அத்தியாயம் 17
மனம் விரும்புதே மாயவா
"ராஜி நான் உன்கிட்ட எவ்வளவு தடவை சொல்றது நான் மும்பை வந்ததே படிக்க தான் என்னோட லட்சியமே ஒரு ஹோட்டல் வைக்கிறது தான்னு எனக்கு இந்த காதல் கீதல் அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை".. என்று தர்மராஜ் பத்தாவது முறையாக ராஜேஸ்வரியிடம் கூற
"நம்பிக்கை தானே தர்மா எல்லாமே உங்களுக்கு நான் நம்பிக்கை வர வைக்கிறேன்"... என்று ராஜேஸ்வரி தர்மா என அழைக்கப்படும் தர்மராஜிடம் கேட்டு கொண்டிருந்தார்...
தர்மராஜூம் ராஜேஸ்வரியும் ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்...தர்மராஜ் ராஜேஸ்வரியின் சீனியர் அவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் எடுத்து படித்து வருகிறார்..ராஜேஸ்வரி பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார்..
ராஜேஸ்வரிக்கு எப்போதும் அவர் அழகில் கர்வம் கொண்டவர் கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் தன்னை திரும்பி பார்க்கும் போது தர்மராஜ் மட்டும் அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பது அவரின் அழகுக்கு வந்த இழுக்காகவே கருதினார்..
கூடவே அவரது நண்பர்களும், தோழிகளும் ராஜேஸ்வரியை உசுப்பி விட கடந்த நான்கு மாதங்களாக தர்மராஜின் பின்னால் சுற்றி வர அவரோ ராஜேஸ்வரியை துளி சட்டையும் செய்யாமல் சுற்றி வந்தார்.. அப்படி என்ன இவன் பெரிய மன்மதனா என்ற மமதை ராஜேஸ்வரி மனதில் உருவானாலும் தர்மராஜ் அழகில் மன்மதனே தான்..
நெடுநெடுவென உயரமும் சிவந்த நிறமும் கிராமத்தில் வளர்ந்த கட்டுமஸ்தான உடலுடன் அனைத்து பெண்களுக்கும் அவர் பின்னால் சுற்ற மனிதர் ஏதோ ஆஞ்சிநேய பக்தர் போல இருந்தவரை உருட்டி மிரட்டி ,கெஞ்சி ராஜேஸ்வரி இதோ அடி பணியவும் வைத்து விட்டார்..இப்போது அவர்கள் காதலிக்க துவங்கி ஆறு மாதங்கள் கடந்து விட்டது..
தர்மராஜ் அவரது காதலன் என்பதில் அந்த பருவ வயதில் அவருக்கு சற்று பெருமையாக தான் இருந்தது..அவரது கல்லூரியில் உடன் படிக்கும் மாணவிகள் இவர்கள் இருவரை கடக்கும் போது அவர்களின் நீண்ட நெடிய பெருமூச்சை பார்க்கும் போது உள்ளூற ராஜேஸ்வரிக்கு கர்வமே ..
இரண்டு வருட காதலுக்கு பிறகு என்ன செய்யலாம் என யோசித்த தர்மராஜ் ஒரு நாள் ராஜேஸ்வரியிடம் , " ராஜி நான் உன்கிட்ட முதலிலே சொல்லி இருக்கேன் என்னால இப்போ உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு ஆனால் எனக்கு மனைவின்னு இருந்தா அது நீ மட்டும் தான் ..
என் வீட்டில் அப்பா மட்டும் தான் அவருக்கு சின்ன ஒரு ஹோட்டல் இருக்கு அதை விரிவு செய்யணும்னு தான் என்னோட எண்ணம் என்னால மும்பையில் வந்து செட்டிலாக முடியாது".. என்றவர்
மேலும், " நான் இங்கே மும்பைக்கு படிக்க தான் வந்தேன் இங்கேயே செட்டில் ஆக இல்ல "..என்றும் தன் காதலி தனனை இங்கேயே தங்க சொன்ன போது அதை மறுத்து கூறி கொண்டிருந்தார்...ஆனால் அவர் எதை மறுக்கிறாரோ அதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற வெறி ராஜேஸ்வரிக்கு இருக்க இப்போதும் அதே எண்ணம் துளிர் விட்டது அதெப்படி என்னோட ஆசைக்கு இவர் மதிப்பு அளிக்காமல் இருக்கார் என கோபம் கூட வந்தது..
தர்மராஜ் எல்லாம் கேட்ட ராஜேஸ்வரி தன் நினைத்த விஷயத்தை சிறு வயது முதலே நடத்தி முடிக்கும் பிடிவாதக்காரிக்கு தர்மராஜை தன் வலைக்குள் வீழ்த்திய ராஜேஸ்வரிக்கு இந்த விஷயத்தை எப்படி கையாள வேண்டும் என தெரியாதா?? எங்கே அடித்தால் எங்கே வீழ்வான் என்று தெரியாதா??
நேராக வேலாயுதத்தை அழைத்து அவர்கள் இருவரின் காதல் விஷயத்தை கூறி இலேசாக சென்டிமென்ட்டாக பேச அந்த கிராம்மத்தானும் , " தம்பி அது தான் பாப்பா சொல்றாங்கல நீ அங்கேயே தொழிலை ஆரம்பி... எங்கே இருந்தாலும் நீ தொழில்தான செய்ய போற ??"...என்று அந்த வெள்ளந்தி மனிதர் சட்டென்று வீழ்ந்து விட்டார்...
"இல்லை அப்பா நான் நம்ம ஊர்ல செய்யலாம்னு இருக்கேன் பா"...என மறுத்து தர்மராஜ் கூற
"என்னயா நம்ம ஊரு நம்ம ஊர் ஆளுங்க யார் யா நீ சமைக்கிற சோத்தை திங்க போறாங்க அங்கே தொடங்கு யா "...என்று கூற
அதை கேட்டு அரை மனதாக ஒத்து கொண்ட தர்மாவிற்கு இது சரி வருமா என்று பலத்த யோசனை ஆனால் ராஜேஸ்வரி விடவில்லை..
கூடவே தர்மா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஒரு பெரிய ஹோட்டலில் வேலை செய்து கொண்டே தனது கனவுகளுக்கான படிகளை செதுக்கிக் கொண்டிருந்தார்..
அந்த சமயம் ராஜேஸ்வரி இறுதி வருடத்துக்குள் நுழைந்து இருந்த சமயம் ராஜேஸ்வரியின் அண்ணன் ராஜராஜனும் , முறை பையன் ஈஸ்வரும் ராம மூர்த்திக்கு துணையாக தொழிலில் இறங்கிய சமயம் ராஜேஸ்வரி தர்மாவை காண அவர் வேலை செய்யும் ஹோட்டல் வாயிலில் நிற்கும் போது ராஜராஜனும், ஈஸ்வரும் ஒரு மீட்டிங்கில் கலந்து கொள்வதற்காக அந்த ஹோட்டலுக்கு வர அங்கே ராஜேஸ்வரி மற்றும் தர்மா சிரித்து பேசி கொண்டிருப்பதை பார்த்து இருவரும் இவர்களுக்கு அதிர்ச்சி ..
எதற்கும் தராதரம் பார்க்கும் ராஜேஸ்வரி ஒரு சமையல்க்காரனிடம் சிரித்து பேசி கொண்டிருக்கிறாளா என்று இருவருக்கும் பேரதிர்ச்சி...
அதுமட்டுமின்றி ராஜராஜனுக்கு தன் தங்கை எப்படி ஒருவனிடம் இப்படி சிரித்து பேசலாம் என்று கோபம் என்றால் ஈஸ்வருக்கு ராஜ ராஜேஸ்வரியை கண்ட நாள் முதலாக ஆழ் மனதில் அவர் மீது ஆசையை தன் மனதில் புதைத்து வைத்து சொல்லா காதலை வளர்த்து வைத்திருந்த ஈஸ்வருக்கு தான் இந்த காட்சி அவ்வளவு உவப்பானதாக இல்லை...
வேகமாக ராஜேஸ்வரி மற்றும் தர்மா நிற்கும் இடத்திற்கு சென்ற ராஜராஜன் தர்மாவின் சட்டையை பிடித்து , "என்ன பெரிய இடத்து பொண்ணை மயக்கலாம்னு ஒரு எண்ணமா ??"...என்று சட்டையை பிடித்து கேட்க
"உன்னோட பணம் யாருக்கு டா வேணும் பணத்தை விட உயர்ந்த என்னோட ராஜி எனக்கு போதும்"... என்று கூறிய தர்மாவிற்கும் அங்கே அடிதடி ஏற்பட்டது..
ஈஸ்வருக்கு தர்மா , ராஜி மீது வைத்திருக்கும் காதலை சுத்தமாக ஏற்று கொள்ள முடியவில்லை..இன்று நேற்று அல்ல அவள் பிறந்தது முதல் நான் அவளுக்காக காத்து இருக்கிறேன் இடையில் வந்த நீ கொத்தி கொண்டு போவதா என்ற எண்ணம் மேலோங்கி ஈஸ்வரின் புத்தி தடுமாற துவங்கியது..
இயல்பிலே சிறு சாணக்கியத்தனத்தோடு வளர்ந்தவருக்கு இதை எப்படி தடுத்து நிறுத்தலாம் என்ற கேள்வியும் மூளையை குடைய துவங்கியது..
இதில் என்ன ஒரு குறிப்பான விஷயமெனில் ஈஸ்வர் குடும்பத்தார் முன்னிலையில் ஈஸ்வர் ஒரு அப்பாவி அவரால் எதுவும் செய்ய இயலாது...மேலும் அவர் நியாயவான் என்ற போர்வையிலே அவர் வாழ்ந்து வருவதால் அந்த போர்வையை நீக்கி விட்டு அவரால் வெளியேற முடியாது ஆனால் அவர் மற்றவர்கள் மூலமாக தனக்கு வேண்டிய செயலை செய்து கொள்வார்..
இப்படி குணம் உள்ள ஈஸ்வர் ராஜராஜன் மூலம் ராமமூர்த்தியின் பார்வைக்கு இந்த விஷயம் படும் செய்தார்...
ராம மூர்த்தி இயல்பிலே நல்ல மனிதர் தன் மகளையும் , அவளது காதலான தர்மாவையும் நேரில் மிக கண்ணியமாக அழைத்தார்...
அவருக்கு தர்மாவை கண்டதும் மிகவும் பிடித்து இருந்தது தன் மகனுக்கு கிடைத்த சிறந்த ஜோடியாகவே நினைத்தார்..அதிலும் தன்னம்பிக்கை, துணிச்சல் இந்த பையனிடம் உண்டு என்பதை ஒரு நோட்டத்திலே கண்டு கொண்டார்..
என்ன இருந்தாலும் மகளை பெற்றவர் பணக்காரர் வேறு அதிலும் அவரது செல்லமகள் வேறு தன் மருமகன் ஈஸ்வருக்கு திருமணம் செய்வித்து வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்து கொள்ளலாம் அப்போது காலம் முழுதும் தன் மகள் தன்னுடன் இருப்பாளே என்று எண்ணி இருந்தவர் அவரது எண்ணத்தை யாரிடமும் கூறவில்லை சமயம் வரும் போது பேசி கொள்ளலாம் என நினைத்து விட்டார்..
இப்போது மகள் காதல் என்று கூறும் போது அவரால் அவர்களுக்கு மதிப்பு அளிக்காமல் இருக்க முடியவில்லை..
"தம்பி காதல்னு சொல்றீங்க சந்தோசம் ஆனால் நீங்க கேட்டதும் பொண்ணை எந்த நம்பிக்கையில் நான் கொடுப்பேன் சொல்லுங்க??"...
"அப்பா என்ன சொல்றீங்க இப்போ அவர் கிட்ட பணம் இல்லைன்னு சொல்றீங்களா??"..என்று ராஜேஸ்வரியும் எகிற
"ராஜு பாப்பா அப்பாக்கும் கல்யாணம் ஆகும் போது பணம் இல்லை டா ...இப்போ தானே இதெல்லாம் வந்தது..அதுனால அப்பாவுக்கு பணம் பெரிய விஷயம் இல்லை...
தம்பி ஒரு பக்கம் அடுத்தவங்ககிட்ட வேலை தான் செய்யறார் அது தான் நான் யோசிக்கிறேன் உன்னால அட்ஜஸ்ட் பண்ண முடியுமான்னு தெரியலே டா "...ஒரு பொறுப்பான தந்தையாக தராசை இரு பக்கமும் சாய்த்து பிடித்து அவர் கூற,
அதை கேட்ட தர்மராஜ், "சார் உங்க பொண்ணை என்னால நல்லா பார்த்துக்க முடியும் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு ..உங்களுக்கு இருக்கிற ஒரே பிரச்னை நான் வெளில வேலை பார்க்கிறது தான் நெனைக்கிறேன்...ஒரு இரண்டு வருஷம் மட்டும் சமயம் தாங்க நீங்க எதிர் பார்க்கிற அளவுக்கு உயர்ந்து நிற்பேன் "...என்று தைரியமாக கூறினார்..
"தம்பி அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறதனால தான் நீங்க இங்க என் முன்னாடி உக்கார்ந்து பேசிட்டு இருக்கீங்க "....என்று கூற
இதை எல்லாம் கேட்ட ஈஸ்வருக்கு தன்னால் ஒன்றும் செய்ய முடியாத எரிச்சலில் ராஜராஜனை உசுப்பி விட, அவரோ, " என்னப்பா எந்த நம்பிக்கையில் இவனுக்கு நம்ம வீட்டு பொண்ணை கொடுக்கறீங்க ?? அதெல்லாம் முடியாது பா...சரி வராது அப்போ கல்யாணம் பண்ணி இரண்டு வருடம் என் தங்கச்சி கஷ்டப்படுனுமா??"...
"அண்ணா நான் ஏன் அண்ணா கஷ்டப்பட போறேன் நானும் உங்க கூட பிசினஸ் பண்ண போறேன்..அப்புறம் எங்கே கஷ்டம் வர??"...என்று ராஜேஸ்வரி தன் அண்ணனிடம் பாசமாக கூற
"பாப்பா நீ நினைக்கிறது போல தொழில் செய்யறது எல்லாம் அவளோ ஈஸி இல்ல பாப்பா"
.. என்று இன்னும் தன் மகள் சிறு பெண் என நினைத்து ராம மூர்த்தி சிரிக்க , "அப்பா என்னால முடியும் பா"... என்று வீரப்பாக ராஜேஸ்வரி கூறினார்
மகளை பார்த்து சிரித்து கொண்டே ராம மூர்த்தி, "சரி தம்பி உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் நான் பொண்ணு ஆசைப்பட்ட மாதிரி என் பொண்ணை உங்களுக்கு கல்யாணம் பண்ணி தரேன் அதுக்கு பதிலா நீங்க என் வீட்டுல இருக்கணும் அதுக்காக வீட்டோட மாப்பிளையா உக்கார சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க...நீங்க கேட்ட இரண்டு வருஷத்துக்கு இருங்கன்னு சொல்றேன் என் மகன் சொன்ன மாதிரி ஆசையா வளர்த்த பொண்ணு கஷ்டப்படுறதை என்னால பார்க்க முடியாது "...என்று கூற தர்ம ராஜ் யோசனை செய்ய முயல அதற்கு அவருடைய காதலி ராஜேஸ்வரி விடவில்லை..
"அப்பா தான் இவ்ளோ தூரம் இறங்கி வந்து இருக்கார்ல என்னவோ உங்களை காலம் பூரா என் வீட்டில் இருக்க சொன்ன மாதிரி யோசிக்கறீங்க.. இரண்டு வருஷத்துக்கு தானே சரின்னு சொல்லுங்க தர்மா "...என்க ..
அதற்கு பிறகு தர்மாவால் மீற இயலவில்லை..முன்பே தன் தந்தையிடம் விஷயத்தை தர்மராஜ் கூறியிருந்ததால் தடபுடலாக அவர்கள் இருவரின் திருமணம் நடந்தது..
வாழ்க்கை என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்...ராஜேஸ்வரிக்கு காலேஜ் ஹீரோ அவன் என் கணவன் என்பதில் கர்வம் என்றால் தர்மாவிற்கு காதலித்தவளை கரம் பிடித்தேன் என்ற மகிழ்ச்சி தர்மாவிற்கு ஒரே ஒரு வருத்தம் அவரது தந்தை வேலாயுதம் மட்டும் அவர்கள் ஊரிலே தங்கி விட்டார்.. தர்மா எவ்வளவு கூறியும் தந்தை மறுத்துவிட தர்மாவுக்கு எப்படியாவது இந்த வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று இருந்தது..
அதற்கு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைத்த தர்ம ராஜ் ஹோட்டலில் வேலை செய்து கொண்டே மும்பையில் ஏதாவது இடம் பார்த்து ஹோட்டல் கட்ட முடிவு செய்தார்..
அதன் படி அவருக்கு பிடித்தது போல ஒரு இடமும் கிடைத்தது..அதற்கு அவரிடம் அவர் சேமித்த சிறு தொகை கையில் இருக்க அதை மட்டும் வைத்து கொண்டு இடத்தை வாங்க முடியாது என உணர்ந்த அவர் தன் தந்தையிடம் விஷயத்தை கூற அவரோ அவருக்கு என்று இருந்த ஒரு வீடும் அதை சுற்றி இருந்த கொஞ்சம் இடத்தையும் விற்று பணத்தை கொடுத்தார்...அதை கண்டு வருந்திய மகனை பார்த்து , "தம்பி உன் ஆசையை விட பெரிசு உன் அப்பாக்கு எதுவும் இல்லை பா..நீ வாழ்க்கையில் முன்னேறு அது வரை என்னை பத்தி கவலைப்படாதே " என்று கூறி சென்று விட்டார்...
கூடவே மனைவியும் அந்த நேரம் படிப்பை முடித்து விட ராஜேஸ்வரியின் மனதில் முழுவதும் தொழிலில் இறங்க வேண்டும் அப்பாவை போல சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே மனதில் ஓடிக்கொண்டு இருந்தது..
அந்த நேரம் பார்த்து ராஜராஜனுக்கு எவ்வளவு தூரம் ராம மூர்த்தி தொழில் விஷயங்களை சொல்லி கொடுத்தாலும் அவருக்கு அனுபவ அறிவு தேவைப்பட்டது ...அதனால் ராம மூர்த்தி அவருடைய நண்பனின் நிறுவனத்திற்கு வேலைக்கு அனுப்பி வைத்தார்...சொந்த இடத்தில் இருப்பதை விட வெளியில் இருந்தால் நன்றாக கற்று கொள்ள இயலும் என்றே அவர் இவ்வாறு செய்தார்...
ஆனால் ஈஸ்வர் செல்லவில்லை பல விஷயங்கள் தொழிலில் தெரியவில்லை என்றாலும் தெரிந்த போலே இருந்ததால் அவர் செல்லவில்லை...ராம மூர்த்தி பார்வையில் எல்லாம் அறிந்தவர் போலவே சுற்றி கொண்டிருந்ததால் தப்பித்து விட்டார்...
இப்படி இருக்கும் போது ஒரு நாள் தர்மா ,ராஜியை அணைத்து முத்தமிட்டு, " ராஜி நமக்கு விடிவு காலம் பொறக்க போகுது...நாம மும்பையோட மெயின் சிட்டில இடம் வாங்கினோம்ல அந்த இடம் ரொம்ப அருமையான இடம் சிட்டியோட மையின்ல இருக்கு..தொழில் தொடங்க ஏதுவான இடம்.. அங்கே ஹோட்டல் கட்ட போறோம் "...என்று கூற
முதலில் கேட்ட வார்த்தையில் மகிழ்ந்த ராஜி அவர் கூறிய இரண்டாவது வார்த்தையில் கோபமுற்றார்...
ஏனெனில் தொழில் படிக்கவென தன் தந்தையின் நிறுவனத்துக்கு செல்லும் போது ராஜேஸ்வரிக்கு துணையாக இருப்பது என்னவோ ஈஸ்வராக இருக்க ஈஸ்வர் ," ராஜி மா உன் கணவன் சமையக்காரன்னு அடுத்தவன் சாப்பிட்ட எச்ச பிளேட் எல்லாம் எடுக்கிறான் நேத்து கூட நான் சாப்பிட்ட பிளேட் எடுத்தான்னு நம்ம கம்பெனில வேலை செய்யற லேபர் பேசிக்கிறாங்க"... என்று கூற அதை கேட்ட ராஜேஸ்வரிக்கு உள்ளூற பொருமலே என் கை எப்போதும் ஒரு படி மேலே தான் இருக்க வேண்டும் என்று வளர்ந்தவருக்கு ஏனோ தன் கணவர் இந்த தொழிலை செய்வது பிடிக்கவில்லை..
அதுமட்டுமின்றி ஒரு பெரிய நிறுவன திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ராம மூர்த்தி மற்றும் ராஜேஸ்வரி செல்லும் போது அங்கே மற்றவர்களுக்கு உணவு பரிமாறி கொண்டிருந்த தர்ம ராஜை கண்டு ராம மூர்த்திக்கு பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை ஆனால் ராஜேஸ்வரிக்கு தான் அவமானமாக இருந்தது..
இதை எல்லாம் மனதில் வைத்து தன் வயிற்றில் வளரும் இரண்டு மாத கருவை இரவில் கணவன் முத்தமிட்டு கொண்டிருக்கும் வேளையில், " நீங்க இந்த வேலை செய்யறது எனக்கு பிடிக்கலை பேசாமல் இதை சமையலை மூட்டை கட்டி வெச்சிட்டு என்கூட அப்பாவோட ஆபிஸ் வாங்க"... என்று கூறவும் அதுவரை இருந்த இளகிய தர்மராஜ் மாறி அவர் முகம் கடுமையானது..
மாயவன் வருவான்..
