வேந்தன் : 1

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் : 1

செங்கதிரோன் புலராத காலை வேளை அது... இன்னும் விடிய ஒரு சில மணி துளிகளே உள்ளன... எங்கு பார்க்கினும் பச்சைக் கம்பளம் விரித்த அந்த பொள்ளாச்சியின் அழகை வார்த்தைகளால் விவரிக்க முடியாது...எழில் கொஞ்சும் சோலையது... பசுமைக்கு பெயர் போன பொள்ளாச்சிக்கு மத்தியில் பரந்து விரிந்து இருந்த அந்த நாலு கட்டு வீடு ஓங்கி உயர்ந்து இருக்க அங்கிருந்து பார்த்தால் அந்தப் பகுதியில் சுற்றுவட்டாரமே தெரியும்... அந்த நாலு கட்டு வீட்டை போலவே அதில் வாழும் மக்களும் உயர்ந்த குணத்தை கொண்டவர்கள் தான்...அந்த ஊரில் நல்லது, கெட்டது என்றாலே அங்கு தான் அனைவரும் கூடும் இடம் இதுவாக தான் இருக்கும்...

அப்படி இருக்க சூரியனும் காலைப்பொழுதை இனிதாக்க உதித்து இருக்க இன்னும் அந்த வீட்டில் யாருமே எழவில்லை வெளியே ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தாலும் வீட்டில் இன்னும் யாரும் எழாமல் இருக்க, கோழி கூவும் சத்தம் கேட்டும் எந்த சத்தமும் வீட்டுக்குள் கேட்காததை கேட்டு மெல்ல எழுந்தார் மயிலாத்தா...

அவர் தான் அந்த வீட்டின் உரிமையாளர்... அந்த பெரிய வீட்டை அவர் தான் நிர்வகிக்கிறார்..தன்னருகே படுக்கையை பார்த்தார்.. கணவர் பொன்னுசாமி இல்லை என்றதும் அவர் தோட்டத்துக்கு போய் இருப்பார் என யூகித்து கொண்டார்.. மகனையும், மகளையும் ஒரு விபத்தில் இழந்து இருக்கும் இந்த வயதான தம்பதிகளுக்கு ஒரு பேரன் உண்டு அவன் சென்னையில் இருக்கிறான் எப்போதாவது அவன் இங்கு வருவான்...

அவனும் எதிலும் தலையிட்டுக் கொள்ள மாட்டான்.. மற்றபடி அவருடைய அதிகாரம் தான் அந்த வீட்டில் நிலையாக நிற்கும்.. அவர்களும் அவர்களுடைய பேரனுக்காக தான் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்...

அப்படி இருக்க, தன் கணவர் எழுந்தும் இன்னும் அவள் எழாததை பார்த்து அவரது அறையின் ஜன்னலை லேசாக திறந்து பார்த்தவர் அதிர்ந்தார்.." என்ன பண்றா அந்த சிறுக்கி??? விடிஞ்சு எத்தனை மணி நேரம் ஆச்சு?? வாசல் தெளித்து கோலம் போட அவளால முடியலையா??? காலேஜ் போறேன் காலேஜ் போறேன்னு சொல்லி பாடா படுத்தி எடுத்துட்டு இருக்கா இன்னையோட படிப்ப நிறுத்தறேன் பார் அப்போ தான் இவளுக்கு புத்தி வரும்" என்று அவர் கூறியவர் ,"அடியே கார்த்திகா என்ன டி பண்ற அங்கே??? கோழி கூவி அதை குழம்பு கூட வெச்சிடுவாங்க போல இன்னும் என்ன டி தூக்கம் வேண்டி கிடக்கு??? நாளும் கிழமையுமா பொட்ட புள்ள இவ்வளவு நேரம் தூங்கினா வீட்டுக்கு நல்லதா???" என காட்டு கத்து கத்தினார் மயிலாத்தா...

அவருக்கு இவள் நேற்று இரவு அவரின் காலை பிடித்து விட இவள் வரவில்லை என்ற கடுப்பு வேறு இருந்தது.. அதில் இதுவும் சேர்ந்து கொள்ள காலையிலேயே அமர்க்களமாக ஆரம்பித்தார் அவர்..

அந்த சத்தத்தை கேட்டு பதறி எழுந்தாள் கார்த்திகா...வேகமாக கண்ணை திறந்து பார்த்து மணி ஆறு என காட்டியது...அவளுக்கு சமயத்தை அப்படியே வியர்க்க தொடங்கி விட்டது...இனி எப்படி எல்லா வேலையும் முடித்து விட்டு காலேஜ் போவது என நினைக்கும் பொழுதே அவளுக்கு மலைப்பாக இருந்தது...

ஆனால் அவள் இன்று கல்லூரிக்கு போயே ஆக வேண்டும் என்ற நிலையில் தான் அவள் இருந்தாள்.. எப்பொழுதும் நாலரை மணிக்கு எழுந்து விடுவாள் அப்போது எழுந்தால் தான் அவளுக்கு எல்லா வேலையும் முடித்து கல்லூரி செல்ல மிகச் சரியாக இருக்கும்.. நேற்று இரவு அசைன்மென்ட் ஒன்று கல்லூரியில் கொடுத்திருக்க, அதை எழுதி முடிக்க அவளுக்கு நேரமாகிவிட்டது.. விடியற்காலை 3 மணி வரை எழுதி முடித்துவிட்டு தான் அவள் உறங்கவே சென்றாள்.. அதனால் அசதியில் பாவம் அவளை அறியாமல் உறங்கி விட்டாள் இவ்வளவுதான் காரியம்....

அப்படி இருக்க, தன்னை பற்றி யோசிக்க கூட நேரமின்றி வேகமாக எழுந்தவள் தன் படுக்கையை சுருட்டி வைத்தவள் வேகமாக எழுந்து குளிக்க சென்றாள்...

பத்து நிமிடத்தில் குளியலறைக்குள் இருந்து வெளியே வந்த கார்த்திகா வேகமாக பாட்டியின் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தாலும் அதற்கு செவிகொடுக்க நேரம் இன்றி வேகமாக வாசல் தெளித்து கோலம் போட போனாள்...

"நான் பாட்டுக்கு இந்த கத்து கத்துகிட்டு இருக்கேன் எந்திரிக்கிறாளான்னு பாரு இவளை என்ன பண்றேன் பாரு???" என கூறியவர் மெல்ல எழுந்து வருவதற்குள் அவள் சாமிக்கு விளக்கு வைத்து விட்டு அவள் அடுக்களைக்குள் நுழைந்து பால் காய்ச்ச துவங்கி விட்டாள்...

அவரோ மெல்ல எழுந்து வருவதற்குள் அங்கு எல்லா வேலையும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, அவரோ அதைக் கண்டு கொள்ளாமல் ,"என்னடி என்னடி தூக்கம் வேண்டி கிடக்கு" என கேட்டுக்கொண்டே அடுக்களைக்குள் வர அவளோ அதற்குள் இட்டலி ஒரு பக்கம் அவிக்க துவங்கி விட்டாள்.. சாம்பார் வைப்பதற்காக காய்கள் நறுக்க துவங்கியும் விட்டாள்..

மட மடவென ஒவ்வொரு வேலையும் அவள் செய்து கொண்டிருக்க மயிலாத்தாள் சமையல் கட்டுக்குள் வரும்போது அவள் சமைத்துக் கொண்டிருப்பதை பார்த்த அவரோ ,"ஏண்டி பொழுது கூவினால் எந்திரிக்கணும்னு தெரியாதா??" என வசைபாட தொடங்கினார்...

"பாட்டி கொஞ்சம் படிக்க இருந்துச்சு விடியற்காலை மூணு மணிக்கு தான் எழுதி முடிச்சேன் அதுதான் அசதியில தூங்கிட்டேன்" என்று அவள் மெல்லிய குரலில் தயக்கத்தோடு அவர் திட்டுவார் என பயந்து மெல்லிய குரலில் கூறவும்," விடியற்காலை மூணு மணி வரை உட்கார்ந்து அப்படி என்னதான் படிச்சு கிழிக்கிறியோ தெரியல இது எல்லாம் அவரோடவும், அவனோட வேலை பன்னிரெண்டாம் கிளாஸ் முடிஞ்சதும் உன்னை வீட்டிலேயே இருக்க சொல்லலாம்னு பார்த்தா அவங்க ரெண்டு பேரும் கேக்கல மேல படிக்க வைக்கணும்னு சொல்லி உன்னை சேர்த்து விட்டாங்க அதுக்கு நீ படிக்கிறேன் சொல்லி என்னை பாடா படுத்திட்டு இருக்க???" என எப்போதும் கூறும் பாட்டை பாடினார் மயிலாத்தாள்...

அவள் பதில் பேசாமல் இருக்க ,"என்னமோடி எனக்கு எதுவும் தெரியல ஒன்னும் புரியல நீ படிக்கிறியோ படிக்கலையோ எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை வீட்ல எல்லா வேலையும் சுத்தமா நடந்து இருக்கணும் இல்ல அவ்வளவுதான் புரியுதா" என அவர் கூற கார்த்திகா மெல்ல தலையை சரி என்பது போல ஆட்டினாள்...

அவரும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் செல்ல அவளோ அவரைக் கண்டு கொள்ளாமல் எல்லா வேலையும் செய்ய துவங்கி விட்டாள்..

யார் இந்த கார்த்திகா.. கார்த்திகாவை பற்றி கூற வேண்டும் எனில் கார்த்திகா 20 வயது பெண் அவள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள்...இந்த வீட்டு வேலைக்காரி...தன் வயதுக்கு ஏற்ப அழகை கொண்டவள்..

ஆம் இந்த வீட்டில் வேலை செய்த பொன்னுசாமியின் தூரத்து உறவினான கிருஷ்ணன் மற்றும் லட்சுமிக்கு பிறந்த பெண் கிருஷ்ணன் இந்த வீட்டில் கார் டிரைவர் ஆகவும் லட்சுமி இந்த வீட்டில் வீட்டு வேலையும் செய்து வந்தார்,.. ஆனால் மயிலாத்தாவின் மகனும், மருமகளும் அவர்கள் இருவரையும் வேலைக்காரர்கள் போல நடத்தாமல் நல்ல மரியாதையோடு நடத்தி அவர்களின் தோட்டத்தில் இருந்த ஒரு வீட்டில் அவர்களை தங்கவும் வைத்திருந்தனர் எங்கே செல்வது என்றாலும் கிருஷ்ணனை தான் மயிலாத்தாவின் மகன் அழைத்து செல்வார்..

அப்படி இருக்க ஒரு நாள் கோவிலுக்கு செல்ல மயிலாத்தாவின் மகனும், மருமகளும் இவர்களையும் அழைத்து செல்ல கார் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே நான்கு உயிரும் பலியாயின...

மயிலாத்தாவின் பேரன் திருவேந்தனும், கிருஷ்ணன் மற்றும் லட்சுமியின் மகள் கார்த்திகாவும் தாய் தந்தையரை இழந்து அனாதை ஆகினர்..

இவர்கள் இருவரையும் பொன்னுசாமி மற்றும் மயிலாத்தா தான் வளர்த்தி வருகிறார்கள்... கிருஷ்ணன் மற்றும் லட்சுமி இருவரும் காதலித்து மனம் புரிந்தவர்கள் அதனால் அவர்களுக்கு சொந்த பந்தம் என யாரும் இல்லை கார்த்திகாவை பார்த்துக் கொள்ளவும் கார்த்திகாவை உரிய இடத்தில ஒப்படைக்கவும் யாரும் இல்லாததால் பொன்னுசாமி அவர்களின் வீட்டோடு வைத்துக்கொண்டார்...இதை விட பொன்னுசாமியின் தூரத்து உறவினான கிருஷ்ணன் மகளை அப்படி தனியே விட அவருக்கு மனம் இல்லை...

மயிலாத்தாவும் அவளை நல்லபடியாக தான் பார்த்துக் கொள்கிறார் தான்...ஆனால் மயிலாத்தாவுக்கு பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் அப்படித்தான் இருக்க வேண்டும் என பழங்காலத்தில் வாழும் நபர் ஆனதால் அவரால் சில பல விஷயங்களை மாற்றிக் கொள்ள முடியவில்லை அதனால் பெண்கள் என்றால் காலையில் 6 மணிக்கு எழுந்து வாசல் தெளித்து, கோலம் இட்டு, விளக்கு வைத்து சமையல் வேலையை கவனிக்க வேண்டும் இதுதான் அவர் காலம் காலமாக செய்து வந்தது அதேதான் கார்த்திகாவிடம் எதிர்பார்க்கிறார்...

கார்த்திகாவுக்கு தெளிவாக அவளுடைய நிலை தெரியும் ...அவள் யார் இந்த வீட்டில் என தெளிவாக தெரியும்.. அதனால் தன் நிலைக்கு ஏற்ப அவள் இருந்து கொள்வாள்... அவளை யாரும் இந்த வீட்டு வேலைக்காரி என ஒதுக்கி வைக்கவில்லை என்றாலும் அவள் அவளுடைய நிலையை கருத்தில் கொண்டு அவள் இருந்து கொள்வாள்...மாதம் மாதம் பிறருக்கு சம்பளம் கொடுப்பது போல அவளும் ஒரு தொகையை தனக்காக வாங்கி கொள்வாள்..

அவளுக்கு ஒரே ஒரு நிம்மதி என்னவென்றால் அவளுடைய படிப்போ அவளுடைய தேவைகளையோ இந்த குடும்பத்தில் உள்ள யாரும் தடை விதிக்காமல் செய்து வருகிறார்கள் அவ்வப்போது மயிலாத்தாள் கோபம் மிகுதியால் ஏதாவது கூறினாலும் திருவேந்தனும், பொன்னுசாமியும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவளை நன்றாக படிக்க வைக்கிறார்கள் அதுவே அவளுக்கு நிம்மதியாக இருந்தது... அவள் ஒன்றும் படிப்பில் அவ்வளவு பெரிய அளவில் படிக்க மாட்டாள் நடுநிலையாக இருப்பாள்...

அந்த சமயத்தில் எல்லாம் தான் தரம் குறைவாக எடுக்கும் நேரத்தில் எல்லாம் அவளுக்கு திருவேந்தன் முகம் வந்து போகும் ..அதை நினைத்தாலே அவளுக்கு பயமாக இருக்கும்..இந்த வீட்டில் இருக்கும் எல்லோரையும் அவள் சமாளித்து விடுவாள் அவன் ஒருவனைத் தவிர!! அவன் என்ன கேள்வி கேட்டாலும் அவளிடத்தில் விடை இருக்காது!!!

மயிலாத்தாவுக்கு வேறொரு குணமும் உண்டு... பெரிய வீடு என்பதால் வேலைக்கு பல ஆட்கள் இருப்பார்கள் அவர்களெல்லாம் வீட்டு வாசலோடு சரி.. வீட்டுக்குள் யாரையும் அவர் நம்பி விடமாட்டார் அதனால் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் அவர் அல்லது அவருடைய மருமகளின் காலம் வரை அவருடைய மருமகள் அவருடைய நிர்பந்தத்தி்ன் பலனாய் கார்த்திகாவின் அம்மா லட்சுமி என பார்த்து வந்தனர்...இப்போது கார்த்திகா தான் முழுவதுமாக பார்த்து கொள்கிறாள்...

அப்படி இருக்க, மயிலாத்தாவுக்கு முடியாத காரணத்தினால் கார்த்திகா தான் அனைத்து வேலைகளையும் செய்தாக வேண்டும்.. காலையில் சமைத்து மதியத்துக்கும் சமைத்து வைத்து விட்டு தான் அவள் கல்லூரிக்கு கிளம்ப முடியும் அதனால் அரக்க பறக்க இட்டலி, சாம்பார், சாதம், பொரியல் என அனைத்தையும் செய்து வைத்து தயாராகி உணவு உண்ண கூட நேரம் இல்லாமல் வேகமாக தனக்கு வேண்டிய உணவை தன்னுடைய டப்பாவில் நிறைத்தவள் தயாராகி வீட்டை விட்டு செல்லும் பொழுது மணி 9 ஆகியிருந்தது...

"பாட்டி போய்ட்டு வரேன்" என கத்தி கொண்டே அவள் ஓட,' ஏய் சாப்பிட்டியா டி" என அவர் தனது மூட்டுகளுக்கு எண்ணெய் தேய்த்து கொண்டே கத்தினார்... "இல்லை அங்கே போய் சாப்பிட்டுகிறேன்" என அவள் கூறி கொண்டே ஓட ,"கழுதை வீட்டுக்கு வா உனக்கு இருக்கு இன்னிக்கு" என அவர் பதிலுக்கு கத்தினார்..

10 மணிக்கு கல்லூரி துவங்கிவிடும் அதற்குள் அவள் நடந்து பஸ் ஸ்டாப் வரை சென்று பஸ் பிடித்து செல்ல வேண்டும் அப்படி அவளுக்கு மலைப்பாக இருந்தாலும் வேகவேகமாக கல்லூரிக்கு சென்றாள் அவள்...

அது ஒரு மகளிர் கல்லூரி அங்கு சென்றது மட்டும் தான் அவளுக்கு நினைவு இருக்கிறது எப்படி மாலை ஆனதே அவளுக்கு தெரியவில்லை...

வீடு வந்து சேரும் போது முறைத்தபடி அமர்ந்து இருந்தார் மயிலாத்தா...அவளுக்கோ மிகவும் அசதியாக இருந்தது...

"என்ன கார்த்திகா காலேஜ் முடிஞ்சுதா என்ன??" பொன்னுசாமி அக்கறையாக வினவ ,"முடிஞ்சது தாத்தா" என்று பதில் கூறியவள் மயிலாத்தாவை பார்த்து நிற்க,

அவரோ முறைத்தபடி ,"ஏண்டி காலைல ஒரு வாய் சாப்பிட்டு போகணும்னு உனக்கு தெரியாதா சாப்பிடாம ஓடுற??"

அவளோ தலையை குனிந்து கொண்டு ,"மத்தியானத்துக்கு எடுத்துட்டு தான் போனேன்" என்க

"கிழிச்ச இத்துனூண்டு டப்பால கொஞ்சம் சோத்தை போட்டுட்டு போனா வளர புள்ளைக்கு இது போதுமா??? ஆளை பாரு முருங்கைக்காய் மாதிரி இருக்க.. காலையிலிருந்து இத்தனை வேலை செய்யற இல்ல சாப்பிடணும்னு உனக்கு தோணாதா போ போய் எதையாவது சாப்பிட்டு டீ போடு..." என்று அதட்டினார்..

அவரின் அக்கறையான பேச்சை கேட்டதும் இருந்த அசதியே பறந்து போக மெல்லிய சிரிப்போடு அவள் வீட்டுக்குள் செல்லும்போதே ,"அடியே சொல்ல மறந்துட்டேன் திரு வந்து இருக்கான் அவனுக்கும் சேர்த்து டீ போடு" என்று கூற அவள் முகம் பேய் அறைந்தது போல ஆகியது...

அந்த பேரை கேட்டதுமே அவளின் கை கால்கள் நடுங்க துவங்கி விட்டன...

சட்டென்று திரும்பியவள் ,"அவரா எப்போ வந்தார்??? அவரோட காரை காணோம்" என கேட்கவும் அவளின் கேள்வியை கேட்டு முறைத்த மயிலாத்தா ,"ஏண்டி அவன் வரக்கூடாதா அவன் வீடு டி இது " என கூறவும் ," இல்ல நான் அப்படி சொல்ல வரல எப்போ வந்தாங்கன்னு கேட்டேன்" என அழுத்து கொண்டு கூற,

"நானே அவன் வர மாட்டேங்குறானே இருக்கேன் வந்தவனை போய் ஏன் வந்தான் எதுக்கு வந்தான்னு கேக்குற போடி போய் டீ வை ஆளை பாரு கேள்வி கேக்குறா கூமுட்டை மாதிரி" என்க

அவளோ இனி நின்றால் பிரச்சனை ஆகி விடும் என கருதி அங்கிருந்து ஓடியவளுக்கு பசி எல்லாம் பறந்து போனது...

திருவை எண்ணி பயம் தான் வந்தது.. அது ஏன் என்று தெரியவில்லை அவன் என்றாலே அவளுக்கு பயம் அதுவும் ஒரு ஆறு வருடங்களுக்கு முன்பு அவள் அவனிடம் வாங்கிய ஒரு அறை அந்த அறையை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் அவள் தேகம் எங்கும் பயத்தின் சாரல் வீசும் அன்றிலிருந்து அவன் எந்த திசையில் இருந்தாலும் அந்தப் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டாள்...அவனாக என்ன கேட்டாலும் கேள்விக்கு மட்டும் பதில் கூறுவாளே ஒழிய தேவை இல்லாமல் பேச மாட்டாள்...

அவனிடம் பேசவே மாட்டாள்...அவன் ஏதாவது சொன்னாலும் அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அதை அவன் கூறினான் என்பதற்காக செய்வாள்...

அப்படி இருக்க அவள் டீ போட்டு முடித்தவள் பொன்னுசாமி மற்றும் மயிலாத்தாவுக்கு கொடுத்தவள் அவனுக்காக தயாரித்து வைத்திருந்த டீயை பார்த்துக்கொண்டு நிற்க அதை கண்ட அவரோ ,"என்னடி மசமசன்னு நிக்குற டீ ஆறுறதுக்குள்ள கிறுக்கு போய் குடு ஆம்பள பையனுக்கு ஆறி போன டீயா கொடுப்பாங்க" என கூற

அதை கேட்ட அவளோ ,"பாட்டி நானா??" என கேட்க

அவரோ பதிலுக்கு ,"பின்ன நானா???" என அவர் கேட்கவும்

அவளோ இனி அவரை பார்த்து தான் ஆக வேண்டும் என்ற பயம் அவளுக்கு வந்தது..

பிறகு அவளே மாடி ஏறி அவனுடைய அறை கதவை மெல்ல தட்டினாள்... உள்ளுக்குள் பதட்டம் இருந்தாலும் நாம ஒன்னும் தப்பு பண்ணலையே டீ தானே கொடுக்க போறோம் என தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டவள் கதவை மீண்டும் தட்ட கதவு திறக்கப்பட்டது...

அங்கு அழுத்தமான பார்வையோடு ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு மேலாடை எதுவும் அணியாமல் நின்று கொண்டிருந்தான் திருவேந்தன்..

மயிலாத்தாள் பொன்னுச்சாமி அவர்களின் ஏகபோக வாரிசு ஒற்றை வாரிசு என்று கூறலாம்.. இவனுக்காக மட்டும் தான் உயிரைப் பிடித்துக் கொண்டு அவர்கள் உயிர் வாழ்கிறார்கள் என்பதும் உண்மையான விஷயம்...

அவனின் வயதோ 32... அவனுடைய வயதிற்கு ஏற்ப தோற்றத்தை உடையவன் ஆறடி இருப்பான் பார்க்கவே மிகவும் கம்பீரமாக இருப்பான்.. அவன் ஒரு பார்வை பார்த்தால் போதும் சுற்றி இருப்பவர்கள் ஒதுங்கி தான் போவார்கள் அப்படி இருப்பான்..ஒரு காலத்தில் பார்க்க அழகாக இருந்தான் ஆனால் இப்பொழுது தாடி மீசை வளர்த்தி ஆளே வேற மாதிரி இருக்கிறான்.. என்னதான் ஆள் வேற மாதிரி ஆகி இறுகி போய் இருந்தாலும் அவனின் கம்பீரம் மட்டும் குறையவே இல்லை...

கோபம் அவனின் உறைவிடமாக இருந்தாலும் அவன் அன்பு வைத்திருக்கும் ஆட்கள் இடத்தில் அன்பையும் சில தருணங்களில் வெளிப்படுத்த செய்வான்... இளம் தொழிலதிபனாக தன் பரம்பரை தொழிலை செய்து வந்தவன் தான் கடந்த ஐந்து வருடமாக தொழிலையும் அதனோடு சேர்த்து பேராசிரியர் பணியையும் செய்து வருகிறார் மெட்ராஸ் கல்லூரியில் ப்ரொபஷராக வேலை பார்த்து வருகிறான்...

அவனுடைய பாட்டி கூட ,"நமக்கு இல்லாத சொத்தா நீ போய் இந்த வேலை செய்யற??" என கேட்டதற்கு ,"எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் நான் செய்வேன் எனக்கு இதை செய்ய பிடிச்சிருக்கு நான் செய்கிறேன் என்னை என் போக்குல விடுங்க" என்று அழுத்தம் திருத்தமாக கூறி தன் பாட்டியின் வாயை அடக்கி விட்டான்...

இதோ அவனுக்கு எதிரே டீயை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருக்கும் அவளின் கையைப் பிடித்து அவனுடைய அப்பா இவன் கரங்களுக்குள் திணித்து," நாங்க வர வரை இவளை பத்திரமா பாத்துக்கோ" என்று கூறி விட்டு சென்று இருந்தனர்... அவனும் ,"சரிப்பா நான் பாத்துக்கிறேன் நீங்க பயப்படாம போயிட்டு வாங்க" என்று கூறி இருந்தான்...

இவளை அவன் கையில் ஒப்படைத்தவர்கள் சென்று விட்டார்கள் ஆனால் இன்று வரை அவன் தன் தந்தைக்கு கொடுத்த வாக்கை இன்றளவும் காப்பாற்றி வருகிறான்... ஆம் இவன் தான் இவளுடைய கார்டியன்... இவளின் படிப்பு முதல் இவளின் அனைத்து காரியங்களையும் இவன்தான் செய்து வருகிறான்..

அப்படி இருக்க, அவள் என்ன செய்தாலும் இவனுக்கு தெரியாமல் போய் விடாது அப்படி இருக்க அவளை பார்த்து முறைத்தபடி அவன் இருந்தான்..

அவளோ அவனை நிமிர்ந்து பார்க்க அவன் முறைப்பது தெரிந்தது என்ன முறைக்கிறார் என அவள் யோசித்தவளுக்கு கைகள் நடுங்க அவள் கையில் வைத்திருக்கும் டீ கப்பும் ஆட அவனோ முறைத்து கொண்டே இருந்தான்.. அவளோ வேகமாக இதை கொடுத்து விட்டு போயிடுவோம் என்று நினைத்தவள்,

"திருண்ணா டீ" என்க,

அவனோ அதை வாங்கியவன் ,"போன செம்ஸ்டர்ல என்ன மார்க்???" என கேட்டான்... அவன் முகமே கூறியது இவனுக்கு இவளுடைய மார்க் அவன் கையில் சென்று விட்டது என்று...

அதை கேட்டதும் அவனின் முறைப்புக்கான காரணம் புரிந்தது...அவன் வந்ததும் எடுத்த எடுப்பிலேயே இந்த கேள்வியை கேட்பான் என நினைக்கவில்லை...

சட்டென்று கேட்கவும் ,"எல்லாத்துலயும் பாஸ் ஆகிட்டேன் திருண்ணா" என அவளுக்கே கேட்காத குரலில் கூற,

"என்ன சவுண்ட் கம்மியா இருக்கு" என அவன் அதட்டி கேட்க

"பாஸ் ஆகிட்டேன்" என மெல்லிய பயத்தோடு கூற

"ஜஸ்ட் பாஸ் ஆகி இருக்க இதுக்கு தான் நீ படிக்க போறியா???" என அழுத்தமாக அவளை அதட்டி கேட்டான்...அதை கேட்டதும் அவள் அவன் முகம் பார்க்க பயந்து தலையை குனிந்து கொள்ள அவனோ,"எவ்வளவு தடவை நான் உனக்கு சொல்லி இருக்கேன் நான் உனக்கு அண்ணா கிடையாது இனி எங்கேயாவது அண்ணான்னு சொன்ன பல்ல ஒடச்சிடுவேன் நான் உன்னோட கார்டியன் புரியுதா அவ்வளவு தான் உனக்கும் எனக்கும் இடையேயான உறவு" என அவளை முறைத்தபடி கூறிவிட்டு அவளை கடந்து சென்று விட்டான்...

அதை கேட்ட அவளோ ச்சை என அவள் தலையிலேயே கொட்டி கொண்டாள்.. இந்த ஒரு வார்த்தையை மட்டும் அவளால் இன்றளவும் மாற்றி கொள்ளவில்லை..ஆரம்பத்தில் மாமா என அழைத்து கொண்டிருந்தவள் தான் அதற்கும் அவன் தான் தடை போட்டான் இப்போது இதற்கும் இவன் தான் தடை போடுகிறான்," இனி எதுவுமே இவங்களை சொல்ல கூடாது" என எண்ணி கொண்டாள்...

இனியும் அவள் முகத்தை பார்த்து கொண்டு இருக்க அவனுக்கு விருப்பம் இல்லை...என்னவோ தெரியவில்லை அவனுடைய தந்தை இவளை பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு சென்ற பிறகு திரும்ப வரவே இல்லை...

அது அவனுக்கு அவனுடைய வாழ்கையில் மிகுந்த அடியாக இருந்தது...அது தான் அவன் வாழ்கையின் முதல் அடி என்றே கூறலாம்...அதன் பிறகு அவனுக்கு கிடைத்த இரண்டாவது அடி பேரிடியாக இருந்தது...யாரையும் நேசிக்க கூடாது தான் நேசிக்கும் ஆட்கள் எல்லாம் தன்னை விட்டு போவார்கள் என்ற முடிவை அவனுக்கு கொண்டு வர வைத்தது அதன் பிறகு அவன் யாரையும் நேசிப்பது இல்லை...

அவன் பெற்றோர்களின் மரணம் இவனை போல இவளும் காரணம் இல்லை என்றாலும் இவளை இவனுக்கு பிடிக்காது எப்போதும் இவளிடத்தில் கடுகடுவென இருப்பான்...அதற்கு ஒரு காரணமும் உண்டு ... இவளிடமும் இயல்பாக இருந்தவன் தான் ஆனால் அன்றைய சம்பவத்துக்கு பின் அப்படியே அடியோடு மாறிவிட்டான்...

இப்படி தொடர் அடிகளை தாங்கி நிற்பவனுக்கு இனி அடி வாங்க தெம்பு இல்லை அதனால் அவனுக்கு வேண்டப்பட்டவர்கள் சிறு குற்றம் செய்தால் கூட அதை பெரிதாக எடுத்து அதற்கு அவன் கோபப்படுவதும் உண்டு.. அது அவனது இயலாமையின் வெளிப்பாட்டை அதாவது அவன் வாழ்க்கையில் பல பக்கங்களை அவனால் மாற்ற முடியவில்லை மாற்ற வேண்டும் என அவன் எவ்வளவோ முயன்றும் அது முடியாமல் போக அதை எப்படி வெளியே காட்டுவது என தெரியாமல் இந்த வகையில் எல்லாம் காட்டிக் கொண்டு இருப்பான் திருவேந்தன்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top