Share:
Notifications
Clear all

மந்தாரம் 17

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

மந்தாரம் : 17

தேவிகாவின் ஜாதகத்தை மீண்டும் மீண்டும் பார்த்தார் ஜோசியர்.. மீண்டும் சோலி உருட்டி பார்த்தார்.. மீண்டும் கடவுளை பார்த்தார்.. அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை..அந்த ஜாதகம் பல குழப்பங்களை சூழ்ந்து இருந்தது..

அவரின் முகம் யோசனையில் செல்வதை கண்ட பாட்டி, "என்னாச்சு ஐயா.. எதுவா இருந்தாலும் சொல்லுங்க.. எனக்கு இருக்கிறது ஒரே பேத்தி..அவளை நல்லவன் ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுத்துட்டா நான் நிம்மதியா கண்ணை மூடிடுவேன்.. அதுக்காகத்தான் இந்த உசுரை கையில பிடிச்சுக்கிட்டு இருக்கேன்" என்று அவர் கூறினார்..

அதைக் கேட்ட அவர், "இதை எப்படி சொல்றதுன்னு தெரியல ஆத்தா .. ரொம்ப குழப்பமா சிக்கலா இருக்கு" என்று அவர் கூறினார் ..

அதைக் கேட்டப் பாட்டி சற்று ஐயமுற்றாலும், "எதுவா இருந்தாலும் சொல்லு தம்பி.. எனக்கு மனசே ஆற மாட்டேங்குது.. என் பேத்திக்கு கல்யாணம் நடக்குமா?? நடக்காதா?? அவளுக்கு மூணு மாசத்துக்குள்ள இனி 21 வயசு ஆக போது.. அதுக்குள்ள கல்யாணம் பண்ணலைனா என் ஊர் வழக்கப்படி அவளை கோவிலுக்கு தானம் தான் கொடுக்கணும்.. எனக்கு அதுல சுத்தமா விருப்பம் இல்லை.. நானும் பார்க்காத இடமில்லை.. தேடாத ஆள் இல்லை.. ஆனால் அவளுக்கு ஒரு வரன் சரியா அமைய மாட்டேங்குது.. அவளோட வாழ்க்கை இப்படியோ போயிடுமோன்னு பயமா இருக்கு" என்று அவர் யாரிடம் புலம்புவது என்று தெரியாமல் ஜோசியரிடம் புலம்பிக்கொண்டிருந்தார்..

அதைக் கேட்ட அவர் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை ஒன்றை இழுத்து விட்டு பாட்டியை பார்த்து சொல்வதா வேண்டாமா என யோசிக்க, அதை கண்ட பாட்டி, "எதுவா இருந்தாலும் சொல்லுப்பா.. நீ சொல்றதை வைச்சு தான் நானும் என்னோட பேத்தியும் உயிர் வாழனுமா வேண்டமான்னு யோசிக்கணும்" என பொங்கிய அழுகையை துடைத்தார்..

அதை கேட்ட அவரோ தேவிகாவின் ஜாதகத்தில் தோன்றும் பாதகத்தை மறைத்து, "ஐயோ ஆத்தா சாகிறது எதுக்கும் தீர்வாகாது.. கவலைப்படாத உன் பேத்திக்கு கல்யாணம் எல்லாம் கூடிய சீக்கிரம் ஆகும்.. நீ நினைச்ச மாதிரி மூணு மாசத்துக்குள்ள நடக்கும்..ஆனால் அந்த கல்யாணம் சந்தோஷமான தருணத்தில் அமையாது.. ஒரு இக்கட்டில் தான் நடக்கும்.. ஆனால் அதுக்குள்ள எல்லோருடைய நிம்மதியும் போய் இருக்கும்.. ஆனால் அந்த பொண்ணு அந்த கல்யாணத்தை தக்க வைக்க கொஞ்சம் போராட வேண்டி இருக்கும்.. அப்படி போராடி ஜெயிடுச்சுன்னு அப்படின்னா அந்த பொண்ணு வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்" என்று அவர் கூற அதை கேட்ட பாட்டி முகத்தில் ஒரு தெளிவு வந்தது..

"எப்படி இருந்தாலும் அவளுக்கு கல்யாணம் அப்படின்னு ஒன்னு ஆகும் இல்ல?? அது போதும் எனக்கு.. எல்லா வீட்டிலும் கல்யாணம் ஆனா அப்படி இப்படின்னு இருக்கிறது தான்.. அதையெல்லாம் போராடி ஜெயிக்கணும்.. அதுதான் பொம்பளைக்கு அழகு.. இது போதும் நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்" என்று பாட்டி சிரித்த முகத்தோடு செல்ல அந்த ஜோசியர் நிர்மலமான அந்த பாட்டியின் முகத்தை பார்த்து கடைசி வரி ஒன்றை பாட்டியிடம் சொல்லாமல் அவர் வைத்திருந்தார்..

ஆம் பாட்டியின் முகத்தை பார்த்து அவர் சொல்லாமல் விட்டுவிட்டார்.. ஆம் இதையெல்லாம் காண அந்த பாட்டி உயிரோடு இருக்க மாட்டார் என்பதுதான் அந்த கடைசி வரி..

பாட்டியின் மரணத்தில்தான் அவர்களின் திருமணமே நடக்கும் என்பதை அவர் எப்படி கூறுவார்??

மேலும் அதன் பிறகு தேவிகா அடையப் போகும் கஷ்டங்கள் எல்லாம் அவள் தான் அதில் போராடி ஜெயிக்க வேண்டி இருக்கும்.. அதற்கு அவளின் உயிர் போய் உயிர் வரும் என்பதை போன்ற பல உண்மைகளையும் பொய்களையும் கலந்து தான் அவர் பாட்டிக்காக மறைத்து வைத்தார் என்று தான் கூற வேண்டும்..

அப்படி இருக்க, பாட்டி மேலும் அவருக்கு தெரிந்த பலரிடம் தன் பேத்திக்கு மாப்பிள்ளை பார்க்க கூறி திருமண புரோக்கர்களிடம் பணமும் அவளின் புகைப்படத்தையும் கொடுத்து ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்க சொன்னார்..

அப்படி இருக்க, இது ஒன்றும் அறியாத பேத்தி அவனில் மனதுக்குள் அவனை வைத்துக் கொண்டு ஒரு மலை மீது அவனோடு ஏறிக் கொண்டு இருந்தாள்.. அவன் அவளுடன் ஏதேதோ பேசி கொண்டு வர, அதை கேட்டு மகிழ்ச்சியாக அவனை ரசித்தபடி அவள் வந்தாள்..

"இன்னும் எவ்ளோ தூரம் போகணும் தேவி..என்னோட அப்பா என்னை ரொம்ப வைச்சு செய்யறார் போல" என்று கூறினான் அவன்..

அதை கேட்டு அவள், "சார் இன்னும் கொஞ்சம் தூரம் போனால் கைவினைப் பொருட்கள் செய்யற ஆட்களோட வீடு வந்துடும்.. ஏன் சார் அப்படி சொல்றீங்க??" என்று கூற,

அதைக் கேட்ட அவன், "அதுவா இப்படி என்னை கஷ்டப்படுத்துறார் இல்ல அதை சொல்றேன்.. இந்நேரம் நான் எப்படி இருப்பேன் தெரியுமா?? இப்படி மலை மேலே ஏறித்தான் அவங்க வீட்டுக்கு எல்லாம் போகணுமா??" என்று கூற,

"இல்ல சார் ரோடு இருக்கு.. ஆனா அந்த ரோடு கொஞ்சம் சரியில்லை.. இப்படி போன கொஞ்சம் சீக்கிரம் போயிடலாம்" என்று அவள் கூறினாள்..

அதைக் கேட்டவன், "சரி" என்று கூற அவளோ அவனையே பார்த்துக் கொண்டு, "சார் நான் உங்ககிட்ட ஒன்னு கேட்பேன் நீங்க பதில் சொல்லுவீங்களா??" என்று ஆசையாக கேட்டாள்..

"நீ கேட்டு எதை நான் மறுத்து இருக்கேன் கேளு தேவி.. இங்கே எனக்கு உன்னை விட்டா வேற யார் இருக்கா??" என கூறினான்..

அதை கேட்டு அவள் உள்ளம் குளிர, "உங்க வீட்ல யாரெல்லாம் இருக்காங்க??" என்று அவனை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டாள்..

"நான், அம்மா, அப்பா நான் ஒரே பையன் ரொம்ப செல்லம்.." என்று சிரித்த முகத்தோடு கூறினான்..

"அப்போ நீங்க வெச்ச தான் வீட்ல சட்டமா நீங்க சொன்னா எல்லாமே கேட்பாங்களா??" என்று அவள் கேட்டாள்..

"ஒரே மகன்.. அதுவும் அவங்க செல்ல மகன் சொன்ன கேட்க மாட்டாங்களா?? நான் என்ன சொல்றேன்னோ அதைத்தான் என் வீட்டில் கேப்பாங்க.. ஆனால் அவங்க அதை எல்லாம் கேட்கணும்னு நான் எதிர்பார்க்க மாட்டேன்.. எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வேன்.. அதனாலதான் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு இங்க வந்து இருக்கேன்.."

"ஏன் சார் உங்களுக்கு இந்த இடம் பிடிக்கலையா??" என அவள் சோகமாக கேட்டாள்..

அதை கண்ட அவன் அவளுடைய தலையில் செல்லமாக தட்டி, "இடமெல்லாம் பிடிச்சிருக்கு.. ஆனால் முன்னாடி தொழில் பண்ணனும்னு யோசித்ததே கிடையாது.. ஜாலியா சுத்திட்டு இருந்தேன்..இப்போ திடீர்னு ஒரு யோசனை வந்ததுனால என்னோட அப்பா சொன்ன வார்த்தைக்காக இங்க வந்து இருக்கேன்.. எப்படி காடு, மலை ஏரி எல்லாம் கஷ்டப்படுவேன் என்று நினைத்து பார்க்கல அதை சொன்னேன்" என்று அவன் கூறினான்..

"நீங்க எப்ப சார் கல்யாணம் பண்ணிக்க போறீங்க?? உங்க வீட்டில நீங்க யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா ஒத்துப்பாங்களா??" என்று அவள் தயக்கத்தோடு அவள் கேட்டாள்..

அவளுக்கு அவன் மனதில் என்ன இருக்கிறது என தெரிய ஒரு ஆர்வம் அதனால் அவள் அதை கேட்க அதற்கு அவனும், "கல்யாணமா அப்படின்னா??" என்று பலமாக சிரித்தான்..

அவன் சிரிப்பதை பார்த்து ஏதாவது தவறாக கேட்டு விட்டோமோ என எண்ணி, "ஏன் சார்.. என்ன ஆச்சு?? ஒரு வயசுல எல்லாரும் கல்யாணம் குழந்தை , குடும்பம்
அப்படின்னு வாழ்றது தானே??" என கேட்டாள்..

"கல்யாணம் அப்படிங்கற ஒன்னு என்னுடைய அகராதியிலேயே கிடையாது...எனக்கு இப்போதைக்கு அந்த மாதிரி எல்லாம் ஒரு எண்ணமும் கிடையாது.. அந்த மாதிரி எண்ணம் வரவும் வராது.. நான் அதுக்கு எல்லாம் எதிரானவன்..

எனக்கும் கல்யாணம், குடும்பம், குழந்தை இதெல்லாம் என்னை பொருத்தவரை ரொம்ப தூரமான விஷயங்கள்.. நான் இதையெல்லாம் பெருசா நம்பறது கிடையாது.. கல்யாணம் ஆகி என்ன எல்லாம் நடக்குமோ அதை எல்லாம் கல்யாணம் பண்ணிக்காமலே செஞ்சுக்க முடியும்..

இப்போதைக்கு எனக்கு தொழில் மேல விருப்பம்.. அது எனக்கு போதும் அப்படின்னு நினைக்கும் வரை நான் இதை செய்வேன்.. இதுவும் போர் அடிச்சா வேற ஏதாவது செய்வேன்..

இப்போ கல்யாணம் பண்ணினோம்னு வை ஒரு கூட்டுக்குள்ள இருக்கணும்.. என்னால அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ முடியாது.. அப்புறம் என்ன கேட்ட?? நான் யாரையாவது கூட்டிட்டு போனா என் வீட்ல ஏத்துப்பாங்களானா?? கண்டிப்பா ஏத்துப்பாங்க இவ்வளவு ஏன் உன்னை கூட்டிட்டு போய் நீ தான் என்னுடைய பொண்டாட்டி அப்படின்னு சொன்னா கூட அவங்க ஏத்துப்பாங்க.. ஆனால் நான் தான் கல்யாணம் அப்படிங்கற ஒன்னை செய்ய போறது இல்லையே" என்று கூறியவன் மேற்கொண்டு நடந்து கொண்டே, "ஆமாம் என்கிட்ட இவ்ளோ கேள்வி கேக்குறியே உனக்கு எப்ப கல்யாணம்" என்று கேட்டான்..

அவனுடைய பதில் அவளுக்கு என்னவோ போல இருந்தாலும், தன்னை அழைத்துச் சென்று மனைவி எனக் கூறினாலும் அவன் வீட்டில் ஒப்புக்கொள்வார்கள் என அவன் கூறியது அவளுக்கு பிடித்திருந்தாலும், திருமணமே பிடிக்காது என்று கூறுபவனிடம் எப்படி அவள் மனதை அவனிடம் பகிர்வது என புரியாமல் அவன் பேச்சைக் கேட்டு அந்த முயற்சியை கைவிட்டு, "அது வந்து பார்த்துட்டு இருக்காங்க சார் பாட்டி.. எனக்கு கல்யாணம் பண்ணிக்க இப்போதைக்கு விருப்பமில்லை ஆனா சொன்னா கேட்க மாட்டேங்கிறாங்க" என்று அவள் கூறினாள்..

அதைக் கேட்டு அவன், "ஏன் கேட்க மாட்டேங்கிறாங்க.. கல்யாணம் அப்படிங்கறது உனக்கு பிடிச்சிருந்தா பண்ணிக்கிற விஷயம்..இதோ பாரு தேவி நான் யாருக்கும் அட்வைஸ் பண்ண மாட்டேன்.. ஆனால் நீ பார்க்க நல்ல பொண்ணா இருக்க.. அதனால சொல்றேன்.. கல்யாணம், குழந்தை, குடும்பம் அப்படிங்கறது எல்லாம் நம்ம சம்பந்தப்பட்ட விஷயமா இருக்கணும். முடிவெடுக்க வேண்டியது நாம.. மத்தவங்க கிடையாது.. மத்தவங்களுக்காக வாழ முடியாது.. நமக்கு ஒரு விஷயம் வேணும்னா அதை அடையணும்னா நாம தான் போராடனும்...

அதுக்காக எந்த எல்லைக்கும் நாம போக ரெடியா இருக்கணும்.. மத்தவங்களுக்காக எல்லாம் ஒரு வாழ்க்கை வாழ கூடாது..

நாம நமக்காக வாழனும்.. உனக்கு புடிச்சிருந்தா நான் சொன்னதை ஏத்துக்கோ.. இல்லேன்னா விட்டுடு.. பிரச்சனை இல்ல.. மத்தவங்களுக்காக எல்லாம் வாழ்றது ஒரு வாழ்க்கையா??? உனக்கு பிடிச்ச மாதிரி வாழு" என்று கூறிவிட்டு அவன் செல்ல ஆனால் அவன் சொன்னது அவனுக்கே திருப்பி அடிக்க போகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதை அவன் மறந்து போனான்..

அவன் பேசிக் கொண்டே இருக்க இவளோ, "இவர் கிட்ட எப்படி சொல்றது எனக்கு எதுவும் தெரியலையே?? கடவுளே.. என்ன பண்றது??" என்று அவர்கள் ஊரின் குலதெய்வமான அம்மனின் கோவிலுக்கு சென்று கை கூப்பி, "நான் உன்கிட்ட எதுவுமே கேட்டதில்லை.. எனக்கு என்னன்னு தெரியல.. அவரை ரொம்ப புடிச்சிருக்கு... நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு புரியுது.. நான் படிக்காத ஒருத்தி.. அவர் என்னை விட ரொம்ப படிச்சு இருக்கார்.. நான் இந்த ஊரை விட்டு எங்கேயும் போனதில்ல.. ஆனால் அவர் உலகம் முழுவதும் சுத்தி இருக்கார்.. இந்த ரெண்டு பேருக்கும் ஏன் வச்சாலும் எட்டாது...ஆனாலும் எனக்கு அவரை பிடிச்சிருக்கு.. எனக்கு நல்லா தெரியும் மலைக்கும், மடுவுக்கும் இடையே இருக்கிற வித்தியாசம் எனக்கும் அவருக்கும் இடையே இருக்குன்னு.. எனக்கு அதை பத்தி எல்லாம் கவலை இல்லை.. எனக்கு அவர் வேணும்.. அவர்கிட்ட என் மனசை பகிர்ந்துக்க ஆசையா இருக்கு.. ஆனால் தைரியம் தான் இல்லை.. ஆனால் உன்னோட திருவிழா வரதுக்குள்ள எனக்கு ஒரு முடிவு சொல்லு.. அவரைத் தவிர நான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.. உறுதியா சொல்றேன்.. அப்படி ஏதாவது ஒன்னு நடந்துச்சுன்னா நான் உனக்கு நேர்ந்து விட்டதா கூட என் வாழ்க்கையை முடிச்சுப்பேன் ஒழிய நான் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என வேண்டி விட்டு அவள் வீட்டுக்கு வர அங்கு பாட்டி மகிழ்ச்சியான முகத்தோடு அவளை கண்டதும், "உனக்கு மாப்ளை பார்த்து இருக்கேன்.. கட்டிடம் எல்லாம் கட்டுவாங்கல்ல அந்த காண்ட்ராக்ட் வச்சிருக்காங்களாம்.. உன்னை போட்டோல பார்த்து பிடிச்சு இருக்காம்.. ஜாதகம் எல்லாம் சேர்ந்து இருக்கு.. அடுத்த வாரம் வர்றாங்க.. எல்லாம் சரியா நடந்தா அடுத்த மாசம் உனக்கு கல்யாணம்" என்று பாட்டி சந்தோசமாக கூறினார்..

அதை கேட்டு அவள் அதிர்ந்து போய், "உனக்கு என்ன பாட்டி என்னை அனுப்பி விட அவ்ளோ அவசரம்?? அப்படி என்ன பண்ணிட்டேன் நான்?? எனக்கு பிடிக்காததை செய்யாதே அப்படின்னு எத்தனை தடவை சொல்றது??" என அவள் கொந்தளித்து கேட்டாள்..

அவரோ, "உனக்கு. 21 வயசு ஆக போகுது.. அதுக்குள்ள கல்யாணம் நடக்கல அப்படின்னா உன்னை கோவிலுக்கு நேர்ந்து விட்டுடுவாங்க டி" என அவருடைய வருத்ததை அவர் கூறினார்..

அதை கேட்ட அவள், "இப்படி யார் என்ன அப்டின்னு விசாரிக்காம எனக்கு பிடிக்காத ஒரு கல்யாணத்தை பண்றதை கோவிலுக்கு தானமாக போறதே நல்லது" என அவள் அழுத்தத்தின் பிடியில் கூறி விட்டாள்..

அதை கேட்டு பாட்டி, "பொட்ட கழுதை வாயை பார்.. தட்டி போடுவேன்.. இதோ பாருடி ஊர் திருவிழாவுக்கு முன்னாடி மட்டும் உனக்கு கல்யாணம் நடக்கல என்னை உயிரோடு பார்க்க முடியாது.. நான் உயிரோட இருக்குறதும் இல்லாம போறதும் உன் கையில தான் இருக்கு.. மரியாதையா நான் பார்க்கிற பையனை கல்யாணம் பண்ணி ஒரு வாழ்க்கை வாழற வழியை பாரு" என்று அவரும் அவர் பங்குக்கு கூறி விட்டு செல்ல அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..

இவர்கள் ஒன்று நினைக்க தெய்வம் வேறு ஒன்றை செய்ய தயாராகி விட்டார் என்பதை யாரும் உணராமல் அவரவர் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து கொண்டு இருந்தனர்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top