Share:
Notifications
Clear all

அத்தியாயம் 7

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

"என்னை கூப்பிட்டு இருக்கலாம் இல்ல அப்பவே அவனை ஒரு வழி பண்ணி இருப்பேன்" என்று காலையில் சரவணன் வீட்டிற்கு வந்து புலம்பிக் கொண்டிருந்தான்..

ராணியோ அவனுடைய ஒல்லியான தேகத்தை பார்த்து ,"யாரு நீ அவன ஒரு வழி பண்ணுவ அப்படித்தானே அவன் பார்த்தாலே செத்துடுவடா காலையிலேயே காமெடி பண்ணாம போ" என்று ராணி தலையில் கையை வைத்து அமர்ந்து கொண்டார்.. அதை கேட்ட அவனோ ,"ஆன்டி ஓவரா பண்ணாதீங்க என்னோட பவர் என்னனு தெரியாமல் பேசிட்டு இருக்கீங்க.. நான் பாக்க தான் ஒல்லியா இருப்பேன் ஆனா நான் ஒரு புரூஸ் லீ தெரியுமா???" என கூறி முறைத்தான்...

ஏனெனில் ஜெகதீஷ் வந்து போனது முதல் ராணியின் தலையை தின்று கொண்டிருந்தாள் சுபத்ரா...

"யாரை கேட்டு அவனை நீ உள்ளே விட்ட??" என்பதில் ஆரம்பித்து," இனி அவன் வந்தான் அவ்ளோ தான் உன் சோத்துல விசத்தை வைச்சிடுவேன்" என்பது வரை பேசி விட்டாள் ஆனால் ராணி அசர வில்லை...

இப்போது தன் பள்ளி பருவ நண்பனும் தனக்கு இப்போது தொழிலில் உதவியாக இருக்கும் சரவணனை காலையிலேயே வரச் சொல்லி இருந்தாள்...

அவனிடம் விசயத்தை கூறி இருக்க அவனோ தன்னுடைய ஒல்லியான தேகத்தில் மாட்டி இருந்த சட்டையை மடக்கி விட்டபடி," இதுக்குத்தான் நான் சொல்றேன் பேசாம நான் இங்கேயே தங்கிடுறேன்னு நீ தான் கேட்கவே இல்லை" என்று கூற அதைக் கேட்டு அவள் பதில் ஏதும் பேசவில்லை...

அவன் பேசியதை கேட்டு ராணி தான் தலையில் அடித்துக் கொண்டார்.. "இவன் அடிவாங்கி சாகாம இருந்தா சரி" என்று வாய்விட்டு கூறி கொண்டார்...

அவளுக்கு ஒரே எரிச்சலாக இருந்தது... என்ன செய்வது என தெரியவில்லை அவன் அடுத்து என்ன செய்யப் போகிறானோ என்ற பயம் அவளுக்கு இருந்தது... இவ்வளவு நாள் அந்த பயம் இல்லாமல் இருந்தது அவன் வரமாட்டான் தன்னை மறந்து விட்டான் என்றெல்லாம் கடுப்போடு இருந்தாள் ஆனால் இப்பொழுதும் அவளுக்காக வரவில்லை குழந்தைகளை கண்டதும் தான் வந்திருக்கிறான் என்ற விஷயமும் வேப்பங்காயாக கசந்தது...

"யார் வந்தாலும் அவன் வருவான் உனக்கு அவனை பத்தி தெரியாது சரவணா... அவனே ஒரு ரவுடி, பொறுக்கி தான் பார்க்க தான் இப்போ டிசன்ட்டா இருக்கான் அது எல்லாம் வெளி வேஷம் உள்ளே இன்னும் அப்படியே தான் இருக்கான்" என்று அவள் நேற்று நடந்ததை எண்ணி கூற,

" அவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா மூணு படம் டைரக்ட் பண்ணிட்டு அவனுக்கு என்ன பெரிய ஹீரோன்னு நினைப்பா அதுதான் நான் இருக்கேன் இல்ல நீ கவலைப்படாத அவங்க எல்லாம் சினிமாவுக்கு தான் லாய்க்கு ரியல் லைப்ல அவங்களால ஒன்னும் செய்ய முடியாது" என்று அவன் கூறினான்...

"உனக்கு அவன பத்தி தெரியாது சரவணா" என்று அவள் அவனை எண்ணி புலம்ப அவள் அருகே வந்தவனோ ,"அவன் என்ன அவன் அவ்ளோ பெரிய ஆளா??? ஏன் இப்படி பயப்படுற??? அது தான் அவனும் நீயும் பிரிஞ்சி இருக்கீங்களே லீகலா நீங்க இரண்டு பேரும் புருசனும் பொண்டாட்டியும் கூட கிடையாது ஏன்னா அவன் கூட கல்யாணம் ஆகலை..அதுனால உனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை குழந்தைகளை அப்படி எல்லாம் உன்கிட்ட இருந்து பிரிச்சிட்டு போக முடியாது" என அவன் கூறினான்..

அதற்கு அவளிடம் பதில் இல்லை..அவன் ஏதோ செய்ய போகிறான் என்ற எண்ணம் யோசிக்கவே அவளுக்கு தலை வலித்தது...

என்ன ஆனாலும் குழந்தைகளை அவனிடம் விட்டுக் கொடுக்க அவளுக்கு விருப்பமில்லை அது எப்படி முடியும் திடீரென ஒரு இரவு வந்து குழந்தை வேண்டும் என கேட்டால் கொடுத்து விட முடியுமா அதுவெல்லாம் முடியாது வருவதை பார்த்துக் கொள்ளலாம் என எண்ணிவிட்டாள்...

அதனால் சரவணன் அவளை பார்த்து கொண்டே ,"அவனா நானான்னு பார்த்துகிறேன்...நீ கவலையை விடு"என்க

அந்த சமயம் பார்த்து குழந்தைகள் எழுந்து வந்து,"பாட்டி ஜெகதீஷ் ஏன் போய்ட்டாங்க எங்களை பார்க்க தானே வந்தாங்க ஏன் பேசாமல் போய்ட்டாங்க???" என பிள்ளைகள் கேட்க ராணி தன் மகளை பார்த்து கொண்டே ,"அதுக்குள்ள நீங்க இரண்டு பேரும் தூங்கிட்டீங்க...இன்னிக்கு வருவாங்க உங்களை பார்க்க" என கூற அவளோ முறைத்தாள்...

அதை ராணி கண்டு கொள்ளவில்லை..."இதோ பாருங்க பசங்களா கண்டவங்க கிட்ட பேசிட்டு இருக்காதீங்க" என சுபத்ரா கூற

குழந்தைகளோ திரு திருவென விழிக்க சரவணன் தான் குழந்தைகளை பார்த்து ,"நேத்து வந்தவன் எங்கே பார்த்தாலும் அவன் கூட பேசக்கூடாது புரியுதா" என்று கூற

ராணியோ ,"சரவணா இது உனக்கு தேவையில்லாத வேலை நீ கொஞ்ச நேரம் கம்முனு இரு அவதான் கிறுக்கி மாதிரி பேசிட்டு இருக்கானா நீ கிறுக்கன் மாதிரி பேசிட்டு இருக்காத" என்க

"யாரு நான் கிறுக்கியா???" என அவள் கோபமாக கேட்டாள்..."ஆமாம் நீயே தான் நீதான் உன்னோட வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கிற இப்போ அவன் மேல இருக்கிற கோபத்திலும் உன்னோட வாழ்க்கையை தொலைச்சிட்டு நிற்கிறது நீதான் அதுக்கு பலியாடாக இந்த குழந்தைகள் வாழ்க்கையை பாழாக்கிடாத அவ்வளவுதான் நான் சொல்லுவேன் வாங்கடா பசங்களா நாம போவோம் எந்த சமயத்துல இவள பெத்தேன்னு எனக்கு தெரியல.. பிறந்ததிலிருந்து எனக்கு நிம்மதியை கொடுக்க மாட்டேங்கிறா " என்று புலம்பிக் கொண்டே ராணி சென்றார்..

நேற்று ஆண்டு விழா என்பதால் இன்று பள்ளிக்கு விடுமுறை ஆனால் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு போக அவளுக்கு மனம் இல்லை எங்கேயாவது அவன் வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் அதனால் அம்மா பேசுவதை கேட்டாலும் அதை செவி கொடுத்து கேட்க மறுத்தாள்...

" சஞ்சு, சஞ்சய் ரெண்டு பேரும் சீக்கிரம் ரெடி ஆகுங்க அம்மா கூட ஷாப்புக்கு வாங்க" என்க குழந்தைகளோ ,'"அம்மா நாங்க அங்கே போரா இருக்கும்" என சஞ்சனா கூறினாள்...

"வாயை மூடு கழுதை சொன்னதை செய்" என கூற உடனே சஞ்சய் அம்மா ," சஞ்சு கிட்ட சாரி சொல்லுங்க எதுக்கு அவளை கழுதைன்னு ஏன் சொன்னீங்க அப்படி சொல்ல கூடாதுன்னு நீங்க தானே சொல்லி இருக்கீங்க??? இப்போ நீங்க மட்டும் அப்படி சொல்லலாமா???" என சஞ்சய் கேள்வி கேட்டான்...

அதைக் கேட்டதும் அவள் முகம் மாறி அவன் மேல இருக்குற கோவத்துல தேவையில்லாமல் பேசிட்டோம் என எண்ணி, "சரி சரி இனி சொல்ல மாட்டேன் சாரி நீங்க போய் சீக்கிரம் ரெடி ஆகுங்க எனக்கு ஹோட்டல் போகணும் லேட் ஆயிடுச்சு" என்று அவள் கூற,

குழந்தைகளை தயார் செய்து தன்னோடு அழைத்து செல்ல முற்படும் மகளை கண்ட ராணி ,"உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு இத்தனை நாள் இந்த குழந்தைகள் இருக்காங்கன்னு அவனுக்கு தெரியல அதனால உன்னை தேடி வரவில்லை. இப்பொழுது தெரிந்திருச்சு நீ அந்த வானத்திலேயே போய் ஒளிச்சு வச்சாலும் அவன் கண்டுபிடிச்சிடுவான்.. அதனால அவங்க இங்கேயே இருக்கட்டும் நான் பார்த்துக்கிறேன்" என்று கூற அதைக் கேட்டதும் தன் தாயை முறைத்து பார்த்த அவள் ," எனக்கு எதிரி வேற எங்கேயும் இல்லமா நீங்களே போதும்... இவங்கள நானே பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறவும்

"எல்லாம் நீ செஞ்சது தானே??? நீ ஹோட்டல் கூட்டிட்டு போனா மட்டும் அங்கே அவன் வரமாட்டான் என்று உனக்கு என்ன நிச்சயம்???" என்று அவர் குத்திக் காட்டவும் மறக்கவில்லை..

அதைக் கேட்டதும் ஏற்கனவே நொந்து போயிருந்த மனது மேலும் நோவ ,"ஆமாம் நான் தப்பு பண்ணினேன் தான் அவனை நிமிர்ந்து கூட பார்த்திருக்கக் கூடாது பாத்துட்டேன் தான் இனி அவன் கூட இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன் அது எனக்கு தப்பா தெரியல ஒரு பொண்ணா எனக்கு சப்போர்ட் பண்ணலன்னாலும் பரவால்ல அவனுக்கு உதவி செய்யாம இருங்க அது போதும்" என்று அவள் கூற

"அப்படியெல்லாம் நீ சொன்ன மாதிரி எல்லாம் என்னால் இருக்க முடியாது ஒருவேளை அவன் வந்து என்கிட்ட கேட்டா நான் என்னோட மக வாழ்க்கைக்காகவும் என்னோட பேர பசங்க வாழ்க்கைக்காகவும் உதவி செஞ்சாலும் செஞ்சுடுவேன் எனக்கு அவனை பிடிக்காது தான் ஆனாலும் அவன் கேட்டா செய்வேன்" என்று அவர் தெளிவாக கூறிவிட்டார்...

அதைக் கேட்டு அவளுக்கு தலையே வலித்தது... இதற்கு என்ன பதில் சொல்வது என அவளுக்கு தெரியவில்லை ஆனாலும் அவளுடைய பிடிவாதத்தை விட்டுக் கொடுக்க மனம் இல்லை," நானும் பார்க்கிறேன் அவன் வந்து எப்படி குழந்தைகளை கூட்டிட்டு போறான்" என்று தாய்க்கு சவால் விட்டவள் குழந்தைகளை தன்னோடு அழைத்துக் கொண்டு சரவணனையும் கூட சேர்த்துக் கொண்டு ஹோட்டலுக்கு கிளம்பி சென்றாள்...

அவளுக்கு அங்கு சென்றும் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை அவன் நினைப்பாகத்தான் இருந்தது எப்படி இருந்தாலும் அவன் வருவான் என தெரியும் இத்தனை நாள் அவனை வெறுத்து பேசிப் பேசியே இருந்தவளுக்கு இப்பொழுது இப்போ வருவானோ அப்போ வருவானோ என்ற எண்ணம் தான் மேலோங்கி நின்றது கிட்டத்தட்ட மதியம் வரை ஒட்டிவிட்டாள்...

மதியத்துக்கு பிறகு மாஸ்க் அணிந்த இருவர் உள்ளே வந்தனர்...குழந்தைகள் அவளுடைய அறையில் இருந்தனர்..."என்ன சார் வேணும்???" என சரவணன் கேட்கும் போதே நேராக மாடியில் உள்ள அவளுடைய அறைக்குள் நுழைய அவளோ தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தாள்...சரவணனும் பதறி கொண்டே அவர்கள் பின்னே செல்ல ,"சார் உங்ககிட்ட தான் கேட்கிறேன் போக கூடாது உங்களுக்கு என்ன வேணும் ஃபுட் செக்ஷன் கீழ தான் இருக்கு மேல எதுவும் இல்ல" என அவன் கூற அதை எல்லாம் காதிலேயே வாங்கி கொள்ளவில்லை ஜெகதீஷ்...

நேராக அந்த அறைக்குள் நுழைய பின்னாலேயே சரவணன் மற்றும் ராம் நுழைந்து கொண்டான் அந்த அறைக்குள் அவர்கள் இருவரும் நுழைந்ததுமே மாஸ்கை அவிழ்த்த ஜெகதீஷ் ,"ராம் அந்த கதவை லாக் பண்ணு" என்று அதிகாரமாக கூறினான் அவனுடைய குரலை கேட்டதும் அவள் நிமிர்ந்து பார்க்க,

அவள் அவனை கண்டு அதிர மாஸ்கை அவிழ்த்த ஜெகதீஷ் பார்த்ததும் குழந்தைகள் ,"ஜெகதீஷ்" என்று சிரித்த முகத்தோடு கூறினர்...

குழந்தைகளை பார்த்து சிரித்த அவனோ ,"ஜெகதீஷ் இல்லை அப்பா உங்க இரண்டு பேரோட அப்பா" என அவன் மென்மையாக கூறினான்...

அவன் உருகி உருகி பேசுபவன் அல்ல மனதில் தோன்றுவதை அந்த நேரத்தில் பட்டென்று பேசி விடுவான்... அது தான் ஜெகதீஷ் அப்படி இருக்க குழந்தைகளை பார்த்ததுமே அவர்களிடம் நான் தான் உங்களுடைய தந்தை என அவன் வெளிப்படுத்தி விட்டான் அதில் அவனுக்கு எந்த வருத்தமும் இல்லை அதே போல தயக்கமும் இல்லை...

அப்பாவா என குழந்தைகள் இருவரும் தாயை பார்க்க அவளோ சிலை போல நிற்கவும் அதை கண்ட அவனோ அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ,"சஞ்சனா, சஞ்சய் இங்கே வாங்க" என்று கூறியவன் அவளுக்கு எதிரே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான்...

குழந்தைகளும் தங்கள் தாயைப் பார்த்துக் கொண்டே மெல்ல அவன் அருகே செல்ல தான் கொண்டு வந்த சாக்லேட்டை ஆளுக்கு ஒன்றை அவர்களின் கையில் கொடுத்தவன் அவர்களின் சந்தேகம் நிறைந்த முகத்தை பார்த்துக்கொண்டு," உங்க பேர் என்ன???" என கேட்டான்...

"அதுதான் நீங்களே சொல்லிட்டீங்களே சஞ்சனா அண்ட் சஞ்சய்" என்று சஞ்சய் கூற ,"இல்ல உங்க பேருக்கு பின்னாடி வர நேம் கேட்டேன் அதாவது உங்க முழு பெயர் சொல்லுங்க" என்று அவன் எடுத்துக் கொடுக்க," ஓ அதுவா நான் சஞ்சனா ஜே இவன் சஞ்சய் ஜே.. " என்க

"ஜே யாரு???" என கேட்டான்...

"அது அப்பா நேம் இல்லையா அம்மா??" என சஞ்சு தன் கண்ணை உருட்டி அவளிடம் கேட்க அவளோ திகைத்த விழியோடு நின்றவளுக்கு பேச்சே எழவில்லை...

"ஓகே அப்போ உங்க அம்மா பேரு???" என கேட்கவும்," சுபத்ரா"என குழந்தைகள் கூறவும்,

"உங்க அப்பா பேரு என்ன???" என அவன் கேட்டான்

"ஜெகதீஷ்" என்று சஞ்சய் கூறவும்," இப்போ ஜெகதீஷ் யாரு???" என அவன் கேட்க,

" நீங்க" என குழந்தைகள் சொல்ல அவர்களைப் பார்த்து சிரித்த முகத்தோடு," உங்க அப்பா யாரு???" என்க

" நீங்க" என இழுத்து இழுத்து சஞ்சு கூறவும் அவனோ சிரித்து," அப்போ இப்ப புரிஞ்சுதா நான் தான் உங்க அப்பா" என கூற...

"அப்பாவா அது எப்படி???" என சஞ்சய் கேட்டான்

"ஏன் ??? " என பதிலுக்கு ஜெகதீஷ் கேட்கவும்

"எங்க அப்பா ஃபாரின்ல இருக்கிறதா அம்மா சொன்னாங்க அவருக்கு நிறைய வேலை இருக்கு அதனால தான் போன் கூட பேச மாட்டார் என்று அம்மா சொன்னாங்க" என்று சஞ்சய் கூற,

அவளைப் பார்த்து முறைத்த அவனும் இது எல்லாம் உன்னோட வேலை தானா என்பது போல பார்த்தவன் குழந்தைகளை பார்த்து ,"அம்மா சொன்னது சரிதானே அப்பாக்கு சினிமா எடுக்கறதுல ரொம்ப பிசி அப்போ அப்பானால போன்ல பேச முடியாது தானே அதனால தான் அப்பா பேசல அப்பாவும் ஃபாரின் சூட்டில் இருந்தேன் அம்மா உண்மையை தானே சொல்லி இருக்காங்க இப்பதானே படம் ரிலீஸ் ஆயிருக்கு ஷூட்டிங் முடிஞ்சது அப்போ ஓடி வந்துட்டேன் உங்களை பார்க்க" என்று கூறவும் குழந்தைகளோ தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அவர்களுடைய அம்மாவை பார்த்தார்கள்.... அவளோ அவனை பார்த்து முறைத்து கொண்டிருந்தாள்... வெட்கமே இல்லாமல் எப்படி கூறுகிறான் பார் என பார்த்து முறைத்தாள்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top