Share:
Notifications
Clear all

அத்தியாயம் 15

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

சில வருடங்களுக்கு முன்பு...

அப்பொழுது அருணாச்சலம் ஒரு கல்லூரியில் முதுகலை பட்ட படிப்பு படித்துக் கொண்டிருந்தார்... அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியாக சாரதா சேர்ந்தார்...

சாரதாவை கண்டதும் அவரது அமைதியும் அழகும் அருணாச்சலத்தை ஈர்த்தது கண்டதும் காதல் கொண்டார்... எண்ணியதை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அருணாச்சலம் உடனே சாரதாவிடம் போய் தன் மனதில் இருப்பதை கூறினார்..சாரதா முதலில் மறுத்தார்... ஆனால் அருணாச்சலம் விடவில்லை தன் மனதை புரிய வைக்க முயன்றார்... அப்பொழுதும் சாரதா மறுத்தார் ...

அருணாச்சலம் பிறகு அடாவடியாக ,"நீ என்னை காதலிச்சு தான் ஆகணும்" என்று இறங்கினார்... அப்பொழுதும் சாரதா மசியவில்லை என்ன செய்தால் இவள் தன்னை காதலிப்பால் என எண்ணி நொந்து கொண்டிருந்தார் ...

பிறகு ஒரு நாள் சாரதாவிடம் ,"நான் உன்னை உயிர் உயிராக காதலிக்கிறேன் நீ இல்லாம என்னால வாழ முடியும் என்று தோணல ஒரு வேலை உனக்கு என்னை பிடிக்கலையா??? விருப்பம் இல்லாமல் தான் நான் உன் பின்னாடி சுத்திட்டு இருக்கேனா அப்படி ஏதாவது காரணம் இருந்தா சொல்லிடு நான் வர மாட்டேன் நான் உன்கிட்ட கெஞ்சியும் பார்த்துட்டேன் மிஞ்சியும் பார்த்துட்டேன் உனக்கு என்னை பிடிக்கலையா ஆனால் உன் பார்வை அப்படி சொல்லல..எனக்கே குழப்பமா இருக்கு...நீ என்னை பார்க்கிற ஆனால் நான் பார்த்தா பார்க்காத மாதிரி இருக்க!!! நீ பார்கிறதை நான் பார்த்துட்டே தானே இருக்கேன்!!!" என்று கூறினார்..

அதை கேட்ட சாரதா படபடத்து கொண்டு,"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல உங்களை பார்த்தா பார்த்துட்டு இருக்கணும்னு தோணுது நீங்க பக்கம் வந்தா பேச தோண மாட்டேங்குது" என்று கூறினார் சாரதா...

அதைக் கேட்டதும் அருணாச்சலத்திற்கு மகிழ்ச்சி அலைமோதியது..."இனி நீ எதுவுமே பேச வேண்டாம் உன்னை நான் பார்த்துக்கிறேன் உன் கண்ணே சொல்லுது எல்லாமே இந்த ஒரு வார்த்தை எனக்கு போதுமானது" என்று கூறியவர் அடுத்த ஒரே மாதத்தில் சாரதாவை தன்னோடு பழக வைத்து விட்டார்... அவருடைய நிதானத்தையும், அவருடைய மென்மையையும், அவருடைய பயத்தையும், அவருடைய அழகையும், நாளுக்கு நாள் அவர் ரசித்துக் கொண்டே இருந்தார்... அருணாச்சலத்திற்கு சாரதா இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை ஆகியது..

சாரதாவை பற்றி கூறியே ஆக வேண்டும் சாரதா தாய் தந்தை யாருமில்லாத ஒரு அனாதை பெண் பெற்றவர்கள் இறந்து போக உறவினர்கள் பெண் குழந்தையை சுமை என கருதி சாரதாவை அனாதை இல்லத்தில் கொண்டு போய் சேர்த்தனர்...

அதுவரை அவர்கள் செய்ததை நன்மை என கருதிக்கொண்ட சாரதா இருப்பதை வைத்துக் கொண்டு வாழ பழகிக் கொண்டார்... ஏனோ அவரது தந்தையும் தாயும் இறக்கும் முன் கொஞ்சம் சொத்துக்களை அவரது பெயரை சேர்த்து வைத்துவிட்டு சென்றிருந்தனர் ...

அதுவும் அவர் வளர்ந்து ஒரு நிலைக்கு சென்ற பின் தான் மகள் உபயோகிக்க முடியும் என்றும் எழுதியிருக்க அதனாலேயே என்னவோ உறவினர்கள் சிறுவயது சாரதாவை ஏற்க மனமின்றி அனாதை இல்லத்தில் விட்டு விட்டனர்...

சாரதாவும் உண்மையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப வாழ பழகிக் கொண்டார் கல்லூரி படிப்பையும் அனாதை இல்லத்தில் இருந்தே சென்று படித்துக் கொண்டிருக்க அந்த சமயத்தில் தான் அருணாச்சலம் அவர் பின்னாலேயே சுற்றி தன் காதலை தெரிவித்து இதோ சாரதா அவருடைய மனதையும் பறிகொடுத்து விட்டார்...

அருணாச்சலத்திடம் தன் வாழ்க்கையைப் பற்றி தெளிவாக கூறியிருந்தார்... "எனக்கு யாரும் இல்லை உறவென்று சொல்லிக்கொள்ள நீங்க மட்டும் தான் இருக்கீங்க" என்று அழகாக தன் வாழ்க்கையை எடுத்துரைத்திருந்தார்... அருணாச்சலத்திற்கு அதுவே சாரதாவை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது..ஆனால் அவர் அதை செய்யவே போவது இல்லை என்பது அவருக்கு இந்நேரம் தெரியவில்லை...

அருணாச்சலம் மிக நல்ல மனிதர் யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காத மனிதர் .. தங்கத்தட்டில் பிறந்தவர் என்று கூறலாம்.. பரம்பரை பரம்பரையாக கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்தவருக்கு ரிஷி என்ற தம்பி இருக்க தம்பியிடம் அனைத்து விஷயத்தையும் பகிர்ந்து கொள்வார் அருணாச்சலம்...

அப்படி தன் காதலையும் அவர் பகிர்ந்து கொள்ள தம்பி ரிஷியோ,"அண்ணா நீ எதுக்கும் கவலைப்படாதே அம்மா கிட்ட தைரியமா பேசு நான் கூட இருக்கேன்" என்று கூறினார்... அருணாச்சலத்தின் தாய், தந்தை இருவருமே குலம்,கோத்திரம் குடும்ப பெருமை என்றெல்லாம் பார்க்கக் கூடியவர்கள் அவர்கள் காதல் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்...

அதிலும் தங்கத் தட்டில் பிறந்த தன் மகனை வைரத் தட்டில் வைத்து தான் அலங்கரிக்க விரும்புவர் ...அப்படி இருக்க ஊர் பெயர் தெரியாத சாரதாவை திருமணம் செய்ய குலசேகரி எப்படி இருந்தாலும் ஒப்புக் கொள்ள மாட்டார் என்பது தெரிந்திருந்தாலும் அருணாச்சலம் மனதை பறிகொடுத்து விட்டாரே ...

மகனை விட தன்னுடைய கௌரவம் அவருக்கு பெரிதாகி போய்விடுமா என்ற நம்பிக்கையில் தனது முதுகலை பட்டப்படிப்பு முடிந்ததும் தந்தையின் நிழலில் தந்தையின் நிர்வாக பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு திறம்பட அதை செயலாற்றி வந்த அருணாச்சலம் அவருடைய திருமண பேச்சு வீட்டில் அடிபட தன் தாயிடம் நேரடியாகவே விஷயத்தை போட்டு உடைத்து விட்டார்...

அதைக் கேட்டதும் அதிர்ந்த குலசேகரி ,"என்ன நெனச்சிட்டு இருக்க அருணா ??? உன்னை இதுக்கா படிக்க வச்சேன் ஊர் பெயர் தெரியாத ஒரு பொட்ட சிறிக்கி என் வீட்டு மருமகளா கொண்டு வருவேன்னு நீ எப்படி எதிர்பார்க்கலாம்??? உன் குடும்ப கவுரவம் என்னன்னு தெரியுமா உன் குடும்ப பெருமையை பற்றி உனக்கு தெரியாதா???" என்று எடுத்த வாய்க்கு கேட்டார்...

ரிஷி தன் தாயிடம்,"அம்மா அண்ணா தான் அவர்களை விரும்புறாங்களே கல்யாணம் செய்து வையுங்க" என்று கூற ,"நீ உன் வேலையை பார் கேட்டது அவன் பதில் சொல்றது நான் பேசுகிறேன் தொடுப்பு நீ தேவையில்லை" என்று கூறிவிட்டார் குலசேகரி...

அதைக் கேட்ட அருணாச்சலம் ,"அம்மா எனக்கு அவளை பிடிச்சிருக்கு அவளுக்கு உறவு என்று சொல்லிக்க நான் இருக்கேன்" என்று கூறினார் ...

"அப்படி இருந்தா உனக்குன்னு உறவுன்னு சொல்லிக்க யாரும் இல்லாமல் போயிடுவாங்க பரவாயில்லையா???" என்று கேட்டார் குலசேகரி ...அவர் எந்த விதத்திலும் மடிந்து போவதாக தெரியவில்லை அப்படி இருக்க அருணாச்சலம் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார்...

அந்த வேளையில் ரிஷி தன் அண்ணனுக்கு துணையாக நின்று,"அண்ணா நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க... நீங்க வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க இப்போதைக்கு அம்மா கிட்ட சொல்ல வேண்டாம்... அம்மாவுக்கு தெரிஞ்சா அவங்க ஒத்துக்க மாட்டாங்க... பார்த்தீங்களா??? அவங்க எப்படி பேசுறாங்க அப்படின்னு நீங்க அவங்களை கல்யாணம் பண்ணிக்கோங்க எங்கேயாவது தனியா குடித்தனம் நடத்திட்டு வாங்க ஒரு குழந்தை குட்டி என்று அப்போ எல்லாம் சரியாகிவிடும் " என்று ரிஷி கூறினார் அதை கேட்டதும் அருணாச்சலத்திற்கு சரி என்று தோன்றியது..

பிறகு நொடிப்பொழுதும் யோசிக்காமல் சாரதாவை படித்துக் கொண்டிருக்கும் போதே பாதியிலேயே படிப்பை விட்டு விட்டு சாரதாவை திருமணம் செய்து கொண்டார்...

திருமணம் செய்த அடுத்த மாதத்திலேயே அவர் கர்ப்பிணி ஆகிவிட்டார்... இந்த விஷயம் ரிஷியை தவிர வேறு யாருக்கும் தெரியாது...

கோழி குஞ்சு அடைகாப்பது போல இந்த விஷயத்தை அடைகாத்து வந்தார்... காலங்கள் உருண்டோடியது சாரதா மற்றும் அருணாச்சலத்திற்கு பெண் குழந்தை அமிர்தா பிறந்து இதோ அவளுக்கு எட்டு வயது ஆகிவிட்டது....

மகள் எட்டு வயது ஆகியும் இன்னும் அருணாச்சலம் வீட்டில் தனக்கு இப்படி ஒரு திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை இருப்பதை கூறவில்லை... ஆனால் இரவு ஆனால் வீட்டிற்கு வருவார்... பாதி ராத்திரியில் எழுந்து அவருடைய வீட்டிற்கு சென்றும் விடுவார் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்...அவர் இருக்கும் நேரத்தில் அவரால் முடிந்த அளவுக்கு மனைவி மற்றும் மகளை சந்தோசமாக வைத்திருப்பார்...அவர்களுக்கு குறை ஒன்றும் இல்லாமல் பார்த்து கொண்டார்..

இந்த எட்டு வருடத்தில் அருணாச்சலத்தின் தந்தை அம்மையப்பனுக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்று விட்டது... அப்போது குலசேகரி தன் மகனிடம் ,"எப்போ கேட்டாலும் கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்க அப்பாவோட இந்த நிலையை பார்த்தும் உனக்கு கல்யாணம் செய்துக்கணும்னு தோணலையா???" என்று கேட்டார்…

இனி பேசி பிரயோஜனம் இல்லை தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை கூறி விட வேண்டியது தான் என்று வாயை திறக்க போக குலசேகரி,"எங்கேயாவது காதல், கீதல் அப்படின்னு சொல்லிட்டு நீ இருந்த உங்க அப்பாவோட சேர்ந்து உனக்கு உன் குடும்பமும் இருக்காது.. அதை ஞாபகத்தில் வைத்துக்கொள் நானும் பார்த்துட்டு தானே இருக்கேன் எட்டு வருஷமா கல்யாணம்ன்னு சொன்னா வாயே திறக்காமல் இருக்க" என்று மிரட்டியவர் அவரை எமோஷனலாக குற்றப்படுத்த துவங்கினார்...

அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அந்த சமயத்தில் அம்மையப்பனுக்கு திடீரென்று உடல்நலம் சரியில்லாமல் போனது... வழக்கம் போல தன் சாவுக்கு முன்னால் தன் மகனின் கல்யாணத்தை பார்க்க வேண்டும் என்று அம்மையப்பன் அருணாச்சலத்திடம் வாக்கு கேட்க அருணாச்சலம் செய்வதறியாத தவித்தவர் தன் தாயைப் பார்க்க அவரோ இவன் ஏதோ தவறு செய்கிறான் என்று எண்ணினார்...

"அப்பாதான் கேக்குறாங்க இல்ல அப்பாவுக்கு வாக்கு கொடு" என்று கூறவும் ,"அம்மா இனியும் நான் உங்ககிட்ட இந்த விஷயத்தை மறைச்சு பிரயோஜனமில்லை... எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு" என்று கூறவும் அதிர்ந்தார் குலசேகரி...

தலைக்கு மேல் வளர்ந்த மகன் என்று கூட பாராமல் அருணாச்சலத்தின் கன்னத்தில் ஓங்கி அடிந்திருந்தார்..."நான் சொன்னதும் கேட்காமல் நீ இப்படி செய்திட்டில உனக்கு இப்படி செய்ய என்ன தைரியம் வந்துச்சு??" என்று கேட்டார்..

"அம்மா தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கோங்க என்னை விட்டு அவளுக்கு யாரும் இல்லை அவளை என்னால் விட முடியாது" என்று கூறினார் அருணாச்சலம்...

"அப்போ என்னை விட்டுடு உனக்கு அவ தான் முக்கியம் அப்படின்னா எங்க எல்லாரையும் மறந்திடு.. கட்டின புருஷன் படுத்த படுக்கையில் இப்போ இழுத்துட்டு இருக்கார்... அவருக்கு முன்னாடி நான் பூவோடும் பொட்டோடும் போய் சேர்ந்துடுறேன்" என்று கூறிய குலசேகரி, அவரது அறைக்குள் ஓடி தூக்கு மாட்டிக்கொள்ள முற்பட அருணாச்சலம் பதறி தன் தாயின் கால்களில் விழுந்து," அம்மா தயவு செய்து இப்படி பண்ணாதீங்க" என்று கூறினார்...

ஆனால் குலசேகரியோ,"எனக்கு என்னுடைய குடும்பம் மானம்தான் பெருசு அதை விட்டுட்டு நான் இறங்கி வர மாட்டேன் இப்ப சொல்லு நான் சொல்ற பொண்ணை தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும் " என்று கூறவும் தன் தாயின் உயிருக்காக சரி என்று கூறினார்...

அடுத்த முகூர்த்தத்திலேயே வைதேகி என்ற பெண்ணை அருணாச்சலத்திற்கு மணமுடித்து வைத்தார் குலசேகரி... அதற்கு பின் தான் அவருடைய முகம் தெளிந்தது ஆனால் அருணாச்சலம் எதையோ பறி கொடுத்தது போல இருக்க நாட்கள் செல்ல செல்ல அவன் சரியாகி விடுவான் என்று குலசேகரி கண்டு கொள்ளவில்லை...

ஆனால் அதற்குள் பாவம் சாரதா தனது இரண்டாவது குழந்தையான ஆத்ரேயனை அருணாச்சலம் அறியாமல் சுமந்திருந்தார்... கணவர் இப்போது வருவார் அப்போது வருவார் என வழி மேல் விழி வைத்து காத்திருந்த பெண்ணிற்கு சோகம் தான் மிஞ்சியது.... அதுவும் அவரது மூத்த மகள் அமிர்தா,"அப்பா எப்போ வருவார் அப்பா எப்ப வருவார்" என கேட்டுக் கொண்டே இருக்க என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் சாரதா திண்டாடினார்...

சாரதாவுக்கு அருணாச்சலத்தின் குடும்பத்தை பற்றி எல்லாம் தெரியும் அப்படி இருக்க தன் கணவனை குறை சொல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்…

இதனிடையே தான் வைதேகி என்ற பெண்ணை அருணாச்சலத்திற்கு விருப்பமே இல்லாமல் மிரட்டி உருட்டி திருமணம் செய்து வைக்க அவரும் தன்னால் தாய் ஏதாவது செய்து விடுவாரோ என எண்ணி பயந்து திருமணம் செய்து கொண்டார்...

அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்தார் என்பதை மறைத்து ஏதோ முதல் கல்யாணம் செய்வதுபோல ஊரைக் கூட்டி பத்திரிக்கை அடித்து பந்தலிட்டு போஸ்டர் அடித்து நியூஸ் பேப்பரில் செய்தி வந்து என இல்லாத வேலைகள் எல்லாம் செய்தார் குலசேகரி...

இந்த செய்தியை பத்திரிகையின் வாயிலாக சாரதா காண நேரிட்டது அதை கண்டவர் அதிர்ந்தார்... உடனே தன் மகள் காணாதது போல அந்த பத்திரிகையை மறைத்து வைத்துக் கொண்டார் ...திருமணமே செய்து விட்டாரா அப்போது என் வாழ்க்கை அவரே எண்ணி இருக்கும் நானும் என் குழந்தைகளும் என்ன செய்வது என எண்ணினார் ..

இனி யோசிப்பதில் என்ன இருக்கிறது இங்கே இருந்து செல்லலாம் என முடிவெடுத்து வயிற்றில் குழந்தையோடு கையில் ஒரு குழந்தையை அழைத்துக் கொண்டு அவர் வேறு ஊருக்கு சென்று விட்டார்..தாய்க்காக தாலி கட்டி விட்டாரே ஒழிய வைதேகி இன்று வரை மனைவியாக அவர் ஏற்றுக் கொள்ளவில்லை ...

வைதேகிக்கும் அவரது மாறுதல் ஏன் என்று புரியாமலும் இல்லை ஏனெனில் திருமணம் செய்த அன்றே தான் வேறொரு பெண்ணை மணந்திருப்பது கூறி இருந்தார்...

"நான் வேறொரு கல்யாணம் பண்ணனும் உனக்கு செஞ்சது பச்ச துரோகம் தான் நான் இல்லை என்று சொல்லவில்லை உனக்கு ஏதாவது ஆசைகள் இருந்தால் உனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா சொல்லு நான் அவர்களை கல்யாணம் செய்து வைக்கிறேன் உண்மையை சொல்லி அவங்க கால்ல விழுந்து நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் ஆனால் என்னால் சாரதா இல்லாமல் வாழ முடியாது" என்று கூறிவிட்டார்...

அதைக் கேட்ட வைதேகி எதுவுமே பேசவில்லை ..அவருக்கு இடி விழுந்தது போல இருந்தது ஆனால் மனதுக்குள் இவர் மீது அவருக்கு கொள்ளை ஆசை இருந்தது ...

உண்மைதான் அதனால் இவரை ஏற்கவும் முடியாமல் இவரை விட்டு விலகவும் முடியாமல் வைதேகி தடுமாறினார்…அவர் யோசிப்பதை பார்த்து அருணாச்சலம்," ஏதாவது இருந்தா சொல்லு "என்று கூற,"உங்க விஷயத்தை நீங்க சொல்லிட்டீங்க உங்க பக்கம் நியாயத்தையும் நீங்க சொல்லிட்டீங்க ஆனால் நான் வாழ்ந்த உங்க கூட தான் வாழ்வேன்னு இருக்கேன் நீங்க தான் நீங்க உயிரோடு இருக்கும்போது நான் எப்படி வேறு ஒருத்தனை கல்யாணம் பண்ணிப்பேன்??? அப்படி எப்படி நீங்க யோசிக்கலாம் வாழ்ந்தாலும் உங்க கூட தான் செத்தாலும் உங்க கூட தான் என்னை ஏத்துக்காததும் ஏத்துக்கிறதும் உங்க இஷ்டம் அதுல நான் தலையிட விரும்பவில்லை ஆனால் நான் இந்த வீட்டை பொருத்தவரை உங்க மனைவி அந்த ஒரு பேரோடு

நான் போய் சேர்ந்திடுவேன்" என்று ஒரே போடாக போட்டுவிட்டார்.... வைதேகி இதைக் கேட்டதும் அருணாச்சலம் செய்வதறியாது தடுமாறி நின்றார்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top