அதிகாயன் 41
அதிகாயனின் அவதாரம்
அத்தியாயம் : 41
கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு பிறகு கொடைக்கானல் சாலையில்,
"ஒன்றா ரெண்டா ஆசைகள்....
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா!!!
அன்பே!!!
இரவை கேட்கலாம்.. விடியல் தாண்டியும்!!
இரவே நீளுமா??..."
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் நனைந்த படியே தன்னவனின் தோள் சாய்ந்து கொண்ட யாழினி, அதன் வரிகளை முணுமுணுக்க அவள் உள்ளத்தின் மகிழ்ச்சியை அவள் மலர் முகத்தில் உணர்ந்துக் கொண்டவனோ அவள் விரலோடு விரல் கோர்த்துக் கொண்டான்.. என்ன மென்மை என தடவிக் கொண்டே அவள் எதிர்பாராத நேரம் தன் இதழால் ஒரு முத்தமும் பதிக்க, "என்னங்க" என்று அவள் நாண, ட்ரைவர் இருப்பதை பார்த்து அவள் கண்ணால் சைகை காட்டினாள்..
சொல்ல போனால் அவளுக்கும் அவன் நெருக்கம் அணைப்பு எல்லாம் பிடிக்க தான் செய்தது. இந்த அன்பை தானே அவளும் எதிர்பார்த்து காத்திருந்தாள். எல்லோரையும் போல தனக்கும் தன் கணவனின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கவே அவளும் தவம் இருந்தாள்.. திருமணம் முடிந்த நாள் முதல் ஒரு கூட்டுக்குள் வைத்து அடைகாத்து கொண்டிருந்தவன், இப்போது தான் கொஞ்சம் தன் இறுக்கம் குறைந்து வெளியே அழைத்து வந்திருக்கிறான்.. நெடுந்தூர பயணம் புதிய இடம் சில்லென்ற காலநிலை என எல்லாமே சேர்ந்து அவன் மனதை மேலும் மாற்றியதோ என்னவோ இதோ எப்போதும் காட்டாத நெருக்கம் அணைப்பும் அன்பும் அவளிடம் காட்டிக் கொண்டிருக்கிறான்.. இருந்தாலும் பெண்ணின் இயல்பான நாணம் அவளை தடுக்க உள்ளூற அந்த அழகிய தருணத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்..
செல்லும் வழியில் ஒரு பக்கம் அழகிய நீரோடை விதேஷ் கண்ணில் பட, "ட்ரைவர் ஸ்டாப் தி கார்" என்று நிறுத்த சொல்ல அவளோ புரியாமல் விழித்தாள்.. 'நன்றாக தானே எல்லாம் சென்றுக் கொண்டு உள்ளது இப்போது ஏன் நிறுத்த சொன்னார்' என அவள் பதற, "கீழ இறங்கு" என அவளையும் இறங்க சொன்னான்.. அவர்கள் முன்னே சென்ற காரில் சாந்தி அம்மா குழந்தையுடன் தனியே செல்ல, "ஏங்க அத்தை, அனிதா, கர்ணா எல்லாம் முன்னாடி போய்ட்டாங்க.. நம்மளை தேடுவாங்க.. ரெசார்ட் பக்கம்னு சொன்னிங்க அப்புறம் இங்க எதுக்கு இறங்கணும் " என்று அவள் தயங்கி தயங்கி கேள்வி கேட்க அவனோ வேலட்டில் இருந்து துப்பாக்கியை வேறு எடுத்து தன் பின் பக்கம் சொருகிக் கொள்ள, "ஐயோ கடவுளே.. இப்போதானே கொஞ்சம் சந்தோஷமா இருந்தேன் அது உனக்கு பொறுக்கலையா " என அவள் புலம்பினாள்..
"நீங்க இங்கையே இருங்க" என்றவன் யாழினியை கைபிடித்து அழைத்துக் கொண்டு அங்கே தெரிந்த ஒத்தையடி சறுக்கல் பாதையில் நடக்க இவளோ என்னமோ ஏதோ என பயந்துக் கொண்டே அவன் பின் சென்றாள்.. அவனோ இயற்கையை ரசித்துக் கொண்டே செல்ல இவளோ யாரை இப்போது வதம் செய்ய போகிறானோ என்ற கிலியில் பின் தொடர்ந்து சென்றாள்.. "என்னங்க குழந்தை பசியில் அழுவானுங்க ரெண்டு பேருக்கும் பால் கொடுக்கிற சமயம் வந்தாச்சு சீக்கிரம் போங்க பெரியவன் கூட பசி தாங்குவான் சின்னவன் தாங்கவே மாட்டான் " என்று அவள் அவனது குணத்தை அறிந்து கூறிக்கொண்டே வர அவனோ, "வாய மூடிட்டு என் கூட வாடி" என்று கூறினான். அவளும் அதன் பிறகு வாயை திறந்தால் தானே எங்கே பாதையை பார்த்தாள். செம்மறி ஆடு போல தன்னவன் வழி பார்த்துக் கொண்டே பின்னே செல்ல அவன் முதுகை மட்டுமே அல்லவா கண்டாள்..
ஒரு கட்டத்தில் அவன் பாதம் நின்றுக் கொள்ள அவளோ அவனையே பார்த்துக் கொண்டிருக்க சட்டென அவன் விலக அவள் விழிகள் அப்படியே ஆச்சர்யத்தில் அகல விரித்துக் கொண்டது.. ஆம் அவள் கண்ட காட்சி அப்படி!! அழகான பச்சை புல்வெளி பூமித்தாய் மேலே ஆடையாக போர்த்தி இருக்க அதன் ஊடே குட்டி குட்டி வண்ண பூக்கள் கண்களை சிமிட்டி பூத்து குலுங்க அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் அழகிய நீர்வீழ்ச்சி அவள் முன் வான் தொடும் உயரத்தில் உயர்ந்து நிற்க இதழ்கள் மகிழ்ச்சியில் தானாக விரிந்தது..
இயற்கையின் அழகே அழகு அதில் மனதுக்கு பிடித்தமானவன் அருகில் இருக்கும் போது இன்னும் பேரழகாகத் தானே தெரியும்!! அப்படித்தான் யாழினிக்கும் தெரிந்தது... கொட்டும் நீரின் சத்தம் நடுங்கும் குளிர் அவள் உடலை தொட்டு செல்லும் அருவியின் சாரல் என தன்னையும் மறந்து தன்னவனின் மார்பு சூட்டுக்குள் தலை சாய்த்துக் கொண்டாள்.. அதை கண்டு அவனுக்கு அதிசயம் அவளாக அவனை நாடும் போது இதெல்லாம் அத்தி பூத்தாற் போல நிகழும் ஒன்று அவள் அவன் அருகே வருவது எல்லாம், " இப்படி நீ வருவன்னு தெரிஞ்சா இங்கேயே இருக்கலாம் போல " என்று அவளை தனக்குள் புதைத்துக் கொண்டு அவளது முகத்தை தன் முகத்தோடு உரசி அவள் காதில் அவன் கூற, என்றும் அவன் கண்டிராத பேரழகில் இன்று அவனவள் அவன் கண்ணுக்கு தெரிய இதோ சாரல் தீண்டி குளிர்வித்த தன்னவளின் மலரிதழை தன் இதழ் கொண்டு அணைத்துக் கொண்டான்..
நடுங்கும் பெண்ணவளின் சில்லென்ற கைகள் அவன் வலிய கரத்தில் பின்னி பிணைந்துக் கொள்ள மற்றொரு கரமோ அவள் மெல்லிடையை தழுவிக் கொள்ள, வெளியே குளிர் உடலுக்கு மட்டும் தெரிய இந்த அன்பான ஒரு இதழ் முத்தம் இருவரின் உள்ளத்தையும் குளிர்வித்தது... தனிமை அவர்களுக்கு துணையாக பட்சிகள் கூட்டம் ரீங்காரம் மெல்லிசை போல ஒலிக்க அவன் இதழ் தேடல் மெல்ல அவள் கழுத்துக்கு கீழ் இறங்க வலிய கரங்கள் அவளை விலக விடாமல் சிறைபிடித்துக் கொள்ள பெண்ணவள் மாயவன் செய்யும் மாயத்தில் மயங்கி போனாள்..
அவன் தீண்டல்களில் உணர்ச்சிகள் மெல்ல வெடிக்க இருக்கும் இடம் வெட்ட வெளி என இருவருக்கும் தடை போட தங்களை கட்டுபடுத்திக் கொண்டனர்.. அவன் பார்வையில் அவள் முகம் செம்மையை பூசிக் கொள்ள இப்போதே அவளை அள்ளி எடுத்துக் கொள்ள துடித்தான்...இருக்கும் இடம் விட்டு நீங்க அவளுக்கோ மனம் இல்லை.. சிறுபிள்ளை போல அருவியில் குளித்து விளையாட அவள் ஆசை கொள்ள அவனோ வேறு மனநிலையில் இருக்க எப்படி சொல்வது என்று தயங்கி அவன் முகம் பார்த்தாள்.. அவள் சொல்லாமலே அவள் உள்ளம் படித்தவனோ, "வா சேர்ந்து குளிப்போம்" என அவளை பூப்போல கையில் ஏந்திக் கொண்டவன் இதோ நெருங்கி விட்டான் நீரின் அருகில்..
இதோ இருவரும் அருவி நீரில் ஒன்றாக நனைய திரவ நிலை பனிக்கட்டி போல அருவி நீர் இருவர் தேகத்தை உறைய வைக்க குளிர் தாங்காமல் தன்னவனை தோளோடு இறுக்கி அணைத்துக் கொண்டாள் மங்கையவள்..அவள் கண் பார்த்தாலே கவிழும் மாயவனுக்கு தன்னவளின் இந்த நெருக்கம் கிறக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்குமா??ஒரே கிறக்கமாக இருக்க அவளோ கொஞ்சம் கொஞ்சமாக விளையாட துவங்கி விட்டாள்.
அவனும் அவளை விட்டு ரசிக்க துவங்கி விட்டான். தான் அருகில் இருந்தால் அவளால் ரசிக்க இயலாது போகும் என அவன் நினைக்க அவளின் பாதம் தொட்ட நீர் மெல்ல மெல்ல மேலே செல்ல உச்சி முதல் நனைந்து விறைக்கும் நிலைக்கு ஆளானாள்.. ஆனாலும் அதை தாங்கிக் கொண்டவள், நீரில் துள்ளி விளையாட அதன் அழகை ரசித்துக் கொண்டே ஒரு பாறையின் மீது சாய்ந்து நின்றுக் கொண்டான் விதேஷ்.. தனியாக நீரில் ஆடி கொண்டிருந்தவள் எங்கே தன் துணை என தேட அவனோ கொட்டும் நீரில் நனையாமல் ஒதுங்கி நின்றுக் கொண்டிருக்க அவனை கையோடு இழுத்துக் கொண்டு நீருக்கு வந்தாள்..
"வேணாம் யாழினி நீ விளையாடு.." என்று அவன் நகர அவன் இடையோடு பின்னிருந்து அணைத்துக் கொண்டாள்.. "இனி நடப்பதற்கு நான் பொறுப்பில்லை" என்று இதழோரம் மெல்லிய புன்னகை நெளிய திரும்பி அவள் முகம் ஏந்திக் கொண்டவன் கொட்டும் அருவியின் நடுவே செல்ல படபடவென பட்டாசு தலையில் வெடிப்பது போல நீர் இருவர் மேல் விழ நீரை தாண்டி உள்ளிருக்கும் பாறையின் வளைவுக்குள் அவளை இதழோடு இதழ் பொருத்தி இழுத்து சென்று விட்டான் அவள் மாயவன்..
கொட்டும் அருவியோ திரை போல இருவருக்கும் வெள்ளை நிற சுவர் எழுப்பி விட இது தானே அவனும் எதிர்பார்த்த நேரம் என தன் மென்மையை விடுத்து துவங்கினான் தன் அதிரடி ஆட்டத்தை... காண காண கண்ணுக்கு திகட்டாத அவன் பேரழகியை இவ்வளவு நேரம் விட்டு வைத்ததே பெரிது என கண்ணால் கண்டு ரசித்ததை இதழ் கொண்டு ஆராதிக்க பெண்ணவள் தன் வெட்கம் உடைத்து தன்னவனோடு இணைந்துக் கொண்டாள்.. கொட்டும் அருவியில் யாரும் இல்லா சூழலில் அவர்கள் ஆதாம் ஏவாள் காலத்துக்கு சென்று விட இப்படியொரு இனிய சங்கமம் இருவரும் இதுவரை கண்டதே இல்லை.. அவ்வளவு அன்பை காதலை மோகத்தை கொடுத்து அவளை திக்கு முக்காட வைத்து விட்டான்.. விலக முடியாமல் மீண்டும் மீண்டும் அவளையே நாட நேரம் போவதே தெரியாமல் அவன் தேடலை தேடிக் கொண்டே இருந்தான்.. களைந்த தன்னவள் முகம் கண்டவன் தன் தேடலுக்கு சிறு இடைவெளி கொடுக்க அதே நீரில் மீண்டும் நீராடி காருக்கு வந்து சேர்ந்தனர்..
அங்கே ரெசார்ட்டில் இவர்களின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்த சாந்தி அம்மா இருவரும் ஈரம் சொட்ட சொட்ட இறங்கியதை கண்டதும் அவருக்கு எல்லாம் புரிந்தது.. இப்படி இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதை காணத்தானே அவரும் விரும்பினார்.. "குட்டிகள் இரண்டும் தூங்கிட்டாங்களா அத்தை" என்று நடுங்கிக் கொண்டே யாழினி கேட்க, "ஆமாம் டா தூங்கிட்டாங்க.. நீ போய் பிரெஷ் ஆகு மா.. அவங்க என் ரூமில் தான் இருக்காங்க அனிதாவும் கர்ணாவும் கூட இருக்காங்க இன்னிக்கு இரவு இரண்டு பேர குழந்தைகளும் என்கூட இருக்கட்டும் நான் தனியா தானே இருக்கேன்" என்று சொல்ல சரியென கூறியவள் கணவனை பார்த்து நகைத்துக் கொண்டே அவளது அறைக்கு சென்றாள்..
அவனும் அவள் பின்னே கள்ள சிரிப்போடு நடக்க அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் காலடி எடுத்து வைத்ததுமே அவன் விட்டதை தொடர்ந்து விட்டான்.. ஏதோ பிள்ளைக்கு பசிக்குமே என உணவுக்கு மட்டும் சிறு இடைவேளை கொடுத்தான். அப்போதும் அவளுக்கு ஊட்டி விடுகிறேன் என்ற பேரில் படுத்தி எடுத்து விட்டான்.. இவனுக்கு இப்படி ஒரு அவதாரம் கூட எடுக்க தெரியுமா என அவனவளே அதிசயமாக பார்த்தாள்..
கர்ணா தன் அறையில் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்க "கொடுங்க நான் எடுத்து வைக்கிறேன்" என்று அனிதா வாங்கி அவனுக்கு உதவ தன் இருக்கையில் சென்று அமர்ந்தான்.. அவனும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான்.. அரக்கியாக தனக்கு கிடைத்த முதல் மனைவி சாதனாவிற்கும் இப்போது இறக்கை இல்லாமல் இருக்கும் தேவதை பெண்ணிவள் அனிதாவிற்கும் உள்ள வேறுபாட்டை... எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்றும் தன்னை ஏற்றுக் கொண்டாள். இப்போது தான் ஒரு செல்வந்தன் என்று தெரிந்தும் அதே போல எந்த மாற்றமும் இன்றி தன்னை ஏற்றுக் கொண்டாள்..
அதை விட அவள் பெற்றெடுக்காத பிள்ளை என்று குழந்தையை ஒதுக்கி வைக்காமல் தன் உயிராக பார்த்துக் கொள்கிறாள். இவள் கடவுளின் இன்னொரு அவதாரம் என்றே அவனுக்கு தோன்றியது.. உண்மையான அன்பு என்ன என்பதை அவளிடம் மட்டுமே தான் அவன் கண்டான்.. அனிதாவுக்கு குழந்தை கிடைத்தது முதல் அவள் அக்குழந்தையை விட்டு ஒரு அடி நகரவில்லை..அக்குழந்தை கூடவே இருக்க கர்ணா இரண்டாம் பட்சம் ஆகி போனான். அவனுக்கு அது உணர்ந்தாலும் மனைவியின் செயல் அவனுக்கு பிடித்து தான் இருந்தது..மனைவி குழந்தையை பார்த்துக் கொள்வதை பார்த்து அவள் நெற்றியில் இதழ் பதிக்க அனிதா சிரித்தாள்..
என்னதான் அனிதா அந்த குழந்தைக்கு தாய் என்றாலும் இரு குழந்தைகளுக்கும் பசி ஆற்றுவது யாழினி தான்..ஆம் யாழினி தான் இரு குழந்தைகளுக்கும் வேறுபாடு காட்டாமல் தனக்கு பிறந்த குழந்தைகள் போல இருவருக்கும் பசியாற்றும் வேலை அவளுடையது. அதன் பிறகு அவரவர் குழந்தையை அவரவர்கள் பார்த்துக் கொள்வார்கள். மேலோட்டமாக சாந்தி அம்மா தன் இரு மருமகளையும் கவனிப்பார். கூடுதலாக அவர் அனிதாவின் பக்கம் தான் இருப்பார். அவளுக்கு உதவிக்கு ஆள் வேண்டுமே என்று சாந்தி அம்மா கூடவே இருப்பார்..
குழந்தை பிறந்து 6 மாதம் வரை அவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. குழந்தைகள் கூடவே அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்க ராவணன் தான் அவர்களை இங்கு அழைத்து வந்தான். அதற்கு ஒரு காரணம் உண்டு. கர்ணா டிரஸ்ட் இப்பொழுது தமிழகத்தின் பல பகுதிகளில் தொடங்கியிருப்பதால் அதன் ஒரு கிளை கொடைக்கானல் பகுதியிலும் உள்ளன.. அந்த ஒரு கிளையின் ஒரு விழாவிற்காக தான் இவர்கள் இங்கு வந்து இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவும் இங்கேயே வைத்துக் கொள்ளலாம் என ராவணன் கூறியிருக்க மொத்த குடும்பமும் சரி என கூறவும் அவர்களை எல்லாம் அழைத்துக்கொண்டு இங்கு வந்து விட்டான்..
காலை குழந்தைகளுக்கு பெயர் சூட்டு விழாவிற்கு முக்கிய பிரமுகர்கள் வருகை தந்திருக்க குடும்பமாக புன்னகை பூக்க வரவேற்றனர்.. கர்ணா ட்ரெஸ்டின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் அங்குள்ள குழந்தைகள் என அரங்கமே நிறைந்து வழிந்தது.. அம்மையப்பன் எவ்வளவு பகையை சம்பாதித்து வைத்திருந்தாரோ அதற்கு ஒரு படி மேலே போய் இப்படி குறையாத சொந்தங்களையும் தான் சேர்த்து வைத்து சென்றார்.. சாந்தி அம்மாவின் சொந்தமே இந்த குழந்தை செல்வங்கள் தானே.. அவர்கள் முன்னிலையில் தன் பேர குழந்தைகளுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தார்..
மேலும் தன் கணவன் இது போன்ற நல்ல விஷயங்களையும் செய்திருக்கிறார் என்பதை அறிந்த சாந்தி அம்மாவுக்கு தன் கணவனின் மீது உள்ள கோபம் போய் அவரும் இதுபோல திரும்பி தன்னிடம் வந்து விட மாட்டாரா என எண்ணிக்கொண்டார். தன் கணவரிடம் இந்த மாற்றத்தை தான் அவர் எதிர்பார்த்தார். ஆனால் என்ன அவரால் தன் கணவருடன் இருந்து இந்த மாற்றங்களை ரசிக்க முடியவில்லை. அது பரவாயில்லை எப்படி இருந்தாலும் விதை அம்மையப்பன் போட்டது அது இப்பொழுது விருட்சமாக வளர்ந்து தன் குழந்தைகளால் வளர்ந்து கொண்டிருப்பதை பார்க்கவும் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இன்று வரையும் இராவணனின் செயல்கள் சாந்திக்கு கூறவில்லை அது அவன் வேண்டாம் என எண்ணிக்கொண்டான்.
தன் தாய் எண்ணியது போல அவர் எண்ணப்படி நான் நல்லவனாகவே இருந்துவிட்டுப் போகிறேன் இப்பொழுதுதான் அவர் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார் அந்த சந்தோஷத்தை கெடுக்க வேண்டாம் என எண்ணிக்கொண்டான். மேலும் கருணா, அனிதா, யாழினி அவர்கள் அவனிடம் இந்த தொழிலில் இனி நீங்கள் இருக்கக்கூடாது என்று கூறியிருக்க அவன் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுகிறேன் என்று வாக்குறுதியும் கொடுத்திருக்கிறான்.
கர்ணா அனிதா தம்பதிகள் முதலில் குழந்தையை எடுத்துக் கொண்டு வர தங்கத்தில் தேன் வைத்து, "மித்ரேஸ்வர்" என்ற நாமத்தை காதில் ஓதினார்.. விதேஷ் யாழினி தம்பதிகள் அடுத்து வர அவர்களின் செல்வத்திற்கு, "ருத்ரேஸ்வர்" என்ற நாமத்தை வைத்து மகிழ்ந்தார்.. அந்த டிரஸ்ட்டில் உள்ள குழந்தைகள் கைதட்டி ஆரவாரம் செய்ய அவர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்தனர்.. அன்றைய உணவையும் அவர்களுள் ஒருவராக அவர்கள் கூடவே அமர்ந்து உண்டு முடித்தனர்.. தங்கள் குழந்தைகளை போல அனைத்து குழந்தைகளையும் இரு தம்பதியரும் கொஞ்சி மகிழ்ந்தனர்.. இங்கேயே இருந்து விட்டால் என்ன என்றே அனைவருக்கும் தோன்றியது.. ஒவ்வொரு மாதமும் இங்கே வந்து இவர்களுடன் ஓரிரு நாள் தங்கி அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டனர்.. மிகவும் அடிபட்ட அவர்களின் வாழ்க்கை இப்பொழுது வசந்தம் வீச அவர்கள் இப்பொழுது போல எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என வாழ்த்தி விடை பெறுவோம் நன்றி வணக்கம்...
** சுபம்**
