அத்தியாயம் 30
ஒரு மாதம் கழித்து,
தன்னை இறுக அணைத்து படுத்திருக்கும் கணவனின் வலிய கரத்தை மெல்ல மாற்றினாள் அபி... அவளுக்கு தலை சுற்றுவது போல இருந்தது அவளால் எழுந்து கொள்ள முடியவில்லை எழுந்தால் விழுந்து விடுவோம் என்ற நிலை என்ன செய்வது என அவளுக்கு தெரியவில்லை தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே கணவனை பார்த்தாள்... அவன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்க அவனது வெற்று மார்பில் அவளது முகத்தை பதித்து மீண்டும் படுத்துக் கொண்டாள்...
அப்போதும் முடியாமல் போக மெல்ல,"என்னங்க" என்று அழைக்க அவன் உறக்கத்திலேயே அவளை அணைக்க போனான்.. அவளோ அவனுக்கு பதில் அவனை அணைத்து,"எனக்கு தலை சுத்துற மாதிரி இருக்கு..என்னால எழுந்திருக்க முடியல" என்று அவள் கூறவும் உறக்கத்திலிருந்து விழித்தவன், "என்ன ஆச்சு டி" என்று பதறினான்..
"அம்மா வேற இல்லையே அவங்க அந்த வீட்டில் இல்ல இருக்காங்க நான் அம்மாவை கூப்பிடட்டுமா" என்று பதற்றத்தில் கேட்டான்.. "ஐயோ அதெல்லாம் வேண்டாம்" என்று அவள் மறுக்க அவளது முகத்தை பார்த்து என்ன எண்ணினானோ வேகமாக அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்...
அங்கு அவர் அவளை பரிசோதனை செய்து,"எல்லாம் நல்ல விஷயம் தான் நீங்க அப்பா ஆகிட்டீங்க வாழ்த்துக்கள்" என்று கூற தான் எந்த மாதிரி உணர்கிறோம் என அவனுக்கே புரியவில்லை அவன் கால்கள் தரையில் படவில்லை..
அவளை அப்படியே தட்டாமாலையாக சுற்ற வேண்டும் என அவனுக்கு தோன்றியது.. அதே நேரம் அவளும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க அந்த மகிழ்ச்சியை உடனே அவளுக்கு அவனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என தோன்றியது அப்படியே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..
அவனும் தனது ஒரு கையால் அவளை லேசாக அணைத்தவன், "லவ் யூ டி நம்ம காதலை நீ முழுமையாக்கிட்ட" என்று கூறியவன் அவளை மிக பாதுகாப்பாக அழைத்து வந்தவன் காரில் அவளை அமர வைத்து நேராக தன் தாயை அழைத்து விஷயத்தை கூறினான்...
சாரதா வைதேகி மற்றும் அருணாச்சலம் அவர்கள் மூவரும் அருணாச்சலத்திற்கு சொந்தமான ஒரு வீட்டில் தான் இருக்கின்றனர்.. ஆம் அனைவரும் ஒன்றாக இருப்பது என்றால் ஒன்று ஆத்ரேயன் வீட்டில் இருக்க வேண்டும்.. இல்லையென்றால் ஆதியின் வீட்டில் இருக்க வேண்டும் இது இரண்டும் அந்த இருவருக்குமே சரிப்பட்டு வராது என எண்ணி பெரியவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு வீட்டில் வசிக்கின்றனர் விடுமுறை நாட்களில் மட்டும் ஆதியின் குடும்பமும் ஆத்ரேயன் குடும்பமும் சேர்ந்து அந்த வீட்டில் அந்த நாளை கழிக்கும்...
இப்படித்தான் கடந்த ஒரு மாதமாக சென்று கொண்டிருக்கிறது அந்நிலையில் வைதேகி மற்றும் சாரதா இருவரும் பழகிய சிறிய நாட்களிலேயே நன்றாக பழகிக் கொண்டனர்.. அருணாச்சலத்திற்கு இதை காணும் பொழுது மிகுந்த சந்தோஷம் ஆகியது..சாரதா பெரிதாக இயல்பாக அருணாச்சலத்திடம் இருக்கவில்லை என்றாலும் அனைவரின் நலன் கருதி அவர்கள் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் சென்றார் என்று கூறலாம்... இதையெல்லாம் அருணாச்சலத்தின் மனம் புரிந்தாலும் சாரதாவை கண்களாலேயே பார்த்துக் கொண்டாவது இருக்கலாமே எனக் கருதி தன் மனதை தேற்றிக்கொண்டார்..
ஆதி தான் குலசேகரியை பார்த்து கொள்கிறான்... ஆம் அவனால் அவரை ஒதுக்க முடியாது தவறு செய்தவர்களை எல்லாம் ஒதுக்க வேண்டும் என எண்ணினால் அனைவரையுமே ஒதுக்கி தள்ள வேண்டுமே..யாரும் இவ்விடத்தில் யோக்கியமானவர்கள் இல்லையே.. என்னதான் மற்றவர்களுக்கு துரோகம் இழைத்து இருந்தாலும் ஆதியை பொருத்தவரை அவனுக்கு அவர் எந்தவிதமான தீங்கும் செய்ததில்லை மேலும் சிறுவயதிலிருந்தே ஆதி மீது மிகுந்த பிரியம் அவருக்கு உண்டு..
வைதேகி மற்றும் அருணாச்சலம் அந்த வீட்டிலிருந்து வெளியேறியதுமே அவர் மேலும் உடைந்து போனார்... அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஆதியும் வெளியேறி விடுவான் என எண்ணினார்.... ஆனால் வயதான அந்த மனுஷியை விட்டுவிட்டு செல்ல அவனது மனம் இடம் கொடுக்கவில்லை மேலும் அவர் தவறு செய்திருந்தாலும் அவரை பழிவாங்கி கொடுமைப்படுத்தி என்ன ஆகப்போகிறது அவர் இருக்கும் நிலைக்கு அவர் இந்த குற்ற உணர்ச்சியே அவருக்கு மிகுந்த தண்டனையாக இருக்கும் என எண்ணிக் கொண்டான்... அவரை ஒதுக்கி வைக்க வேண்டும் என அவன் நினைக்கவில்லை... அதனால் அவனுடன் தான் அவர் இருக்கிறார் அவனும் அவனது தொழில், மனைவி என காலத்தை சந்தோசமாக கழித்து கொண்டிருக்கிறான்... குலசேகரி அவரது அறையில் முடங்கி போனார்...அவரால் எப்படி தலைகாட்ட முடியும் அது தான் அவர் எண்ணியதில் இருந்து எல்லாமே தலைகீழாக மாறி விட்டதே!!!!
விடுமுறை நாட்களில் தனது அம்மாவையும் அப்பாவையும் சந்திக்க செல்வான் ஆதி... அந்த சமயங்களில் ஆத்ரேயனை சந்திக்க கூடும் இருந்தாலும் பெரிதாக இருவரும் பேசிக் கொள்ள மாட்டார்கள்... அவரவர்கள் அவரவர் வழியில் இருப்பார்கள்... யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் இருவருமே ஒதுங்கிக் கொள்வர்...
ஆனால் இளையவர்களான அபி மற்றும் வசுந்தரா இருவரும் நன்றாக ஜோடி சேர்ந்து கொண்டனர்... இவர்கள் இருவருக்கும் அந்த விடுமுறை நாளில் அங்கு சென்றால் போதும் பேசிப்பேசி கலைத்து விடுவர்.... ஆத்ரேயன் மற்றும் ஆதி எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்பது போல இருந்து கொண்டனர்..மனைவிமார்கள் பேசி கொள்வதை தடுக்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை.... கிட்டத்தட்ட கூற வேண்டும் எனில் இவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க இவர்கள் இருவர் மட்டும் வேறு வேறு திசையில் ஒதுங்கிக் கொண்டனர் என்று கூறலாம்....
இப்படி இருக்க ஆத்ரேயன் அழைத்து தன் தாயிடம், "அம்மா நீங்க பாட்டியாக போறீங்க" என்று கூறினான்.. அதைக் கேட்டதும், " சாரதா மகிழ்ந்து நிஜமாவா சொல்ற எனக்கு இப்பொழுதே அபியை பார்க்கணும் போல இருக்கு" என்று கூறினார்..
"கவலைப்படாதீங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதை முடிச்சிட்டு நேரா அங்கே தான் வருவோம்" என்று கூறவும் அவரோ சரி என வைத்து விட்டார்...
அப்படியே விஷயத்தை வைதேகி மற்றும் அருணாச்சலத்திடமும் கூறி தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.. அவர்களும் மகிழ்ச்சியோடு இருந்தனர்....
விஷயத்தை கேள்விப்பட்டது முதல் அபி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்...அவளுக்கு எப்படி அவளது உணர்வுகளை பிரதிபலிப்பது என தெரியவில்லை... இந்த நாளுக்காக தான் அவள் ரொம்ப நாளாக காத்து இருந்தாள் அதனால் காரில் ஏறியதில் இருந்து அவளது வயிற்றை தடவிப் பார்த்துக் கொண்டே வந்தாள்...அவனைப்பற்றி கூறவே வேண்டாம் அவன் வானத்தில் மிதப்பது போன்ற உணர்வை கொண்டிருந்தான்..அவனுக்கு எப்போது டா வீடு வரும் தன் மனைவியை அணைக்கலாம் என்ற நிலையிலேயே வாகனத்தை செலுத்தி வந்தான்...
அப்போது மையலோடு அவளை பார்க்க அவளோ வயிற்றை தடவி கொண்டே வரவும்,"தடவி தடவி இப்பவே குழந்தையை வரவச்சுடாத இன்னும் பத்து மாசம் இருக்கு" என்று கேலியாக கூறினான்... அதைக் கேட்டு சிரித்த அவளோ,"நான் இப்போ எவ்ளோ ஹேப்பியா இருக்கேன்னு தெரியுமா ஆது... நாம ஒண்ணா சேர்ந்து வாழ தொடங்கினது பிறகு நமக்கு குழந்தை ஏன் இன்னும் ஆகல அப்படின்னு ரொம்ப வருத்தமா இருந்தேன் இப்பதான் ஆகியிருக்கு... என்னால நினைச்சு கூட பார்க்க முடியல ஆது...ரொம்ப சந்தோசமா இருக்கேன்" என்று சந்தோஷ கண்ணீரில் அவள் கூறினாள்..
அதை பார்த்தவுடன் காரை ஓரமாக நிறுத்தியவன் அவளது கையை பிடித்து அவளை தன் பக்கம் நோக்கி இழுக்க அவளோ,"இங்கேயோ எல்லோரும் பார்ப்பாங்க"என்றாள்...
"நீ பீல் பண்ணினதை நான் கேட்டுட்டு இருந்தேன் இல்ல இப்போ நான் பீல் பண்றத நீ பார்த்துட்டு இரு பார்க்க முடியலைன்னா கண்ண மூடிக்கோ" என்று கூறியவன் நொடிப் பொழுதில் அவளை இழுத்து அணைத்து அவளது இதழ்களில் இதழ் பொருத்தினான்...அவளும் அவனது முத்தத்தில் தன்னுடைய பங்களிப்பையும் கொடுத்தாள்..
பிறகு அவளை விட்டவன் அவளது முகத்தை பார்க்க முகம் செவ்வானமாக சிவக்க, "என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியலடி ஹாஸ்பிடல் இருந்து எப்படி கார்ல ஏறி பத்து நிமிஷம் ட்ராவல் பண்ணினேன்னு இருக்கு... அவ்வளவு சந்தோஷமா இருக்கேன்.. என் குழந்தை இல்லையில்லை நம்ம குழந்தை உலகத்தில் எந்த மூளைக்கு போனாலும் என் குழந்தை நல்லா பாத்துக்கணும்னு தோணுது..
ஒரு அப்பாவா அந்த குழந்தைக்கு தேவையான அனைத்து கடமைகளையும் செய்யணும்னு தோணுது... எனக்கு அதெல்லாம் நடக்கல ஆனால் நான் செய்வேன்... ஒரு அப்பாவா நான் எப்படி இருக்கணும்னு நான் நினைச்சிருந்தேனோ அதை எல்லாம் விட அதிகமா என் குழந்தைகிட்ட இருப்பேன்... எப்பவும் ஒரு குழந்தைக்கு அப்பா தான் ரோல் மாடலா இருப்பாங்க... கண்டிப்பா என் குழந்தைக்கு நான் ரோல் மாடலா இருப்பேன் எனக்கு கிடைக்காத அப்பா பாசத்தை நான் நூறு மடங்கு அவனுக்கு கொடுப்பேன்" என்று கூறினான்...
அதில் அவன் இழந்தது எல்லாம் திருப்பி தன் மகனுக்கு கொடுக்க வேண்டும் என்ற அவனுடைய எண்ணம் அவளுக்கு புரிபட்டது..
அவனோ நிறுத்தாமல், "நீ இன்னைக்கு என்னை ரொம்ப சந்தோஷப்படுத்தி இருக்க... என்னால வார்த்தையால விவரிக்க முடியல இப்ப சொல்லு உனக்கு என்ன வேணும்னு சொல்லு எனக்கு இந்த சந்தோஷத்தை கொடுத்த உனக்கு ஏதாவது நான் செய்யணும்" என்று கூறினான்...
அதைக் கேட்ட அபி மூளை ஏதோ யோசித்தது.. பிறகு, "நான் என்ன சொன்னாலும் செய்வீங்களா???" என்று கேட்டாள்.. அவனும் அப்பொழுது இருந்த சந்தோஷ மனநிலையில், "நீ என்ன கேட்டாலும் செய்வேன் என் உயிரை மட்டும் கேட்காத எனக்கு உன் கூடயும் நம்ம குழந்தை கூடயும் வாழனும்" என்று சிரித்து கொண்டு கூற, "சீ அதெல்லாம் இல்லை" என்று அவள் கூறினாள்..
அவனும், "சரி சொல்லு உனக்கு என்ன வேணும்??" என்று அவன் கேட்கவும் அவள், "இப்ப சொல்லல நேரம் வரும்போது நான் கேட்பேன் அதை நீங்க தரணும்" என்று பொடி வைத்து கூறியவள் மனதில் எப்படியாவது ஆத்ரேயனும், ஆதியும் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது...
இது இன்றல்ல நேற்று அல்ல வசுவும் அபியும் பேச தொடங்கிய நாட்களில் இருந்து அவர்களின் பேச்சில் இந்த ஒரு வாக்கியம் இடம் பெற்றுவிடும் அதை நடைமுறைப்படுத்த இருவரும் தீர்மானித்திருந்தனர்...
அதில் முக்கியமாக வசு தான் அவளிடம், "அப்படி என்ன இவனுக ரெண்டு பேத்துக்கும் ஈகோ அதை உடைச்சே ஆகணும் ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசினா முடிய போறது தான் இருக்கு அவ்வளவு பிரச்சினை நடந்தும் அத்தையும் மாமாவுமே சேர்ந்துட்டாங்க இதுல இவங்களுக்கு என்ன???" என்று கூறி இருவரும் சேர்ந்து அவனுக்கு இரண்டு பேரையும் சேர்த்து வெச்சே ஆகணும் என்று கூறினாள்...
அதைக் கேட்டு இருவரும் தகுந்த சமயம் வரும்பொழுது இவர்களை ஒரு வழியாக்க வேண்டும் என முடிவு செய்திருக்க அதையே இப்பொழுது செயலாற்றக்கூடாது என அபி நினைத்தாள்...
இந்த தருணத்தில் ஆத்ரேயன் என்ன கேட்டாலும் செய்வான் என்பது அவளுக்கு தெரியும் அதனால் அவள் இந்த முடிவு எடுத்தாள் பிறகு நொடிப்பொழுதும் யோசிக்காமல் வசுந்தராவை அழைத்தாள் அபி...
இந்த பக்கம் ஆத்ரேயன் அவனது தாயிடம் விஷயத்தை கூறினான் என்றால் அவள் நேராக அவளது வீட்டில் விஷயத்தை கூறிவிட்டு அடுத்ததாக அவள் அழைத்ததோ வசுந்தராவுக்கு வசுவிடம் விஷயத்தை கூற வசு மிகவும் மகிழ்ந்தாள்...
பிறகு ,"அபி நான் சொன்ன விஷயத்தை மறந்துட்டியா இதைவிட நல்ல சூழ்நிலை இன்றைக்கு கிடைக்காது நானும் அப்படியே அங்கே வந்துடுறேன் நீயும் அங்கே வந்துடு நாம ஏற்கனவே பண்ணி வச்ச பிளான் படி இவங்க ரெண்டு பேரையும் பேச வெச்சிட்டோம் வேலை முடிஞ்சது" என்று வசு கூறினாள்..
அருகே கணவன் கார் ஓட்டிக் கொண்டிருக்க பதில் கூற முடியவில்லை என்றாலும், "நானும் அதைத்தான் நினைக்கிறேன் என் பக்கம் சரியா போய்ட்டு இருக்கு" என்று கூறிவிட்டு வேகமாக போனை வைத்துவிட்டு மெசேஜில், "நானும் அதைத்தான் நினைக்கிறேன் வசு நீயும் ஆதியும் இன்னைக்கு வாங்க.. நாம அங்க வச்சு இவங்க ரெண்டு பேரையும் பேச வெச்சிடலாம் இவரும் நான் ஒரு விஷயத்தை சொல்லுவேன் செய்வீங்களான்னு கேட்டு இருக்கேன் இவரும் கண்டிப்பா செய்யறேன்னு வாக்கு கொடுத்து இருக்கார்... இப்போ நான் பிரக்னண்டா இருப்பதினால மனுஷன் தல கால் புரியாமல் இருக்கார்.. நான் சொன்னா செய்திடுவார் என் பக்கம் கிளியரா இருக்கு நீ ஆதியை மட்டும் அழைச்சிட்டு இன்னைக்கு வந்துடு" என்று மெசேஜ் செய்துவிட்டு ஒன்றும் தெரியாதவள் போல அமர்ந்து கொண்டாள்...
மற்ற நாள் என்றால் அவள் பேசுவதை கேட்டிருப்பானோ என்னவோ ஆனால் அவன் அதீத மகிழ்ச்சியில் இருந்ததால் அவள் பேசியதையோ அவள் யாரிடம் பேசினால் என்றதையோ அவன் கவனிக்க விட்டு விட்டான்....அதே சமயம் வேறொரு ஃபோன் வேறு அவனுக்கு வந்திருக்க அவன் சுத்தமாக அவள் என்ன செய்கிறாள் என்பதை கவனிக்க விட்டு விட்டான்…
