அத்தியாயம் 12
அதிகாலை நேரம் சுபத்ராவின் வீடு பரபரப்பாக காட்சியளித்துக் கொண்டிருந்தது...
"ஏய் அவனுக்கும் அவங்க அப்பாவுக்கும் தான் ஆகாதுன்னு தெரியும்ல அப்புறம் எதுக்குடி நீ குழந்தைகளை கூட்டிட்டு அங்க போற???" என்று தன் உடைகளை எல்லாம் பேக் செய்து கொண்டிருக்கும் அவளிடம் கேட்டார் ராணி...
"அதுக்கு கவலைப்பட வேண்டியவன் அவன் நீ ஏன் கவலைப்படுற??? இன்னைக்கு நேத்தா அவங்க அப்பாவுக்கு அவனை பிடிக்காமல் இருக்கு????" என்று சுபத்ரா கேட்கவும்," போறதுதான் போற நீ ஜெகதீஷ் வீட்டுக்கு போ.. அங்க போய் உன்னோட கோபத்தை காட்டு தேவையில்லாமல் எதுக்கு நிம்மதியா போயிட்டு இருக்க அந்த குடும்பத்துக்கு பிரச்சினை பண்ண போற???" என அவர் கேட்கவும்
" நானும் அவன் வீட்டுக்கு தானே போறேன்" என நக்கலாக கூறினாள்...
"அது அவங்க அப்பா வீடு டி" என ராணி கூற,
"இவனுக்கும் உரிமை இருக்கு இல்ல நாங்க தான் போவேன் உன் வேலை என்ன டிராமா பண்ணி கல்யாணம் பண்ணி வச்சிட்ட இல்ல அதோட முடிஞ்சுச்சு இனி நான் என்ன பண்றேன் ஏது பண்றேன்னு நீ கேட்காத அதுக்கு உனக்கு ரைட்ஸ் இல்லை அந்த ரைட் எல்லாம் நேத்து கட்டில் இருந்து டங்குனு எந்திரிச்சு குதிச்சி அவன பார்த்து பல்லக்காட்டினில அப்பவே முடிஞ்சு போச்சு" என கடுப்போடு அவள் கூறினாள்...
அதை கேட்ட அவரோ,"ஏய் அங்க போகலனாலும் பரவால்ல டி இங்கேயாவது இருடி" என்க,
"முடியவே முடியாது நான் அங்க தான் போவேன் உனக்கு வேணும்னா துணைக்கு உன்னோட மருமகனை கூப்பிட்டு உட்கார வச்சுக்கோ" என்று கூறி விட்டு குழந்தைகளை அழைத்து கொண்டு சென்று விட்டாள்...
அவருக்கோ அவள் சென்றதும் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை இத்தனை நாட்கள் குழந்தைகள் அருகில் இருந்து விட்டு குழந்தைகள் இல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை..
அதனால் காரில் ஏறும் குழந்தைகளிடம் கூட ,"பசங்களா நீங்களாவது பாட்டி கூட இருங்க நீங்க இல்லாம பாட்டியால இருக்க முடியாது உங்க அம்மா வேணா போகட்டும்" என்று கூற அவர்களோ ஏதோ பிக்னிக் செல்வது போல,
"பாட்டி இவ்வளவு நாள் உங்க கூட தான் இருந்தோம் அம்மா வேற பாட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போறாங்க அங்க போயிட்டு சீக்கிரம் வந்துடுறோம் சரியா" என்று டூர் செல்ல அவர்கள் தயாராகி விட்டனர்...
ராணியோ மனமே இல்லாமல் தன் மகளையும் பேரப்பிள்ளைகளையும் பிரிந்தார்.. அவளுக்கும் அங்கு செல்ல விருப்பம் இல்லை என்றாலும் இவர்கள் முன்னே தோற்று விடக் கூடாது என்ற வைராக்கியத்தில் அங்கு சென்றாள்..
கிட்டத்தட்ட அவள் அந்த வீட்டை ஆறு மணிக்கு வந்தடைந்து விட அங்கு அப்போது தான் ரேவதி வாசல் தெளித்து கோலமிட்டு கொண்டிருந்தார்...
வீட்டின் சிட்டவுட்டில் அமர்ந்து ஜெயமோகன் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்... அந்த சமயம் பார்த்து வீட்டின் முன்னாள் ஒரு கார் நிற்கவும் யார் என்று ஜெயமோகன் பார்க்க அங்கு காரில் இருந்து சுபத்ரா இறங்கினாள்... அவளை காணவும் அவர் இவ எங்கே இங்கே வரா???" என யோசித்தவர் பேப்பரை மடக்கி வைத்துவிட்டு மெல்ல எழுந்தார்...
அவள் காரை விட்டு இறங்கி தன் குழந்தைகளையும் இறக்க கோலமிட்டு கொண்டிருந்த ரேவதி நிமிர்ந்து பார்த்து இவளை இங்கு கண்டதும் அதிர்ந்த அவரது விழிகள் நேராக அவரது வீட்டுக்குள் இருக்கும் கணவனின் மீது படிந்தது...
அதற்குள் அவர் கேட்டினருகே வந்து நின்று கொண்டார்.. ரேவதி தன் கணவன் மீதுள்ள பயத்தால் வாயே திறக்காமல் இருக்க அவளோ," நாங்க இனி இங்கதான் இருக்க போறோம்" என்று மொட்டையாக கூறினாள்...
குழந்தைகள் காரில் இருந்து இறங்கி தங்களுடைய தாத்தாவை முதன் முறையாக பார்க்க அவரும் அவர்களை பார்த்தார்... அவருக்கு பார்த்ததுமே விளங்கி விட்டது அப்படியே அந்த சிறு ஆண் குழந்தை ஜெகதீஷை உரித்து வைத்திருந்தது... அதை பார்த்தவர் அழுத்தமாக சுபத்ரா கூறியதை கேட்டு அதிர்ச்சியோடு இருக்க அதில் குழந்தைகளை பார்த்ததும் அவருக்கு என்ன உணர்வை பிரதிபலிப்பது என தெரியவில்லை...
"நீங்க யாரு மா நீங்க எதுக்கு இங்கே இருக்கணும்??" என்றார் அவர்...மகனே இல்லை மகனோடு இருந்து தன் மானத்தை வாங்கிய இவள் மீது என்ன மரியாதை என கருதி அவர் கேட்டார்...
அதற்குள் குழந்தைகள் ஜெயமோகனை கண்டு ,"தாத்தா உங்களுக்கு எங்களை யாருன்னு தெரியலையா நாங்க தான் ஜெகதீஷ் ஓட பசங்க" என்று சஞ்சய் கூறினான் அதைக்கேட்ட அவரோ அதிர ,"ஆமாம் ஜெகதீஷ் எங்க அப்பா" என்று சஞ்சு கூறினாள்..
அதை கேட்ட அவரோ ,"இது வேறயா" என வாய் விட்டே கூறியவர்," சரி அதுக்கு நான் என்ன பண்ணட்டும்" என மேலும் ஒரு சுற்று இறுகியவர் போல நின்று கொண்டார்...
குழந்தைகளின் பேச்சு உள்ளுக்குள் பிடித்தாலும் தன் கண்கள் குழந்தைகளை அளவிட்டாலும் சிறு வயதில் ஜெகதீஷ் இருந்தது போல சஞ்சய் அப்படியே இருப்பதை பார்த்து உள்ளம் நெகிழ்ந்தாலும் அதை காட்டி கொள்ளவில்லை...
அதற்குள் குழந்தைகளோ ,"பாட்டி.. நீங்க ஏன் எங்க கிட்ட பேச மாட்டேங்கிறீங்க அன்னைக்கு மட்டும் கட்டி கட்டி முத்தம் கொடுத்தீங்க இப்போ கண்டுக்காம இருக்கீங்க" என ஓடி சென்று ரேவதியை கட்டி பிடிக்க ரேவதி தன்னை வந்து அணைக்கும் குழந்தைகளை அணைக்கவும் முடியாமல் அணைக்காமல் இருக்கவும் முடியாமல் தவித்தார்...
குழந்தைகள் நன்றாக பழகியது போல அவரிடம் போய் ஒட்டிக் கொள்ளவும் அதை பார்த்து சுபத்ரா அதிர அதே போல அதிர்ச்சியைத்தான் ஜெயமோகனும் கொடுத்தார்.. ரேவதியோ தன் கணவனை பார்த்து ,"கோவில்ல வச்சு பார்த்தேன் அதான் குழந்தைகள் என்கிட்ட" என அவர் தயங்கி தயங்கி கூற அவரோ முறைத்தார்...
அதற்குள் ஜாகிங் சென்ற ராகவ் வந்தான்... அவன் இவர்களை பார்த்ததும் கொந்தளித்து ,"அப்பா எதுக்கு தேவையில்லாதவங்க கிட்ட எல்லாம் பேசிட்டு இருக்கீங்க???" என்று கேட்டான்
"அவங்க இங்க தங்க வந்து இருக்காங்களாமாப்பா??" என அவர் கூற
"தங்கவா இவ எதுக்கு நம்ம வீட்ல தங்கணும் இவளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்???" என சூடாக கேட்டான் ராகவ்
"அதை தான் பா நானும் கேட்டுட்டு இருக்கேன்.."
"ராகவ்" என அவள் அவனது பெயரை உச்சரிக்க," என் பெயரை சொல்லக்கூட உனக்கு ரைட்ஸ் கிடையாது" என அவன் கூற
அதை கேட்ட அவளோ உள்ளுக்குள் வலித்தாலும் ஜெயமோகனை பார்த்து ,"இத்தனை நாள் உங்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லாமல் இருந்துச்சு அதனால நான் இங்கே வரல நேத்துதான் எனக்கும், உங்க மூத்த பையன் ஜெகதீஷ் ஜெயமோகனுக்கும் கல்யாணம் நடந்துச்சு... அவங்க ரெண்டு பேரும் அவர் பசங்க தான் அது எப்படின்னு நான் சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன் உங்க எல்லோர்க்கும் தெரியும்" என அவள் தைரியமாக கூற அதை கேட்ட ராகவ் ,"ச்சி இத சொல்ல உனக்கு வெக்கமா இல்ல???" என கேட்டான்..
அவன் வாய்விட்டு கேட்டு விட்டான் ஜெயமோகன் அழுத்தமாக அவளை பார்த்துக்கொண்டு இருந்தார் அவர் எந்த கேள்வியும் கேட்கவில்லை...
"ரொம்ப அசிங்கப்பட்டுவிட்டேன் ராகவ் இனி அசிங்கப்பட எதுவும் இல்ல" என்று அவள் கூற
ராகவ் ஏதோ கூற வர,"ராகவ் நீ சும்மா இரு நான் பேசுறேன்" என்று கூறிய ஜெயமோகன் ,"அதுக்கு எதுக்கு இங்க வந்திருக்க கல்யாணம் ஆயிடுச்சுன்னா அவன் கூட போக வேண்டியது தானே இந்த வீட்டுக்கும் அவனுக்கும் உறவு முடிஞ்சு அஞ்சு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு எங்களுக்கும் அவனுக்கும் எந்த ஒட்டும் இல்ல உறவும் கிடையாது அப்படி இருக்கும்போது நீ எப்படி உன்னோட குழந்தைகளோட இங்கே இருக்கலாம்???" என அவர் கேட்டார்..
அவர் இப்படி கேட்பார் என அவளுக்கு தெரியாது கேட்டதும் அவள் முகம் சுருங்கியது...
அவரோ ,"இதோ பாரம்மா எந்த உறவையும் புதுப்பிக்க கூடிய நிலையில் நாங்க இல்ல தயவு செஞ்சு நீ உன்னுடைய குழந்தைகளை கூட்டிட்டு போகலாம்.. தொடர்ந்து இங்கே நின்னு எங்களை அசிங்கப்படுத்த வேண்டாம்" என்று கூறவும் ரேவதி அருகே நின்று கொண்டிருந்த குழந்தைகள் ,"எங்களை ஏன் தாத்தா போக சொல்றீங்க???" என கேட்க
குழந்தைகளுக்கு என்ன பதில் கூறுவது என தெரியாமல் அவர் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார்.. அவர் மிக பொறுமையாக தான் அவளிடம் பேசினார் எந்த கோபத்தையும் அவளிடம் அவர் காட்டவில்லை...
ஆனால் அவருடைய கடைக்கண்ணோ குழந்தைகளின் மீதுதான் படிந்து இருந்தது ஐந்து வயதில் குழந்தைகளா என இரட்டைக் குழந்தைகளை பார்த்து ஆசையோடு அதே நேரம் தன் கர்வத்தை விட்டுக் கொடுக்காமல் அவர் பார்த்துக் கொண்டு இருந்தார்...
"என்ன இவர் இப்படி சொல்லிட்டாரு நாம வேற வீர வசனம் பேசிட்டு வந்துட்டோமே" என எண்ணிய அவள் ,"உங்க மகன் தானே தாலி கட்டினார் அப்போ எனக்கும் இந்த வீட்டுக்கும் சம்மதம் இருக்குதானே நான் இந்த வீட்ல தான் இருக்க போறேன் நீங்க விரட்டி விட்டாலும் நானும் பசங்களும் இங்கே தான் இருக்க போறோம்" என்று அவள் கூற
அதைக் கேட்ட ஜெயமோகன் ,"அதெல்லாம் வேலைக்கு ஆகாது மகனே இல்லைன்னு ஆயிடுச்சு அவனோட குடும்பம் மட்டும் எங்களுக்கு எதுக்கு அதுதான் அவன் பெரிய வீடு வெச்சி இருக்கானே அங்கே போங்க அது தான் நல்லது இங்கே ஏம்மா வரீங்க???" என கேட்டார் அவர்...
அதற்குள் ஒரு வாகனம் வந்ததது..அதில் இருந்து ராம் இறங்கினான்... அவனை டிவி ஷோக்களில் பலமுறை ஜெகதீஷ் உடன் பார்த்து இருக்கிறார்கள்... அப்படி இருந்தாலும் கண்டு கொள்ளாமல் அவர்கள் இருக்க அவளோ என்ன செய்வது என தெரியாமல் முழித்து கொண்டு இருந்தவள் முன்னாள் ராம் வந்து நிற்கவும் அவளுக்கு ,"படுபாவி பையன் இத கெடுத்து விட வந்துட்டானா" என அவனை முறைக்க ராம் அவளிடம்," எனக்கு இதை பத்தி ஒன்னும் தெரியாது அவன் தான் அனுப்பி விட்டான்" என்றான்...
"நான் ராம் ஜெகதீஷ் அனுப்பி வந்து இருக்கேன்" என அவன் ஜெய மோகனிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள உடனே ராகவ் மற்றும் ஜெயமோகனின் முகம் மாறியது...
அவனுக்கோ உள்ளுக்குள் பீதி ,"டேய் உன்னோட குடும்ப பிரச்சினைல என்னை நல்லா வச்சு செய்யறடா பாவி பயலே காலங் காத்தால எப்படி முறைச்சு நின்னுட்டு இருக்காங்க பாரு" என்று மனதுக்குள் எனினாலும் வெளியே ,"ஜெகதீஷ் ஓட வைஃப் அண்ட் அவரோட குழந்தைகள் இந்த வீட்லதான் இருப்பாங்கன்னு அவர் சொல்ல சொன்னார்" என்று கூறியதும் தான் தாமதம் ஜெயமோகனின் பிபி தலைக்கு ஏறியது..
சும்மா அவள் மட்டும் பேசி இருந்தால் கூட வீட்டுக்குள் அவர் விட்டிருப்பாரோ என்னவோ இவன் வந்து இப்படி கூறவும் ஆத்திரம் தலைக்கேற ,"அவன் யாரு என் வீட்டுக்குள்ள இவங்கள தங்க வைக்க சொல்றதுக்கு" என்று அவர் கேட்டார்..
"சார் இது அவருடைய தாத்தா சொத்தாம் அப்போ தாத்தா சொத்து பேரனுக்கு உரிமை இருக்கான் இந்த வீட்ல அவரோட வைஃபும் பசங்களும் தங்க எல்லா உரிமையும் இருக்கா உங்ககிட்ட சொல்ல சொன்னார்" என்று தயங்கி தயங்கி ராம் அவன் கூற வந்த விஷயத்தை கூறி முடித்தான்..
அதைக் கேட்டதும் ராகவ் ,"என்ன தாத்தா சொத்தா இதெல்லாம் அவன் பேசிட்டு இருக்கானா அவன் மட்டும் கைல கிடைச்சா அவ்வளவுதான் சொல்லிடுங்க யாரையும் வீட்டுக்குள்ள விட முடியாது கிளம்ப சொல்லுங்க" என்று ராகவ் கூற உடனே ராமின் ஃபோன் அலறியது...
இங்கு மனதுக்குள்ளோ ஜெகதீஷை நொறுக்கி கொண்டிருந்தாள் சுபத்ரா... "டேய் கம்முனு இருக்க மாட்டியா டா நான் எந்த வழியில் போனாலும் அதை நோண்டி பாக்குறது தான் வேலையா வச்சிருக்கியா" என மனதுக்குள் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாள்..
அவன் தான் அழைத்து இருந்தான் ,"ஹலோ அங்க போயிட்டியா" என்க
"டேய் போய்ட்டேன் டா கொலை காண்டுல பாக்குறாங்கடா நீ சொன்னதை சொன்னதும்" என்று கூற
"அவங்க அப்படித்தான் பார்ப்பாங்க என் பொண்டாட்டி அங்க நிக்கிறாளா???" என்க
"உன் மொத்த குடும்பமும் அங்க நிக்குது" என கையை வைத்து மெல்லிய குரலில் போனில் ராம் பேச ,"சரி நீ ஸ்பீக்கரில் போடு" என்று கூறினான் ஜெகதீஷ்...
