Share:
Notifications
Clear all

அத்தியாயம் 18

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

மனம் விரும்புதே மாயவா

தன் மனைவி என்ன வார்த்தை கூறுகிறாள் என்று நொந்த தர்ம ராஜ், "என்ன சொன்ன ??? இது என்னோட கனவுன்னு உனக்கு நல்லாவே தெரியும்..அதை விட்டுட்டு வர சொல்ற??..அப்படி எல்லாம் இனி பேசாத ராஜி"... என்று தர்ம ராஜ் பொங்கிய ஆத்திரத்தை அடக்கி கூற

"என்ன பொல்லாத கனவு அடுத்தவன் சாப்பிட்ட பிளேட் கழுவறதும் கண்டவங்களுக்கு ஆக்கி கொட்டுறதுமா கனவு ??"...என்று ராஜேஸ்வரியும் தன் பங்கிற்கு கொதித்தார்..

"என்ன நான் இந்த வேலை செய்யறேன்னு தெரிஞ்சு தானே காதலிச்ச இப்போ மட்டும் உனக்கு இந்த வேலை அவமானமா தெரியுதா???"...என்று தர்மராஜ் தன் நிதானத்தை இழந்து கேட்க,

"இதோ பார் நான் என்னிக்கும் நான் செய்யற தொழிலை கேவலமா நெனைச்சது இல்லை ஆத்மார்த்தமா தான் செஞ்சிட்டு இருக்கேன் உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லு மாத்திக்கிறேன்"... என்று கூற

ராஜேஸ்வரியின் முகம் மலர்ந்து," நிஜமாவா ?? நானும் இதை தான் சொல்றேன் இந்த கேவலமான தொழிலை விடுங்கன்னு"...என்று கூற

"ஆமாம் நான் மாத்திக்கிறேன்னு சொன்னது உன்னை நான் நேசிக்கிற தொழிலை அல்ல"... என்று ஒரு போடு போட்டார்..

அதை கேட்டு வெகுண்ட ராஜேஸ்வரி, "அப்போ என்னை விட உங்களுக்கு இந்த மானம்கெட்ட வேலை தான் பெரிசா போயிடுச்சா??"...என்க

"எதை பார்த்து டி மானம்கெட்ட வேலைன்னு சொல்ற??அப்போ நீ எப்போவும் பெருமை பீத்திக்குவீங்கலே நாங்க பிசினஸ் மேக்னெட்ஸ்ன்னு நீங்க என்ன தொழில் செய்யறீங்க??? செருப்புக்கு தேவையான பார்ட்ஸ் இம்போர்ட் பண்றீங்க?? அப்போ வீட்டுக்கு வெளில விடற ஒரு பொருளை தயாரிக்கற உங்க தொழிலை நான் கேவலமா பேசலாமா?? ..ஆனால் நான் பேச மாட்டேன் ஒவ்வொருத்தருக்கும் அவங்கவங்க தொழில் முக்கியம் கடவுள் மாதிரி இதெல்லாம் உன்கிட்ட சொன்னா உனக்கு எங்கே புரிய போகுது உனக்கு தான்ங்கிற அகந்தை அதிகம் நீ எல்லாம் இப்படி தான் இருப்ப "...என்று தர்மா கூற

"யாருக்கு அகந்தை எனக்கு ஈக்குவல் ஆஹ் இல்லாட்டியும் உன்னை கல்யாணம் பண்ணி என் வீட்டுல கம்பீரமா வெச்சு பார்த்துகற நான் உனக்கு திமிர் பிடிச்சவ மாதிரி தெரியுதா?? அது தான் நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் உக்கார வெச்சாலும் அதோட குணம் மாறாதாம் அது மாதிரி தான் நீயும்"... என்று வாய்க்கு வந்தபடி ராஜேஸ்வரி பேச

தர்ம ராஜ் கொதித்து எழுந்து விட்டார், " யாரை பார்த்து டி இந்த வார்த்தை பேசுற??"... என கேட்க

"உன்னை பார்த்துதான் ..என் வீட்டுல இருந்துட்டு இருக்கும் போதே உனக்கு இந்த கொழுப்பு இருக்கே உன் கூட உன் சம்பாத்தியத்தில் இருந்தா என்ன பேசுவ ??"...என்று ராஜேஸ்வரியும் வார்த்தையை விட்டார்..

இதை கேட்ட தர்மா ராஜ்க்கு கோபம் தலைக்கேற, " யாரை பார்த்து டி சொல்ற உன் வீட்டுல நான் வந்து உக்கார்ந்து இருக்கேனா என்கிட்ட கெஞ்சி என்னை உக்கார வெச்சிட்டு இப்போ என்னையே சொல்றியா??"... என்று கேட்டவர் அதற்கான பரிசாக இடியாக ஒரு அறையை ராஜேஸ்வரிக்கு பரிசளிக்க

இரவு நேரம் நடந்த நீண்ட வாக்குவாதம் சண்டையில் போய் முடிய மகள் கதறி அழும் சத்தம் கேட்டு வந்த ராம மூர்த்திக்கு வேதனை தாளாமல் , "மாப்பிளை மாசமாக இருக்கும் பெண்ணை இப்படி நாயை போட்டு அடிக்கிற மாதிரி அடிக்கிறீங்களே இது நல்லா இருக்கா??".. என கேட்க

உடனே ஈஸ்வர் தன் பங்கிற்கு , "என்ன தர்மா இப்படி செய்றீங்க பாவம் பா நீங்க செய்யறது தப்பு அவ உங்க மனைவி "...என்று நல்லவன் வேஷம் போட்டார்..

ஆத்திரத்தில் இருந்த தர்மா ராஜ் யார் பேச்சை கேட்காமல் மேலும் ராஜேஸ்வரியை அடிக்க போக , "அப்பா என்னை காப்பாதுங்க பா என்னை அடிச்சே கொன்னுடுவான்"... போல என்று கதறி கூறவும் பெற்ற பிள்ளை கதறுவதை தாங்கி கொள்ள முடியாத ராம மூர்த்தியும் தர்மா ராஜை தாக்க போக கொதித்தெழுந்த தர்மா ராஜ் வீட்டை விட்டு கிளம்பினார்..

அதன் பின்னர் அவர் வரவே இல்லை எங்கே போய் இருக்கிறார் என யாருக்கும் தெரியவில்லை...நாட்கள் மாதங்கள் ஆகி தர்ம ராஜை காணாமல் போய் இரண்டு மாதங்கள் கடந்து விட்டன..

இப்போது நான்கு மாத கர்ப்பணியான ராஜேஸ்வரி கணவன் சென்று விட்டான் என்று முடங்கி எல்லாம் இருந்துவிடவில்லை...என்னை எப்படி அவன் அடிக்கலாம் என்பதே அவரது ஆத்திரமாக இருக்க கணவனே ஆனாலும் அவனை ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோபம் அவருள் கொதித்து எழுந்து கொண்டிருந்தது..

அதற்கு எண்ணெய் ஊற்றும் விதமாக ஈஸ்வர், " ராஜி எவ்வளோ நாள் இப்படியே உன் அப்பா பின்னாடி நின்னுட்டு இருப்ப தொழில் தொடங்கு அப்போ தான் நீயும் உன் அப்பா மாதிரி தலை நிமிர்ந்து நிற்க முடியும்"... என்று கூற அதை கேட்ட ராஜேஸ்வரிக்கும் அது தான் சரி என தோன்ற தந்தையிடம் கூறும் போது, " முதல குழந்தை பொறக்கட்டும் பாப்பா அப்புறம் பார்த்துக்கலாம் "...என்று கூற அவர் கூறியதை கேட்டால் அது அவரது மகள் இல்லையே பிடிவாதமாக தொழிலை தொடங்கினார் கூடவே தன் கணவன் தன்னை அடித்ததுக்கு திருப்பி அடிக்கும் விதமாக கணவன் ஹோட்டல் வைக்க தன் பெயரில் வாங்கிய இடத்தில் தொழிலை ஆரம்பித்தார்..

அதாவது கணவர் வாங்கிய இடத்தை அவர் மீது உள்ள கடுப்பில் இவர் தொழில் செய்ய ஆயத்தமாகி கட்டிடங்களை கட்ட துவங்கினார்.. பணம் தரமாட்டேன் என கூறிய ராம மூர்த்தியிடம் வயிற்றில் வளரும் குழந்தையை கொன்று விடுவேன் என கூறி மிரட்டி தன் காரியத்தை சாதித்தார்...

ஏன் இவ்வளவு தொழில் மீது அவருக்கு வெறி என்றால் தொழிலை விட கணவர் முன் பெரிய ஆள் ஆக வேண்டும் என்பதே ராஜேஸ்வரிக்கு குறிக்கோளாக இருந்தது..

இதற்கு எல்லாம் பின்னால் இருந்து ராஜேஸ்வரிக்கு உறுதுணையாக அவரின் குடும்பத்தை பிரித்தது

என்னவோ ஈஸ்வர் தான்..தன் காதலியை அடுத்தவர் மனைவியாக காண பிடிக்காமலே நஞ்சை விதைக்க ராஜேஸ்வரியின் குணத்தை பற்றி தெரிந்த ஈஸ்வர் பிறர் அறியாமல் எடுத்து கொடுக்க அதை ராஜேஸ்வரியும் அவர் அறியாமலே தன் அகந்தையை வெளிப்படுத்தி கட்டிடத்தை மூன்று மாதத்தில் கட்டி முடித்து விட்டார்..தொழிலையும் துவங்கி விட்டார் ஈஸ்வரை தன்னுடனே வைத்து கொண்டார்...

விஷயம் அறிந்து ராஜேஸ்வரியை காண வருகை புரிந்தார் தர்மராஜ்..கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு பிறகு ராஜேஸ்வரி தன் கணவரை காண்கிறார்..

தன் கணவன் தானா என்பது போல ஆள் அடையாளமே இல்லாமல் மாறி போய் இருந்தார்...கட்டிளம் காளையாக இருந்த தன் கணவன் இப்போது நலிந்து மெலிந்து தாடி முடியுடன் ஒரு பிச்சைக்காரனை போல காணவும் ராஜேஸ்வரி அருவருப்பு அடைந்தார்...

என்ன தான் மனைவி மீது சண்டையிட வந்திருந்தாலும் தன் மனைவியின் மேடிட்ட வயிற்றை பார்க்கும் போது மனம் இளகி அவர் அருகே செல்ல ராஜேஸ்வரி நான்கு அடி தள்ளி ஈஸ்வர் அருகில் போய் நின்று கொண்டார்..

அதை கண்டு கோபமுற்ற தர்ம ராஜ், " என்ன டி விலகி போற என்னோட குழந்தை தானே உன் வயித்துல வளருது அதை தொட கூட எனக்கு உரிமை இல்லையா ??"...என கேட்க

அழுக்கு படிந்த உடையோடு அந்த அழுக்கான கையோடு தன் வயிற்றை தர்ம ராஜ் தொடுவது அவருக்கு அருவருப்பை கொடுக்க , "இது உங்க குழந்தை தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை குழந்தையை தொட உங்களுக்கு உரிமை இருக்கு ஆனால் என்னை தொட உங்களுக்கு உரிமை இல்லை..குழந்தை பிறந்ததும் சொல்லிட்டு போறேன் வந்து எடுத்துட்டு போங்க நானே இதை சுமக்கிறதை பாரமா நெனைக்கிறேன்"... என்று கூற

அதை கேட்ட தர்ம ராஜ்க்கு மீண்டும் அவமானப்பட்ட உணர்வு தான் எழுந்தது...அதில் தன்னை கேட்காமல் கட்டிடத்தை கட்டிய ராஜேஸ்வரியிடம் மீண்டும் சண்டையிட ராஜேஸ்வரியோ, " என்னோட பேர்ல இருக்கிற இடம் அதில் கட்ட நான் யார் கிட்ட உத்தரவு வாங்கணும் நான் ஒன்னும் நீங்க வாங்கின இடத்தை நாசம் செய்யலேயே எனக்கு பிடிச்ச தொழிலை தானே தொடங்கி இருக்கேன் "...என்று கூற

தர்மா ராஜ்க்கு ஆத்திரம் தாளவில்லை.."அதை என்கிட்ட நீ கேட்கணும் "...என்று மீண்டும் அவர் அருகில் வர குடித்து இருப்பார் போலும் அவர் மீது எழுந்த மதுவின் வாடை தாங்க இயலாமல் மேலும் இது போன்ற ஒருத்தனுடன் வாழ வேண்டுமா என்ற கேள்வியும் உடனே எழ சற்றும் யோசிக்காமல் காவலாளியை அழைத்து தர்ம ராஜை வெளியேற்றும் படி கூற ,

அவரோ இவளின் அவமானம் தாள இயலாமல் , "யாரை டி வெளியே போக சொன்ன இது என்னோட இடம் ??"... என கூறி ராஜேஸ்வரி மீது பாய்ந்து அவர் கன்னத்தில் இடியென தன் கையை இறக்க, " என்ன டா நான் சொல்லிட்டே இருக்கேன் வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க இவனை அடிச்சு வெளியே தூக்கி போடுங்க டா இவன் துரும்பு கூட இனி இங்கே நுழைய கூடாது "...என அதிகாரமாக முழங்க தங்கள் முதலாளி உத்தரவை மீற முடியாமல் பணியாளர்கள் தர்ம ராஜை அடித்து வெளியேற்றினர்..

இந்த விஷயம் ராம மூர்த்தி செவிக்கு எட்டாத படியும் பார்த்து கொண்டனர்..

அதிலும் ராஜேஸ்வரியின் ஈர்த்த முகம் மாறி பிச்சைக்காரனாக இருக்கும் தர்மராஜனின் குழந்தையை சுமப்பதே அருவருப்பாக இருக்க அவருக்கு இப்போதே குழந்தையை வயிற்றில் இருந்து எடுத்து வெளியே தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ணம் கூட எழுந்தது அவரது உயிரை மனதில் வைத்துக்கொண்டு அமைதியாக குழந்தையை சுமந்தார்..

அந்த சமயம் பார்த்து ராஜேஸ்வரிக்கு செய்தி ஒன்று வந்தது தர்மராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார் என தகவல் வர மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்..

விஷயத்தை கேட்டதும் ராஜேஸ்வரிக்கு அதிர்ச்சி இருந்தாலும் அவரது பிச்சைக்கார தோற்றம் மனதில் வந்து, " குடிச்சுட்டே இருந்தா சாகாமல் என்ன பண்ணுவாங்க என்னமோ இளவு வீடு மாதிரி இருக்கீங்க போய் வேலையை பாருங்க "...என கூறிவிட்டு அலுவலகம் சென்று விட்டார் ராஜேஸ்வரி...

வேலாயுதம் தான் மும்பை வந்து தன் மகனின் இறுதி காரியத்தை நடத்தி முடித்தவர் நேராக ராம மூர்த்தியை காண வந்தார்..

"என் பையனும் போய்ட்டான் எனக்கு இருக்கிற ஒரே சொத்து உங்க பொண்ணு வயித்துல வளர குழந்தை அந்த குழந்தை எனக்கு வேண்டும்"... என்று கூற

ராம மூர்த்தி முதலில் மறுத்தார் பின் அவரது நிலையை மனதில் வைத்து, "பெத்த அம்மாக்கு இல்லாத உரிமை குழந்தை மேல நமக்கு இல்லை அதுனால நீங்களோ நானோ சண்டை போடுறதுக்கு பதிலா குழந்தை பிறக்கட்டும் அவளுக்கு சம்மதம்னா தராளாமா குழந்தையை எடுத்துட்டு போங்க "...என்று கூறி அனுப்பி வைத்தார்...

அதே போல ராஜேஸ்வரி வலியும் வந்தது குழந்தை தன் தாய்க்கு பல வேதனையை கொடுத்தான்..கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் வலி தின்று கிட்டத்தட்ட அவர் இனி என்னால் வலியை சகிக்க முடியாது என்று கூறி கத்தி அவரால் இயலாமல் மயக்கமாக குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர்...

ஆனால் ராஜேஸ்வரி மயக்கத்தில் தான் இருந்தார்...அதற்குள் குழந்தை யை சுத்தம் செய்து அனைவருக்கும் காட்ட குழந்தையை கண்டு மகிழ்ந்த பெரியவர்கள் ராஜேஸ்வரியின் முடிவுக்காக காத்து இருந்தனர்..

அவருக்கோ உடல் நிலை மிகவும் மோசமடைந்து ஜன்னி கண்டு விட ராஜேஷ்வரி கிட்டத்தட்ட உயிர் போய் விடும் நிலைக்கே சென்று விட்டார்..

அவர் சுயநினைவு இன்றி படுத்து இருப்பதை கண்டு வேதனை கொண்ட ராம மூர்த்திக்கு என்ன செய்வதென்றே விளங்கவில்லை..

வேலாயுதமும் நிலைமை சரியான பின்னர் வரலாம் என நினைத்து சென்றவருக்கு அவரது ஊர்க்காரர் ஒருவர் , "அமெரிக்காவில் சமைக்க ஒரு பெரிய நிறுவனத்துக்கு ஆள் வேண்டும் வரீங்களா??"... என கேட்க நிற்கதியாக நிற்கும் தனக்கு தன் மகன் தான் தெய்வமாக நின்று ஒரு வழி காட்டி இருப்பானோ என நினைத்து உடனே சம்மதித்தார்...

விஷயத்தை கூறவும் பேர மகனை பெற்று கொள்ளவும் ஒரு வாரம் கழித்து மருத்துவமனைக்கு செல்ல அங்கே அரக்கியை போல கத்தி கொண்டிருந்தார் ராஜேஸ்வரி..

"அதை தூக்கிட்டு போங்க எனக்கு பார்க்க வேணாம் என் மூஞ்சிக்கு முன்னாடி கொண்டு வராதீங்க "...என கத்திய ராஜேஸ்வரி மீண்டும் மயக்கமானார்..

அதை கேட்டு கொண்டே வந்த வேலாயுதம் அறைக்கு முன் வரவும் குழந்தையை ராம மூர்த்தி வெளியே எடுத்து வரவும் சரியாக இருக்க அவரின் முகத்தை பார்த்து, " வேலாயுதம் என்னாச்சுங்க உங்க மகளுக்கு ஒன்னும் இல்லையே "...என்க

"அவளுக்கு ஒன்னுமில்லை சம்பந்தி நீங்க குழந்தையை எடுத்துட்டு போங்க நல்லா படியா வளருங்க பெத்த குழந்தையை கூட பார்க்க மாட்டேன்னு சொல்றா இவளை எல்லாம் நான் பெத்தேன்னு சொல்றதுக்கே அவமானமா இருக்கு"... என்று நொந்து கொண்டே குழந்தையை ராம மூர்த்தி கொடுக்க மிகவும் மகிழ்ச்சியாக மீண்டும் தன் மகனே தன் கையில் கிடைத்து விட்டான்

என்ற மகிழ்ச்சியில் வேலாயுதம் குழந்தையை வாங்கி கொண்டு அமெரிக்கா பறந்தார்...

மாயவன் வருவான்…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top