அத்தியாயம் 1
விடிந்தும் விடியா காலை வேளை அது மிக பெரிய நடிகரின் மிக பிரமாண்டமான படம் திரைக்கு வந்து இருந்தது... திரை உலகமே அந்த திரைப்படத்திற்காக காத்திருந்தது என கூறலாம்
முதல் காட்சி தான் திரையில் ஓடி கொண்டு இருக்க எப்படியும் படம் ஓடி விடும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருந்தாலும் மக்கள் பார்த்து விட்டு அவர்களின் கருத்துக்கள் தான் வெற்றியை நிர்ணயிக்கும் என்பதால் பட குழுவினர் அனைவரும் ஒரு கருத்துக்களை கூட படத்தை பற்றி தெரிவிக்காமல் இருந்தனர்...அதற்கு அந்த திரைபடத்தின் இயக்குனர் தடை விதித்து இருந்தான்...
பல நூறு ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இவர்களை துரத்தினாலும் இவர்கள் எந்த கேள்விக்கும் செவிசாய்க்காமல் இருந்தனர் இவ்வளவு ஏன் படத்தில் நடித்த முன்னணி நட்சத்திரங்கள் வரை இந்த படத்துக்காக காத்திருந்தனர்...
அதற்கு காரணம் அந்த படத்தின் இயக்குநர் ஜெகதீஷ் ஆவான்...அவன் தாய் திரைப்படம் ஆரம்பிக்கும் போது அனைவரிடமும் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கி இருந்தார் யாரும் எதுவும் பேசக்கூடாது என அதனால் அவர்களும் எதுவும் வாயை திறக்காமல் இருந்தனர்...
அவன் தான் இன்றைய இந்திய திரைப்பட உலகின் நம்பர் ஒன் இயக்குனராக வலம் வந்து கொண்டு இருக்கிறான் அவன் இயக்கியதோ இந்த ஐந்து வருடங்களில் மூன்று படங்கள் தான் ஆனால் மூன்று படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்...
அதனால் மொத்த திரை உலகமும் அவனைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறது இதுவரை எந்தவிதமான முன் அனுபவமும் இன்றி திரை துறையினரை மூக்கின் மீது விரலை வைக்க விட்டு இருக்கிறான் அவன்..
அவன் ஜெகதீஷ் வயதோ முன் முற்பது..ஆறடி இரு அங்குல உயரம்,அடர் கேசத்தோடு மாநிறமாக பார்க்க அவனே நாயகன் போல இருப்பான்.. ஆனால் அவனுக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை அவனுக்கு ஆர்வம் முழுவதும் திரையில் தான் அப்படி இருக்க உலகமே அவன் படத்தை கொண்டாடிக் கொண்டிருக்க மக்களின் கொண்டாட்டத்தை ரசிக்க வேண்டிய அவனோ நான்கு மணிக்கு எழுந்து வெறித்தனமாக தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க பாக்சிங் பயின்று கொண்டிருந்தான்...
என்னவோ தெரியவில்லை இந்த ஒரு சில மாதங்களாக அவனுக்கு கிடைக்கும் கொஞ்ச நேரங்களில் அவன் இதை பயின்று வந்தான்...
முகமெல்லாம் வியர்த்து வழிந்து கொண்டிருக்க அவனை படிப்பிக்கும் ஜிம் மாஸ்டரோ அவர் கையில் கட்டி இருக்கும் வாட்சை பார்த்துக் கொண்டே இருந்தார்... கிட்டத்தட்ட ஐந்து மணி ஆகிவிட்டது இப்பொழுது அவர் சென்றால்தான் ஜெகதீஷ் இயக்கிய திரைபடத்தின் ஏழு மணி காட்சியையாவது பார்க்க இயலும்...
இன்று அவன் இயக்கிய படம் தானே திரைக்கு வருகிறது அதனால் இன்று ஜிம்முக்கு வர மாட்டான் என எண்ணி கொண்டிருக்க கிட்டத்தட்ட 4 மணிக்கு ஷார்ப்பாக அவன் ஷார்ட்ஸ் மட்டும் ஹூடி அணிந்து வர அவரே அசந்து போய் விட்டார்...
"என்ன சார் பஸ்ட் ஷோ பார்க்க போகலையா???" என அவன் கேட்க
"இல்ல பீட்டர் நான் போகல...ஏற்கனவே நான் பல தடவை பார்த்துட்டேன்" என்று கூறியவன் தனது உடற்பயிற்சியில் மும்முரமாக இறங்கி விட்டான்..
இனி அவன் எத்தனை மணி நேரம் பயிற்சி எடுக்க போகிறான் என அவனைப் பயிற்றுவிக்கும் அந்த ஜிம் மாஸ்டருக்கே தெரியாது அது போல அவன் ஒரு வெறி பிடித்த ஒருவன் ஒரு விஷயம் வேண்டுமென்றால் அந்த விஷயம் நடக்க எந்த எல்லைக்கும் செல்வான் அதுவே அந்த விஷயம் வேண்டாம் என அவன் எண்ணிவிட்டால் சீ சீ என்பது போல தூக்கி தூரமாக எரிந்து விடுவான் இதுதான் ஜெகதீஷ் அவனின் குணம்...
கடந்த ஐந்து வருடமாக அவனுக்கு சினிமா பிடித்திருக்கிறது அதற்கு வேண்டி என்ன வேண்டுமானாலும் செய்வான் எவ்வளவு கஷ்டம் வேண்டுமானாலும் படுவான் அதுதான் அவனின் குணம்..அவன் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை என்பது போல அவன் உழைத்த உழைப்புக்கு ஊதியம் கிடைத்தும் இருக்கிறது...
முன் கோபி...யார் சொல்லுக்கும் கட்டுப்படாதவன் யாராலும் அவனை கட்டுப்படுத்த முடியாது...நல்லவன் என்றெல்லாம் அப்படி கூறி விட முடியாது என்றாலும் செய்யும் வேலைக்கு உண்மையாக ஒரு ஐந்து வருடமாக இருக்கிறான் அவ்வளவே!!!!...இதற்கு முன் அவன் வாழ்க்கை பற்றி எல்லாம் யாருக்கும் தெரியாது...அவனும் யாரிடமும் கூறியது இல்லை...
அப்படி இருக்க அவனோ தயங்கி," சார் நான் ஏழு மணி ஷோக்கு புக் பண்ணி இருக்கேன்" என மெல்ல இழுக்க அதை பார்த்த ஜெகதீஷ் மென்மையாக சிரித்த முகத்தோடு ,"நீங்க போய்ட்டு வாங்க பீட்டர்... படம் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க"என நிறுத்தாமல் பாக்ஸிங் செய்ய அவனின் உடற்கட்டை பார்த்து அசந்த மாஸ்டர் ,"ஏன் உங்க படத்துல புல் ஆக்ஷன்னா இருக்குன்னு இப்போ எனக்கு புரியுது சார்" என்றவன்," சரி சார் என்னோட அசிஸ்டன்ட் உங்களுக்கு அசிஸ்ட் பண்ணுவான் நான் கிளம்புறேன்" என்று கிளம்பினார் அவனும் ஓகே என்று கூறிவிட்டு மீண்டும் தன் வேலையை தொடர்ந்தான் ஊரே அவனது படத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தது...
ஆனால் அவன் அதை தலையிலும் ஏற்றுக் கொள்ளவில்லை காலிலும் இறக்கி வைக்கவில்லை அவன் அவனுடைய சிறந்த வேலையை கொடுத்தான் அதற்கான ஊதியம் கிடைக்கிறது அவ்வளவுதான் என்ற நிலையில் அவன் இருந்து கொண்டான்...படத்தை முடித்து விட்டால் போதும் பிறகு அந்த படத்தை பற்றி அவன் யோசிக்க மாட்டான் அவனின் உழைப்பின் மீது அவ்வளவு உறுதி அவனுக்கு உண்டு...
ஒரு வழியாக கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சி செய்த ஜெகதீஷை அவனுடைய போனின் அழைப்பு தடை படுத்தியது...
போனை எடுத்தவன் தன் வியர்வை வழிந்த முகத்தோடு," சொல்லு டா" என்றான்... அழைத்தது அவனுடைய அசோசியேட் டைரக்டர் என்று பிறரால் அழைக்கப்பட்டாலும் அவனுக்கு என்று இருக்கும் ஒரே ஒரு நண்பன் ராம் ஆவான்...அவன் அப்படி தான் அவனுக்கு பொருத்தமான நபர்களை மட்டும் தான் அவனுடைய வட்டத்துக்குள் வைப்பானே ஒழிய வேறு யாரும் அவனை தனிப்பட்ட முறையில் நெருங்க இயலாது...
"டேய் ஜெகதீஷ் நம்ம ஜெயிச்சுட்டோம் படம் செம ஹிட் தியேட்டர் அனல் அடிக்குது" என்று முதல் காட்சியை பார்த்துவிட்டு அவன் இன்டர்வல் டைமில் வந்து அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்க அதை கேட்ட அவனோ ,"இதுக்கு தான் கூப்பிட்டியா???" என கேட்டான்...
ஏனெனில் அவனுடைய உடற்பயிற்சி தடைப்பட்டு விட்டதே என்ற கோபம் அவனுக்கு இருந்தது... ஆனால் அவனை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்க அதை பற்றி அவன் சிறிதும் சிந்திக்காமல் இப்படி பேசுகிறானே என எண்ணிய ,"ராம் பின்ன வேற எதுக்கு கூப்பிடுவாங்க சீக்கிரம் போய் ரெடியாகிற வேலையை பாரு... இன்னைக்கு நீ இன்டர்வியூ கொடுக்கிறதா ஒத்துக்கிட்டு இருக்க அதை மறந்துடாத" என்று தன் நண்பனின் குணமறிந்து கூறினான்...
அதைக்கேட்ட அவனும் ,"இந்த எழவு எல்லாம் யாருடா கண்டுபிடிச்சா என்னால இன்டர்வியூ எல்லாம் கொடுக்க முடியாது நீ போய் கொடு போ.... நம்ம ஊர்ல பெட்டிக்கடை மாதிரி பல ஆயிரம் யூடூப் சேனல் இருக்கு பல நூறு டிவி சேனல் இருக்கு இதுக்கெல்லாம் இன்டர்வியூ கொடுத்துட்டு இருக்க முடியுமா???" என்று கூற
அதை கேட்ட அவனோ,"நீ எல்லாம் மனுஷன் பிறவியே இல்லை... அவனவன் ஏதாவது ஒரு மொக்க படத்தை எடுத்துட்டு கூட அதை ப்ரொமோட் பண்ண எல்லா சேனல்களையும் பேட்டி கொடுப்பாங்க நீ என்னடா இவ்ளோ பெரிய ஸ்டார் மிஸ்டர் சத்யதேவ் அவரை வச்சு படம் எடுத்திருக்க அப்படின்னா சும்மாவா??? திரும்பின பக்கம் எல்லாம் உன் பெயர் தான் டா..டேய் நீ இந்த படத்தோட டைரக்டர் டா அதை மறக்காத படம் எடுக்கறதோட உன்னோட வேலை முடியல அந்த படத்தை மக்களிடம் கொண்டு போகிற வேலையும் உனக்கு இருக்கு" என்று அவன் கூறினான்...
அதை கேட்ட அவனோ,"நீ பேசாம மொக்கை போடாமல் போனவை காலங்காத்தால எரிச்சல் படுத்திட்டு இருக்க" என்று கடுப்போடு ஃபோனை வைத்து விட்டான்...
இது தான் அவன்...பிறரை பொறுத்தவரை அவன் ஒரு புரியாத புதிர்..இவனை பற்றி நன்றாக தெரிந்த ராம் நேராக அந்த திரைப்படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் சத்யதேவுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான்...
" ப்ரோ அவனை என்னன்னு கேளுங்க அவன் இன்டர்வியூ கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கான் நீங்க சொன்னா தான் கண்டிப்பா கேட்பான்" என்று கூற தன் திரைப்படம் திரையில் வருகிறது என்றாலே விடியற்காலை 4 மணிக்கு எழுந்து அதற்கான ரிசல்ட்டை அறிந்து கொள்வது சத்யதேவின் பழக்கம் அப்படி இருக்க அவன் அந்த குறுஞ்செய்தியை உடனடியாக பார்த்துவிட ஓகே என்று பதிலுக்கு செய்தி அனுப்பி விட்டான்...
மறுபடியும் சத்யதேவ் ஜெகதீஷ்க்கு அழைத்தான்...அவனுடைய போனை கண்டதும் வேகமாக காதில் வைத்த ஜெகதீஷ்," சொல்லுங்க சார்" என்க
"என்ன பண்ணிட்டு இருக்க???"
"ஜிம்ல இருக்கேன் சார்" என்று கூற ,"ஏண்டா அவனவன் டிக்கெட் வாங்கி தியேட்டர்ல நின்னுட்டு இருக்காங்க நீ ஜிம்மில் நிக்கிறியா??" என்க
அதைக் கேட்ட ஜெகதீஷ் மென்மையாக சிரித்து ,"நான் தான் படத்தை பாத்துட்டேனே.. நீங்கதான் தெறிக்க விட்டு இருக்கீங்களே.. அதனாலதான் தியேட்டர்ல இல்லாமல் ஜிம்ல இருக்கேன்" என்று கூறவும் பதிலுக்கு சிரித்த சத்யதேவ் ,"எல்லா சேனலும் நம்ம படத்தோட ஆட்கள் பின்னாடி தான் சுத்திட்டு இருக்காங்க அதனால ஒன்னு ரெண்டு இன்டர்வியூ கண்டிப்பா குடு.. அவங்களை டிசப்பாய்ண்ட் பண்ணாத" என்று கூற அதைக் கேட்டு அவனோ தன் தலையை சொரிந்த படி இப்போது என்ன செய்வது இவரிடம் எப்படி மறுப்பது என தெரியாமல்,"சார் அப்படியே நீங்களும் வாங்க இன்டர்வியூ கொடுத்து விடுவோம்" என்று கூற
சத்யதேவுக்கு அவன் கூறுவது அதைவிட அலர்ஜி இன்டர்வியூ கொடுப்பது என்றால் அதனால் ,"டேய் படவா காலையிலே என்கிட்ட வாங்கி கட்டுகிற சொன்னத செய்டா இல்லை ப்ரொடியூசர் காலையிலேயே என் கழுத்தை அறுப்பாரு" என்று கூற ,"சரி சார்" என்று சிரித்து கூறி போனை வைத்து விட்டான் ஜெகதீஷ்....
அதன் படி எப்போதும் போல கருப்பு நிற சட்டை, கருப்பு நிற ஜீன்ஸ் கழுத்தில் கருங்காலி மாலை, கையில் காப்பு என எல்லாம் அணிந்து சட்டையின் முதல் இரண்டு பட்டனை அவிழ்த்து விட்டபடி தன் மீசையை முறுக்கி விட்டு கொண்டு அமர்ந்து இருந்தான்...உள்ளுக்குள் கடுப்பாக இருந்தாலும் அதை காட்டி கொள்ளாதப்படி அமர்ந்து இருந்தான்...
அவனுக்கு எதிரே இருந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சிரித்த முகத்தோடு ,"ஹலோ சார் வணக்கம் இவ்வளவு நாள் எங்களையெல்லாம் காக்க வச்சுட்டீங்களே உங்களுடைய ஒரு இன்டர்விற்காக மொத்த தமிழ்நாடுமே ஏங்கிட்டு இருக்குன்னு சொல்லலாம் ஆனா நீங்க ஒரு இன்டர்வியூ கூட கொடுக்க மாட்டேங்கறீங்க???" என குறையோடு ஆரம்பிக்க
அவரைப் பார்த்து சிரித்த முகத்தோடு ,"ஏதாவது விஷயம் இருந்தால் உங்களையெல்லாம் சந்திக்கலாம் எந்த விஷயமும் இல்லாம இருக்கும்போது எப்படி சந்திக்க முடியும்???" என்று அவன் கேட்டான்....
அது நியாயமான கேள்விதான் சொல்வதற்கு விஷயம் இருந்தால் தானே சந்திக்க இயலும் என அவன் கூறியதை கேட்ட தொகுப்பாளர் ,"அது வாஸ்தவம் தான் சார் ஆனா மிஸ்டர் சத்யதேவ் அவரை வச்சு இயக்கி இருக்கீங்க ஃபர்ஸ்ட் ஷோ படம் பாத்துட்டு தான் வந்து உங்களை இன்டர்வியூ எடுக்கிறேன் சூப்பரா இருக்கு படம்" என்று அவர் கூற அவனும் சிரித்த முகத்தோடு அதை ஏற்றுக் கொண்டவன் அதற்கு பதில் ஏதும் கூறவில்லை...
அதன் பிறகு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொண்டு சினிமா சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கு அவன் பொறுமையாக பதில் அளிக்க ,"சார் ஏன் சார் உங்களுடைய படத்துல ரொம்பவுமே ரொமான்ஸ் இல்லாம இருக்கு உங்களுக்கு ரொமான்ஸ் பண்ண பிடிக்காதா சார்???" என்று அவனிடம் அந்த தொகுப்பாளர் கேட்கவும் உடனே சற்று என்று அவனுடைய சமநிலை மாறியது...
அதுவரை மிக இயல்பாக அந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டிருந்தவன் முகம் மாறியது அதை பிறர் அறியாமல் தனக்குள்ளேயே பதுக்கி வைத்துக் கொண்டவன் மனதில் ஒருத்தி வந்து போனாள்...அவளோடு அவன் இருந்த நிமிடங்கள் நினைவில் வந்து போனது..அவளோடு அவன் கரைந்த் நிமிடங்கள் வந்து போனது...
ஒரே ஒரு நொடிக்கும் குறைவாக அவள் அவனுடைய மனதை தாக்கி விட்டு செல்ல உடனே அவன் தன்னை நிலைப்படுத்தி கொண்டு,"இந்த படத்துக்கு தேவைப்படல அதனால வைக்கல எந்த விஷயத்தையும் திணிக்க முடியாது இல்லையா அந்த படத்துக்கு ரொமான்ஸ் தேவைப்பட்டால் வெச்சிருப்பேன் இது ஒரு ஆக்ஷன் ஃபிலிம் அதனால அது தேவையில்லை அதனால வைக்கல" என்று அவன் கூறவும்,
மறுபடியும் அந்த தொகுப்பாளர் விடுவதாக இல்லை," சார் எல்லா பக்கமும் உங்களை பற்றி தான் பேசிட்டு இருக்காங்க எங்களுக்கு உங்களை பத்தி எதுவுமே தெரியல உங்கள பத்தி தயவு செஞ்சு சொல்லுங்க நாங்க தெரிஞ்சுக்கிறோம் உங்க பர்சனல் லைஃப் பத்தி சொல்லுங்க" என்று அவர் மீண்டும் அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கேட்க அது அவனுக்கு சுத்தமாக விருப்பம் இல்லாமல் போய்விட்டது இந்த முறை அமைதியாக இருக்க அவனால் முடியவில்லை...
"நோ மோர் பர்சனல் கொஸ்டின் படத்தை பத்தி கேளுங்க நான் பதில் சொல்றேன் படத்தில் உள்ள குறைகளை சொல்லுங்க தாராளமா ஏத்துகிறேன் படத்துல என்னென்ன வேலைகள் செஞ்சிருக்கோம்னு கேளுங்க அதுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன் ஆனால் என்னுடைய பர்சனல் லைஃப பத்தி எனக்கு சொல்ல விருப்பமில்லை" என்று அவன் கூறி உடனே தன்னில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த மைக்கை கழட்ட போனான்...
மனதுக்குள் ,"இந்த எரிச்ச **** தான் நான் இந்த இழவுக்கு எல்லாம் வரது இல்லை" என நல்ல வார்த்தையை எண்ணியவன் முகம் மாறியது...
இதுவே ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு என்றால் வாய் வழியாகவே பேசி இருப்பான் ஆனால் இந்த ஐந்து வருடத்தில் அவன் போட்டுக் கொண்ட முகமூடி அவன் வாயை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன் அதனாலேயே அவனுக்கு கோபம் அதிகமாக வரும்...
அதைக் கேட்டதும் தொகுப்பாளர் முகம் கலவரம் ஆக அதற்குள் அவருடைய இன்டர்வியூவை முடித்துக் கொள்ளலாம் என பின்னால் இருந்து நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கூற உடனே," சரிங்க சார் எங்களுக்கு உங்க படம் தான் முக்கியம் அதனால வேற எந்த கொஸ்டினும் நாங்கள் கேட்க விரும்பல இந்த படத்தை யாருக்கு டெடிகேட் பண்ண விரும்பறீங்க அதையாவது சொல்லுங்க" என அவர் கேட்கவும் அதைக் கேட்டு அவனும்," எப்பவும் சொல்ற டயலாக் தான் என்னை வேண்டாம் என்று விட்டுட்டு போனவங்களுக்கு என் வாழ்கையில் இருந்து விலகி போனவங்களுக்கும் தான் நன்றி சொல்றேன்" என அவன் கூற
அதை கேட்ட நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ,"ஒருவேளை இவனுடைய வாழ்க்கையில் ஏதாவது கசந்த பாதை இருக்கிறதோ என யோசித்து ,"என்ன சார் இப்படி சொல்றீங்க??" என கேட்கவும் அதற்கு மெல்லிய புன்னகையோடு தன் கோபத்தை அடக்கி ," அவங்க விட்டுட்டு போனதால் தானே நான் இப்போ உங்க முன்னாடி உட்கார்ந்து பேசிட்டு இருக்கேன் அதுக்கு அவங்களுக்கு தானே நன்றி சொல்லணும் எந்த இடத்துல ஒரு மையப்புள்ளி துவங்குதோ அந்த இடத்தில் தானே அதனுடைய ஆரம்பமும் இருக்கும் என்னுடைய ஆரம்பம் அங்கு தான் ஆரம்பிச்சது அதனால்தான் அவர்களுக்கு நன்றி சொல்றேன்" என்று கூற இதை இரு வேறு வீடுகளில் இரு வேறு நபர்கள் அவர்களுடைய தொலைக்காட்சிகளில் இந்த நிகழ்ச்சியை பார்த்து இரு வேறு மனநிலையில் தவித்து வந்தார்கள்....அவர்களுக்கு அவனுடைய வார்த்தை அவர்களின் கழுத்தை அவன் டீவி மூலமாகவே ஒரு கத்தியால் குத்துவது போல இருந்தது...
