Share:
Notifications
Clear all

மந்தாரம் 9

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

மந்தாரம் : 9

ராம் மோகன் தேவிகா மற்றும் அவள் தோளில் கிடந்த குழந்தையை கண்டதும் இன்முகத்துடன், "வா மா.. நல்லா இருக்கியா??.. நீயாவது ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல" என கேட்டவரை பார்த்த தேவிகாவுக்கு சற்றே அதிர்ச்சியாக இருந்தது.. அவருக்கு எல்லாம் தெரிந்து விட்டதா எப்படி?? இவங்க சொல்ல வாய்ப்பு இல்லை பிறகெப்படி தெரிந்தது?? என்ன நடக்கிறது இங்கே?? என புரியாமல் தன்னுடைய சொத்தான தன் மகனை இறுக பிடித்தபடி நின்று கொண்டு இருந்தாள்..

ராம் மோகன் என்ன இப்படி பேசுகிறார் என எண்ணிய ரேவதி, "என்னங்க தேவிகா வீட்டு வேலைக்கு வந்து இருக்கலாமா.. விது சொன்னான்.. அவளோட புருஷன் அவளையும் குழந்தையையும் பார்த்துக்கலையாம்" என்று ரேவதி உண்மை தெரியாமல் கூறினார்..

அதைக் கேட்ட ராம் மோகன் மெல்லிய கசந்த புன்னகையை தன் மனைவிக்கு வீசி, "இன்னும் ஒன்னும் தெரியாத பெண்ணாக இருக்கயேம்மா" என்றார்.. அதை கேட்டு ரேவதி புரியா பார்வை பார்த்தார்..

அதே பார்வையில் ராம் மோகன் தன் மகனை பார்க்க, இன்னும் ஸ்ரேயா அவனை அணைத்த படி இருந்தாள்..

அவளும் அவனிடம் இருந்து விலகவில்லை..அவனும் விலகவில்லை.. அவனும் அதே நிலையில் தந்தையை பார்த்து முறைத்தான்..

ஒருவேளை தன் தந்தை வரவில்லை என்றால் அவளை தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்தி இருப்பானோ என்னவோ வேண்டும் என்று இப்பொழுது அவளை அணைத்துக் கொண்டு அவன் நின்று கொண்டிருந்தான்.. இதை பார்த்து அவனுடைய அப்பா சற்று காண்டாகட்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது என்னவோ உண்மை தான்..

அப்படி இருக்க, தன் மகனின் செயலை பார்த்து காரி உமிழ முடியாமல் முகத்தை திருப்பிய அவர் ரேவதி, "இன்னும் ஒண்ணுமே தெரியாத ஒருத்தியா இருக்கியே வெளிஉலகம் தான் தெரியலன்னு பார்த்தா வீட்டுக்குள்ள என்ன நடக்குதுன்னு கூட உனக்கு தெரியலையே?? தேவிகா வீட்டு வேலைக்கு வரல.. நம்ம வீட்டுக்கு வாழ வந்திருக்கா.. எல்லாம் உன் பையனோட திருவிளையாடல் தான் காரணம்" என்று பெருமூச்சு ஒன்றை விட்ட படி அவர் கூறினார்.. அதைக் கேட்டு ரேவதி குழம்பினார்..

அதை கேட்டதும் விது கடுப்பாகி தன் தந்தையை பார்த்து, "என்ன இவள் கூட வாழவா?? எனக்கான வேலை முடியும் வரை மட்டும் தான் அவள் இங்கே இருப்பா.. அதுக்கு பிறகு இதோ இவ தான் என்னோட பார்ட்னர்" என்று ஸ்ரேயாவைக் காட்டி நக்கலாக கூறினான்.... ஸ்ரேயாவுக்கும் அவனுடைய தந்தை பேசுவது புரியவில்லை என்றாலும் அவன் சொன்ன வார்த்தை அவளுக்கு நெஞ்சை இனிக்க வைத்தது என்று தான் கூற வேண்டும்..

அது கேட்டு மேலும் தேவிகா அடிபட்ட பார்வை பார்த்தாலும், இவன் இப்படி பட்ட ஒருத்தன் தானே இவன் வாயில் இருந்து இதெல்லாம் வரவில்லை என்றால் தான் அதிசயம்.. யாரை இவன் கல்யாணம் செய்தால் எனக்கு என்ன என்பது போல அவள் நின்று கொண்டாள்.. அவளுக்கு அவன் அவளை விட்டால் போதும் என்று தான் இருந்தது..

"அதுக்கு சட்டத்துல இடம் இருக்கா???" என ராம் மோகன் அவனுடைய தந்தை அவர் என்பதை அவனுக்கு உரைக்கும் விதத்தில் கூறினார்..

அதைக் கேட்டதும், "ஏன் சட்டத்தில் இடமில்லை??டாட் ஓவரா பண்ணிட்டு இருக்கீங்க.. அஃப்ட்ரால் இதோ அவளுக்காக உங்க மகனை நீங்க பகைச்சிட்டு இருக்கீங்க.. இதோ இவள் வேணும்னு கேட்டீங்க தானே கூட்டிட்டு வந்துட்டேன்.. எவ்வளவு சீக்கிரம் என்னோட கம்பெனி என் பெயருக்கு வந்து இருக்கணும் சொல்லிட்டேன்.. அதுக்காகத்தான் இவளை எல்லாம் இங்கே கூட்டிட்டு வந்து இருக்கேன்.. தேவையில்லாமல் என்கிட்ட மோதாதீங்க அப்புறம் அப்பான்னு நான் பார்க்க மாட்டேன்" என்று எச்சரித்தான் மகன்..

அதற்கு அவரும் கூலாக, "அவ்ளோ சீக்கிரமா கம்பெனி உன்னோட பெயருக்கு மாத்தி கொடுத்துடுவேனா?? நீ எதுக்காக இவங்களை கூட்டிட்டு வந்து இருக்கேன்னு என்னால யோசிக்கக்கூட முடியாதா?? அந்த அளவுக்கு உன்னோட அப்பன் முட்டாளா?? உன்னையே அனுப்பி வைச்சு உங்களை கூட்டிட்டு வர வச்சவன் இதுக்கு மேல நான் யோசிக்க மாட்டேனா?? அதைப்பற்றி அப்புறம் பேசலாம் ஒரேடியா எல்லா ஷாக்கும் உனக்கு கொடுத்துட்டா வாழ்க்கை உனக்கு ரொம்ப போர் அடிச்சிடும் பொறுமையா நான் சொல்றேன்" என்றவர் எதுவுமே புரியாமல் அமைதியாக நிற்கும் ஸ்ரேயாவை பார்த்து,

" ஷ்ரேயா பெத்த பொண்ணு மாதிரி சொல்றேன்.. நீ ஆசைப்பட்டது இனி நடக்காது.. உனக்கான ஒரு வாழ்க்கையை நீ பார்த்துக்கோ.. அதுதான் உனக்கு நல்லது.. இதோ அங்க நிக்கிறாளே தேவிகா அவ கையில இருக்குற குழந்தை இதோ என்னோட மகனோடது.. அதை அவனும் என்கிட்ட ஒத்துக்கிட்டான்.. இப்ப சொல்லு உனக்கு இப்படி ஒரு வாழ்க்கை தேவையா?? நல்ல பொண்ணு.. நல்ல பொசிஷன்ல இருக்க அந்த இடத்தை தக்கவைத்து இன்னும் மென்மேலும் உயரத்துக்கு போகணும்.. இப்படி சின்ன சின்ன ஆசைக்காக உன்னுடைய வாழ்க்கையை நீ இழந்துட்டு நிக்காத நீ நினைக்கிறது நடக்காது.. உன்னுடைய மனசை மாத்திக்கிட்டு உனக்கான ஒரு பாதையை நீ உருவாக்கு இவனை விட்டு விலகிடு மா" ஒரேடியாக அவர் விசயத்தை போட்டு உடைத்தார்..

அதை கேட்ட ரேவதிக்கு எதுவுமே விளங்காமல், "என்னங்க நடக்குது?? என்ன நடக்குது?? என்ன சொல்றீங்க?? இந்த குழந்தை நம்ம விதுவோடதா என்ன சொல்றீங்க??" என அவர் கூறிய விஷயத்தில் அதிர்ந்து போய் ரேவதி தன் கணவனை பார்த்து கேட்டார்.. அவர் விழிகளில் இது பொய்யாக இருக்கக் கூடாதா என்று எண்ணம் இருந்தது..

அதை கண்ட ராம் மோகன், "உனக்கு அதிர்ச்சியா இருந்தாலும் அதுதான் உண்மை ரேவதி.. உன்னுடைய மகன் குழந்தை தான் தேவிகா கையில் இருக்கிறது.. அதாவது நம்ம பேரன்" என்றவர் அதோடு நில்லாமல் தேவிகா அருகே செல்ல அந்த சமயம் பார்த்து குழந்தையும் கண்களை தேய்த்த படி எழுந்து கொள்ள அவனோ தான் எங்கு இருக்கிறோம் என்று புரியாமல் எங்கு பார்த்தாலும் புதிய முகமாக இருக்க அம்மாவை பார்த்து அம்மா பெரிய வீடு, அம்மா கார், பூ, என அம்மாவுக்கு காட்டிக் கொண்டு இருந்தான்..

அந்த குழந்தையின் முகத்தை கண்டதும் ரேவதி அதிர்ந்து போனார்.. அப்படியே தன் மகனை உரித்து வைத்திருக்கும் இந்த குழந்தையை கண்டு எப்படி அவரால் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியும்..

அது மட்டுமின்றி அதே அதிர்ச்சி தான் ஸ்ரேயாவுக்கும் இருந்தது.. குழந்தையை கண்டது மட்டும் இன்றி ராம் மோகன் கூறிய விஷயங்களை எல்லாம் கேட்டதிலிருந்து தன் வாழ்க்கை பொய்த்துப் போனதோ என்ற நிலையில் இருந்தவள் அவன் அருகே இருந்து அதிர்ச்சியான விழிகளில், "விது இது உன்னோட குழந்தையா?? உன்னோட அப்பா என்னென்னமோ சொல்றார்?? எனக்கு புரியல விது?? அவர் சொல்றதெல்லாம் உண்மையா??" என்று அவள் கேட்டாள்..

அதேநேரம் ரேவதியும் தன் மகனிடம், "அப்பா சொன்னதெல்லாம் உண்மையா?? இந்த குழந்தை உன்னோடதா உனக்கும் தேவிகாவுக்கும் பிறந்த குழந்தையா?? சொல்லுடா?? சொல்லு.. உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு சொல்லு" என்று மேலும் அதிர்ந்து போய் கேட்டார்..

இவர்கள் அனைவரும் குற்றவாளி போல அவனை கேள்வி கேட்பது அவனுக்கு பிடிக்கவில்லை..

அதிலும் தன் தந்தை தன்னை அவமானப்படுத்தி மூன்று பெண்கள் முன்னிலையிலும் குற்றவாளி போல நிறுத்தி இருக்கிறார் என நினைத்தான்..

அவன் அமைதியாக தேவிகாவை முறைத்தபடி நிற்க தேவிகா இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல நின்று கொண்டாள்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top