மந்தாரம் 6.1
மந்தாரம் : 6.1
வெற்றி அதிர்ந்த விழிகளோடு இவன் சொல்வதை எல்லாம் உண்மைதானா என்பது போல அவளை பார்த்து, "தேவி அவர் சொன்னது எல்லாம் உண்மையா?? ஏன் அமைதியா இருக்க தேவி சொல்லு?? யார் இவரு??" என கேட்கவும்,
அவள் அமைதியாக கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கவும் அதை கண்டதும், "நான் தான் சொல்றேன் இல்ல..அங்க என்ன பேச்சு.. நான் இவளோட தாலி கட்டின புருஷன்..இப்போ இவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போகத்தான் வந்திருக்கேன்.. இப்போ என்ன விஷயம்ன்னு உனக்கு புரிஞ்சு போச்சா??" என்றவன் அமைதியாக நின்று கொண்டிருக்கும் அவளைப் பார்த்து, "ஏய் குழந்தையை வாங்கிட்டு கார்ல ஏறு.. கண்டவனுக்கு எல்லாம் பதில் சொல்ல எனக்கு சமயம் இல்லை" என்று அதிகாரமாக கூறினான்..
இவனுக்கு என்ன திமிர் இவன் அழைத்தால் சென்று விட வேண்டுமா?? தன் கண் முன்னே வெற்றியை அசிங்கப்படுத்துகிறான்.. இவனுக்கு வேண்டுமானால் வெற்றி சாதாரணமானவனாக தெரியலாம் ஆனால் அவளைப் பொறுத்தவரை அவன் கடவுளுக்கு நிகரானவன் என தேவிகாவுக்கு விது மீது கோபம் வர துவங்கியது..
வெற்றிக்கு எதுவும் விளங்கவில்லை ஆனால் அவன் அவ்வளவு அழுத்தமாக கூறவும், அதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அதனால் அவளிடம், "தேவி அவங்க சொல்றது உண்மைதானா??" என்று ஒவ்வொரு வார்த்தையாகத் திக்கி திணறி கேட்டான்..
ஏனெனில் இப்பொழுதுதான் அவனுடைய மனதை அவளிடம் வெளிப்படுத்தி அந்த பதிலுக்காக அவன் காத்திருக்கும் தருணத்தில் இப்படி ஒரு குண்டை தூக்கி விது பிரதாப் போடுவான் என எதிர்பார்க்கவில்லை.. வெற்றியின் உள்மனம் இவர்கள் தன்னை விட்டு சென்று விடுவார்களோ என இருந்தது..
அப்படி இருக்க, வேகமாக குழந்தையை அழுத்தமாக பிடிக்க குழந்தை மீண்டும் அப்பா என வெற்றியின் கன்னத்தில் முத்தமிட்டது.. அதை கண்ட விதுவுக்கு பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.. ஏனோ எரிச்சலாக இருந்தது.. குழந்தையை வாங்கி விடலாமா என்று கூட யோசித்தான்..
"ஏய் நான் சொல்றது உன் காதுல விழல உன்னைத்தான் கூப்பிடுறேன் வண்டியில ஏறு.. அப்பாவாம் அப்பா" என்று முனகி கொண்டே அவன் கட்டளையிட்டான்..
இங்கு வெற்றி அவளைப் பார்த்து அவள் சென்று விடுவாளோ என்ற பதட்டத்தில், "இவர்தான் உங்க வீட்டுக்காரரா?? இங்கே என்ன நடக்குது சொல்லு தேவி.." என்று பதட்டத்தில் வெற்றி கேட்டான்..
அவள் அவளுடைய கணவன் என கூறாமல், "ஆம்..இவரு தான் ரூபனோட அப்பா" என அவனுடைய முகத்தை பார்க்காமல் கூறினாள்.. அதை கண்ட வெற்றி மேலும் அதிர்ந்தான்..ஏனோ இனி எல்லாம் முடிந்தது என்பது போன்ற உணர்வு வெற்றிக்கு வந்தது..
அவள் கணவன் வந்து நிற்கும் போது அவளும் இத்தனை நாட்கள் சொந்தமென பார்த்த மகனும் அவனுடையவர்கள் அல்லாமல் ஆகி போனார்களே என வருந்தி இதை எப்படி கையாள்வது என தெரியாமல் திகைத்து நின்றான் வெற்றி..
அதை கண்டு நக்கலாக சிரித்த விது, "நான் தான் இவளுக்கு தாலி கட்டி இருக்கேன்னு சொல்லிட்டு இருக்கேன்.. சும்மா அதையே கேட்டுட்டு இருக்க குழந்தையை குடுத்திட்டு கிளம்புற வழியை பார்..
ஏய் நான் சொன்னது உனக்கு கேட்குதா இல்லையா?? இல்லை உன்னை வீட்டை விட்டு விரட்டுனதுக்கு தண்டனையா என்னை கண்டவங்க முன்னாடி நிக்க வைக்கணும்னு நினைச்சுட்டு இருக்கியா?? அப்படி ஒரு நினைப்பு இருந்துச்சுன்னா அதை தூக்கி தூர போடு.. உன்னை தூக்கி உள்ள போட்டுட்டு வண்டிய எடுத்துட்டு போக தெரியாம இல்ல.. இங்க வச்சு ஒரு சீன் வேண்டாம்னு பார்த்துட்டு இருக்கேன்" என்று பிரதாப் கூறினான்..
வெற்றி அவன் பேசுவதை எல்லாம் கேட்டு பதட்டத்தில், "நீங்க போறீங்களா?? வேண்டாம் தேவி.. என்னால ரூபன் இல்லாமல் இருக்க முடியாது" என வெற்றி தவிப்பாக தேவி என்ன முடிவு எடுக்க போகிறாளோ என்ற தவிப்பில் அவன் கேட்கவும் அவள் மேலும் உடைந்து இல்லை என்றவள்,
"வெற்றி நீங்க ரொம்ப நல்லவங்க.. நீங்க எப்பவும் நல்லா இருக்கணும்.. உங்க பதட்டம், உங்களுடைய வருத்தம் எல்லாம் எனக்கு புரியாமல் இல்லை.. எனக்கும் இப்போ நடந்துட்டு இருக்குறதுல எந்த விருப்பமும் கிடையாது.. என்னுடைய தலைவிதி இதெல்லாம் நான் பார்க்கணும்னு இருக்கு..
உங்களுக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நான் ஒரு பாவி.. அது தான் எனக்கு இப்படி எல்லாம் நடக்குது போல..
நான் இதை பார்த்துக்கிறேன்.. உங்க தூய்மையான அன்பு என்னன்னு எனக்கு தெரியும்..நீங்க எனக்காக செஞ்ச அத்தனையும் எனக்கு தெரியும்.. கடைசியா நீங்க என்கிட்ட கேட்ட வார்த்தையும் எனக்கு தெரியும் எதையும் நான் மறக்கல..
நீங்க எனக்காக கொஞ்சம் பதட்டப்படாமல் இருங்க.. ஏன்னா நானே உடைந்து போயிருக்கேன்.. எனக்கு கொஞ்சம் இவர்கிட்ட பேச வேண்டி இருக்கு நான் பேசிகிட்டுமா?? அதுக்குப் பிறகு நான் இவர் கூட போகிறேனா இல்லையான்னு சொல்றேன்.. என்ன இருந்தாலும் ரூபனோட அப்பா நீங்க மட்டும் தான் அந்த அப்பா அப்படிங்கற இடத்தை யாராலும் பிடிக்க முடியாது.. அந்த தகுதி யாருக்கும் கிடையாது.. ஒரு பொண்ணுக்கு குழந்தையை கொடுத்துட்டா மட்டும் அப்பா கிடையாது.. அந்த குழந்தையை எப்படி அரவணைத்து பாதுகாத்து நாம வளர்க்கிறோமோ அதுல இருக்கு எல்லாம்..
நீங்க இத்தனை நாள் ரூபனுக்கு என்ன உறவாக இருந்திங்களோ அப்படியேதான் இப்பவும் இருப்பீங்க.. அந்த நம்பிக்கையை என்னால் உங்களுக்கு கொடுக்க முடியும்.. ஆனால் கொஞ்சம் நான் இவர்கிட்ட பேசிட்டு உங்ககிட்ட வரேன்" என்று வெற்றியைப் பார்த்து உடைந்த குரலில் கூற அதைக் கேட்டு வெற்றி அமைதியாக நின்றான்..ஆனால் அவள் பேசிய கடைசி வார்த்தைகளில் கடுப்பின் உச்சிக்கு சென்று நின்று கொண்டிருந்தான் பிரதாப்..
பிறகு தன் கணவன் எனும் அரக்கனை பார்த்து, "என்னை துரத்தி விட்டுட்டு இப்போ எந்த தைரியத்தில் என்னை கூப்பிட வந்தீங்க?? முதலில் யார் நீங்க??? இப்பத்தான் குழந்தை பொண்டாட்டி நான் உங்க கண்ணுக்கு தெரியுதா?? இப்போ எதுக்கு கூப்பிடுறீங்க?? உங்க பொண்டாட்டியா வாழ வா இல்ல உங்க தேவையை தீர்த்துக்கவா??.." என்று அவள் அவனைப் பார்த்து கேட்டாள்..
விது பிரதாப்புக்கு அவளுடைய பேச்சு இலேசான எரிச்சலை கொடுத்தது.. ஆம் அதை விட அவனிடம் குழந்தைக்கு தந்தை அந்த ஆட்டோக்காரன் தான் என்று கூறியது அதைவிட கடுப்பாக இருந்தது.. அந்த அளவுக்கு நான் மட்டமாக போய் விட்டேனா என்பது போல அவன் நினைக்கத் தொடங்கினான்..
"என்ன தேவிகா பேச்செல்லாம் பலமா இருக்கு.. பக்கம் பக்கமா பேச கத்துக்கிட்ட போல?? என்னுடைய கண்ணை பார்த்து நிமிர்ந்து முகத்தை பார்க்க கூட தைரியமில்லாமல் இருந்த நீ இவ்வளவு தூரம் பேசுறியா??" என்று அவன் கேட்டான்..
பிறகு மீண்டும் சிகரெட்டை எடுத்து தன் வாயில் பற்ற வைத்தவன் அவளை நிமிர்ந்து பார்த்து, "உன்னுடைய பேச்சை பார்த்தா இவனை விட்டு வர உனக்கு விருப்பம் இல்ல போல.. அஞ்சு வருஷமா இவன் கூட வாழ்ந்ததினால் வர முடியலையா?? பரவால்ல.. ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் தட்.. ஹலோ மிஸ்டர் உங்க பேர் என்ன??" என்று நக்கலாக மீண்டும் வெற்றியை சீண்ட வெற்றி அவனைப் பார்த்து, "வெற்றி.." என்று தன் பெயரை கூறினான்..
"வெற்றி நீங்க பேசுறத பார்த்தா உனக்கு இவளை பிடிச்சிருக்கா??" என்று கேட்டான்..
ஒரு கணவன் கேட்க கூடாத கேள்விதான் இருந்தாலும் விது பிரதாப் அவனை பொறுத்தவரை இதெல்லாம் சாத்தியமே..
அப்படி இருக்க அவனுக்கு இதைக் கேட்கத்தான் அறிவில்லை என்றால் பதில் சொல்லும் அளவுக்கு வெற்றிக்கும் அறிவில்லையா?? அவன் அமைதியாக இருக்க,
அதை பார்த்தி, "பரவால்ல நீ பதில் சொல்லலேன்னாலும் உன்னுடைய தவிப்பையும், இதோ இவளுடைய கோபத்தையும் பார்க்கும்போது உங்களுக்குள்ள ஏதோ ஒன்று இருக்குன்னு எனக்கு தெரியுது.. சி நான் சண்டை போடவோ இல்ல கத்தவோ எதுக்கும் வர கிடையாது..
இப்பவும் சொல்றேன்.. இதோ இவள் எனக்கு வேண்டாம்.. இவளை கூட்டிட்டு போய் குடும்பம் நடத்த நான் அழைச்சிட்டு போக கிடையாது.. எனக்கு ஒரு காரியம் ஆகணும்..
அதுக்கு இவளும் இந்த குழந்தையும் வேணும்.. என்னுடைய காரியம் முடிஞ்சதும் நானே பத்திரமா உன்கிட்ட அனுப்பி வச்சுருவேன்.. அதுக்கப்புறம் நீங்க ஒண்ணா வாழலாம் எனக்கு ஒன்னும் விரோதம் கிடையாது.. புரியுதா??" என்று கூற
அவனுடைய பேச்சு ஏனோ அவன் வாயிலிருந்து இந்த விஷயங்கள் எல்லாம் வெளியே வரும் பொழுது தேவிகாவுக்கு அருவருப்பாக இருந்தது..
