தூவானம் 3
தூவானம் : 3
ஐந்து வருடங்களுக்கு பிறகு
கலைமகள் டுட்டோரியல் காலேஜ்..
கரக் கரக் என்ற சத்தம் அந்த அறையில் கேட்டுக் கொண்டேயிருக்க, " ஹே புள்ள எனக்கும் கொஞ்சம் தா நீ மட்டும் மொக்கிட்டே இருக்க ?? "..என்று செல்வி கேட்டாள் ..அவளுக்கு மலர் தனக்கு தராமல் ஒத்தையாக முறுக்கை மொக்கி கொண்டிருப்பதை கண்டு எச்சில் ஊறி கேட்க
மலரோ மனமே இல்லாமல் அவள் பதுக்கி வைத்திருந்த ஒரு முறுக்கை கொடுக்க இருவரும் சேர்ந்து உண்டு கொண்டிருக்க ,
அதை கண்ட ஆசிரியரோ, " மலர், செல்வி எழுந்திரிங்க இரண்டு பாடத்துல பெயிலு பாஸ் ஆகி அடுத்த மாசம் காலேஜ் போகனும்ன்னு எண்ணம் இல்லையா ?? படிக்க வந்து உக்கார்ந்து இருக்கிற பிள்ளைகளை கூட கெடுக்கறீங்க??"... என்று பாடம் எடுக்கும் ஆசிரியர் அவர்கள் இருவரையும் திட்ட
அதை கேட்ட மலரோ, " சார் படிக்கற பசங்கனா இங்கே ஏன் சார் வந்து இருக்க போறாங்க ??..யாரு இவங்களா படிக்கிற பசங்க அதுக்கு நாங்களே பரவாயில்லை".. என்று விதண்டாவாதம் பேசினாள்..
கடுப்பான அவரோ , "வெளியே போங்க "..என்று இருவரையும் துரத்தி விட்டார்..
அவர்கள் இருவரும் வெளியே வர செல்வியோ , "எதுக்கு புள்ள அவருக்கிட்ட அப்படி பேசின இனி நம்ம ஊரு பஸ் வேற மதியானத்துக்கு தான்..நடந்தே போகனும் வீட்டுக்கு"....என்று செல்வி நடந்து கொண்டே முறுக்கை கடித்து கொண்டு கூற,
" ஆமாம் புள்ள என்னமோ நாம தான் தப்பு பண்ணின மாதிரி இல்லை அவரு பேசுறாரு.. அந்த செல்வமணி கூட தான் தின்னுட்டு இருந்தான் ..பாஸ்கர் தூங்கி வழிஞ்சிட்டு இருந்தான்..எனக்கும் தூக்கம் தான் வந்துச்சு நானும் சரி பாடத்தை கவனிப்போம் முறுக்கை தின்னா உசாரா இருக்கும்னு தின்னா அவரு என்னைய திட்டுராரு ..அவருக்கே எங்க வீட்டு முறுக்குன்னா ரொம்ப பிடிக்கும் இனி ஓசில கேட்கட்டும்..முறுக்கு மாவுல கல்லை போட்டு சுட்டு கொடுக்க போறேன் பாரு என்று கொதித்து கூறியவள் நீ வா செல்வி நாம அப்படியே தின்னுட்டே நடப்போம்".. என பனி மலர் நடக்க,
"ஆமாம் புள்ள நீ சொல்றதும் சரி தான் எத்தனை முறை உன்கிட்ட முறுக்கு வாங்கி தின்னு இருப்பாரு கொஞ்சமாவது நன்றி இருக்கா விடு புள்ள நானே அவரு பாடத்தை கவனிக்க முடியாம தான் உக்கார்ந்து இருந்தேன் நல்ல வேளை நம்மல அனுப்பிட்டாரு ..ஏன் மலரு உங்க அண்ணன் பையனுக்கு எப்போ மொட்டை அடிச்சு காது குத்துறாங்க??"..
"வர ஞாயிற்றுக்கிழமை தான் மொட்டை போடுறாங்க "...என்று பனிமலர் கூற
செல்வியோ , "அதற்காவது நித்திலன் அண்ணா வருவாங்களா?? மனுஷன் வெளிநாட்டில் போய் அஞ்சு வருஷமா இந்த பக்கமே வராமல் இருக்காங்களே??".. என்று கூற
"ஹ்ம்ம் என்னத்த சொல்ல இந்த மாமா அஞ்சு வருஷமா போயி அங்க இருக்காங்க வீட்ல எந்த விஷயத்துக்கும் வரது இல்ல அன்னைக்கு குழந்தை பிறந்த அப்போ வந்து பார்த்துட்டு போனவங்க தான் திரும்ப வரவே இல்ல போன் பண்ணி விசேஷம் இருக்குது வாங்கன்னு சொல்லி கூப்பிட்டாலும் வர மாட்டேங்கிறாங்க கேட்டாங்க லீவு கிடைக்காது வர முடியாது அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க அண்ணனுக்கு எல்லாம் கோபம்தான் மாமா வராததுல.. எங்க அப்பாவோட அறுபதாம் கல்யாணத்துக்கு கூட வரலைன்னா பாத்துக்கோ..இடையில என்னோட பொறந்த நாள், அண்ணா, அண்ணி கல்யாண நாள் அப்புறம் தாத்தா திவசத்துக்கு கூட வரலனா பார்த்துக்கோ "...என்று அமெரிக்கா என்னவோ அடுத்த தெருவில் இருப்பது போல அவள் கூற
அதை கேட்ட செல்வியும் , "அப்புறம் எப்படி மொட்டை போடறதுக்கு மட்டும் வராங்க ?? "..என்று செல்வி கேட்கவும்,
"அது எங்க அத்தை கூப்பிட்டு நீ வந்து தான் ஆகணும்ன்னு சொல்லிட்டாங்க.. எங்க அப்பா தான் அத்தைகிட்ட அவன் வந்து தான் ஆகணும் புள்ளைக்கு தாய் மாமன் மடியில தான் மொட்டை போடணும்ன்னு திட்டி சொல்லிட்டாங்க..அதான் அத்தை சொன்னவுடனே வரேன்ன்னு சொல்லிட்டாரு".. என்று கூற ,
"அதுவும் சரிதான்".. என்று செல்வி பனி மலருக்கு இசப்பாட்டு பாடி கொண்டே நடந்தனர்..
பனி மலர் பதினெட்டு வயது ஆகியிருந்தாலும் வீட்டில் ஒரு ஐந்து வயது குழந்தை நரேன் இருந்தாலும் இனியும் அந்த வீட்டில் அவள் இளவரசி தான்..அவளை யாரும் கடி சொல் கூற மாட்டார்கள் எல்லாமே அவள் இஷ்டம் என வாழ்ந்து வந்து விட்டாள்..
அவள் செய்வது தான் சரி என்ற மனப்பான்மையும் கூட அவளை திருத்தி அவளுக்கு இது தான் சரி என சொல்லி தர கூட ஆள் இல்லை சொல்ல துடிக்கும் கயலையும் அடக்கி விடுவர்..
அப்படி இருக்க காணும் ஒவ்வொரு தோட்டத்திலும் ஏதாவது ஒன்றை பறித்து தின்று கொண்டே வீடு வந்து சேர்ந்தாள் பனி மலர்..அப்போது அவள் வீட்டில் அருகில் உள்ள அவளது அத்தை சிவகாமி வீட்டு கதவு திறந்து இருப்பதை பார்த்து அவள் உள்ளே செல்ல அவரோ தரையில் அமர்ந்து கொண்டு கை முறுக்கு பிழிந்து கொண்டிருந்தார்..
"நீ எதுக்கு அத்தை இதை எல்லாம் செய்யற??".. என முறுக்கு மாவை எடுத்து வாயில் இட்டவளை கண்டு, " ஏன் டி எப்போ பார்த்தாலும் ஏதாவது அரைச்சிட்டே இருக்கியே பாரு வயசு புள்ள மாதிரி இருக்கியா இப்போவே உனக்கு உக்கார்ந்தா மூச்சு வாங்குது"... என்று அவளின் உடலை பார்த்து சிவகாமி கூற,
"ஏன் எனக்கு என்ன நல்லா தானே இருக்கேன் நீ தான் நோஞ்சான் மாதிரி இருக்க..உனக்கு பொறாமை என்னை மாதிரி உடம்பு இல்லைன்னு"... என்று வம்பு பேச அவளது பேச்சை கேட்டு சிரித்து கொண்டே தன் வேலையை செய்து கொண்டிருந்தார் சிவகாமி..
"மாமா வருதே அதுக்கு ஏதாவது செஞ்சு வச்சிருப்பியே அதை சாப்பிடலாம் தான் வந்தேன் "..என்று அவள் கூற ,தனது அண்ணன் மகள் கூறுவதைக் கேட்டு சிரித்த சிவகாமியும், " அதெல்லாம் செஞ்சாச்சு ஆனா அது விசேஷத்துக்கு செஞ்ச பலகாரங்க தான் இருக்கு கையை வெச்சு தொலைக்காத "...என்று கூறிய சிவகாமி அந்தப்பக்கம் சென்றதும் இரண்டு லட்டு எடுத்து தின்றவள்,
தான் வந்த வேலை முடிந்தது என்பது போல , " சரி அத்தை நான் போயிட்டு வரேன்".. என்று இனியும் நின்றால் அடி விழும் என செல்ல எத்தனிக்கும் போது, " ஏய் மலரு போகாத நில்லு நித்திலன் கூட அந்த பொண்ணு ப்ரீத்தியும் வர்றா..அவங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் வர்றாங்க .. அந்த பொண்ணை உன்னோட ரூம்ல தங்க வெச்சுக்கறியா?? வயசு புள்ள இல்லையா ?? "...என்று சிவகாமி வெள்ளந்தியாக கூற, ப்ரீத்தி என்ற பெயரைக் கேட்டதும் பணிமலர் புசுபுசுவென கோபம் வந்தது..
ஆம் பனிமலர் அப்படியே ரீவைண்ட் செய்து ஐந்து வருடங்களுக்கு முன் சென்றாள்.. படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாமல் வேலை தேடிக் கொண்டிருந்தான் நித்திலன்..
அவனுக்கு எப்போது பனி மலரை பார்த்தாலும் கோபம் வந்து சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் அவளை அடித்து விடுவான்..
ஆம் அன்று ஒரு நாள் பனி மலரோ அவளது துணிகளை துவைத்து கொண்டிருக்க அந்த பக்கம் வந்த பாண்டி அம்மாவோ பேர மகளது கோலத்தை கண்டு அதிர்ந்தார்..
ஏனெனில் அவள் பெரிய மனுஷியாய் இந்த ஒரு மாதத்தில் பாலும் தேனும் கொடுத்து கொழுக் மொழுக் என பனி மலர் இருக்க அன்றைய தினம் வேறு அவளோ ஏதோ ஒரு மிடி போன்ற உடையை அணிந்து இருந்தாள்..
சிறு பெண்ணே என்றாலும் பருவ வயதின் தாக்கத்தில் அவளது உடல் தாறுமாறாக வளர்ந்து இருக்க அவளது முன்னழகு வேறு வெளியே தெரியும் படி இருக்க அதை கண்ட பாண்டி அம்மாவோ , "அடியே மலரு உன்கிட்ட இந்த மாதிரி உடுப்பு போட கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல ஒன்னு பாவாடை தாவணி கட்டு இல்லை ஏதாவது உன் அப்பன் சட்டையை எடுத்து மாட்டு".. என நாலு தெருவுக்கு கேட்கும் படி கத்த
"என் கை எல்லாம் ஈரமாக இருக்கு அப்பத்தா இதோ இப்போ வேலை முடிஞ்சிடும்".. என அவளும் பதிலுக்கு குரல் கொடுக்க
அதை கேட்காத பாண்டி அம்மா, "நீ அந்த கொடியில கிடக்கிற துணியை எடுத்து மாட்டு இல்ல விளக்கமாறு பிய்ஞ்சிடும்".. என்று கத்த
அவளோ , "கிழவி ஒரு நாள் உன் வாயை நான் கிழிக்க போறேன் பார்த்துக்கோ".. என முணுமுணுத்து கொண்டே அங்கே காயபோட்டு இருந்த ஒரு சட்டையை எடுத்து மாட்ட அவள் அணிந்த சட்டையோ நித்திலனுடையதாக இருந்தது..
ஏதோ ஒரு வேலையாக வெளியே சென்று வீட்டுக்கு வந்தவனுக்கு இந்த காட்சி கண்ணில் பட கிணற்று மேட்டில் நின்று துணி துவைத்து கொண்டிருந்தவள் அவளது பாவாடை முழுவதும் நனைத்து இருக்க அவன் பார்க்கும் அவனது சட்டையை அணிந்து கொண்டு அவளது கால் முட்டி வரை அவளது பாவாடையை தூக்கி நனைந்த தண்ணீரை பிழிந்து கொண்டிருக்க,
அவனோ அவள் அருகே வந்து சுற்றி முற்றி பார்த்து கிணற்று மேட்டுக்கு அருகில் வைக்கோல் அடிக்க வைக்கப்பட்டு இருந்த இடத்தில் அவளது கையை பிடித்து ஒரு இழு இழுக்க அவளோ அவன் மீது மோதி நின்றவளை பார்த்து, " ஏன் டி அறிவு இருக்க யாரை கேட்டு டி என் சட்டையை போட்டு இருக்க".. என்று கடிய
அப்போது தான் குனிந்து தன்னை பார்த்தவள் அது அவனது சட்டையாக இருக்க அவனது சட்டையையா எடுத்து அணிந்து இருக்கிறோம் என முழித்தவள் , "அது இல்லை மாமா அது வந்து அண்ணாது நினைச்சு தான் போட்டேன்".. என்க,
அதை கேட்டவன் அவள் தலையில் கொட்டி, " இனி என்னோட பொருளை தொட்ட நீ தொலைஞ்ச "..என்று கூறி அவள் தலையில் கொட்டி அவனது சட்டையை பிடுங்கி சென்றான்..அவளோ தலையை நீவி விட்டு கொண்டே , "ரொம்ப பண்ணாதீங்க மா ஒரு நாள் இல்லை ஒரு நாள் என்கிட்ட வசமா சிக்குவீங்க அப்போ இருக்கு உங்களுக்கு"... என்று அவள் முணுமுணுத்து கொண்டாள்..
அந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து,
ஜெகதீஸ்வரனின் நண்பன் மாணிக்கத்தின் குடும்பம் கயல்விழி மற்றும் சிவகாமி குடும்பத்தை காண வந்திருந்தனர்..
வாசலில் யாரோ நிழல் ஆடுவதை பார்த்த சிவகாமி மாணிக்கம் மற்றும் குடும்பத்தை கண்டு , "அண்ணே வாங்க அண்ணே வாங்க அண்ணி".. என்று அழைக்க அவர்களுடன் அவர்களுடைய ஒரே மகள் ப்ரீத்தியும் உடன் வந்து இருந்தாள்..
"பிரீத்தியா இது எவ்வளவு பெரிசா வளர்ந்துட்டா சின்ன குழந்தையா இருக்கும்போது பார்த்தது".. என்று சிவகாமி கூற பெரியவர்களை பார்த்து சிரித்த முகமாக நின்று கொண்டிருந்தான் நித்திலன்..
"நம்ம நித்திலன் தானே ஜெகதீஷ் மாதிரி இருக்கான்..இப்போ என்ன பண்ணிட்டு இருக்கான்".. என்று மாணிக்கம் கேட்க
"அவன் வேலை தேடிட்டு இருக்கான் அண்ணா "..என்று குரல் கம்ம சிவகாமி கூற,
அதை கேட்ட மாணிக்கமோ, " பிரீத்திக்கு இப்போ தான் வேலை கிடைச்சி இருக்கு இரண்டு வாரத்துல அமெரிக்கா போறா"... என்று ப்ரீத்தியின் அம்மாவும் கூட்டு சேர்ந்து பெருமையாக கூற,
அதை கேட்ட சிவகாமி தன் மகனை பார்க்க அவன் முகம் கடுகடுவென மாறியது..
"இவனும் வெளிநாட்டுக்கு தான் அண்ணே முயற்சி பண்ணிட்டு இருக்கான் "..என்று கூற,
அதுவரை பேசாமல் இருந்த பிரீத்தி, " என்ன படிச்சு இருக்கீங்க??".. என்று கேட்க,
அவனோ, " BE "..என்று தாயை பார்த்து கொண்டே பதில் அளித்தாள்..
பிரீத்தியோ , "உங்களுக்கு வேலை கிடைக்கலைனா ஆன்ட்டியை முறைச்சு என்ன பிரயோஜனம் உங்க பயோ டேட்டா தாங்க நான் வேலைக்கு ஜாயின் பண்ண போற கம்பெனியில வேக்கண்ட் இருக்கு என்னால ஒருத்தரை ரெபர் பண்ண முடியும்".. என்று அவள் கூற,
அதை கேட்டவன் கண்கள் மின்னியது..உடனே, " உண்மையாவா சொல்றிங்க??".. என அவன் கேட்கவும் பிரீத்தியோ சிரித்தாள்..
"ஆமாம் ஆனால் ஒரு கண்டிஷன்".. என்று ப்ரீத்தி கூற
"என்னனு சொல்லுங்க என்ன வேணாலும் செய்ய தயாராக இருக்கேன்".. என்று நித்திலன் கூறவும்
"அதோ எதிரே இருக்கே அந்த தோட்டத்தை சுத்தி காட்டுங்க அது போதும்"... என்று கூற
அவள் என்னவோ கூற வருகிறாள் என நெனைத்தவனுக்கு இது தானா என்பது போல அவளை பார்த்து, " வாங்க ஒன்னு என்ன எல்லா தோட்டத்தையும் சுத்தி காட்டுறேன்".. என்று கூறி அவளை அழைத்து சென்றான்..
அவளுக்கு அவனுடைய தோட்டத்தை சுற்றி காட்டி விட்டு தன் மாமாவின் தோட்டத்தை சுற்றி காட்டி கொண்டிருக்கும் போதே இருவரும் நல்ல நண்பர்களாகி இருக்க,
எப்போதும் போல செல்வியுடன் மாங்காய் மரத்தில் தொங்கி கொண்டிருக்கும் போது பனி மலருக்கு இந்த காட்சி அவளது கண்ணில் பதிந்து போனது..
"ஹே யாரு புள்ளே அது உன் மாமன் கூட சேர்ந்து வாரது".. என்று செல்வி எடுத்து கொடுக்க,
"தெரியலயே".. என மலரின் விழிகள் ப்ரீத்தியை தலை முதல் கால் வரை மேய்ந்தது ..கூடவே அவர்கள் என்ன செய்கிறார்கள் என அறியவும் அவள் மனம் துடிக்க அவர்களும் இவர்கள் தொங்கி கொண்டிருக்கும் மரத்துக்கு அருகில் வர , "நித்திலன் எனக்கு ஒரு மாங்காய் பறிச்சு தறியா".. என்று ப்ரீத்தி கேட்க,
நித்திலனோ, " ஒன்னு என்ன பத்து பறிச்சு தரேன்".. என்று கூறி மேலே பார்க்க அங்கே மலர் மற்றும் செல்வியை பார்த்து, " எப்போ பாரு தொங்கிட்டே இருக்குதுங்க..படிக்கணும்னு ஒரு எண்ணமே இல்லை "..என்று பனி மலரை பார்த்து முறைத்தவன் அவள் இருக்கும் மரத்தை விட்டு அடுத்த மரத்தில் மாங்காய் பறிக்க ப்ரீத்தியோ ஆசையாக வேடிக்கை பார்த்தாள்..
அவனோ ஒரு மாங்காய் பறித்து அவளிடம் கொடுக்க அவளோ, " ஹே நித்திலன் நான் பறிக்கிறேனே".. என்று கூற
"உனக்கு இது எல்லாம் தெரியாது ப்ரீத்தி".. என்று அவன் மறுத்தான்..
"ஹ்ம்ம் அப்போ நீ என்னை தூக்கு".. என்று கூற
அவனும் ஒரு நொடி யோசித்து விட்டு அவளை தூக்க இதை எல்லாம் மேலே இருந்து பார்த்து கொண்டிருந்தாள் பனி மலர்..
இதை கூட அவளால் பொறுத்து கொள்ள முடிந்தது அடுத்து ஒரு சம்பவம் நடந்தது அதை தான் அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை..அது இன்று வரையிலும் அந்த காட்சி ஆழமாக பதிந்தும் போனது..
மாங்காயை பறித்தவள், " ஹே அங்கே என்ன தண்ணீ போகுது "..என்று கேட்க,
"அது வாய்க்கால் அதில் இருந்து தான் எல்லா செடிகளுக்கும், மரத்துக்கும் தண்ணீர் போகும் "..என்று அவன் கூற,
"ஹே அங்கே போகலாமா??".. என்று அவள் கேட்க,
அவனும் அழைத்து சென்றான் இவர்கள் இருவரும் மேலே இருந்து கொண்டு, " ஏன் புள்ள மலரு அது வாய்க்கால்ன்னு கூட தெரியாதா அந்த அக்காவுக்கு தெரியாதா??".. என்று கேள்வியாக செல்வி வினவ,
தன் மாமன் தன்னுடன் பேசாமல் எப்போதும் திட்டி கொண்டே இருப்பவன் அவளிடம் மட்டும் சிரித்து பேசுவதை கண்டு கோபம் கொண்டவள், " தண்ணீ இல்லாத இடத்தில் வந்து இருப்பாங்க அது தான் தண்ணீயை பார்த்ததும் இப்படி ஆட்டம் போடுறா "..என மலர் பொருமி கொண்டே அங்கே நடக்கும் கூத்தை வேடிக்கை பார்க்க, ப்ரீத்தியின் நடை உடை அவளது பேச்சு எதுவுமே பனி மலருக்கு பிடிக்கவில்லை..அதிலும் அவளது மாமன் அவளை கண்டால் முறைத்து அவளிடம் சிரித்து பேசுவது அதை விட அவளுக்கு பிடிக்கவில்லை..
ப்ரீத்தியோ தண்ணீருக்குள் ஆட்டம் போட்டவள் தொப்பலாக நனைந்து போயிருக்க, " போகலாமா "...என கேட்டு தண்ணீரில் இருந்து வெளியே வந்தவளின் உடை நீரில் நனைந்து அவளது உள்ளாடை வெளியே காட்சி பொருளாக காட்சி அளிக்க , அதை கண்ட நித்திலன் திரும்பி நின்று வேகமாக அவனது சட்டையை அவிழ்த்து , "இதை போட்டுக்கோ எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க"... என்று கூறி அவனது சட்டையை கொடுக்க அவளும் மறுபேச்சு இன்றி அந்த சட்டையை அணிந்து கொண்டாள்..
ஆனால் அதை கண்ட பனி மலருக்கு புசுப்புசுவென ஆத்திரம் மேலோங்கியது ஏனெனில் இரண்டு நாட்கள் முன் அவள் எந்த சட்டையை அணிந்து அவனிடம் திட்டு வாங்கினாலோ அந்த சட்டையை தான் ப்ரீத்தி இன்று அணிந்து இருக்கிறாள் என்பதை பார்த்து அவர்கள் இருவரையும் முறைத்து கொண்டு இருந்தாள்..
அதை இப்போது நினைவு கூர்ந்த பனி மலருக்கு இப்போதும் ப்ரீத்தி மீது ஏனோ விருப்பம் இல்லை...மாமன் வரவை எண்ணி மகிழ முடியாமல் அத்தை கூறியதை கேட்டும் கேட்காத பாவத்தில் ஓடினாள் பனி மலர்..
தூவானம் தூறும்..
