மந்தாரம் 12
மந்தாரம் : 12
அந்த மலை பிரதேசத்தின் அனைத்து மக்களும் பஞ்சாயத்து கூடும் இடத்தில் கூடி இருந்தனர்..
பஞ்சாயத்து தலைவர் இருக்கையின் அருகே ஒரு பெரிய நாற்காலி போடப்பட்டு அதில் கம்பீரமாக விது பிரதாப் அமர்ந்து இருந்தான்..
அனைவரும் இவன் யார் என புரியாமல் அவர்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தனர்..
அவன் வளர்ந்த இடத்திற்கும், அவன் படித்த இடத்திற்கும், இதோ இப்பொழுது இருக்கும் இடம் முற்றிலும் மாறுபாடாக இருக்க இருந்தாலும் ஏதோ ஒன்று அவனை ஈர்த்துக் கொண்டுதான் இருந்தது..
ஒருவேளை இந்த இடத்தில் எழிலா இல்லை தான் செய்யப் போகும் தொழிலுக்கு இவர்கள் எல்லாம் எப்படி உதவப் போகிறார்கள் என யோசிக்கிறானா என தெரியவில்லை..
ஆனால் இந்த இடமும் இந்த ஊர் மக்களும் அவனுக்கு பிடித்து இருந்தது என்னவோ உண்மை தான்.. அதனால் அவன் இன்முகத்துடன் அமர்ந்து இருந்தான்..
அப்படி ஒவ்வொரு ஆட்களாக அவன் அந்த ஊர் மக்களை எல்லாம் பார்த்து கொண்டு இருக்க, அப்போது தேவிகா மட்டும் அவனை பார்த்து பாட்டியின் பின்னால் ஒளிந்து கொண்டு, அங்கு அவள் அருகே இருக்கும் சிறுவர்களிடம் நேற்று நடந்த விஷயத்தை எல்லாம் கூறிக் கொண்டு இருந்தாள்.. அதை அவன் கவனித்துவிட்டான்.
அதுவரை இருந்த அவனின் இன் முகம் அவனுடைய முகத்தில் நொடிப்பொழுதில் மாறிவிட்டது.. உடனே அவன் அருகே அமர்ந்திருக்கும் பஞ்சாயத்து தலைவரிடம் அவளை கைகாட்டி ஏதோ ஒன்று அவருடைய காதில் கூறினான்.. அவளுக்கு அது என்னவென்று புரியவில்லை என்றாலும் அவன் கை காட்டிய விதத்தை பார்த்து தன்னை தான் கூறுகிறானோ என நினைக்க.. ஆமாம் என்பது போல அவரும் அவளை பார்த்து முறைத்து, " நான் பார்த்துக்கிறேன் சார் கவலைப்படாதீங்க" என்று அவனுக்கு சமாதானம் கூறினார்..
பிறகு யார் இவன் என புரியாமல் குழம்பி நின்ற மக்களிடம், "இதோ பாருங்க.. இவர் பேரு தான் விது பிரதாப்.. இவரு நம்ம ஊருக்கு கொஞ்ச நாள் தங்கிட்டு இங்கே நாம் செய்கிற கைவினைப் பொருட்கள், அலங்காரப் பொருட்களை எல்லாம் பார்த்துட்டு அவர் புதிதா தொடக்கப் போற தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் நம்மள மாதிரி ஆளுங்க கிட்ட இருந்து நேரடியா வாங்கத்தான் வந்திருக்காரு..
பெரிய தொழில் அதிபர் மகன்.. அவரு அவரோட சொந்த தொழிலை தனியா துவங்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்கார்.. அதுக்கான முயற்சியா பல ஊருக்கு போயிட்டு இருக்கிறவர் இப்போ நம்ம ஊருக்கு வந்து வந்து இருக்கிறார்..
இதனால நமக்கு நல்ல லாபம் இருக்கும்..நம்ம செய்கிற பொருள் வெளியூர், வெளிநாடு எல்லா பக்கமும் போனா நமக்கும் பெருமை தானே..
அதனால ஐயா நம்ம எல்லார் வீட்டுக்கும் நேரடியா வந்து நாம என்னென்ன செய்கிறோம், எப்படி எல்லாம் செய்வோம் அப்படிங்கறத பார்த்து தெரிஞ்சு அவருக்கு தேவையான பொருட்களை நம்ம கிட்ட வாங்கி பார்..
அதனால எல்லாரும் சேர்ந்து ஐயாவுக்கு நல்ல முறையில் உதவிகரமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..
இப்போதைக்கு நம்ம வாழ்வாதாரத்துக்கு உதவியா இருக்கிற இவரு நம்ம முதலாளி மாதிரி.. எல்லோரும் உங்களுடைய ஆதரவை இவருக்கு தகுந்த முறையில் கொடுக்கணும்.. நல்ல மரியாதையா இவரை நடத்தணும் அப்படின்னு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.. நானும் இவர்கிட்ட நல்ல முறையில் நம்மளை பத்தி சொல்லி இருக்கேன் அதனால பிரதாப் சார் கோபப்படுத்தாத விதத்தில் எல்லாரும் நடந்துக்கோங்க" என்று அந்த ஊர் தலைவர் கூறினார்..
அதைக் கேட்டதும் தேவிகா ஆ என வாயை பிளந்து கொண்டு நின்று கொண்டிருந்தாள்..
"என்னது நம்ம பொருட்களை எல்லாம் வாங்க வந்த ஆளா இவரு இவரை போய் நான் வம்பு இழுத்து வெச்சிருக்கேனே.. இப்போ என்ன பண்றது.. இவர் வேற என்னை கைக்காட்டி பஞ்சாயத்து தலைவர் கிட்ட ஏதோ சொல்லிட்டு இருந்தாரே??" என்று திருதிருவென முழித்துக் கொண்டிருக்க அதே நேரம் அவளைத்தான் அவன் முறைத்துக் கொண்டிருந்தான்..
ஏற்கனவே அவனை அவனுடைய அப்பா அவர் தொழிலில் அவனும் வர எண்ணி இருக்க, அவன் எப்பொழுது வந்து வாயைத் திறந்து கேட்பான் என காத்துக் கொண்டிருந்தவர் போல அவன் தொழில் தொடங்க வேண்டும் என்று அவனுடைய எண்ணங்களை கூறியதுமே அவர் மிகவும் மகிழ்ந்து அவனிடம், "என்ன ஐடியா?? எப்படி செய்யப் போற??" என கேட்டார்..
அவன் இதைப் பற்றி எல்லாம் கூற, "அப்போ எங்க இதெல்லாம் கிடைக்குமோ அந்த இடத்துக்கு தேடிப் போ.. எப்பவுமே பிசினஸ்ல நம்ம கண் எல்லா பக்கமும் இருக்கணும்.. ஸ்க்ராட்ச்சில் இருந்து எல்லாமே ஸ்டார்ட் பண்ணனும் அப்பத்தான் பிசினஸ்ல என்ன அடி விழுந்தாலும் எந்திரிச்சு நிக்க முடியும்" என்று அவனை அனுப்பி வைத்து விட்டார்..
அவனும் அவர் சொன்னதை கேட்டு ஒவ்வொரு இடமாக தேடி அலைந்து கொண்டிருக்கிறான்..
அப்படியா தேடி வந்த ஒரு மலைப்பிரதேசம் தான் இந்த இடம்.. அவனுக்கு இந்த இடமெல்லாம் பிடித்திருந்தது..
ஆனால் இந்த இடத்திற்கு வந்ததும் முதன்முதலாய் சந்தித்த அவளை அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. இருந்தாலும் தன் வேலை முடிய அவன் காத்துக் கொண்டிருக்கிறான்..
அப்படி இருக்க, அவனும் அங்குள்ளவர்களிடம், "நான் நேரடியாக உங்ககிட்ட இருந்து பொருட்கள் வாங்க தான் வந்து இருக்கேன்.. நீங்க என் கூட நிற்பீங்கன்னு எதிர்பார்க்கிறேன்.. இதனால கண்டிப்பா உங்களுக்கு நஷ்டம் வராது லாபம் கண்டிப்பா இருக்கும்.. என்னை நீங்க நம்பலாம்" என்று கூறியவன்,
அந்த ஊர் தலைவரிடம், "சார் நான் ஒவ்வொருத்தவங்க வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன்.. என் கூட யாராவது எனக்கு உதவியா இருந்தா நல்லா இருக்கும்.." என்று அவன் கூறவும் அவர் யாரை அனுப்பலாம் என பார்த்தவர் அங்கு தேவிகா மற்றும் அவளுடைய கூட்டாளி சிறுவர்கள் இருந்தார்கள்..
அவர்களை கண்ட அவர் அவளுக்கும் ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்றெண்ணி, "உங்களுக்கு தேவையான எல்லாமே செஞ்சு தரதுக்கு சரியான ஆட்கள் இவங்க தான்.. " என்றவர், "தேவிகா ஐயாவை கூட்டிட்டு போய் நம்ம பொருட்கள் எங்கெல்லாம் இருக்கோ அந்த இடத்தை எல்லாம் சுத்திக் காட்டு.. அவருக்கு தேவையான எல்லாத்தையும் நீ தான் செஞ்சு கொடுக்கணும் புரியுதா" என்று கூறினார்..
அதை கேட்டதும் அவளோ நானா என்பது போல பாட்டியை பார்க்கவும் பாட்டி தயங்கி கொண்டே ஊர் தலைவரான மாணிக்கத்திடம், "அவள் எதுக்கு மாணிக்கம்?? வயசு புள்ள இப்படி யாருன்னு தெரியாத ஒருத்தர் கூட சுத்தினா என்ன ஆகிறது??" என்று கேட்டார்..
"ஆத்தா.. என்ன சொல்றீங்க வயசு பொண்ணா?? வயசு பொண்ணு பண்ற வேலையைத்தான் இவ பண்ணிட்டு இருக்காளா?? மரத்தில் ஏறி மாங்கா பறிச்சு இருக்கா.. சாரோட பைக்ல மாங்காய் கிளையோட வந்து விழுந்து பைக் டேங்க் நசிங்குனதும் இல்லாமல் ஓவரா சார் கிட்ட மரியாதை இல்லாமல் பேசி இருக்கா..
இவள் இந்த ஊரில் என்ன என்ன அட்டகாசம் இந்த பசங்க கூட சேர்ந்து இவ பண்ணிட்டு இருக்கான்னு உங்களுக்கு தெரியாதா?? என்னைப் பொறுத்த வரைக்கும் சாருக்கு உதவி செய்ய இவள் தான் சரியான ஆள்..
அது மட்டுமில்லாமல், அவளுக்கும் இந்த வாண்டுகளுக்கும் தான் நம்ம ஊர்ல மூலை முடுக்கில் என்னென்ன கிடைக்கும் என்பது தெரியும் அதனால அவங்களே போகட்டும்..
சாரும் வயசானவங்க யாரும் வேண்டாம் யாராவது இளவட்ட பசங்களா இருந்தா சொல்லுங்க அப்டின்னு சொல்லி இருந்தார்..
இப்போதைக்கு இவள் தானே இருக்கா.. அப்புறம் ஒன்னும் இல்ல ஆத்தா.. சார் சொன்னாரு ..சார் வந்த சமயம் இவ வம்பு இழுத்து இருக்கா..
இப்படித்தான் நம்ம ஊரை த்தேடி யாராவது வந்தா வம்பு இழுப்பாளா?? இப்படி போனா இப்படி நம்ம பொழப்பை ஓட்டுவது?? இனி யாரும் நம்ம ஊரைத் தேடி வரவங்க கிட்ட வம்பு வச்சுக்க கூடாது.. அதனால சார் இங்கே இருந்து போற வரைக்கும் அவருக்கான எல்லா வேலையும் இவர்தான் செஞ்சு கொடுக்கணும்.. இதுதான் பஞ்சாயத்தோட முடிவு.." என கூறவும் அதற்கு மேல் பாட்டிக்கு எதுவும் கூற முடியவில்லை..
பாட்டி முறைப்பதை பார்த்த அவள் இனி வீட்டுக்கு போனால் இருக்கிறது.. இதை சொல்லி பாட்டி அடிப்பார் என பாட்டி முகத்தை பார்க்காமல் இருக்க, அவளை சுற்றி உள்ள அவளின் நண்பர்களோ, "எல்லாம் உன்னால தான்.. ஸ்கூல் லீவ் அப்படின்னு சொல்லி உன் கூட சுத்தின பாவத்துக்கு எங்களை எங்கே கொண்டு வந்து நிக்க வச்சு இருக்க பார்த்தியா??" என அவர்கள் கூறினர் ..
அதைக் கேட்டு அவள், "டேய் உங்களுக்காக தான்டா மாங்கா பறிக்க போய் நான் கீழே விழுந்தேன்.. என்னடா இப்படி சொல்றீங்க?? உங்களுக்காக உயிரை எல்லாம் பணயம் வைத்து கீழே எல்லாம் விழ பார்த்தேனேடா.. நீங்க கூட நன்றி இல்லாதவங்க ஓடி போயிட்டீங்க அதனால தான் டா இப்படியெல்லாம் ஆச்சு நீங்க இருந்த இப்படி ஆகி இருக்குமா?" என்று அவளும் குறை கூற,
"இப்போ இந்த மொத்த லீவும் இவர் கூட சேர்ந்து சுத்தணும்.. இதுக்கெல்லாம் காரணம் நீதான்.. அவர் உன்னை காப்பாத்தும் போது வாயை மூடிட்டு இருந்திருக்கணும்.. எதற்கு எச்சு பேசின?? அதுனால தான் பஞ்சாயத்தில் நமக்கு தண்டனை கொடுத்து இருக்காங்க.. இதோ பாரு எங்களால எல்லாம் அவருக்கு வேலை செய்ய முடியாது.. நீ போய் மன்னிப்பு கேட்டுட்டு வா.. இந்த பிரச்சனையை இதோட முடிச்சிடுவோம்" என்று அவர்கள் இவளை குறை கூறினர்.. அதை கேட்ட தேவிகாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை..
ஊர்கட்டளை நல்லதோ கெட்டதோ அதற்கு அடிபணிந்து தான் ஆக வேண்டும் அதற்கு மீறி எதுவும் செய்ய அந்த ஊர் மக்களுக்கு அதிகாரம் இல்லை..
அதனால் பாட்டியும் எதுவும் கூற முடியாமல் தன் பேத்தியை பார்த்து முறைக்க, அவளோ தலையை குனிந்து கொண்டாள்..இனி வீட்டுக்கு போனால் இருக்குது என எண்ணி பயந்து போய் நின்று கொண்டு இருந்தாள்..
அவனுக்கு அவளை பிடிக்கவில்லை அவள் இல்லாமல் எல்லா வேலையும் அவனால் செய்ய முடியும் என்றாலும் தன்னிடம் மோதியதற்கு இவளுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என எண்ணிக் கொண்டான்..
அவளுக்கோ இப்படி மாட்டிக்கிடோமே இவர் எல்லா விஷயத்தையும் சொல்லி இப்படி மாட்டி விட்டுட்டாரே என நினைத்து ஊர் மக்கள் எல்லாம் கலைந்த பின் அவளோ, "டேய் பசங்களா அப்படியே தப்பிடுச்சுங்க" என கூறி நகர பார்க்க, "ஹே எங்கே போற??" என கேட்டான்..
அந்த சிறுவர்களும் அவளும் அவனை திரும்பிப் பார்க்க சிறுவர்கள் அவனிடம், "சார் நாங்க ஏதாவது உங்ககிட்ட மோதுனோமா இல்ல தானே" என்று கேட்டனர்..
அதைக் கேட்டதும், "நீங்க எதுவும் பண்ணல.. நீங்க எனக்கு எந்த வேலையும் செய்யவும் வேண்டாம்.. நீங்க உங்க வேலையை பார்க்கலாம் ஆனால் இவள் நான் இங்கிருந்து போற வரை எனக்கு தேவையான எல்லாத்தையும் இவர் செஞ்சுதான் ஆகணும்" என கூறினான்..
அந்த சிறுவர்களும் அப்பாடா நம்ம தப்பிச்சோம் என எண்ணி, "ரொம்ப நன்றிங்க சார் நாங்க போயிட்டு வரோம் .. அக்கா சார் சொல்ற வேலையெல்லாம் செய்" என்று கூறிவிட்டு அவர்கள் சிட்டாக பறந்து சென்று விட்டனர்..
"டேய் டேய் தனியா விட்டுட்டு போகாதீங்க டா நானும் வரேன்" என்று அவளோ தன் இரு கைகளையும் பிணைந்து கொண்டு அவளின் நண்பர்கள் சென்று விட்டார்கள் என்ற தவிப்பில் முள் மேல் நிற்பது போல அவனை பார்த்து, "சா.. சா..ர் என்னை மன்னிச்சிடுங்க சார்.. நீங்க யாருன்னு தெரியாம நான் மோதி விட்டேன் நானும் அவங்க கூட போகட்டுமா?? இனி உங்க வம்புக்கே நான் வரமாட்டேன்" என்று அவள் கேட்கவும்
அவனோ நக்கலாக, "ஏண்டி அவ்வளவு வார்த்தையை விட்டுட்டு உன்னை இப்படியே விட சொல்றியா?? நீ ஆள் தெரியாம மோதிட்ட.. கொஞ்சம் அனுபவி தப்பு இல்ல.. சோ சான்சே இல்ல.. ஊர் தலைவர் வீட்டு பக்கத்துல இருக்க வீட்டுல தான் நான் தங்கி இருக்கேன்.. எனக்கு மூணு வேலையும் சாப்பாடு கொண்டு வரணும்.. இப்போ போய் எனக்கான உணவை சமைத்து எடுத்துட்டு வா.. அப்புறம் சைட் விசிட் பண்ண போகலாம்" என்று கூறிவிட்டு அவன் அவனுடைய பைக்கை எடுத்துக்கொண்டு சென்று விட்டான்..
அவளோ ஐயோ இன்னும் என்னவெல்லாம் பார்க்கணுமோ என்று தவித்து போய் அவன் சொன்னதை செய்ய சென்றாள் தேவிகா..
