அதிகாயன் 23
அத்தியாயம் : 23
அது அவளது கணவன் தானா என பத்து முறையாவது அவள் பார்த்திருப்பாள். அந்த பத்து முறையும் அது அவன் தான் என அவளுக்கு உணர்த்த அவளது கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டியது. இதற்குத்தானா இன்றைய நாள் ஏனோ அவளுக்கு சூனியமாக இருந்தது. அவளது மனதின் பாரத்திற்கான காரணம் இப்பொழுது அவளுக்கு புரிந்து போனது..
வேகவேகமாக அந்த பேப்பரை படித்து பார்த்தாள்.ஒருவேளை அவனாக இருக்கக் கூடாது என்ற பரிதவிப்பு இருந்தது கண்களில் அவன் மட்டும் தான் அவளுக்கு பட கருணா டிரஸ்டின் உரிமையாளர் திரு.கருணா மற்றும் அவரது மனைவி சாதனா என்ற வார்த்தையை படித்த யாழினிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அது அவளது கணவன் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை அவன் வேறு ஒரு பெண்ணுடன் நிற்கிறானே என எண்ணினாள். இதில் என்னமோ ஒரு பித்தலாட்டம் இருக்கிறது அவனை நேரில் சந்தித்து ஆகவேண்டும் என அவள் எண்ணிக்கொண்டாள்..
அவளால் இதைப் பார்த்துக்கொண்டு அப்படியே கடந்துவிட முடியவில்லை. அவன் வரும் நாளுக்காக காத்து கொண்டு இருக்கவும் முடியவில்லை. அவனை நேரடியாக சந்தித்தே தீர வேண்டும் இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று எண்ணினாள். அதற்கு ஒரு காரணமும் உண்டு அந்த வீட்டை பொறுத்தவரை அனைத்து வித சௌகரியங்களும் உண்டு. ஆனால் தொலை தொடர்பு இல்லை உலகத்தில் என்ன நடக்கிறது என்ற பொது அறிவு கூட அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது வெளியே என்ன நடந்தாலும் இவர்களுக்கு தெரியாது..
ஏதாவது அத்தியாவசியம் என்று நினைத்தால் கூட அவனின்றி வேறு யாருக்கும் அழைக்கவும் முடியாது. ஒருவேளை உடல் நிலை சரியில்லாமல் போனால் மட்டுமே குறிப்பாக அந்த ஒரே ஒரு மருத்துவமனையை மட்டும் தான் அழைக்க முடியும் மற்றபடி வேறு யாருக்கும் அந்த வீட்டிலிருந்து யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது... அந்த வீட்டில் என்ன தேவை என்றாலும் அங்கு நிகழ்த்திக் கொள்ள முடியும் என்பதால் யாருக்கும் பெரிதாக தெரியவில்லையோ என்னவோ அப்படி தேவைகள் இதுநாள் வரை வந்ததில்லை அவர்களும் அந்த மாளிகையை விட்டு வெளியே வந்தது இல்லை...
ஒருவேளை இந்திய வரைபடத்தில் இப்படி ஒரு வீடு உள்ளது என்பது கூட யாருக்கும் தெரியாதோ என்னவோ..! அப்படித்தான் அவன் ஒரு வாழ்க்கையை அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு வாழ பழகி கொடுத்து வருகிறான் என்று தெரியாது. எதற்காக அவன் அந்த சாம்ராஜ்யத்தை கட்டி வாழ்ந்து வருகிறானோ எதற்காக தன்னை மறைத்துக் கொண்டு ராவணன் இருக்கிறானோ ஒன்றும் விளங்கவில்லை.
அவன் என்ன செய்கிறான் என்று அவளுக்கோ அல்லது அவனுடைய தாய்க்கோ எதுவுமே தெரியாது.. ஆனால் எல்லா சௌகரியங்களும் மட்டும் உண்டு. எதுவுமே தெரியாமல் தான் இத்தனை நாட்கள் இருந்து வர இப்பொழுது இப்படி ஒரு காட்சியை கண்டதும் அவள் எதுவுமே மேற்கொண்டு யோசிக்க வில்லை. அவனைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவனை பார்க்கும் பொழுது பயப்படும் அவளது குணத்துக்கும் அவனுக்கு நான் பொருத்தமல்ல என்று அவளின் அந்த எண்ணத்துக்கும் இடையே ஊசலாடியவள் இதைப்பற்றி ஏதாவது தெரிந்தே ஆக வேண்டும் என்று எண்ணினாள்..
எத்தனை நேரம் அவள் அந்த கோவில் வாயிலிலேயே அமர்ந்திருப்பாள் என அவள் அறிவாள் ஆனால் அவளது கண்கள் மட்டும் வேதனையை சுமந்து இருந்தது. அழுது அழுது அவளது முகம் வீங்கியிருந்தது. தன் வேதனையை கூட யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்ற பாரம் அவளை அழுத்தி அது ஒரு ஆள் கூட அவளது தோள் சாய இந்த உலகத்தில் இல்லையே தோள் சாய உள்ளவன் இந்த காரியத்தை செய்து இருக்க அவளால் எதையுமே யோசிக்க முடியாத நிலையில் இருந்தாள்.
அவளுக்கு அந்த இடத்தில் இருக்க கூட பிடிக்கவில்லை அவளுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும் உண்மை தெரியாத பட்சத்தில் அவள் அங்கு இருப்பதில் நியாயம் இல்லையே யாருக்காக இந்த வீட்டில் அவள் இருக்கிறாள்?? எதற்காக இந்த வாழ்க்கை கூண்டில் அடைபட்ட கிளி போல வாழ வேண்டும் அவன் ஒருவனுக்காக தானே அவன் என்ன செய்கிறான் என்ன தொழில் செய்கிறான் எதுவுமே அறியாமல் ஒரு வாழ்க்கை வாழ வேண்டுமா ஒருவேளை அவனுக்கு வேறு ஒரு குடும்பம் உள்ளதா அதற்காகத்தான் எங்களை எல்லாம் இப்படி சிறை கைதியாக அடைத்து வைத்திருக்கிறானோ என எண்ணினாள்.
அப்படி எண்ணி அவளுக்கு அங்கு இருக்க துளிகூட விருப்பம் இல்லை இந்த நொடி அவ்விடம் விட்டு நகர வேண்டும் எப்படியாவது இந்த இடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும் என எண்ணிக்கொண்டு அவள் திரும்பி நின்று அந்த அம்மனை பார்த்து நீயாவது என் கூட இரு தாயே என்று வேண்டிக் கொண்டவள் வேகமாக அங்கிருந்து வந்த அவள் வீட்டிற்குள் நுழைய அப்பொழுதுதான் சாந்தி அம்மா உணவருந்திக் கொண்டிருந்தார். அவரை கண்டதும் வேகமாக தன் கையிலுள்ள பேப்பரை அவர் காணாமல் சுருட்டி பிடித்தவள் கலங்கிய விழிகளை வேகமாக துடைத்துக்கொண்டாள். "என்னாச்சு ஏன் ஒரு மாதிரியாக இருக்க சாப்பிட்டியா??" என்று பரிவுடன் அவர் கேட்க அவரிடம் உண்மையை கூறலாமா என்று கூட எண்ணினாள்.
ஆனால் அவரது பரிவான முகத்தை கண்டவளுக்கு மேற்கொண்டு எதுவும் கூற முடியவில்லை. பாவம் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் மகன் செய்த விஷயத்தை கூறினால் அவரது உடல்நிலை பாதிக்கப்படும் என அந்த நிலையிலும் எண்ணினாள். ஆனால் அவர் பரிவுடன் பேசும் பொழுதே அவளுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது எங்கே இங்கே நின்றால் ஏதாவது உளறி விடுவோமோ என எண்ணினாள்.
" என்னம்மா நான் கேட்டுட்டே இருக்கேன் நீ பதிலேதும் சொல்ல மாட்டேங்குற ஏதாவது பிரச்சனையா??" என்று கேட்க அவளோ இல்லை என்பது போல தலையாட்டினாள். ஆனால் பெரியவருக்கு யாழினியின் வாடிய முகம் ஏதோ உறுத்த, "அவன் ஏதாவது போன் செய்தானா??" என்று கேட்க அவளோ இல்லை என்று கூற அதற்குள் அவளுக்கு அழுகை முட்டியது. அதைக்கண்ட சாந்தி அம்மா, "அவன் கிட்ட விஷயத்தை சொல்லி அவனை வர சொல்லட்டுமா??" என்று கேட்க அவளோ, "வேண்டாம்" என்று தலையாட்டினாள்..
மேற்கொண்டு அங்கு நின்றால் அவர் ஏதாவது கூறுவார் என்று எண்ணி அவரை மனப்பூர்வமாக அவாய்ட் செய்ய நினைத்தவள், "எனக்கு தலை வலிக்கிற மாதிரி இருக்குது அத்தை நான் கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்க போறேன்" என்று கேட்க சாந்தி அம்மா அவளது முகத்தை பார்த்துவிட்டு," சரி போய் எடுமா" என்று கூற அவளும் விட்டால் போதும் என்று வேகமாக அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாள். சென்றவுடன் அவளது அறையில் நுழைந்து அவள் அழுத அழுகை அவளுக்கு மட்டும்தான் தெரியும். அழுது அழுது அவள் எப்படியோ அந்த நாளை அங்கு கடந்து விட்டாள்.
மறுநாள் காலை எப்பொழுதும் போல எழுந்தவள் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வந்தவள் காலையிலேயே கீழே இறங்கி வந்தாள். அங்கு இன்னும் சாந்தி அம்மா எழுந்திருக்க வில்லை என்பதை உணர்ந்த அவள் அவரிடம் கூறாமல் வீட்டை விட்டு வெளியே வந்தவள் நேராக அந்த பெரிய மாளிகையின் பெரிய கோட்டை தாண்ட முயல வேலையாள் வேகமாக ஓடி வந்தான். " அம்மா என்ன விஷயம் எங்க போறீங்க??" என்று வினவ, "எனக்கு ஹாஸ்பிடல் போகணும் கொஞ்சம் ட்ராப் பண்ண முடியுமா??" என்று கேட்க அவனோ யோசித்தான். "சார் எதுவும் சொல்லலையே அம்மா" என்று கூற, "சார் சொன்னா தான் கூட்டிட்டு போவீங்களா?? எனக்கு இப்போ உடம்பு முடியல. எனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா அவரு உங்களை சும்மா விடுவார் என்று நினைக்கிறீங்களா???" என்று கேட்க அந்த வேலையாள் பயந்தான்..
