இராட்சதன் 21
அத்தியாயம் : 21
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு..
"அப்பா இது பாவி சிறுக்கியால் ஒரு பயலும் நம்மளை மதிக்க மாட்டேங்கிறான் எல்லாத்துக்கும் காரணம் இவ ஒருத்தி தான்..ரோட்ல கால் வைக்க முடியல எல்லோரும் கிண்டல் பண்றாங்க...நம்ம மேல இருக்கிற பயம், மரியாதை எல்லாம் போயிடுச்சு எல்லாத்துக்கும் காரணம் அவ தான்" என்று வீடே அதிரும்படி கத்தினான் தினகரன்..
சூர்ய பிரகாஷ் அடித்த அடியில் அவனுடைய உடலில் முக்கிய பகுதிகள் எதுவும் இயங்காது என்றும் இனி அவன் காலம் முழுவதும் எந்தவிதமான பெண்ணுடனும் தொடர்பு வைத்துக்கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்..
இந்த பேச்சு ஊர் மக்கள் இடையே பரவி விட தினகரனை பார்க்கும் போதெல்லாம் கிண்டல் செய்ய துவங்கி விட்டார்கள்..அவன் வாழ்க்கையிலேயே முக்கியமான பக்கமே இல்லாமல் போய்விட்டது இனி அவனுக்கு கல்யாணம், அவன் வாழ்க்கையில் பெண் என்ற ஒரு பக்கமே இருக்காது என்ற நிலையில் கிட்டத்தட்ட மூன்று வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவன் இப்பொழுது தான் வீடு திரும்பி இருக்கிறான்..ஆனால் வெளியே தலை காட்ட முடியாதபடி அவன் இருக்கிறான்..
அப்படி இருக்க, அவனை பார்க்கும் நபர்கள் எல்லாம் கேலி செய்ய அவனுக்கோ அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை அவனை விட வயதில் சிறியவர்களும் சரி, பெரியவர்கள் வரை அவனை கிண்டல் செய்ய துவங்கினார்கள் யாருக்கும் அவன் மீது பயமில்லாமல் போய்விட்டது...
அப்படி இருக்க இப்படி அவனோ தன் தந்தையிடம் வந்து கத்தினான்...அவனுடைய அப்பா உலகநாதன் அதைவிட மோசமான நிலையில் இருந்தார்...அவர் மகனின் சங்கடத்தை எல்லாம் கேட்கும் நிலையில் இல்லை...
ஆம் இந்த பிரச்சனை நடந்து முடிந்த பின் ஒரு வாரத்துக்கு பின் நேராக ஊர் பொதுமக்கள் ரத்தினத்திடம் சென்று ,"நீங்கள் இந்த ஊரை நிர்வகிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொள்ள அவரோ," திரும்பத் திரும்ப மடத்தனம் பண்ணாதீங்க அவங்கவங்களுக்கு சுதந்திரம் இருக்கு யாரும் யாரையும் நிர்வகிக்க வேண்டாம் இந்த ஊர் அது பாட்டுக்கு இருக்கட்டும் ஏதாவது பிரச்சனைனா எல்லாரும் கலந்து ஆலோசனை பண்ணலாம் அதோட நிறுத்திக்குவோம் மத்தபடி ஒருத்தன் தலைவனா இருக்கணும் அவன் சொல்றத தான் கேக்கணும் அவன் வைக்கிறதுதான் சட்டம் அதை எல்லாரும் பின் தொடரணும் அப்படிங்கிற மூடத்தனமான விஷயங்களை எல்லாம் ஒதுக்கி வைப்போம்.. முக்கியமா பெண்களுக்கு கல்வி ரொம்ப முக்கியம் அதை கொடுங்கள் பசங்களுக்கும் பண்பாடு என்ன அப்படின்னு சொல்லி கொடுங்க யாராவது தப்பா நம்ம கிட்ட நடந்துக்கிட்டா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்லுங்க அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்காதீங்க" என்று கூற அது பொது மக்களுக்கு சரி என்று பட்டது..
இன்னும் அந்த காலத்து ஆட்கள் எல்லாம் அரசல் புரசலாக பேசிக் கொண்டாலும் இந்த காலத்து மக்களுக்கு ரத்தினம் கூறுவது தெளிவாக புரிந்தது.. அவர்களுக்கும் இங்கு நடப்பதை எல்லாம் தவறு என்று தெரியும் தானே அதனால் அதுதான் நல்லது என்றும் முடிவு செய்தனர்...
அதன்படி அவர்கள் அவர்களுடைய வாழ்க்கை வாழ துவங்கி விட்டார்கள் இதில் உலகநாதனுக்கு என்ன பிரச்சனை என்றால் உலகநாதன் மதிக்கவில்லை அதுதான் பிரச்சனையாக இருந்தது..
ஆம்.. அவர் மீதான மரியாதை அந்த ஊரில் போய்விட்டது அவர் மீதான பயம் போய்விட்டது அவரை கண்டதும் எழுந்து நிற்கும் ஆட்கள் எல்லாம் கால் மீது கால் போட்டு கண்டு கொள்ளாமல் அமர்ந்திருப்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை...
இந்த பிரச்சனை எல்லாம் நடந்து முடிந்து ஒரு பத்து நாட்களுக்குப் பிறகு உலகநாதன் வெளியே சென்று கொண்டிருக்கும்போது ஒரு இருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்... இவரோ தடுத்து நிறுத்தி ,"சண்டை எல்லாம் போடக்கூடாது இதெல்லாம் வெளியே வச்சுக்கணும் இல்லை தொலைச்சிடுவேன்.. இந்த ஊருக்குன்னு ஒரு மரியாதை இருக்கு" என்று கூற உடனே அவர்கள் ,"இதைக் கேட்க நீங்க யாரு நாங்க அடிச்சுப்போம் சேர்ந்துப்போம் அதைக் கேட்க உங்களுக்கு உரிமை இல்லை.. இந்த ஊர் மரியாதை தான் உங்க குடும்பமே சேர்ந்து நாரடிச்சிருச்சே" என்று முகத்தில் அடித்தது போல கூறினர்..
அதைக் கேட்ட உலகநாதன் ,"யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்கன்னு தெரியுதா???" என்று கொந்தளித்து பேச அவர்களுடன் ஒன்று இரண்டு ஆட்கள் திரண்டு நின்று," யோவ் பார்த்து பேசு" என்று கூற உலகநாதன் ," மரியாதை இல்லாம பேசிட்டு இருக்கான்" என்று கூற
அவர்களோ அவரை பார்த்து,"உனக்கு என்னய்யா மரியாதை வேண்டி கிடக்கு.. நாங்க சொன்னது உன்னைத்தான்.. உன்ன மாதிரி ஆளு எல்லாம் இந்த ஊர்ல இருக்கவே அருகதை இல்லாத ஆளுங்க.. ஏதாவது பஞ்சாயத்து தலைவர் அது இதுன்னு பேசிட்டு வந்த அவ்வளவுதான் மரியாதை கெட்டுடும் இனி இந்த ஊருக்கு பஞ்சாயத்து தலைவர் அப்படின்னு ஒரு ஆளே கிடையாது உன்ன மாதிரி ஒரு கேவலமான ஒரு ஆள் அந்தப் பதவியில் இருக்கிறத நாங்க யாரும் விரும்பல புரியுதா" என்று சண்டை போட்ட இரு நபர்களும் கூற
அதைக் கேட்ட உலகநாதன் ,"என்ன பேசிட்டு இருக்கான்னு கேட்டீங்க இல்ல" என்று அவர் கொந்தளிக்க பதிலுக்கு அந்த இரு நபர்களும் சண்டை கட்ட தான் செய்தார்கள்...
இவரும் பதிலுக்கு தரை இறங்கி வாக்குவாதம் செய்ய,"சண்டையை விடு உலக நாதா அவனுக சொன்னதுல ஒரு உண்மையும் இருக்கு இனி இந்த ஊருக்கு எந்த சட்ட திட்டமும் கிடையாது அதை நாங்களா கூடி சேர்ந்து முடிவு பண்ணி இருக்கோம் பஞ்சாயத்து தலைவர் பதவியும் கிடையாது எங்கள மாதிரி தான் இனி நீயும்.. அதனால அவங்க சண்டை போட்டா போட்டுட்டு போறாங்க அவங்களே அடிச்சுப்பாங்க சேர்ந்துக்கோங்க அதை கேட்க உனக்கு உரிமை இல்லை இது நான் சொல்றேன்னு நான் எடுத்த முடிவு என்று எடுத்துக்காத நம்ம கிராமமே சேர்ந்து எடுத்த முடிவு" என்று கூற
அதை அவரால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை," யாரை கேட்டு முடிவு பண்ணீங்க ??" என்று அவர் கொந்தளிக்க,
"யாரை கேட்கணும்???" என்றார் அவர்..
"இத்தனை நாள் அந்தப் பதவியில் இருந்த என்னை கேக்கணும்" என்று கூற அதற்கு ஊர் பொதுமக்களோ அவரை பார்த்து சிரித்து,"கொல்லை புறமா இந்த பதவியில வந்த உனக்கு அவ்வளவு தான் மரியாதை உன்னோட வழியிலே தான் உன்னோட பசங்களும் இருக்காங்க உன்னோட வீட்டு அழுக்கை முதலில் துடை அதுக்கு அப்புறம் மத்தவங்க வீட்டு அழுக்கை துடைக்கலாம் பஞ்சாயத்து பண்ணலாம்..." என்று கூறி விட அவர் முகம் இருண்டது... அவருக்கு மிகவும் அவமானமாக இருந்தது...
அவர் இப்படி ஒரு நொடியை எதிர்பார்க்கவே இல்லை எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு ஆசைப்பட்டு எவ்வளவு தந்திரத்தோடு இந்த இடத்திற்கு வந்திருப்பார் அந்த இடம் போனதே என்ற வருத்தம் அவருக்கு இருந்தது ஏதாவது ஒருவர் இருவர் என்றால் ஏதாவது செய்திருக்கலாம் ஆனால் ஒட்டுமொத்த கிராமமே ஒன்று கூடி நிற்கும் பொழுது அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை..
