அத்தியாயம் 32
"யாராவது விட்டு கொடுத்தா தான் உள்ளே போக முடியும் நீங்க இரண்டு பேரும் இப்படி முட்டிட்டு நின்னுட்டு இருந்தா எப்படி??" என வசுந்தரா அவனிடம் கூறினாள்..
"என்கிட்ட ஏன் டி சொல்ற அவன் கிட்ட சொல்லு டி வந்துட்டா பேச ஏதாவது சொன்னா என்னை அடக்கி வை அவனை மட்டும் ஒன்னும் சொல்லாத!!" என்று எகிறினான்...
"உன்கிட்ட மனுஷன் பேசுவானா???" என்று கூறியவள் வாயை மூடிக்கொண்டாள்...
"அப்போ பேசாத வாயை மூடிட்டு இரு" என்று கூறியவன் ஸ்டியரிங்கை உரும விட்டுக் கொண்டே ஆத்ரேயனை உறுத்து விழித்தான்...
அதே நேரம் ஆதியை பார்வையாலேயே முறைத்து பார்த்து கொண்டிருந்த ஆத்ரேயனை பார்த்த அபி, "ஆது கொஞ்சம் விட்டு கொடுங்க ஆது நாம குறைஞ்சு போயிட மாட்டோம்...நல்ல மூடை ஏன் தேவை இல்லாமல் ஸ்பாயில் பண்ணிட்டு இருக்கீங்க??? எதுக்காக போட்டி போடணும்??? பிளீஸ் கொஞ்சம் விட்டு கொடுங்க நல்ல விசயம் சொல்ல வந்து இருக்கோம் இது மாதிரி சில்லி விஷயத்துல ஏன் நம்ம மூடை ஸ்பாயில் பண்ணிக்கணும் ப்ளீஸ் ஆது கொஞ்சம் நம்ம கார் பின்னாடி போனா நாம ஒன்னும் குறைந்து போய்விட மாட்டோம்" என்று கியரில் கையை வைத்திருக்கும் அவனது கை மீது அவளது கையை வைத்து அழுத்தி அவள் கேட்க அவனோ அவளை முறைத்தான்...
அவன் முறைத்தாலும் பரவாயில்லை என எண்ணிய அவள் அவனது கையை அழுத்தமாக கோர்த்து தன் கரங்களுக்குள் அடக்கியவள் கண்களாலேயே அவனிடம் கெஞ்சினாள்... பிறகு என்ன நினைத்தானோ அவளது கண்களின் பாஷையை மீறி அவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.. ஒன்றுமே பேசாமல் காரை பின்னாடி எடுத்தான்..
அவன் எடுத்த நொடி ஆதி காரை கேட்டுக்குள் நுழைய விட்டான்.. அவனுக்குப் பிறகு ஆத்ரேயன் நுழைந்தான்.. ஆனால் இன்னும் அவனுக்கு விட்டுக் கொடுத்ததை எண்ணி கோபம் கொப்பளித்துக் கொண்டுதான் இருந்தது சற்றும் அவன் சாந்தி அடையவில்லை அவன் முகம் உர்ரென்றுதான் இருந்தது...
ஷ்ப்பா என்று அபி காரில் இருந்து இறங்கியவளுக்கு நம்பிக்கையே இல்லை இவர்கள் இருவரும் பேசிக் கொள்வார்கள் என்று வசுந்தராவும் அதே நிலையில் தான் இருந்தாள்... இருந்தாலும் அவளுக்கு ஒரு சிறு நம்பிக்கை இருந்தது எப்படி இருந்தாலும் இருவரையும் மோத வைத்துவிடலாம் பிறகு இருவரும் அடித்தாவது சேர்ந்து கொள்ளட்டும் என எண்ணிக் கொண்டிருந்தாள்... இவர்களின் கார் வீட்டுக்குள் நுழைந்ததுமே பெரியவர்கள் மூவரும் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தனர் அனைவருக்கும் இவர்கள் ஒரு சேர வந்ததில் மிகவும் மகிழ்ச்சி தான்...
பெரியவர்களுக்கும் தங்கள் மகன்களின் மனநிலை தெரியாமல் இல்லை...இவர்கள் இருவரின் மோதல் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள் பிள்ளைகளும் தங்களிடம் காட்ட வில்லை என்றாலும் தாய்மார்களுக்கு அவரது பிள்ளைகளின் முகம் பார்த்து அவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டமான காரியம் அல்லவே...
அதனால் இருவரின் முகத்தை பார்த்தும் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்ட அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை... சின்ன சின்ன விஷயத்தை பெரிது படுத்தினால் தான் பிரச்சினை வரும் இப்பொழுதுதான் அனைவரும் சேர்ந்து இருக்கிறார்கள்... இவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் இவர்களை பேசி தீர்த்துக் கொள்ளட்டும் என பெரியவர்கள் முடிவு செய்திருந்தனர் அதன்படி இப்பொழுதும் அவர்களது முகத்தை பார்த்து என்னவென்று அவர்கள் கேட்கவில்லை ..
மாறாக வைதேகி வேகமாக ஓடிவந்து அபிநந்தனாவை அணைத்து கங்கிராட்ஸ் என்று கூறினார்... அதேபோல சாரதாவும் அவளை அணைத்துக் கொண்டு வாழ்த்துக்கள் கூற ஆதிக்கு மட்டும் என்ன விஷயம் என தெரியவில்லை வசுந்தராவை கேள்வியாக பார்க்க வசுந்தரா அவனிடம், "அவ கர்ப்பமா இருக்கா" என்று கூறினாள்.. அதைக் கேட்டதும் மெல்லிய புன்னகை ஆதி முகத்தில் வந்து போனது...
இப்பொழுது அவனால் அபியை மாற்றான் மனைவியாக பார்க்க முடிந்தது.. அவன் தான் என்றோ மனம் மாறி இருந்தானே அது வேறு விசயம்...அவனுக்குத்தான் தேவதையாக அவனது மனைவி சண்டை போடவும், அவனை உயிருக்கு உயிராக காதலிக்கவும், அவனுக்காக உயிரையே கொடுக்கும் தோழியாகவும், எதிரியாகவும் எல்லாமும் கலந்தவளாக அவள் இருக்கிறாளே அவன் ஏன் மாற்றான் மனைவியை பார்க்க போகிறான் ஆனாலும் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை கேட்டதும் சந்தோஷமாக இருந்தது என்னவோ உண்மைதான் அவன் பார்வை ஆத்ரேயன் மீது படிந்தது...
ஆனால் ஆத்ரேயனோ தன் மனைவியை பார்த்துக் கொண்டு இருந்தான்.. அப்படியே திரும்ப அவனது பார்வை ஆதியின் மீது படிந்தது ஆதி தன்னை பார்க்கிறான் என்பதை புரிந்ததும் வேகமாக ஃபோனை எடுத்து பார்க்க துவங்கி விட்டான்.. அதைக் கண்ட அபி, "ரொம்பத்தான் காரை பின்னாடி எடுத்ததுக்கே இப்படியா???" என எண்ணிக்கொண்டாள்...
அதற்குள் வசுந்தரா ஆதியின் கையை பிடித்து இழுத்து, "அவங்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னா குறைஞ்சா போய்டுவ...நீ சித்தப்பா ஆகி இருக்க டா" என்க அவனோ அதை காதிலேயே வாங்கி கொள்ளாமல் அவனது தந்தையை பார்க்க சென்றான்...
வைதேகியும், சாரதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள அதைக் கண்ட அபி மற்றும் வசுந்தரா இருவரும் அவர்கள் அருகில் சென்று,"கவலைப்படாதீங்க நாங்க ஒரு பிளான் வச்சிருக்கோம்.. அது சக்சஸ் ஆனா உங்க ரெண்டு பசங்களும் சேர்ந்திடுவாங்க இல்லைனா இப்படியே தான் முறைச்சிட்டு இருப்பாங்க வேற ஆப்ஷனே கிடையாது அந்த மாதிரி மேக் உங்க ரெண்டு பசங்களும்" என்று கூறிய வசுந்தரா மற்றும் அபி இருவரும் தன் கணவன்மார்கள் எங்கே என தேட ஒருவன் கார்டனில் அமர்ந்திருந்தான்... மற்றொருவன் தந்தைக்கு அருகில் அமர்ந்திருந்தான்...
"அபி நீ அவனை கரெக்ட் பண்ணு நான் என் புருஷனை இழுத்துட்டு வரேன்" என்று கூறினாள் வசுந்தரா.. சரி என்று அபி தன் கணவனை தேடி சென்றாள்... அங்கு அவன் அந்த வானத்தையே வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான்...
வானமோ மேகமூட்டத்துடன் காணப்பட்டது இனி எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற நிலையில் இருக்க எவனோ அந்த சிலு சிலுவென்று காற்றை ரசித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் ஆத்ரேயன்...
இங்கு வந்தால் இந்த இடம் அவனுடைய சொந்தமான இடம் போல இங்கேயேதான் வாசம் செய்வான்... தேவையில்லாமல் வீட்டுக்குள் எல்லாம் நுழைந்து யாரையும் தொல்லை செய்ய மாட்டான்.. அப்படி இருக்க அவனைத் தேடி வந்த அபி அவன் அருகே அமர்ந்து கொண்டாள்...
அவளை கண்டதும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் வானத்தையே பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கு பொறுமை இழந்துவிட்டது வேகமாக அவனது மடியில் அமர்ந்தவள் அவனது முகத்தை திருப்பி, "என் மேல கோபமா??ஏன் கண்டுக்கவே மாட்டேங்கறீங்க" என கேட்டாள்..
"அப்படி எல்லாம் இல்லை" என்று கூற, "அப்புறம் ஏன் முகத்தை இப்படி வச்சிருக்கீங்க??" என்று அவனது முகத்தை தன் கைகளால் ஏந்தி அவள் கூற அவள் கீழே விழுந்து விடக்கூடாது என அவள் இடையே அழுத்தமாக பிடித்து கொண்டவன் அவளது நெருக்கமான நிலையை பார்த்ததும் மெல்ல நடந்ததை மறந்து புன்னகைத்தான்...
பிறகு, "யாராவது பார்த்திட போறாங்க!! இறங்குடி" என்று அவன் கூறவும், "எல்லாம் நம்ம ஆளுங்க தானே பார்த்தா ஒன்னும் தப்பில்லை ரோட்டில் வைத்து கிஸ் அடிக்க தெரியுது இங்க நான் மடியில உட்கார்ந்தா தப்பா??" என கேட்டாள்...
அதைக் கேட்டதும் அவனும் மென்னகை புரிந்து, "தப்பில்லையே எதுவும் தப்பில்லையே இப்படி உட்கார்ந்தாலும் தப்பில்ல நான் இப்படி கிஸ் பண்ணாலும் தப்பு இல்லை" என்று கூறி அவளது கன்னத்தில் தன் இதழ்களை பதிக்க அவளோ வேகமாக சுற்றி முற்றியும் பார்த்து பதறி, "யாராவது பார்த்திட போறாங்க" என்று பதறி எழப்போக அவனை விடாமல், "நீதானடி சொன்ன பார்த்தா தப்பில்ல அப்படின்னு இப்போ நீ ஏன் இப்படி பேசுற" என்று கூறியவன் அவளது மறு கன்னத்திலும் தன் இதழ்களை பதித்தான்...அவளும் அவன் மடியில் அமர்ந்து கொண்டே, "ஆது நான் என்ன சொன்னாலும் செய்வீங்களா??" என்று கேட்டாள்..
"செய்வேனே நீ இப்படி உட்கார்ந்துட்டு கேட்டா என்ன வேணாலும் செய்யலாம் சொல்லு என்ன செய்யணும்" என்று அவன் ராகம் பாடிக் கொண்டே கூற, "ஆது இன்னைக்கு நமக்கு ரொம்ப ஸ்பெஷல் டே வாழ்க்கையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கும் அந்த சமயத்துல நான் உங்ககிட்ட ஒன்னு கேட்க போறேன் நீங்க கண்டிப்பா இதை செய்யணும் எனக்காக என்னாலும் நம்ம குழந்தைக்காக" என்று கூறினாள்..
அவளின் புதிரான தொடக்கத்தை கேட்ட, "அவனும் என்ன ரொம்ப குழப்பற காலையிலிருந்து ஏதோ சொல்லணும்னு நினைச்சுட்டு இருக்க எதுவாக இருந்தாலும் போட்டு உடைத்து விடு" என்று கூறினான்..
அவளும் தயங்கி கொண்டே," ஒன்னும் இல்ல நீங்க ஆதி கூட பேசணும் அவரை உங்க தம்பியா ஏத்துக்கணும் அவ்வளவுதான்" என்று அவள் கூறினாள்..
அதைக் கேட்டு அவனும் அதிர்ச்சியாகி அவளை பார்க்க, "ப்ளீஸ் நீங்க ரெண்டு பேரும் மட்டும் இப்படி இருந்தா சரிவராது நான் உங்ககிட்ட காலையில இருந்து சொல்ல நினைச்ச விஷயம் இதுதான் நீங்களும் எனக்கு வாக்கு கொடுத்து இருக்கீங்க கண்டிப்பா ரெண்டு பேரும் பேசுங்க அதோட இந்த விஷயத்தை முடிங்க ப்ளீஸ்.. யார் முதல்ல பேசணும்னு ஈகோ பார்த்துட்டு இருக்காதீங்க இப்போ உங்க ரெண்டு பேருக்கும் பெருசா எந்த போட்டி பொறாமை இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும்.. தயவு செஞ்சு நீங்க தான் முதல்ல பேசணும் ஈகோ வைக்காதீங்க ப்ளீஸ் இது எனக்காக நீங்க செய்வீங்க என்று நான் நம்புறேன் இது மட்டும் தான் எனக்கு கிப்ட்டா வேணும் இந்த கிப்ட் மட்டும் நீங்க கண்டிப்பா எனக்கு கொடுத்தே ஆகணும்" என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே ஆதி மற்றும் வசுந்தரா வருவது தெரிந்தது...
அதைப் பார்த்து வேகமாக எழுந்த அபிநந்தனா கணவனை பார்க்க அவன் முகம் இறுகி இருந்தது.." நான் சொன்னதுல உங்களுக்கு கோபமாக இருக்கும் என்று எனக்கு நல்லா தெரியும் ஆனா எனக்கு வேற வழி தெரியல" என்று அபி கூறினாள்..
அவனோ ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விட்டு, "அபி நான் இளகின சமயமா பார்த்து என்னை ட்ராப் பண்றதே உனக்கு வேலையா போயிடுச்சு" என்று சற்று முன் நடந்ததை வைத்து அவன் கூறினான்...
அதைக் கேட்டு அவளோ தலை குனிந்து கொண்டு,"சாரி எவ்வளவு நாள் தான் இப்படியே இருக்க முடியும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க" என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து கொண்டாள்..
அதே நேரம் வசுந்தரா சற்று முன் அவனிடம்,"இங்கே என்ன பண்ணிட்டு இருக்க வா" என்றழைக்க அவனோ,"பிரஸர் செக் பண்ண தானே வந்த!! பண்ணு சீக்கிரம் போகலாம்"என்றான்..
"அதெல்லாம் போகலாம் இங்கே அத்தை அபிக்கு வேண்டி விருந்து சமைக்கிறாங்க சாப்பிட்டுட்டு போலாம்" என்று கூறினாள்...
அதைக் கேட்ட அவனும், "நானெல்லாம் இல்லை எனக்கு பசிக்கல அவங்களுக்கு தானே விருந்து சமைக்கிறாங்க அவங்க சாப்பிட்டு போகட்டும் நாம போகலாம்" என்று முரண்டு பிடிக்க," அதெல்லாம் முடியாது நீ வேற சித்தப்பா ஆகிட்ட இங்கே நாம் சாப்பிட்டு தான் போறோம்" என்றாள்..
"இனி ஒரு தடவை அதை சொல்லாதே எனக்கு கெட்ட கோபம் வரும்" என்று முறைத்தபடி அவன் அருணாச்சலத்தின் முன்னால் கூற அவளோ," நீ முதல்ல வெளியில வா" என்று அவனை தர நான் இழுத்துக் கொண்டு வந்தவள், "அப்படி என்ன உனக்கு பெரிய ஈகோ இங்கே வா சித்தப்பா ஆயிட்ட தானே அத அக்சப்ட் பண்ணிக்கோ" என்று கூறினாள்..
"அதுக்கு அவன் என்னுடைய அண்ணனா இருக்கணும்" என்று அவன் கூறினான்...
"நீ சொன்னாலும் சொல்லலன்னாலும் அவன் உன்னுடைய அண்ணன் தான் அதுல மாற்று கருத்து எதுவும் இல்லையே" என்று அவள் கூறினாள்...
அவனோ அவளை பார்த்தும் முறைக்க, "என்ன முறைக்கிற உண்மை தானே சொன்னேன் அதுக்கு போய் முறைச்சிட்டு இருக்க நீயும் அவனும் தான் இத ஒத்துக்க மாட்டேங்கிறீங்க மத்த எல்லாருமே ஒத்துக்கிட்டு தான் இருக்காங்க ஊரே உன்னையும் அவனையும் அண்ணன், தம்பி தான் சொல்லுது நீங்க ரெண்டு பேரும் தான் முட்டிக்கிட்டு நிக்கிறீங்க எத்தனை நாள் தான் இப்படி நிப்பீங்க" என்று கூற, ஆதியோ, "எனக்கு அவன் கூட பேசணும்னு தோணல" என்று கூறினான்..
"உனக்கு எப்ப தான் தோணி இருக்கு பேசி பார்த்தால் தானே தெரியும்" என்று கூறியவள், "அவனுக்கு ஒரு வாழ்த்து கூட நீ சொல்ல மாட்டேங்குற இந்த அளவுக்கு நீ இருப்பன்னு நான் நினைச்சு கூட பார்க்கல ஒரு முறை நீ பேசிப்பார் எனக்காக" என்று அவள் கூறினாள்..
"அப்போ பிளான் ஓட தான் நீ வந்திருக்க... அப்பாக்கு பிரஷர் பார்க்க எல்லாம் நீ வரல அப்படித்தானே" என்று ஆதி கேட்கவும், "ஆமா டா பிளான் பண்ணி தான் வந்தோம் நான் மட்டும் இல்ல அபியும் அதைத்தான் நினைச்சிருக்கா அதோ அவன் உனக்காக தான் உக்காந்திருக்கான் பாரு... நீ அவனை திட்டு, அடி உனக்கு அவன் செஞ்சதுக்கு எல்லாம் கேள்வியா கேட்டு அவனை கொல்லு நான் ஏன்னு கேட்க மாட்டேன்... ஆனால் தயவு செய்து இதை தொடர்ந்துட்டு மட்டும் இருக்காதீங்க" என்று அழைத்துக் கொண்டு வந்தாள்...
அதே நேரம் அபியும் ஒரு மாதிரியாக பேசி வைத்திருக்கவும் இஞ்சி தின்ற இரண்டு குரங்குகள் போல முகத்தை வைத்துக் கொண்டிருந்த இருவரும் இதோ தன் மனைவிமார்களால் அந்த கார்டனில் எதிரெதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்தனர்...
இருவரும் எதிர் எதிர் திசையில் அமர்ந்து கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் கடந்துவிட்டன... இருவரும் முறைத்துக் கொண்டே அமர்ந்திருந்தனர்...
ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. இவர்கள் இருவரும் அப்படியே அமர்ந்திருக்க அபி வசுந்தராவிடம், "தேவையில்லாத வேலை பண்ணிட்டோமோ அங்க பாரு ரெண்டு பேரு எப்படி உட்கார்ந்து இருக்காங்கன்னு" என்று கூறவும் வசுந்தராவோ, "நானும் அதைத்தான் யோசிச்சிட்டு இருக்கேன்" என்று மரத்தின் இடையே நின்று கொண்டு வேடிக்கை பார்த்து இருவரும் பேசிக் கொள்ள உடனே வசுந்தராவுக்கு வேறொரு ஐடியா உதயம் ஆனது...
எதிர் எதிர் திசையில் அவர்கள் இருவரும் அமர்ந்திருக்க நடுவே ஒரு டேபிள் இருந்தது... அந்த டேபிளில் இவர்கள் இருவரும் குடிக்கும் ஒரு பியரை கொண்டு வந்து வைத்தாள் வசுந்தரா..அதை ஓபன் செய்து அதில் இரு ஸ்ட்ராவை போட்டு வைத்தாள் அபிநந்தனா...
தங்கள் மனைவிகளின் செயல்களைப் பார்த்த இருவரும் அவரவர் மனைவியை முறைக்க அவர்களோ,"நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு நேரம் தான் இப்படியே உட்கார்ந்து இருப்பீங்கன்னு எங்களுக்கு தெரியாது எவ்வளவு நேரம் ஆனாலும் நீங்க பேசிட்டு தான் உள்ள வரணும் இல்லனா நாங்க உங்க கூட வீட்டுக்கு வர மாட்டோம் குடிக்க இதோ பியர் வைத்திருக்கோம் ரெண்டு பேரும் சேர்ந்து குடிங்க" என்று இருவரும் கூறிவிட்டு சென்றுவிட்டனர்... அதைக் கண்டு அவர்கள் இருவருக்கும் மெல்லிய புன்னகை கூட வந்தது ஆனால் ஒருவர் மற்றவர்களின் புன்னகையை பார்த்து விடக்கூடாது என கஷ்டப்பட்டு அடக்கியும் கொண்டனர்...
பிறகு தன் மனைவி தன்னிடம் கேட்டுக் கொண்டதற்காக, "சொல்லு என்ன பேசணும்" என்று ஆத்ரேயன் கேட்டான் அவனாக பேச்சை துவங்கி வைத்தான்..." இப்பவும் இவனோட திமிரு குறையுதான் பாரு என்னமோ நான் பேச ஆசைப்பட்ட மாதிரி பந்தா பண்ணிட்டு இருக்கான்" என மனதுக்குள் எண்ணினாலும், "எனக்கெல்லாம் ஒன்னும் பேச தேவையில்லை" என்று ஆதி பதில் கூறினான்..
"ஓ அப்படியா சரி" என்று கூறிய ஆத்ரேயன் அவனுக்கு எதிரே எதிரே உள்ள பியரை எடுத்து ஒரு சிப் குடித்தான் ... பிறகு டேபிள் மீது பியரை வைக்க அதற்குள் மழை லேசாக தூறல் விட துவங்கியது...
ஆதி எழுந்து போகலாம் என்று பார்த்தால் ஆத்ரேயன் அங்கேயே அமர்ந்திருந்தான்... "மழை வருது உள்ளே போகலாம்" என்று ஆதி அவனிடம் கூற, "நீ போ நான் வரல உன் கூட பேசாம அது தான் வரக்கூடாது என்று என் பொண்டாட்டி சொல்லி இருக்கா அவளுக்கு நான் ப்ராமிஸ் பண்ணி இருக்கேன் சோ என் பொண்டாட்டி சொல்ற பேச்சை நான் மீற மாட்டேன்" என்று நக்கலாக கூறினான் ஆத்ரேயன்...
அப்போ நாங்க மட்டும் என்ன தக்காளி தொக்கா என எண்ணிய ஆதி அப்படியே அமர்ந்து கொண்டான்... பிறகு அவன் குடித்து வைத்த பியரை எடுத்து மீண்டும் ஒரு சிப் எடுத்து குடித்தான் ஆதி.. அதைக் கண்ட ஆத்ரேயனின் முகத்தில் மெல்லிய புன்னகை வந்தது...
பியரை குடித்ததும் ஆதி, "இதோ பார் எனக்கு உன்னை சுத்தமா பிடிக்காது ஆனால் இப்போ எங்க உன்னை பிடிச்சுடுமோன்னு பயமா இருக்கு.. அதனாலதான் நான் பேசாம இருக்கேன் போதுமா மத்தபடி நமக்குள்ள நடந்த மோதலை நான் மறந்துட்டேன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன் நினைச்சுக்க விருப்பமில்லை" என்று ஆதி கூறினான்..
அதைக் கேட்ட ஆத்ரேயன், "இங்கே மட்டும் என்ன வாழுதாம் அதேதான் எப்போ நீ அன்னைக்கு எங்க அம்மாவுக்கு ஆதரவா பேசுனியோ அன்னைக்கு இருந்து உன் மேல மதிப்பு வந்தது உண்மை தான் இல்லேன்னு எல்லாம் சொல்லல... உன்கிட்ட சொன்னா நீ ஓவரா பண்ணுவ அதனால தான் சொல்லாமல் இருந்தேன்" என்று கூறவும் ஆதி அதிசயமாக பார்த்தான்... அதற்குள் இருவரும் மீண்டும் ஒரு சிப் எடுத்து அருந்தி இருந்தனர்..
"என்னால அப்பாவை உன் கூட பகிர்ந்துக்க முடியல அதுதான் நான் அப்படியெல்லாம் நடந்துட்டேன் ஆனால் இப்போ அப்படியெல்லாம் இல்லை" என்று கூறவும் அதைக் கேட்ட ஆத்ரேயன், "அதுதான் என்ன விஷயம் என்று எல்லாருக்கும் தெரியுமே அதை எதுக்கு நியாயப்படுத்தி பேசிட்டு?? அதான் நடந்தது நடந்து போச்சு இனி அதை மறக்க நினைப்போம் நமக்காக இல்லைன்னாலும் நம்ம குடும்பத்துக்காக அப்படி நினைப்போம்" என்று கூறினான் ஆத்
ரேயன்...
அதற்குள் மழையும் படபடவென பிடித்துக் கொண்டது.. இருவரும் நனைந்தபடி அமர்ந்திருந்தனர் இருவருக்கும் பல விஷயங்கள் பேச வரிசைகட்டி காத்திருந்தன..
