அத்தியாயம் 1
உதகமண்டலம் முழுவதும் தன் உறைபனி பொழிவால் அந்த மாவட்டத்தையே முடக்கி வைத்து இருக்க அந்த சுற்று வட்டார மக்கள் அனைவருமே வீட்டுக்குள் முடங்கி இருந்த காலை வேளை ஒன்று… எங்கு பார்த்தாலும் எந்த மக்களையும் வெளியே பார்க்க முடியவில்லை..அந்த அளவுக்கு அனைவரையும் குளிர் வாட்டி வதைத்து கொண்டு இருந்தது போல…
எங்கு பார்த்தாலும் மலை முகடுகளும் பச்சை பசேல் இயற்கை அன்னை தன் அழகை மொத்தமாக வாரி வழங்கி இருந்தது ...ஜன்னலை திறந்து பார்க்க பார்க்க அவளுக்கு கண்கள் தெவிட்டவில்லை... ஏனெனில் தற்போது அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை ஆக 5 டிகிரி முதல் அதிகபட்ச வெப்பநிலை ஆக 18 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக் கூடும் என வானிலை அறிக்கை மையம் தகவல் தெரிவித்து கொண்டிருக்க உறைபனி பொழிவால் ஆங்காங்கே பனி நீர் உறைந்து மலை முகடுகளில் இருந்து சாலைகள் வழியாக வழிந்து கொண்டிருந்தது....
மலையடிவாரத்திலிருந்து மெதுவாக ஒரு அரசு பேருந்து ஒன்று மலையை நோக்கி பயணத்தை துவங்கியது எப்பொழுது வேண்டுமானாலும் அங்கு மழை பெய்யலாம் என்ற நிலையில் இருக்க அந்த வாகனத்துக்குள் இருக்கும் அனைவரும் எந்த சிரமும் இன்றி வீடு போய் சேர்ந்து விட வேண்டும் என வேண்டிக் கொண்டனர்...ஏனெனில் இப்போது தான் ஒரு சறுக்கலை அந்த வாகனம் சந்தித்து இருந்தது..
மாலைக்குள் சென்றிருக்க வேண்டிய வாகனம் ஆனால் இன்னும் செல்லவில்லை வாகனம் ஊர்ந்து ஊர்ந்து செல்ல அந்த பேருந்துக்கு பின்னால் வந்து அந்த காரில் பயணம் செய்து கொண்டிருந்த அபி நந்தனாவுக்கு பஞ்சு பொதியில் பொதிந்து இருக்கும் இந்த உதகையை ரொம்ப பிடித்து இருந்தது...
மிகவும் ரசித்தபடியே பயணம் செய்தாள்....இதுவரை அவள் உதகையை பார்த்தது இல்லை அதனால் அவள் ரசித்து கொண்டே வந்தாள்....உதகையின் இயற்கை அவளை ஒவ்வொரு நொடியும் ஈர்த்து கொண்டே வந்தது... ஆனால் இனி அவள் வாழ்க்கையில் உதகையை மீண்டும் பார்க்க வேண்டும் என நினைக்க மாட்டாள் என அவள் இப்போது உணரவில்லை...
" ச்ச என்ன அழகு இங்கேயே இருக்கலாம்ன்னு தோணுதே நித்யா நீ இந்த மாதிரி இடத்துல வாக்கப்பட்டு வந்திருக்கியே உன்ன நெனச்சு எனக்கு அப்படியே புல்லரிக்குது கொஞ்சம் பொறாமையாக கூட இருக்கு டி நீ மட்டும் எவ்ளோ இயற்கையை ரசித்து வாழ்ந்துட்டு இருப்ப இல்லையா???
நான் பார் இனியும் அந்த சிட்டியில் வாழ்ந்துட்டு இருக்கேன்.. இனி எங்க எல்லாம் போக போறேன்னு எனக்கே தெரியல அவருக்கு வேற ஊர் முழுசும் பிசினஸ் இருக்குன்னு சொல்லி இருக்கார்… வெளிநாடு பயணம் தான் போக வேண்டி இருக்கும் ஆனால் நான் நம்ம நாட்டிலேயே பார்க்காத பல அழகிய இடங்கள் இருக்கு அதெல்லாம் எப்போ பார்க்க போறேனோ??? ஆனால் எனக்கு இந்த மாதிரி இடத்தில் தான் வாழனும்னு ஆசை" என மனதுக்குள் தன் தோழியுடன் பேசிக் கொண்டு பயணத்தை தொடர்ந்தாள் அபி நந்தனா...
தோழியுடன் மனதில் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே அவளுக்கு அவனின் ஞாபகம் வந்து போனது..ஆம் அவளது கணவனாக வர போகிற ஆதித்யன் நேற்று இரவு கூட அவனுடன் இனிமையாக பேசிக்கொண்டிருந்த தருணங்கள் இந்த நிமிடத்தில் ஞாபகத்திற்கு வந்து அவளது முகத்தை செம்மை ஆக்கியது அதை எண்ணிக்கொண்டே கன்னம் சிவக்க பயணத்தை தொடர்ந்தாள்...
நந்தனா வயதோ 22 அதற்கான அழகும் தோற்றமும் ஒருங்கே கொண்ட அச்சுப் பதுமையவள்...மென்மையான குணம் கொண்டவள் கொஞ்சமே கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள் பார்ப்பவர்கள் ஒரு முறையாவது அவளை பார்த்து விட்டால் திரும்பி பார்க்காமல் போக மாட்டார்கள் அந்த அளவுக்கு கொஞ்சம் அழகை பிரம்மன் வாரி வழங்கி இருந்தான் தாய் தந்தைக்கு மூத்த மகளாய் அபிநந்தனா பிறந்திருக்க அவளின் தங்கை ஸ்ரீ லக்ஷ்மி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள்... தாய்க்கும் தந்தைக்கும் எல்லா வளமும் இறைவன் கொடுத்து இருக்க இதுவரை அவர்களுக்கு எந்த குறையும் அந்த ஆண்டவன் வைத்திருக்கவில்லை இதோ ஊரே போற்றி சொல்லும் அளவுக்கு ஒரு பெரிய சம்பந்தத்தை பேசி முடித்திருக்கிறார் சிவப்பிரகாசம்...
ஆம் அவன் ஆதித்தியன் ரிஷி குரூப்ஸ் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ அந்த கம்பெனியை இவன் தான் இப்பொழுது திறம்பட நடத்தி வருகிறான் அறிவாளி பண்பாளி பெயருக்கு ஏற்றது போல அழகும் அறிவும் நிறைந்த ஆணழகன் தன் மகளுக்கு ஏற்றவன் இவன் தான் என சிவப்பிரகாசம் முடிவு செய்துவிட்டார்...
அதனால் இவனது சம்பந்தம் வந்ததும் அப்படியே வாரி சுருட்டி எதைப்பற்றியும் யோசிக்காமல் சம்மதம் தெரிவித்து விட்டார்... அதிலும் அந்த குடும்பம் ..ஆதித்தியனை விட அவன் பிறந்திருக்கும் அவனது குடும்பம் தான் இந்த சம்பந்தம் முடிவு செய்ய முக்கிய காரணம் ..ஆம் பேர் போன குடும்பம் அந்த குடும்பத்தில் ஒரு கிளையில் இவள் இருந்தால் போதும் அந்தப் பேரே சிவ பிரகாசத்தின் குடும்பத்துக்கு பெருமை சேர்க்கும்... அதனால் அவர் வேறு எதுவும் யோசிக்கவே இல்லை கல்யாண வேலைகள் துரிதமாக நடந்து கொண்டு இருந்தன... இன்னும் இருபது நாட்களில் திருமணம் என்ற நிலையில் ஆளுக்கு ஒரு வேலையாக பிரித்துக் கொண்டு செய்து கொண்டிருக்கின்றனர் தாயும் தந்தையும் பத்திரிக்கை வைக்க ஒரு பக்கம் சென்று இருக்க இவள் தன் தோழியான நித்யாவுக்கு திருமண அழைப்பை விடுக்க இதோ உதகை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கிறாள் அபி...
சிவப்பிரகாசம் அவளை தனியாக ஒன்றும் விட்டுவிடவில்லை உதகை மண்டலத்திற்கு கீழே உள்ள மேட்டுப்பாளையத்தில் தான் அவரது குடும்ப வழி சொந்தங்கள் இருக்க அவர்களுக்கு எல்லாம் திருமண அழைப்பிதழை வைக்க சிவப்பிரகாசம் மற்றும் மைதிலியும் வந்திருந்தனர் ...
கூடவே தான் வருவதாக அவர்களிடம் கூறி ஏறிக்கொண்டாள் அபி...மேலும் தன் தந்தையிடம்," அப்பா ப்ளீஸ் உங்க கூட வந்தா என்னோட பிரண்டு கிட்ட பேச கூட நீங்க விட மாட்டீங்க நீங்க மேட்டுப்பாளையத்தில் இருக்கிற சித்தப்பா சித்தி வீட்டில் எல்லாம் பத்திரிக்கை வைத்துட்டு இருங்க நான் போய் அவளுக்கு பத்திரிக்கை கொடுத்துட்டு கொஞ்ச நேரம் அவ கூட ஸ்பென்ட் பண்ணிட்டு வரேன்" என்க
அதற்கு அவளது தந்தையும்,"அதனால் என்ன ஒரு மணி நேர பயணம் தானே" என்று கூறி அவளை தனியாக விட்டிருக்கின்றனர் அவள் பத்திரிக்கை வைத்ததும் அதை டிரைவருடன் மேட்டுப்பாளையம் சென்று அங்கிருந்து தன் பெற்றோர்களை அழைத்துக் கொண்டு சென்னை போவதாக தான் பயண ஏற்பாடு செய்திருந்தனர் அதன்படி மெல்ல மலை ஏறிக் கொண்டு இருக்க அங்கிருக்கும் காட்சிகளையெல்லாம் அருமையாக ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள் அபிநந்தனா...
வழி நெடுகிலும் காட்சி அளிக்கும் பிசின் மரங்களும், யூகலிப்டஸ் மரங்களும் அவள் நாசியை நனைத்தது..பிசின் மரத்தில் இனியும் ஒட்டி கொண்டிருந்த நேற்றிரவு பெய்த மழையின் நீர் குமிழிகள் வாடைக்காற்று வீச அந்த நீர்க்குமிழிகள் எல்லாம் அவளது முகத்தில் பட்டு தெறித்தது அதில் லயித்த அவளது மனம் நிறைவாக இருக்க இதோ அவள் ஆசை ஆசையாக வந்த அவளது தோழியின் வீட்டை அடைந்து விட்டாள்...
நித்யாவும் அவள் வருகிறாள் என்றதும் அவள் வாயிலில் நின்று கொண்டு வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள்...அவளது கார் நித்யாவின் வீட்டின் முன்னால் வந்து நின்றதும்,"ஹே அபி வா டி வா எவ்ளோ நாள் ஆச்சு உன்னை பார்த்து இன்னும் அப்படியே இருக்க நான் பார் கல்யாணம் ஆகி புஸ்ன்னு ஆகிட்டேன்" என்று குறைப்பட்டு கொண்டாள்..
" ஹா ஹா நித்தி நீ இன்னும் மாறவே இல்லை டி அப்படியே இருக்க இப்போ தான் என் கண்ணுக்கு அழகா இருக்க" என்று தோழியின் மனக்குமுறலை தீர்த்து வைத்தாள் அபி....
பிறகு கொஞ்சம் பழைய கதைகள் பேசி கொண்டிருந்தவளிடம் ஆசையாக பத்திரிக்கையை நீட்டிய அபி, "நீயும் உன் புருஷனும் கண்டிப்பா வரணும் டி அப்புறம் அந்த அன்னிக்கு ஒரு வேலை அப்படி இப்படின்னு சொல்ல கூடாது" என்று கண்களை உருட்டி அபி கூற அதை கேட்டவளோ,"கண்டிப்பா வரேன் ஆமாம் இவ்ளோ பெரிய சம்பந்தம் எப்படி கிடைச்சது மாப்பிளை எப்படி??? உன்கிட்ட நல்லா பேசுறார் ஆஹ்??? அவரை பத்தி நீ எதுவுமே சொல்ல மாட்டேங்கறியே டி??" என்று நித்யா விசாரித்தாள்...
ஆதியை எண்ணியதும் அவள் முகத்தில் வெட்கம் படர்ந்து கொள்ள அவனை எண்ணிய அடுத்த நொடி அவனே அவளை அழைத்து இருந்தான்...
அவர்கள் இருவரும் அவர்களின் நிச்சயத்தில் ஒன்றாக எடுத்துக் கொண்ட படத்தை புரொபைல் பிக்சராக அவள் வைத்திருக்க இருவரின் நெருக்கத்தை கண்ட நித்யாவிற்கு மேற்கொண்டு எதுவும் கேட்க தோன்றவில்லை அதை கண்டு அவள் சிரிக்கவும் அவளது சிரிப்பை கண்ட அபி வேகமாக வெட்கம் கொண்டு போனை எடுத்து காதில் வைத்து,"ஹலோ" என்றாள் மென்மையாக,
மறுமுனையில்,"ஹாய் ஸ்வீட் ஹார்ட்"
"ஹாய் ஆதி"
"உன்னோட பிரென்ட் வீட்டுக்கு போய்ட்டியா????"
"இப்போ தான் வந்தேன் ஆதி..நான் உங்களை கூப்பிட்டேன் ஆனால் நீங்க எடுக்கவே இல்லை" என்றாள் அவனின் குணத்தை அறிந்த அபி...
"ஹ்ம்ம் எனக்கு ஒரு மீட்டிங் இருந்தது அதான் எடுக்க முடியல"என்றான் பதிலுக்கு.. ஆதி நல்லவன் வல்லவன் பெயர் பலகையில் அவனது பெயரும் இடம் பெறும் என்றாலும் அவன் சார்ந்த அனைத்து விஷயங்களும் அவனுக்கு தான் முதலில் தெரிந்து இருக்க வேண்டும் என எண்ணுபவன் அப்படி யாராவது கூறி தெரிய நேர்ந்தால் கொஞ்சம் அவனது கோபத்தை காண நேரிடும் மேலும் அவனது உறவுகள் மீது அவன் கொஞ்சம் அக்கறை கூடுதலாக எடுத்து கொள்ளும் ரகம் என்பதால் அவன் நேசிக்கும் மக்களிடம் அவர்கள் சார்ந்த அனைத்து விஷயமும் தனக்கு தெரிய வேண்டும் என எண்ணுவான்.. அதனை எண்ணியவள் வேகமாக அவன் போன் எடுக்கவில்லை என்று சரண்டர் ஆக அவனும் அவன் இருந்த வேலைப்பழுவில் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல்," பயணம் பாதுகாப்பாக இருந்துச்சு தானே???" என்றான்..
"ஹ்ம்ம் சூப்பரா இருந்துச்சு ஆதி என்ன அழகான இடம் தெரியுமா அவ்ளோ புத்துணர்ச்சியா இருக்கு இந்த இடம் அவ்ளோ அழகா இருக்கு என் மனசுக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு இந்த இடத்தை விட்டு வர எனக்கு மனசே இல்லை" என்று அவள் மனதில் உள்ளதை அவனிடம் வெளிப்படுத்தினாள்...
அதைக்கேட்ட அவனோ சிரித்துக்கொண்டு ,"அதனால் என்ன நம்ம ஹனிமூன் அங்கே வச்சுக்கலாம்" என்று கூற அதைக் கேட்ட அவளும்,"ஆதி எப்ப பாரு இதையே பேசுறீங்க நீங்க ரொம்ப மோசம்" என்று கூற,
அதைக் கேட்ட அவனும் ,"நான் பேசுவதை எல்லாம் கேட்டுட்டே இருக்கியே அப்போ நீ எந்த ரகம்???" என்று அவனும் திருப்பி பதில் கொடுத்தான்...
அதற்கு அவளுக்கு பதில் கூறத் தெரியாமல் மென்மையாக சிரிக்க அதை ரசித்த அவனோ,"சீக்கிரம் வந்து விடு பேபி...ரொம்ப நேரம் எடுத்துக்காத நாளைக்கு நாம ஒரு டின்னர் போலாம் அடுத்த நாள் காலையில எனக்கு லண்டன் போக வேண்டி இருக்கும் அப்புறம் நான் நம்ம கல்யாணத்துக்கு தான் வருவேன்... அதுக்கு இடையில நாம சந்திக்க கூடிய சூழல் இருக்காது என்று தான் எனக்கு தோணுது கல்யாணத்துக்கு பிறகு ஒரு வாரம் ஆச்சும் உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு ஆசை இருக்கு அதுக்கு முன்னாடி நான் முடிக்க வேண்டிய வேலைகள் எல்லாம் நிறைய இருக்கு அதை முடித்து விட்டேனா ஒன் வீக் உன் கூட மட்டுமே நமக்காக அந்த ஒன் வீக் அதை எண்ணித்தான் நான் இப்போ வேலை செஞ்சிட்டு இருக்கேன்" என்று ஆசையாக கூறினான் ஆதி.. அதைக்கேட்ட அவளோ அவனது ஆசைகளையும் ஏக்கத்தையும் அறிந்தவள் ம்ம் கொட்டினாள்...அது தான் அவளால் இப்போது செய்ய முடிந்தது...
அவளுக்கும் ஆசை இல்லையா என்ன??? அவள் மனதிலும் கொள்ளை ஆசை உண்டே ஆனால் அவன் ஆண் உடனே தன் கொச்சையனாலும் இச்சையனாலும் உடனே வெளிப்படுத்தி விடுகிறான் அவளால் அவனை போல திறந்த புத்தகமாக அவள் மனதை வெளிப்படுத்த முடியாதே??? என மென்மையாக சிரிக்க அவள் வெட்கப்படுகிறாள் இப்போது அவள் முகம் சிவந்து இருக்கும் என்பதை எண்ணிய ஆதிக்கு அது தித்திப்பாக இருந்தது...
"அங்கேயே இருந்து வெட்கப்பட்டு இருக்காத நாளைக்கு என்னை பார்க்கும் போது வெட்கப்படு நான் ரசித்து பார்க்கிறேன் அப்படியே நானும் சிவக்க வைக்கிறேன்" என்று காதலாக அவன் கூற அவளது முகம் மேலும் சிவந்தது...
ஆனால் மறு நாள் அவளை அவன் பார்க்கவே போவதில்லை என்பதை தற்போது அவன் அறியான் இனி அவளை பார்க்க நேரிடும் பொழுது அவள் எந்த நிலையில் இருக்க போகிறாள் என்பதை இப்போது அவன் எண்ணி இருந்தால் இந்த வார்த்தையை கூறி இருக்க மாட்டானோ என்னவோ???....
நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் இறைவன் என்று ஒருவன் இல்லையே என்ற பாடல் வரி நம்மிடையே நிலவி இருந்தாலும் அந்த இறைவனுக்கே சவால் விடும் ஒருவன் அவளை நோக்கி வந்து கொண்டிருக்கிறான் என்றும் அவன் நினைப்பது மட்டும் தான் நடக்க வேண்டும் என எண்ணி இவர்கள் இருவரின் தலையெழுத்தை மாற்றி எழுத வந்து கொண்டு இருக்கிறானோ??? என்னவோ???...இது ஒரு பழி வாங்கும் வெறியின் தொடக்கமோ????
தோழியிடம் கதை அளந்ததில் சமயம் போனதே தெரியவில்லை அபிக்கு தாயின் அழைப்பு வரவும் வேகமாக போனை எடுக்க,"அபி இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க?? நாம சென்னைக்கு போகணும்னு நியாபகம் இருக்கா இல்லையா??? உனக்கு??" என்று கடினமாக கூறினார் மைதிலி..
"அம்மா இதோ வந்திடறேன் ஒரு மணி நேரத்தில் நான் வந்துடுவேன்" என்று அவள் கூற, "சீக்கிரம் வா மா இப்போவே சாயந்திரம் ஆக போகுது சீக்கிரம் வா" என்று கூறி போனை வைத்து விட்டவள் தோழியுடன் விடை பெற்று மலை இறங்க துவங்கினாள்...குளிர்ந்த காற்று அவள் முகத்தில் பட்டு தெறிக்க, மதியம் நித்யாவின் நளபாகத்தை ரசித்து உண்டவளுக்கு உறக்கம் கண்களை தழுவ அப்படியே உறங்கி போனாள் அபி...
அந்த நேரம் என்று பார்த்து அவள் பயணம் செய்து கொண்டிருந்த காருக்கு பின்னால் அதி வேகத்தில் வந்து கொண்டிருந்த அந்த கருப்பு நிற கார் இவளின் காரை மோதுவது போல உரசி கொண்டு வந்து இவளது காரை இடைமறித்து அவளது காருக்கு முன்னால் போய் கீச்சென்ற சத்தத்தோடு நின்றது...
சட்டென்று லாவகமாக காரை நிறுத்திய ஓட்டுனரை பார்த்து,"என்னாச்சு ஏன் இப்படி வண்டி ஓட்டறீங்க??" என்று தன் உறக்கம் தடைப்பட்டதில் அவள் வினவினாள்..
"மா யாரோ வண்டியை இடை மறித்து இருக்காங்க" என்று அவர் கூறவும் அவளோ கார் கதவை திறந்து,"யார் இப்படி வண்டி ஓட்டுறது??" என அவள் பார்க்க அங்கே காரில் இருந்து கருப்பு நிற புல் சூட் அணிந்து கொண்டு காரில் இருந்து இறங்கினான் ஆத்ரேயன்...
அவன் ஆத்ரேயன் 29 வயது இளைஞன் ...அறிவாளி ..
கோபக்காரன் அழுத்தம் நிறைந்தவன் எதிராளியை கண் பார்வையிலேயே ஒதுக்கி நிறுத்துபவன் பண்பு என்பது அவன் அருகே கூட நுழைந்தது இல்லை ...சாணக்கியத்தனம் நிறைந்த ஒருவன் தனக்கு ஒன்று வேண்டும் என்றால் அது உலகத்தில் எந்த மூலையில் யார் கையில் இருந்தாலும் அதை தன் கைக்குள் கொண்டு வர வைக்கும் வித்தைக்காரன்..அதுவும் அவனுக்கு வேண்டும் என்று கேட்டால் மட்டுமே இந்த செய்கையை அவன் செய்வான்...இல்லையேல் துச்சமென அவன் துடைத்து எரிந்து செல்லும் வித்தைக்காரனுக்கு இப்போது இவள் தேவைப்பட்டாளோ???
கொஞ்ச நாளில் மாற்றான் தோட்டத்து மல்லிகையாக அவள் ஆக போகிறாள் என அறிந்தும் இல்லையில்லை இந்த உலகத்தில் அவனுக்கு என்று அவன் எண்ணி இருக்கும் ஒரே ஒரு எதிரியான ஆதித்தியனின் மனைவி ஆக போகிறவளை தட்டி பறிக்க வந்து நிற்கிறானோ இந்த ஆகாய அசுரன் ஆம் அசுரனே தான்...இனி அடுத்து அவன் செய்ய போகும் விஷயங்கள் அவனை அப்படி தான் நமக்கு உருவகப்படுத்த போகிறதோ என்னவோ??? அவனது விழிகள் அந்த காரிலேயே தொக்கி நிற்க,
அவனை கண்டதும் அவளது இதழ்கள்," இது ஆத்ரேயன் தானே??" என முனகி கொண்டு இவர் எதுக்காக என் காரை வழி மறித்து இருக்கார் என யோசித்தாள் அபி...
காரில் இருந்து இறங்கியவளை துளைத்தெடுக்கும் பார்வை தன் கருப்பு நிற கூலர்ஸினூடே பார்த்தான் ஆத்ரேயன்...அவன் கண்களில் அவளை பார்த்ததும் அப்படி ஒரு வெறி தாண்டவம் ஆடியது..அது ஏன் அவள் தன் எதிரியின் மனைவி ஆக போகிறாள் என்பதனால் தானோ??? இல்லை அவனை அசிங்கப்படுத்த ஒரு வழியாய் இவளை எண்ணி இருக்கிறானோ என்னவோ?? ஆனால் அவன் பார்வை அவள் மீது தான் நிலைத்து நின்றது...அவன் ஏன் அப்படி பார்க்கிறான் என்பதை அறியாத அவளுக்கு இவனை கண்டதும் ஏனோ மனம் படபடத்தது... எதற்காக படபடப்பு வருகிறது என அவளுக்கு புரியவில்லை ஏனோ அவள் மனம் ஒரு நிலை இல்லாமல் தவித்தது..
மாலை ஆனதால் என்னவோ வானம் இருட்டுகட்டி கொண்டு இருந்தது... காரிலிருந்து இறங்கலாமா வேண்டாமா??? என அவள் யோசித்து கொண்டிருக்க காரில் இருந்து இறங்கியவன் கார் கதவை தன் காலால் எட்டி உதைத்து அடைத்தவன் மார்பில் கையை கட்டி அவளது காரின் முன்னால் கம்பீரமாகவும் அதே நேரம் அழுத்தமாகவும் மார்பில் தன் கைகளை கட்டி நின்று கொண்டிருந்தவனின் விழிகளில் ரௌத்திரம் தாண்டவம் ஆடியது...அவன் நினைத்து கொண்டு இருப்பதை இப்போதே செய்து விட வேண்டும் என அவனது மனம் குதிரையின் வேகத்தை விட ஓடி கொண்டிருந்தது....
எதுக்கு இப்படி காரை இடை மறித்து இருக்கார்ன்னு கேட்டு விடலாம் என எண்ணியவள் அவன் அவளை இந்த நேரம் வரை அழைக்கவும் இல்லை மாறாக எதற்கு இப்படி நிற்கிறான் என்பதை கூறவும் இல்லை நாமே கேட்டு விடுவோம் என எண்ணியவள் அவனின் முன்னால் சென்று அவள் நின்றாள்...அவள் மனம் குழம்பி இருந்தது.. அவன் முன்னால் நின்று கொண்டிருந்தாலும் அவள் இன்னும் அவனிடம் கேட்கவில்லை..
தன் முன்னால் நிற்பவளை தன் கண்களாலேயே அளவிட்டவன் அவளது பொறுமை ரொம்ப சோதிக்காமல் எடுத்ததும், "கல்யாணம்னு கேள்விப்பட்டேன் எனக்கு எல்லாம் பத்திரிக்கை இல்லையா???".... என்று எடுத்ததுமே அவனுக்கு ஒன்றுமே தெரியாதது போல அவள் இங்கு வந்தது முதல் எத்தனை முறை சிரித்தாள் எத்தனை முறை வெட்கப்பட்டாள் என்பது வரை கணக்கில் வைத்திருக்கும் ஆத்ரேயன் ஒன்றுமே தெரியாதது போல அவளிடம் வினவினான்..இன்னும் சற்று நேரத்தில் இவளை தன்னவள் ஆக்கி கொள்ள போகிறான் என்பதை அவன் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தான் அது வேறு விஷயம் அதை வெளிப்படுத்தி கொள்ளாமல் அவன் கேட்டான்...
அதை கேட்ட அவளோ இலேசாக அதிர்ந்தாள் அதுவும் அவனது குரல் கொஞ்சம் அழுத்தமாக வரவும் அவனது கண்களில் தீப்பொறி பறக்க அவளை பார்த்து கேட்டானோ என மீண்டும் மீண்டும் அவள் யோசித்து கொண்டிருந்தாள் அபி நந்தனா சற்று நேரத்தில் என்ன நடக்க போகிறது என்று தெரியாமல் அப்பாவியாய் அவன் முன்னே நின்று கொண்டிருந்தாள்...
