட நின்னா உனக்கும் நல்லது எனக்கும் நல்லது..

நான் கேட்டதை மட்டும் கேளு இப்பதானே வகையா சிக்கிருக்க உன்கிட்ட இதை சொல்லணும்னு ரொம்ப நாளா யோசிச்சிட்டே இருந்தேன்.. சரி பாவம் விட்டு வைப்போன்னு பார்த்தேன் ஆனால் நீ ஓவரா என்னை செஞ்சிட்ட அப்போ இந்த உண்மையை சொல்லி தானே ஆகணும்..

நான் சொல்றதெல்லாம் உண்மையா பொய்யா அப்படின்னு மட்டும் உன்னோட அம்மா கிட்ட கேளு" என்று மார்பில் கையை கட்டிக் கொண்டு தன் மனதில் கொட்டி இருந்த வன்மத்தை எல்லாம் மிக அழகாக அகிலன் இறக்கி வைத்தான்..

அதைக் கேட்ட சாணக்கியன் அதிர்ந்து, "அம்மா அவன் சொல்றதெல்லாம் உண்மையா?" என கேட்டான்.. ஏற்கனவே அகிலன் பேசிய விஷயங்கள் எல்லாம் மனதுக்குள் அரித்து கொண்டிருக்க, இன்று நேரடியாகவே தன் அம்மாவிடம் அவன் பேசவும் அவர் அதைக் கேட்டு அமைதியாக நிற்கவும் அவனுக்கு குழப்பமாக இருந்தது..

அகிலனும் சாணக்கியனும் மோதுவதை பார்த்த அவரோ அதற்கு மேல் அங்கு நிற்க மனம் இன்றி, "சாணக்கியா நீ வா போலாம் போதும்.. எனக்கு இங்க இருக்க விருப்பமில்லை" என்று கூற,

"அப்படியே போனா எப்படி தாமரை நெடுஞ்செழியன் நான் சொன்னதெல்லாம் உண்மையா பொய்யான்னு உங்க மகனுக்கு சொல்லிட்டு போங்க அதுதான் அவன் கேட்கிறான் இல்ல" என அகிலன் எடுத்து கொடுத்தான்..அவன் முகத்தில் வன்மம் நிறைந்த சிரிப்பு ஒன்று வெளிப்பட்டது..

அதை பார்த்த சாணக்கியன் முகம் கோபத்தில் சிவந்தது அம்மாவின் அமைதி அவனின் ஆத்திரத்திற்கு வடிகால் ஆனது...

அவரோ அகிலன் பேசியதை கேட்டு, "ஏன் இப்படி நான் நிம்மதியா இருக்கறது உனக்கு பிடிக்கலையா? உன்கிட்ட பேசி இருக்க கூடாதுன்னு இப்ப நினைக்கிறேன்" என்று தாமரை கேட்டார்

"எங்க நிம்மதியை தொலைச்சிட்டு நீங்க நிம்மதியா இருக்கணும்னு நான் எப்படி ஆசைப்படுவேன்? அசிங்கப்பட்டு நின்னது நாங்க நீங்க கிடையாது" என்று அகிலன் கேட்டான்..

அதைக் கேட்டதும் தாமரை, "சாணக்கியா வா போலாம் இனி இங்கே ஒரு நிமிஷமும் நிற்க வேண்டாம்" என்று அழைக்க அவனும் கல் போல நின்று, "அவன் சொன்னது உண்மையா பொய்யா அவன் யார் உங்களுக்கு சொல்லுங்க.. எனக்கு இப்போ தெரிஞ்சே ஆகணும்.. அதுக்கப்புறம் இருக்கு அவனுக்கு.. அவன் இவ்வளவு மெதப்புல உங்களைப் பார்த்து சொல்றான் அப்படின்னா நீங்களும் அமைதியாக இருக்கீங்க அப்படின்னா உங்களுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் ஏதோ இருக்கு அதனால தான் அவன் என்கிட்ட மோதறான் அவன் என்கிட்ட தனிப்பட்ட விஷயத்தில் மோதி இருந்தா அவனுக்கு எப்படி பதில் கொடுக்கணும்னு எனக்கு தெரியும் ஆனால் உங்களை பேசி என்கிட்ட நிற்கிறான் அதை என்னால பாத்துட்டு இருக்க முடியாது என்ன உண்மை அப்படின்னு எனக்கு தெரிஞ்சு ஆகணும்" என்று சாணக்கியன் கூற,

இப்படி சிக்கிக் கொண்டோமே என தாமரை நினைத்தார்.. பெற்ற மகன் என அகிலன் முன் நிற்க, தன் கடந்த காலத்தைப் பற்றி துளியும் அறியாத வேறொரு மகன் கேட்கும் பொழுது அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தவித்து நின்றார்..

"அட அவங்க கிட்ட ஏன் கேக்குற என்கிட்ட கேளு நான் பதில் சொல்றேன்.. அவங்க சொல்ல மாட்டாங்க.. அவங்க தாமரை நெடுஞ்செழியன் அப்படித்தானே நீ நினைச்சுட்டு இருக்க.. அவங்க தாமரை நெடுஞ்செழியன் இருக்கிறதுக்கு முன்னாடி தாமரை அறிவழகனா இருந்தாங்க..

ஆனா அறிவழகனை அதாவது என்னோட அப்பாவை அவங்களுக்கு சுத்தமா பிடிக்காது.. அறிவழகன் அவருக்கு பிறந்த என்னையும் பிடிக்காது..

அதனாலதான் எனக்கு நாலு வயசு இருக்கும் போது என்னை விட்டுட்டு பணக்காரனான நெடுஞ்செழியனை தேடி போய்ட்டாங்க..

இன்னைக்கு என்னோட பிறந்த நாள் அந்த அன்னைக்கு தான் அவங்க போய் கல்யாணம் பண்ணிட்டாங்க.. சரி எல்லாரும் பிறந்தநாள் அப்படின்னா பிறந்தநாள் யாருக்கோ அவங்களுக்கு தான் கிப்ட் கொடுப்பாங்க.. நான் உனக்கு ஒரு கிப்ட் கொடுக்கிறேன் நீ அதை என்னன்னு பாரு" என்று கூறி அறிவழகன் மற்றும் தாமரையின் திருமண புகைப்படத்தை எப்பொழுதும் தன் பாக்கெட்டுக்குள் வைத்திருக்கும் அகிலன் அதை எடுத்து சாணக்கியன் முன் காட்டினான்..

அதைப் பார்த்த சாணக்கியன் அதிர்ந்து தன் தாயைப் பார்க்க, அவரோ கண்கள் மூடி கண்ணீர் விட்டு அழுதார்.. அதுவரை தன் தாயின் கைகளைப் பிடித்து நின்று கொண்டிருந்த அவன் அப்படியே கையை விட்டான்..

எப்போதும் எதிலும் தனக்குத்தான் முன்னுரிமை கிடைக்க வேண்டும் என நினைப்பவனும் எதிலும் தனக்கு இரண்டாம் பட்ச உரிமை கிடைப்பதை விரும்பாத சாணக்கியன் இதில் அதிர்ந்தான்.. இந்த செய்தியால் மிக பெரிய அடி சாணக்கியனுக்கு விழுந்தது..

அதை பார்த்து திருப்தியாக அகிலன் சென்றான்..இது தான் அவனுக்கு வேண்டும் அதை சிறப்பாக செய்தான்.. தாமரையோ ஒரு நொடி தன் மூத்த மகனின் மீது எழுந்த உணர்வின் பதட்டத்துக்கு பரிசாக இரண்டாம் மகன் தன்னை வெறுத்து விடுவானோ என அவர் அதிர்ந்தார்..

.



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top