தூவானம் 1
நாயகன் : நித்திலன்
நாயகி : பனி மலர்
தூவானம் : 1
சேலம் மாவட்டம் - ஆட்டையாம்பட்டி
தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கொங்கு நாட்டில் அமைந்துள்ள இவ்வூர், மாம்பழத்திற்கு பெயர் பெற்றது. சேலம் மாநகராட்சி பரந்து விரிந்த ஓர் பெருநகரம் ஆகும். தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிக்கு அடுத்த ஐந்தாவது பெருநகரம் ஆகும்.
அப்படி பெயர் போன சேலம் மாநகரத்தில் அமைந்துள்ள இடம் தான் ஆட்டையாம்பட்டி... ஆட்டையாம்பட்டி ஒரு சிறு கிராமம் தான்.. இருந்தாலும் அங்கேயும் பல வணிகர்கள் சிறு தொழில் நிறுவனங்களும் உள்ளன...அவ்வூரில் முதன்மையாக விவசாயம் மேலோங்கி இருந்தாலும் சேலம் ஆட்டையாம்பட்டி என்று கூறினாலே நினைவு வருவது கைமுறுக்கு தான் ஆம் கைமுறுக்கு பிரசித்தி பெற்ற ஊர் ஆட்டையாம்பட்டி அப்படிப்பட்ட ஊரில் பெரியவரான மணாளன் அந்த பெரிய வீட்டின் சட்டத்துக்குள் புகைப்படமாக ஆறு மாதத்திற்கு முன் குடி புகுந்து விட்டார்..
அவரோ இந்த வீட்டில் நடக்கும் அனைத்து காரியங்களையும் அந்த வீட்டின் நடு மாடத்திலிருந்து கவனிப்பது போல அவரது புகைப்படம் மாட்டி வைக்கப்பட்டு இருக்க ,
அதிலும் முறுக்கு மீசையை நீவி விட்டபடி சிரித்த முகமாக காட்சி அளித்துக் கொண்டிருந்தார்... அந்த பெரிய நாலு கட்டு வீட்டின் கோடியில் இருக்கும் ஒரு அறையில் இருந்து, " அம்மா வயிறு வலிக்குது" என்று ஒரு அலறல் சத்தம் கேட்டது கோழி கூவ இன்னும் அரை மணி நேரமே இருக்க அதற்குள் அந்த வீட்டு இளவரசி ஊரையே தனது லவுட் ஸ்பீக்கரால் அழைக்க தொடங்கி விட்டாள் 14 வயதே ஆன பனி மலர்..
"ஐயோ புள்ளை கத்துதே " ...என்று பனி மலருக்கு அம்மா நான் என அவரும் நாலு வீடுக்கும் கேட்கும் அளவுக்கு கத்தினார் செந்தாமரை..
அதற்குள் வீட்டில் இருக்கும் அனைவரும் எழுந்து விட தன் நிறை மாத கர்ப்பிணியான தன் மனைவி கயல் விழியையும் எழுப்பி விட்டான் இளங்கோ ..
"ஹே என்ன இன்னும் தூக்கம் பாப்பா கத்துறது உனக்கு கேட்கலையா?? நீ பாட்டுக்கு எருமை மாடு மாதிரி தூங்கிட்டு இருக்க?? எந்திரு" .. என்று காலையிலே கடிய ,
இரவு முழுவதும் மசக்கையால் அவதிப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முன்பு தான் உறக்கத்தை கயல் தழுவி இருக்க உடனே கணவனின் குரல் கேட்டதும் அடித்து பிடித்து எழுந்து கொண்டாள்..அவள் எழவில்லை என்றால் அவன் வாயில் இருந்து வருவதை எல்லாம் அவள் இரண்டு நாட்களுக்கு கேட்க நேரிடும்...
உடனே பனி மலரின் அறைக்கு செல்ல அவளோ வயிறை குறுக்கி படுத்து இருந்தாள்..அவளையும் அவளது படுக்கையும் கண்டதுமே அவர்களுக்கு புரிய செந்தாமரை முகத்தில் மகிழ்ச்சி ..
தன் தாயை கண்டதும் கண்களை மட்டும் உயர்த்தி அவரை பார்த்தவள், " அம்மா வயித்தை வலிக்குது மா".. என்று கதற
அவரோ , "அழாத டி எல்லாம் நல்ல விஷயம் தான் நீ பெரிய மனுஷி ஆகிட்ட இனி இப்படி எல்லாம் கத்த கூடாது".. என்று செந்தாமரை அதட்டியவர் மேலும் , "ஆத்தா மகமாயி என் வயித்துல பாலை வார்த்த இல்லாட்டி அந்த கிழவி என் புள்ளைய பேசியே கொன்னு இருக்கும் "...என்று தன் மாமியாரை அர்ச்சித்தார்...
மேலும், "கயலு ..கயலு ..உங்க அம்மாவை கூப்பிடு மலரு பெரிய மனுஷி ஆகிட்டா".. என்று ஊரே கேட்கும் அளவுக்கு கத்தி செந்தாமரை கூற,
இளங்கோவும், பனி மலரின் அப்பா முத்தரசும் விஷயத்தை கேள்விப்பட்டு மகிழ்ந்தனர்...
அந்த வீட்டு பெரிய மனுஷியான பாண்டியம்மாவும் தன் பேத்தியை பார்த்து அகம் மகிழ்ந்தாலும், " பதினாலு வயசுல தான் உக்கார்ந்து இருக்கா உன் வீட்டு ஆளுங்களோட பழக்கம் போல என்னோட பேத்தி எல்லாம் பன்னிரெண்டு வயசுல உக்கார்ந்துட்டா"... என்று பாண்டியம்மா தன் மருமகளை மட்டம் தட்ட வேண்டும் என்ற நோக்கோடு கூற
அதை கண்டு முறைத்த செந்தாமரை, " ஹே என்ன டி மசமசன்னு நிக்கிற போய் உங்க அம்மாவை வர சொல்லு ..அப்படியே உன் பொறந்தவனையும் வர சொல்லு அவன் தான் மலருக்கு முறை செய்யணும்"... தன் மாமியார் மீதுள்ள கோபத்தை தன் மருமகள் மீது காட்டினார் செந்தாமரை...
கயல் விழியும் விதியே என நினைத்து வீட்டின் பின் பக்க வழியாக நடந்து தன் தாயின் வீட்டுக்கு சென்றாள் கயல்..
ஊர் பெரியவரான மறைந்த அமரர் மணாளன் மற்றும் பாண்டியம்மா தம்பதியர்களுக்கு முத்தரசன் மற்றும் சிவகாமி என்ற இரு மக்கள் உள்ளனர்..
மூத்தவர் முத்தரசனுக்கு பருவ வயதை அடைந்ததும் மணாளனின் அக்கா மகளான செந்தாமரையை மணமுடித்துக் கொடுக்க அந்த தம்பதிகளுக்கு இளங்கோ மற்றும் பனிமலர் இரு குழந்தைகள் உள்ளனர் அதிலும் இளங்கோ பிறந்து 15 வருடங்கள் கழித்து பனிமலர் பிறந்திருக்க பனிமலர் அந்த வீட்டின் இளவரசி என்று தான் கூற வேண்டும்..
அதேபோல மணாளன் தனது மகளான சிவகாமிக்கு பாண்டி அம்மாவின் சகோதரன் ஜெகதீஸ்வரனை திருமணம் முடித்துக் கொடுக்க அந்த தம்பதிகளுக்கு மூத்தவள் கயல்விழி இரண்டாவது நித்திலன் என்று இரு குழந்தைகள் உள்ளனர்..
அதில் நித்திலனுக்கு ஐந்து வயது இருக்கும் போதே ஜெகதீஸ்வரன் மூளைக் காய்ச்சலால் மரணம் அடைந்து விட மணாளன் தன் மகளையும் மகளின் குடும்பத்தையும் தன் வீட்டிலேயே வைத்து பார்த்துக்கொண்டார்..
ஆறு மாதம் முன் வரை எல்லாம் மணாளனே கவனித்து வந்தார்.. அவரின் தீடீர் மறைவுக்குப் பின்னர் வீட்டில் பிரச்சனைகள் எழ தொடங்கியது..ஆம் முத்தரசன் குடும்பத்தை கவனிக்க துவங்கியதும் கண்ணுக்கு புலப்படாத விரிசல்கள் குடும்பத்தில் எழ துவங்கி இருப்பது என்னவோ உண்மை தான்...
கடந்த பத்து மாதத்துக்கு முன் மணாளன் தலைமையில் 29 வயதான இளங்கோவிற்கு தனது அத்தை மகளான 23 வயதான கயல்விழியை மணமுடித்துக் கொடுத்தனர்..
ஆம் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் சொந்தத்துக்குள்ளேயே மண முடித்துக் கொள்ளும் பழக்கத்தை கொண்டவர்கள் தான்... சொத்து வெளியே சென்றுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் உள்ளுக்குள்ளேயே மணம் முடித்து கொள்ள நித்திலனுக்கு பனிமலர் தான் என முடிவே செய்து விட்டனர்..
ஆனால் அதற்கு பனி மலர் பெரிய மனுஷி ஆக வேண்டும் அவளுக்கு தக்க வயது ஆனதும் இவர்கள் இருவரின் திருமணமும் நடைபெறும் என பெரியவர்கள் முடிவு செய்திருந்தனர்..
கயல் மெல்ல அவளுடைய தாய் தங்கி இருக்கும் அவளுடைய பிறந்த வீட்டுக்கு வந்து, " அம்மா".. என்று கதவை தட்ட அவரோ மகளின் குரல் கேட்டதும் வெளியே வந்து , "என்ன கயலு என்ன செய்யுது உடம்பு ??எதுக்கு இந்நேரம் வந்து இருக்க?? "..என்று தன் மகளின் முகத்தை கண்டு பதறி கேட்க,
"அம்மா மலரு புள்ள பெரிய மனுஷி ஆகிட்டா நித்திலனை உடனே வர சொல்லு மா "...என்க
அவரோ சந்தோஷமாக தன் மகனுக்கு அழைத்தார்..
*********
சென்னை அமெரிக்கா எம்பஸி அலுவலகம்...
அமெரிக்கன் எம்பஸி வாயிலில் தன் நண்பன் தியாகு குளிரில் ரோட்டோரமாக படுத்து இருக்க அந்த விடியல் காலையிலும் குளித்து வெள்ளை நிற சட்டை கருப்பு நிற டை மட்டும் கருப்பு நிற பாண்ட் அணிந்து டிப்டாப்பாக நின்று கொண்டிருந்தான் 21 வயதான நித்திலன்..
அவன் கையிலோ ஒரு கத்தை பேப்பரை வைத்து கொண்டு உள்ளே என்ன கேள்வி கேட்பார்களோ என தெரியவில்லை என்றாலும் அதற்காக படித்த அனைத்தையும் மீண்டும் ஒரு முறை படித்து கொண்டிருந்தான் நித்திலன்..
தியாகு கூட மெல்ல ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்து, " டேய் நித்திலா உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்ல டா நம்ம படிப்பு முடிய இன்னும் மூணு மாசம் இருக்கு அதுக்குள்ள அமெரிக்க வேலைக்கு விசா இன்டெர்வியூக்கு வந்திருக்க ..அதுக்கு எதுக்கு டா என்னையும் கூட்டிட்டு வந்திருக்க?? நான் இன்னும் இரண்டு வருசமாவது சும்மா ஜாலியா சுத்தனும் டா "...என்று கொட்டாவி விட்டு கொண்டே கூற,
"நாலு வருஷம் அதை தானே பண்ணின மூடிட்டி நில்லு ..எனக்கு விசா கிடைக்கல நீ முடிஞ்ச "...என்று மிக மரியாதையாக நண்பனிடம் கூறிக்கொண்டு இருக்கும் போதே நித்திலனின் போன் அலறியது..
அவனது தாய் சிவகாமி அழைக்க வேகமாக போனை எடுத்தவன், " சொல்லுங்க அம்மா என்ன இவ்ளோ நேரமா கூப்பிட்டு இருக்கீங்க அக்கா க்கு ஒன்னும் இல்லையே "...என்று பதறியபடி கேட்க
"ஒன்னுமில்ல பா எல்லாம் நல்ல விஷயம் தான்..நம்ம மலரு பெரிய மனுஷி ஆகிட்டா "..என்று கூற
அவனோ என்னவோ ஏதோ என்று பதறி போனை எடுத்தவனுக்கு இது தான் விஷயமா என்பது போல நெனைத்தவன், " ஓ".. என்று மட்டும் கூறியவன்
மேலும், "இதுக்கு தான் கூப்பிட்டிங்களா இது பெரிய விஷயமா அதை எதுக்கு என்கிட்ட சொல்றீங்க ..மனுசன் என்னவோ ஏதோன்னு நெனைச்சுட்டேன் போனை வைங்க முதல்ல"... என்று மலர் என்ற வார்த்தையை கேட்டதும் காய துவங்கினான்..
சிவகாமியோ , "தம்பி வெச்சிடாத பா சீக்கிரம் கிளம்பி வா பா".. எனவும்
எங்கிருந்து தான் அவனுக்கு கோபம் வந்ததோ தெரியவில்லை இருந்தாலும் தாயிடம் கோபத்தை காட்ட மனமின்றி கோபத்தை உள்ளடக்கி , "அம்மா நான் என்னோட வாழ்க்கையில் சுயமா ஒரு அடி எடுத்து வைக்க ஆசைப்பட்டு முக்கியமான இடத்தில் நின்னுட்டு இருக்கேன்..இந்த இன்டெர்வியூ அட்டன் பண்ணினா தான் எனக்கு அமெரிக்கா போக முடியும் ..நேத்து தான அங்கிருந்து கிளம்பி வந்தேன் என்னால உடனே எல்லாம் வர முடியாது.. அடுத்த மாசம் லீவுக்கு வரேன் "...என்று கூறி தாயின் பதிலை கேட்க மனமின்றி பட்டென வைத்து விட்டான் நித்திலன்..
"என்ன அம்மா தம்பி சொல்றான்??"... என தாயின் பீதியான முகத்தை பார்த்து கயல் கேட்க ,அவரும் விஷயத்தை கூற அதை கேட்ட கயலுக்கு மேலும் பதட்டம் தொற்ற துவங்கியது..
ஆம் அவளுக்கு இந்த விஷயம் அவளது புகுந்த வீட்டுக்கு தெரிந்தால் அவளது கணவனும் அவளது மாமியாரும் ஒரு ஆட்டமே ஆடி விடுவார்களே என நினைத்து பயந்தவள், "உன் மாப்பிள இதை கேட்டா என்னை உண்டு இல்லன்னு பண்ணிடுவாரு " என அவள் பதற
"இந்தப் பையன் வேற வர மாட்டேங்குறான் ஏன் நான் என்ன சொல்ல ?? "..என்று சிவகாமியும் நொந்து கொள்ள அதற்குள் இளங்கோ கயலைத் தேடி வந்துவிட்டான் ..
"என்ன இங்க மசமசன்னு நின்னுட்டு இருக்க அங்கே இன்னும் சோலி எத்தனை கிடக்கு?? இங்கேயே நின்னுட்டா எப்படி?? உன் தம்பியை வர சொல்லிட்டியா?? எப்ப வருவான் சென்னையிலிருந்து இப்போ பஸ் ஏறினா கூட சாயந்திரம் வந்திடலாமே"... என்று அவனே கேள்வி கேட்டு அவனே பதிலும் கூற கயலோ தன் கணவன் மீதுள்ள பயத்தில் தலையை மட்டும் வேகமாக ஆட்டிக் கொண்டே இருந்தாள்..
அதை கண்ட இளங்கோ, " இங்க நின்னு தலையை ஆட்டிட்டு இருக்காம வந்து சேரு "...என்று கூறிவிட்டு கூடவே சிவகாமியும் பார்த்து சிறு தலையசைப்போடு கிளம்பிவிட்டான்..
வேகமாக கயல் தன் அன்னையின் கையிலிருந்த போனை வாங்கியவள் தன் தம்பியை அழைக்க அவனோ வேண்டா வெறுப்பாக போனை எடுத்து , "உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா மா என்னால இப்போ வர முடியாது"... என்க
"தம்பி அக்கா பேசுறேன் டா நீ கிளம்பி வா டா இல்லாட்டி உன் மச்சான் எண்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாரு "...என்க
"என்ன அக்கா சொல்றீங்க?? அவ வயசுக்கு வந்தா நான் எதுக்கு வரனும்??"... என்று எகிற
"தம்பி உனக்கே தெரியும் உன் மச்சானை பத்தி நீ தான் அவ முறை மாமன் நீ தான் முறை செய்யணும் அவளுக்கு "... என்று கூறவும் அதை கேட்டவனுக்கு மேலும் ஆத்திரம் தான் வந்தது..
ஆம் அவனது அக்கா கூறுவது போல இளங்கோ கொஞ்சம் முரடன் தான் கூடவே கொஞ்சம் சுயநலம் மற்றும் பெண் என்பவள் தனக்கு கீழ் தான் என்று நினைப்பவனுக்கு அவனது தங்கை மட்டும் விதிவிலக்கு ஏனெனில் அவள் ஒரு குழந்தை...
கல்யாணம் ஆனவுடன் கயலிடம், " இந்த வீட்டில் என்ன நடந்தாலும் நீ பொறுத்து போய் தான் ஆக வேண்டும் எனக்கு என்னுடைய வீடு என்னுடைய கவுரவம் முக்கியம்".. என்று கூறி இருக்க அவளும் எப்போதும் போல தலையாட்டினாள்..
அப்படி தலையாட்டியது எவ்வளவு பெரிய அபத்தம் என்று அவள் இப்போது உணர்கிறாள்...ஆம் கல்யாணத்துக்கு முன் கயலு கண்ணு என்று அழைத்த அத்தை இப்போது மாமியாராக மாறி கடிய துவங்கி இருந்தார்..
செந்தாமரையை சொல்லி குற்றம் ஒன்றும் இல்லை பாண்டியம்மா அவரை படுத்தி எடுத்தார் அவர் கயலை படுத்தி எடுக்கிறார் அவ்வளவே..
இதற்கு இடையில் மாட்டி கொண்டு முழிப்பது என்னவோ நித்திலன் தான்...சிவகாமிக்கு யார் என்ன சொன்னாலும் நல்லது எது கெட்டது எது என்று அவரால் பிரித்து பார்க்க முடியாத பெண் அவர்..
வீடும் அடுக்களையும் அவரது உலகம் என வாழ்ந்து விட்டார்..அவரது முக்கிய வேலையே மணாளன் அவர்களது முறுக்கு கம்பெனிக்கு முறுக்கு சுற்றி கொடுப்பது தான்..காலை முதல் மாலை வரை அந்த வேலையை செவ்வனே ஒரு இடத்தில் அமர்ந்து செய்து கொண்டிருப்பார் அதை விட்டுவிட்டு நியாயம் எது அநியாயம் எது என்றெல்லாம் அவரிடம் கேள்வி கேட்டு கொண்டிருக்க முடியாது..
தன் மருமகன் வேறு நித்திலன் மாலைக்குள் வந்திருக்க வேண்டும் என்று மறைமுக மிரட்டல் விடுத்து இருக்க அவனது அக்கா மன்றாடி கூறியதையும் தட்டி கழித்து கொண்டிருக்க, வேகமாக போனை கயலிடம் இருந்து பிடுங்கிய சிவகாமி, " தம்பி உன்னோட அக்கா வாழ்க்கையை பத்தி நீ நெனைச்சு பார்த்தியா ??? மாசமா இருக்கற புள்ளைய வேதனை படுத்த போறியா ??..கட்டி கொடுத்த புள்ள வேதனைபடலமா "...என்று கேட்க
அவனோ அடக்கப்பட்ட கோபத்தோடு, " இப்போ நான் என்ன செய்யணும் ??"... என்று கேட்க
"அடுத்த பஸ்ஸை பிடிச்சு ஊருக்கு வர வழியை பாரு..மீதி வேலையை பொறவு பாரு..அது தலையே போற வேலையா இருந்தா கூட பரவாயில்லை நீ வர வழியை பாரு."... என்று கூறியவர் பட்டென போனை வைத்து விட்டார்...
எது சரி எது தவறு என்று அவருக்கு தெரியவில்லை என்றாலும் தன் மகனை எப்படி சமாளிக்க வேண்டும் என அவர் மிக நன்றாக தெரிந்து வைத்திருந்தார் ...அது இப்போது மிக அழகாக வேலை செய்தது..
ஆனால் போனை அணைத்த நித்திலனோ வெறி பிடித்தவன் போல அங்கேயே கத்தினான்..அவனை போல அங்கே இன்டெர்வியூவுக்கு காத்திருந்த அனைவரும் திரும்பி பார்க்க அவனோ அவன் கட்டியிருந்த டையை அவிழ்த்து எறிந்து விட்டு டக் இன் செய்திருந்த சட்டையை அவிழ்த்து விட்டு கையை முட்டி வரை மடக்கி விட்டு கொண்டிருந்தான்...
தியாகு கூட உறக்கத்தில் இருந்து அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தவன், " என்ன டா ஆச்சு??"... என்க,
"நான் ஊருக்கு போறேன் மச்சி "..என்று மட்டும் கூறி விட்டு கிளம்பி விட்டான்..ஏனெனில் அவனுக்கு மதியம் தான் இன்டெர்வியூ இருந்து அட்டன் செய்து விட்டு நித்திலன் ஊர் போய் சேர நடு இரவு ஆகி விடும்..பிறகு அதுவே ஒரு பிரச்சனையாக வெடிக்கும் என்று கிளம்பி விட்டான்..
அவனுக்கு எப்போதும் நிகழுவது போலத்தான் இப்போதும் நடந்து இருக்கிறது..சுயமாக வாழ நினைக்கும் அவனை வாழவே விட முடியாத படி பல தடைகள் தெரிந்தோ தெரியாமலோ முத்தரசன் குடும்பம் மூலம் வருவதை எண்ணி அவன் எரிச்சல் கொண்டான்..
அவனது வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் இருக்கும் அவனை அதை கூட செய்யவிடாமல் அழைப்பது அவனுக்கு கோபத்தை கொடுக்க அந்த கோபம் எல்லாம் தற்போது பெரிய மனுஷி ஆகி இருக்கும் அந்த சிறிய மனுஷி மீது அவனுக்கு வந்தது...
தூவானம் தூறும்...
