Share:
Notifications
Clear all

தூவானம் 7.1

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

தூவானம் : 7.1

இருவரும் பேசிக்கொண்டே பயணம் செய்ய இதோ முத்தரசுவின் தோட்டம் வந்து விட்டது..தோட்டத்தை கடந்து தான் வீட்டுக்கு செல்ல வேண்டும்...அப்படியிருக்க இவர்கள் பயணம் செய்த கார் தோட்டம் வரை வர பிரீத்தியோ வழிகள் எல்லாம் நியாபகம் வைத்து கொண்டு, " இதுக்கு மேல நடந்து போகலாமா??"... என கேட்க அவனும் சரியென்று கூறினான்...

இருவரும் அவளது உடைமைகளை எடுத்து கொண்டு பொடி நடையாக நடக்க துவங்க தோட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு முன்பு ப்ரீத்தி பனி மலரை எப்படி கண்டாலோ அதே வேலையில் தான் இப்பொழுதும் அவள் இறங்கியிருந்தாள்..

ஆம் அவளது தோட்டத்தில் தன் தோழி செல்வியுடன் மாங்காய் பறித்துக் கொண்டிருந்தாள்... அதுவும் அவள் அணிந்திருந்த பாவாடையை தூக்கி இடுப்பில் சொருகியபடி எம்பி எம்பி குதித்துக் கொண்டு இருக்க, தன்னருகே அரைகுறை ஆடையுடன் நிற்கும் பிரீத்தி நித்திலனின் கண்ணுக்கு அரைகுறையாக தெரியவில்லை...

அங்கே பாவாடை தாவணி அணிந்து இடையும் காலும் பிறர் பார்வைக்கு காட்சிப்பொருளாக காட்டி கொண்டு குதித்துக் கொண்டிருக்கும் பனிமலர் அரைகுறையாக அவன் கண்களுக்கு தெரிந்தாள்..

கூடவே தோட்டத்தில் பணியாளர்கள் பணி செய்து கொண்டிருக்க அவர்களின் நோட்டம் பனி மலரின் மீது இல்லை என்றாலும் அவனுக்கு சுர்ரென்று கோபம் வந்தது...அதிலும் செல்வி வேறு, "மலரு அந்த குண்டு மாங்காயை பறி "..என்று ஐடியா கொடுக்க அவளோ, " இரு டி இந்த உடம்பை வெச்சிட்டு குதிக்கவா முடியுது பேசாமல் மரத்துல ஏறிவிடுவோமா ".. என அவள் செல்வியிடம் வினவ,

" ஏறிடு புள்ள கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது ".. என்று முந்தானையில் முடிந்து வைத்திருந்த மாங்காயை கடித்து கொண்டே செல்வி கூற அவளும் மரத்தில் ஏற துவங்கி விட்டாள் பாதி மரம் ஏறி விட்டாள் என்று தான் கூற வேண்டும்...

அந்த நேரம் பார்த்து," ஏய் அறிவு இருக்காடி" என்று மரத்தின் மீது மேலும் ஏற முயன்று கொண்டிருப்பவளை பார்த்து நித்திலன் கேட்க,

மலரோ சட்டென்று திரும்பி பார்க்கவும் மலரின் கால் நிலை தடுமாறி விழப் போகவும் சரியாக இருக்க செல்வியோ , " மலரு புள்ள விழுந்துடாத " .. என்று கத்த , செல்வியின் சவுண்ட் ஸ்பீக்கர் சத்தமே மலர் மேலும் அதிர காரணமாக போனது...அவளது கால்களின் பிடி விட அவள் அப்படியே கீழே விழ,

அதற்குள் இதை கண்ட நித்திலன் வேகமாக பதறி ஓடி வந்து தாங்கினான்...அவனது ஒரு கை அவளது இடையில் அழுத்தமாக பதிந்து இருக்க மறு கையால் அவளது முதுகை அழுத்தமாக தாங்கி இருந்தான் நித்திலன்...

கீழே விழுந்து விடுவோம் என நெனைத்தவள் கண்களை மூடிக்கொண்டு இருக்க எதன் மீதோ விழுந்து இருக்கிறோம் என கண்களை திறந்த பார்க்க நித்திலனின் கைகளில் விழுந்து இருக்க அவனை அருகில் கண்டதும் அவளுக்கு அவள் மனதில் பொத்தி வைத்த ஆசை கிளர்த்து எழ கூடவே ஐந்து வருடங்களுக்கு முன்பு அவன் தொட்டதும் ஏற்பட்ட குறுகுறுப்பு இப்பொழுதும் அவளுக்கு அதே குறுகுறுப்பு கிடைத்தது...

இதை எல்லாம் பின்னாலிருந்து ப்ரீத்தி கவனித்துக் கொண்டிருந்தாள்.. செல்வியோ வாயில் மாங்காயோடு வாயை திறந்து பார்த்து கொண்டு இருந்தாள்..

ஒரு நொடி நித்திலன் மட்டும் தான் அவளை சுற்றி இருப்பதுபோல பனிமலர் உணர, நித்திலன் அவளை தன் கைகளில் தாங்கி கொண்டிருந்தவன் அவளுக்கு ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்ததும் அவளை கீழே இறக்கி விட்டவுடன் அவளது தலையில் ஓங்கி குட்டினான்... அவன் குட்டியதும் சற்று முன் ஏறிய காதல் போதை எல்லாம் சட்டென்று மலருக்கு வடிந்து போனது.. அவன் குட்டிய இடத்தில் அவளுக்கு தாங்கொன்னா வேதனையை கொடுக்க,

அவளோ தலையை தேய்த்து வலியால் துடித்து , "எதுக்கு மாமா குட்டின வலிக்குது தெரியுமா ?? எனக்கு மூளை கலங்கி போச்சுன்னா நீயா கொடுப்ப "...என்று கேட்க,

அவனோ அவளது முகத்தை பார்த்து," " கொஞ்சமாவது அறிவு இருக்காடி மரத்தில் போய் தொங்கிட்டு இருக்க.. அதுவும் உடுப்ப பார் அரையும் குறையுமா கண்டவங்க பார்ப்பாங்கன்னு ஒரு அறிவு வேண்டாம்..மூளை இருந்தா தானே நீ யோசிப்ப உனக்கு தான் அதெல்லாம் இல்லையே... "...என்று எகிற,

அப்பொழுது தான் சுற்று முற்றும் பார்த்த பனி மலருக்கு ப்ரீத்தி தென்பட்டாள்..பிர்த்தீயும் நித்திலன் சொன்னதும் அவளது உடையை ஒரு முறை பார்த்து கொண்டு இருக்க,

ப்ரீத்தியை கண்டதும் அவன் அடித்த அடியை காட்டிலும் மூளை சூடாகிப் போனது பனி மலருக்கு...அவனிடம் மென்மையாக இருந்த நொடி மாறி அவளுள் இலேசாக வன்மமா இல்லை தன் மாமன் மீது அவளுக்கு இருக்கும் உரிமை உணர்வா ஏதோ ஒன்று அவளுள் நன்றாக வேலை செய்ய,

"இவளை அழைச்சிட்டு வரத்தான் டிப் டாப்பா ரெடியாகி போனாறா..ஆளும் மூஞ்சியும் பாரு சோத்துக்கு செத்தவ மாதிரி இப்படி காய்ஞ்சு போயி இருக்கா "...என நினைத்தவள் அவளைப் பார்க்க ப்ரீத்தியோ மலரை பார்த்து மென்னகை புரிந்தாள் அதைக்கண்ட அவளுக்கு மேலும் கடுப்பு வர பிரீர்தியை பார்த்து சிரிக்காமல் இதழை மட்டும் பிரித்து வைத்தாள்..மேலும் பிரீத்தியை தலை முதல் கால் வரை அங்குலம் அங்குலமாக அளவெடுத்து கொண்டிருக்க செல்வியும் அதே வேலையை செய்து கொண்டு இருக்க செல்வியை பார்த்து நித்திலன் முறைக்க செல்வி ஓடி விட்டாள்.. அவள் சென்றது கூட மலருக்கு தெரிய வில்லை அந்த அளவுக்கு பிரித்தியை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள்...

அவள் பார்ப்பதை கண்ட நித்திலனோ , " என்ன அவளை அப்படி பாக்கற நானும் அவளும் காதலிக்கிறோம் அதனால தான் இந்தக் கல்யாணம் வேணாம்னு சொல்றேன்..இப்போ புரியுதா போய் உன் அப்பன் கிட்ட சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்துற வழியை பாரு "... என்று கூற மலரின் சந்தேகம் ஊர்ஜிதமாகி போனது... அவள் என்ன நினைத்து அதை அவன் வாய் வழியே கேட்கவும் அவளுக்கு கடுப்பு ஆனது..

கூடவே மலருக்கு பிரீத்தியின் முகத்தை பார்க்க பார்க்க அதிலும் ப்ரீத்தி அவளை பார்த்து சிரித்து அவன் கூறுவது உண்மை போல தான் இட்ட வேஷத்தை சிறப்பாக செய்ய முடிவெடுத்து , மலரை பார்த்து, "எப்படி இருக்க மலர் ??"...என்று வினவ,

அவளோ மனதுக்குள் , " அது தான் நீ வந்துட்டியே குந்தாணி நான் எப்படி இருக்க போறேன்..உன்னை யார் இப்போ இங்கே வர சொன்ன ??".. என மனதுக்குள் அவளை வைது வெளியே வாயே திறக்காமல் தலையை மட்டும் ஆட்டினாள் ..

அதை கண்ட பிரீத்தியோ நித்திலனை பார்க்க நித்திலனோ பிரீத்தியை பார்த்து கண்ணசைக்க பிரீத்தியோ, "ஆமா நித்திலன் சொல்றது உண்மை தான் உன்னால முடிஞ்சா இந்த கல்யாணத்தை நிறுத்த முடியுமா??"... என்று கேட்க,

இவளுக்கு உள்ளே புசுபுசுவென கோபம் வந்தது.." வாடி வா உன்ன தான் எதிர் பார்த்து காத்து இருந்தேன் நீ சொன்னதும் இந்த கல்யாணத்தை நிறுத்தி விட்டு கையை கட்டிட்டு ஒரு மூலையில் உட்கார்ந்து இருக்கேன் போதுமா அப்படி நீ நெனைச்சுட்டு இரு..நான் பனி மலர் டி.. என் மாமா எனக்கு மட்டும் தான்...என் மாமாக்கு என்னை பிடிச்சாலும் சரி .. பிடி காட்டியும் சரி மாமா தான் எனக்கு புருஷன் அத யாராலயும் மாத்த முடியாது "... என்று பிடிவாதமாக எண்ணியவள் ,

அவளிடம் தலையை மட்டும் ஆட்டி , " அதனால் என்ன சொல்றேன் " என்று கூறி விட்டு சென்றாள்... அவளது போக்கை பார்த்த நித்திலனும் ஏதோ யோசனையாக இருக்க ப்ரீத்தியோ அவளது போக்கை பார்த்து, " இவ சொல்லிடுவாளா ??"...என்று வினவ, அவனோ, " சொல்லுவான்னு நினைக்கிறேன்"... என்று கூறினான்

பனி மலருக்கு பொறாமையா இல்லை மனம் வெதும்பலா என தெரியவில்லை அவளுக்கு அவள் மாமா வேண்டும்... அதுவும் என் மாமாவுக்கு என்னை பிடித்தாலும் சரி பிடிக்காட்டியும் சரி என் மாமா எனக்கு வேண்டும் என்ற முடிவில் வீட்டுக்கு வந்தவள் நேராக சிவகாமியிடம் சென்று ஒன்றும் தெரியாதவள் போல, " என்னத்த அந்த ப்ரீத்தி வந்து இருக்காங்க??...மாமாவும் அவங்களும் தோட்டத்துல தனியா பேசிட்டு இருக்காங்க"... என்று அவள் கூற அதை கேட்ட சிவகாமியும் ஒரு நிமிடம் அதிர்ந்தார்..

"மாமாவும் ப்ரீத்தியும் அங்க ஜோடியா நின்னு பேசிட்டு இருக்காங்க...".. என்று மீண்டும் ஒரு முறை அவள் அழுத்தி கூற,

அவரோ மனதுக்குள் இந்த பையன் கிட்ட நான் கூட்டிட்டு வர வேண்டாம்ன்னு சொன்னா கூட்டிட்டு வந்துட்டானே இப்போ என்ன செய்யறது என முழித்தார்..

மேலும் தன் மருமகளிடம் , "மலரு அது நீ ஒன்னும் தப்பா நெனைச்சுக்காத அவங்க இரண்டும் பேரும் சிநேகிதர்கள் அப்படி தான் அவங்க ஒண்ணா சேர்ந்து பேசிட்டு இருக்காங்க.. என்கிட்ட சொல்லி தான் பிரீத்தியை அழைச்சிட்டு வர போனான்.. அவ இரண்டொரு நாள் இங்கே தான் தங்க போறா...அவளை உன் ரூம்ல தங்க வைச்சுக்கோ"... என்று கூற, அவளுக்கு அத்தை கூறுவதில் உடன்பாடு இல்லையென்றாலும் அவளோ என்ன நினைத்தாளோ என்னவோ சரி என கூறி கூறினாள்....

பின் மலரோ, " என்ன செய்யலாம் அத்தை கிட்ட சொல்லி பிரயோஜனம் இல்லை பேசாமல் அப்பா கிட்ட போட்டு கொடுத்துடுவோமா இல்லை அண்ணன் கிட்ட சொல்லி கொடுத்துடுவோமா??"... என அவள் நினைக்க , அவள் கண் முன்னே வந்தது என்னவோ இளங்கோ தான்...

ஆனால் அதற்கு வேலையே இல்லாமல் மலர் வீட்டுக்குள் வரும் பொழுதே அங்கே கயலிடம் அவளது அண்ணன் இளங்கோ, " உன் தம்பிக்கு அறிவே இல்லையா??? கல்யாணத்தை வெச்சிட்டு கண்ட பொம்பளை பிள்ளைகளை எல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு வரான் வெளில நின்னு ஜோடியா பேசிட்டு இருக்கான் இது தான் அவன் குணமா ?? வெளிநாட்டில் வேலைக்கு போனாலும் குடும்பம் மானம்ன்னு ஒன்னு இருக்கு அதை உன் தம்பிக்கு சொல்லி கொடு"... என்று இளங்கோ கயல்விழியை திட்டிக் கொண்டிருந்தான்..

அதை கேட்ட மலருக்கு அப்போது தான் நிம்மதியே மனதுக்கு வந்தாலும் தன் அண்ணனிடம் போய், " அது மாமா பிரின்ட் அண்ணே..தப்பா பேசாதீங்க "... என்று கூற,

கயல்விழியும் என்ன சொல்லலாம் என யோசித்து கொண்டிருந்தவளுக்கு மலர் எடுத்து கொடுக்கவும் சமாதானமாகி, " அது அவனோட பிரண்டு அது மட்டுமில்லாம தெரிஞ்சு பொண்ணு தானே "...என்று கூற ,

அதைக்கேட்ட இளங்கோவும் அவளை முறைத்து , "அதெல்லாம் வீட்டுக்குள்ளே வெச்சுக்கணும் வெளியே இல்லை... இது வந்து கிராமம்... இங்கே ஆணும் பெண்ணும் நின்னு பேசிட்டு இருந்தா தப்பா நினைப்பாங்க... அதுவும் அந்த புள்ளையோட உடையும் நடையும் இதெல்லாம் நல்லாவா இருக்கு??..சீக்கிரம் கிளம்ப சொல்லு..நாலு பேர் நாலு விதமா பேசுற அவளுக்கு வெச்சுக்க வேணாம் அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்"... என்று முறைக்க கயல்விழியோ மேற்கொண்டு ஏதாவது பேசினால் அவன் ஏதாவது சொல்லுவான் என நினைத்து , "சரிங்க நான் சொல்லிடறேன்"... என்று வார்த்தையும் சேர்த்து கூறியவள் தன் மகனை தூக்கிக்கொண்டு தாய் வீட்டுக்கு ஓடினாள்...கயல் ஒடுவதை பார்த்த மலரோ, " அப்பாடா அந்த சனியன் ஒளிஞ்சா ...யார் அவளை வர சொன்னது சப்பை மூக்கி" என்று பிரீத்தியை திட்டினாள்...

அங்கே நித்திலனின் தாயோ அங்கே இங்கே நடந்து கொண்டிருக்க கயல்விழி தன் தாயிடம் , "அம்மா அவர் வேறு சத்தம் போடுறாரு பிரீத்தி இங்க வந்ததுக்கு எதுக்குமா இந்த நித்திலன் இப்படி பண்றான் "...என்று கேட்க ,

அவரும், " நானும் தான் சொல்றேன் கேட்கிறானா ஒரு துளி கேட்கறதில்லை"... என்று வசை பாடினார் அவர் பங்குக்கு எல்லோரும் அவனை பந்தாடுவதில் குறியாக இருக்க, அவனோ பிரித்தீயுடன் வீட்டிற்கு வரவும் வா என்று அழைக்கவும் முடியாமல் அழைக்காமல் இருக்கவும் முடியாமல் தடுமாறிய சிவகாமி மகனின் கடின முகத்தை பார்த்து, " வா மா"... என அழைத்தார்..

அதை கண்ட பிரித்தீக்கு என்னவோ போல ஆனது அவள் வீட்டில் இருந்து, " எப்போது வீட்டிற்கு வருகிறாய்"... என அழைப்பு வந்து கொண்டே இருந்தும் அவள் தான் நித்திலன் மீது உள்ள விருப்பத்தில் இங்கே முதலில் வர பாவம் அவளுக்கு கிடைத்ததோ வேதனை தான்...

நாளை தான் மொட்டை அடிக்கும் விழா நடக்க இருக்க பகல் முழுவதும் அமைதியாக கழிய நித்திலன் தான் சதா பிரித்தீயுடன் இருந்தான் அவனது தாயும் சகோதரியும் அவளை கண்டாலே நாலடி தூரத்தில் ஓடி போக பிரித்தீக்கு என்னவோ போல ஆனது..

இரவானதும் தன் மாமா வீட்டிற்கு நித்திலன் செல்ல அனைவரும் முகமும் கடுகடுவென இருந்தது.. ப்ரீத்தியின் வரவை அவர்கள் விரும்பவில்லை என அவர்கள் முகமே காட்டிக் கொடுக்க பனிமலர் மட்டும் கூடுதலாக , " பிரீத்தி அக்கா வாங்க வாங்க "...என்று வரவேற்பு செய்து அவளை மேலும் சங்கோஜத்தில் ஆழ்த்தினாள்...

அவளோ நெளிந்து கொண்டு இருக்க ஆனால் மலரோ விடுவதாக இல்லை...மேலும் செந்தாமரையோ முகத்தை திருப்பி கொண்டு, " மலரு உனக்கு வேற வேலை இல்லையா ".. என்று கேட்க

அவளோ, "அத்தை சொல்லி இருக்காங்க இவங்களை பார்த்துக்கணும்னு வாங்க அக்கா உங்கள என் கூட தங்க வைக்கணும்னு சொல்லி இருக்காங்க அக்கா "..என்று சபையிலேயே வேண்டும் என்று மலர் போட்டு உடைக்க அனைவரின் பார்வையும் சிவகாமியின் பக்கம் திரும்பியது..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top