அதிகாயன் 9
அத்தியாயம் : 9
இருவரின் கையும் எரிந்து கொண்டு இருக்க அதை விட தன் மகளின் கோலத்தை கண்டு வருந்தினார் பார்வதி ..
எப்படி இருந்தவள் இப்படி ஆகிவிட்டாளே என அவர் நினைக்க அதற்குள் சாதனாவிற்கு குமட்டிக்கொண்டு வந்தது அவளோ வேகமாக பின்பக்கமாக செல்ல அதைக்கண்ட தாயோ மிகவும் வருந்தினார்..
எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்பது மட்டும் அவருக்கு விளங்கவில்லை அவனது போக்கையும் அவனது அதீத வன்மத்தையும் காணும்பொழுது கர்ணா அவர்களை சும்மா விடமாட்டான் என்பது மட்டும் அவருக்கு விளங்கியது என்ன செய்யலாம் என யோசித்துக் கூட அவரது மூளை மரத்து போக அங்கே தன் மகள் உடல் உபாதையால் வாந்தி எடுக்கும் சத்தம் அவருக்கு கேட்டு மேலும் வருத்தத்தை கொடுக்க அவளை துன்புறுத்த வேண்டாம் தானே செய்வோம் என எண்ணி அந்த விறகு அடுப்பை பற்றவைக்க முனைந்தார். அதுவோ அவருக்கு பரிட்சயம் இல்லாமல் இருக்க ஆனால் அவர் எப்படியாவது அதை பற்றவைத்து தான் ஆக வேண்டும் இல்லையேல் உணவு வேறு எந்த வகையிலும் செய்ய முடியாது .. ஒரு காலத்தில் இதை எல்லாம் அவர் செய்து இருக்கிறார் அதன் பிறகு வந்த பணம் அவருக்கு இது எல்லாம் மறந்து போனதோ என்னவோ?? மறந்தாலும் தெரியவில்லை என்றாலும் அவன் விடுவானா இவர்களை எல்லாம் எரித்து விட மாட்டானா??
கர்ணா வேறு இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் உணவு தயாராக இருக்கவேண்டும் என்று கூறியவன் ஒரு முழுநீள உணவு பட்டியலை அவர்களுக்கு கொடுத்திருந்தான். அதை எல்லாம் செய்து முடிப்பதற்குள் இவர்களுக்கு விடிந்து விடும் முடிக்கவில்லை எனில் அவன் முடிக்க வைப்பான் என்பதை அவன் பெண் என்று பாராமல் தனக்கும் தன் மகளுக்கும் சூடு வைத்ததிலேயே அவருக்கு விளங்கியது. இவன் தங்களை சும்மா விடமாட்டான் என்று மகள் வேறு இப்படி கஷ்டப்பட்டு கொண்டு இருக்க அவரே முடிந்த அளவு வேலையை செய்ய துவங்கினார்..
ஒரு வழியாக அனைத்து உணவுகளையும் தயார் செய்ய உணவு மேடையில் அமர்ந்தவனும் அதில் அவர்கள் இருவரும் பரிமாறிய உணவுகளை பார்த்து,
"என்ன இன்னிக்கு சாப்பாடு எல்லாமே தயார் ஆகிடுச்சா ரொம்ப பலமான விருந்தா இருக்கே" என்று கேட்டான் பார்வதியோ தயாராகிவிட்டது என்று கூற அதைக் கேட்ட அவனும், " அப்படியா உங்க புருஷன வர சொல்லுங்க" என்று ஒரு மாதிரியாக கூற, "அவர் எதுக்கு??" என்று வினவ,
அவனோ நக்கலாக, " என்கிட்ட எதிர் கேள்வி கேட்கக் கூடாதுன்னு நான் சொல்லி இருக்கேன் தெரியாதா??" என்று மேலும் கேட்கவும் வாயை மூடிக்கொண்டு அவரோ தன் கணவரை அழைத்து வந்தார் ..
அவரோ தோட்டவேலை எல்லாம் செய்து களைத்துப் போய் ஒரு வாய் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் தவித்து வந்தவர் உணவை கண்டதும் அவரது கண்கள் மின்ன அதைக்கண்ட அவனோ, " என்ன பசிக்குதா??" என்று கேட்கவும் அவர் அமைதியாக நின்றார்..
ஏனெனில் ஆமாம் என்று கூறினால் ஏதாவது செய்வானோ என்ற பயம் அவருக்கு வர அவரது முகத்தை பார்த்து சிரித்த அவனோ, " உங்க அப்பாவுக்கும் ஒரு தட்டு எடுத்து வை" என்று கூறவும் பார்வதியின் முகம் வியர்க்க துவங்கியது அதையே ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு சாதனாவிடம் கூற அவளோ தனது தந்தைக்கும் ஒரு தட்டை எடுத்து வைத்தாள் அதில் உணவுகளை பரிமாற இங்கே பார்வதிக்கு வியர்த்துக் கொண்டிருந்தது..
" என்ன பார்வதி அம்மா ரொம்ப வியர்த்து வழியுற மாதிரி இருக்கு பேனுக்கு கீழேயே நிற்கிறீங்களே இருந்தும் உங்களுக்கு வியர்வை வழியுதே " என்று கூற,
அவரோ தடுமாறி, "அது புதுசா விறகு அடுப்பில் சமைச்சேன் அதனால அப்படி இருக்கு நீ சாப்பிடு கர்ணா அவர் பிறகு சாப்பிட்டுப்பார்" என்று கூற அவனோ நக்கலாக பார்த்தான் அவனுக்கு தெரியாதா அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று அதனால் அவரது முகத்தைப் பார்த்து...
"இதில் விஷம் ஒன்னும் கலக்கலையே" என்று வினவ பார்வதியின் முகம் இருள துவங்க அதைக்கண்ட அவனோ கோணல் சிரிப்போடு, "நான் உங்களுக்கு தண்டனை கொடுக்க துவங்கியதும் உங்க வேலைய காட்டுறீங்களே பார்வதி அம்மா உங்க தைரியத்தை பாராட்டுகிறேன் இப்போ என்ன நடக்கப் போகுதுன்னு எனக்காக நீங்க வியர்த்து வழிந்து சமைச்ச இந்த உணவை உன் புருஷன் சாப்பிட போறான்" என்று கூற...
அவருக்கு அதை கேட்டதும் உண்மை வெளிப்பட்டு விட்டதே என அப்படியே மேலும் வியர்த்து கொட்ட மனைவி என்ன செய்து இருக்கிறாளோ என நினைக்க மகளும் அதையே தான் நினைக்க , "என்ன சதாசிவம் வேலை எல்லாம் செஞ்சு இருக்க சோறு வேண்டாமா சோறு போடாமல் கொல்லற எண்ணம் எல்லாம் இப்போதைக்கு இல்லை சாப்பிடு வா உன் பொண்டாட்டி சமைச்சு இருக்கா" என்க...
அதை கேட்ட அவரோ தன் மனைவியை பார்க்க பார்வதியோ கண்களாலேயே மறுக்க சதாசிவத்துக்கு விசயம் புரிந்து போனது. பார்வதியோ அவனது முகத்தை பார்த்து , "இல்லப்பா வேணாம் பா" என்று கூற...
"அப்போ யார் சாப்பிடணும்???"
"உன் பொண்ணை சாப்பிட சொல்லுவோமா??" என்க அவளோ 'எனக்கு வேண்டாம்' என மறுக்கும் முன்...
'வேண்டாம்' என பார்வதி மறுக்க, " அப்போ யார் சாப்பிடணும் நானா அப்போ எனக்கு மட்டும் சமைச்ச உணவு அப்படி தானே" என கேட்டவன் அந்த உணவை எல்லாம் தன் கைகளால் தட்டி விட அதெல்லாம் சிதறி விழுந்தது..
பார்வதி அம்மா இவனை கொல்ல உணவில் யாருக்கும் தெரியாமல் விஷத்தை கலந்ததை அவன் கண்டு கொள்ள, " இப்படி நான் செய்தும் உனக்கு எல்லாம் என் மேல பயம் இல்லனா பயத்தை உருவாக்கிட வேண்டியது தான்" என கூறியவன் கண்களில் கோபத்தை நிரப்பி கூற...
பார்வதி அம்மாவோ தான் செய்த தவறு புரிய சாதனாவோ தலையில் அடித்து கொள்ள முடியாத அளவில் இருந்தாள்..
இந்த அம்மா எப்போதும் போல அவங்களோட அவசர புத்தியை இதில் காட்டிட்டாங்களே என அவள் நினைத்தாலும் அவள் இப்போது வாயை கூட திறக்க முடியாத நிலையில் தான் இருந்தாள்..
"என்ன பார்வதி அம்மா இன்னும் என்னை பழைய கர்ணனாக நினைச்சா எப்படி?? விஷத்தை அங்கே வைச்ச எனக்கே விஷமா..? உன் புத்தி தெரிஞ்சு நீ என்ன பண்றன்னு பார்க்க தான் அதை அங்கே வைக்க சொன்னேன் நான் நினைச்ச மாதிரியே உன் வேலையை காட்டிட்டியே இதுக்கு உங்களுக்கு ஏதாவது தண்டனை கொடுத்தே ஆகணுமே " என்றவன் அவரை கோரமாக பார்க்க,
"அது தம்பி தெரியாமல் செய்துட்டேன் என்னை மன்னிச்சிடுங்க" என்று பார்வதி கூற,
" ஏது பிளான் பண்ணி விஷத்தை கலந்து அதை நான் மட்டும் சாப்பிடணும்னு சொல்ற நீ தெரியாமல் பண்ணிட்ட இதை நான் நம்பணும் அப்படி தானே என்னை இனியும் அதே பைத்தியக்காரனா நெனைச்சுட்டு இருக்கியோ???" அதை கேட்டவர் அதிர அவனோ மெல்ல எழுந்து அவர் அருகில் வந்து நின்று அவனது முழு உயரத்துக்கும் எழுந்து நின்று தன் கைகளை மார்பில் கட்டி அவர்களை உறுத்து விழித்தவன்,
"ஒண்ணு இந்த சாப்பாட்டை நீ சாப்பிடணும் இல்லை உன் பொண்ணு இல்லை உன் புருஷன் யாருக்காவது நீயா உன் கையால ஊட்டி விடணும் அதுவும் இல்லையா அதோ அந்த கிச்சன்ல போய் மறுபடியும் சமைக்கணும். நீ மட்டும் இப்போ என்ன எல்லாம் நான் செய்ய சொல்லி இருந்தேனோ அதை எல்லாம் செய்யணும். அதுவரைக்கும் பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் உன் பொண்ணும் உன் புருஷனும் காத்து இருப்பாங்க நீ சமைக்க லேட் ஆச்சு உன் பொண்ணும் புருஷனும் இதை சாப்பிடுவாங்க " என கூறியவன் சாதனாவின் மேடிட்ட வயிற்றை பார்த்து, " ஓ குழந்தைக்கு பசிக்குமே" என அவனே பேசுவது போல பேசியவன், "ஹ்ம்ம் என்ன பண்ணலாம் உன் அம்மா ஒவ்வொரு உணவை சமைச்சிட்டு வரும் போது நீ அதை முதலில் சாப்பிடலாம்" என்க...
"இதுல பார்வதி அம்மா எதை தேர்ந்தெடுக்க போறாங்க" என்று மார்பில் கைகட்டி கேட்க அவரோ அவனது முகத்தில் வெளிப்படும் அனலை கண்டே அதிர்ந்து...
"நான் சமைக்கிறேன் பா" என்க
" ஹ்ம்ம் ஓகே போ" என பார்வையாலேயே அவரை விரட்ட அவரும் அவசரம் அவசரமாக அடுக்களைக்குள் நுழைந்ததும் இருவர் வந்து அடுக்களையின் கதவை அடைக்க என்ன நடக்க போகிறதோ என புரியாமல் தவித்த தந்தையும் மகளும் பார்த்து கொண்டு இருக்க அதை கண்டவனோ தனது போனை எடுத்து நோண்ட துவங்கினான்..
அடுத்த அரை மணி நேரத்தில் அடுக்களையில் இருந்து பார்வதி அம்மாவின் கதறும் சத்தம் கேட்க , இருவரும் அதிர அவன் மட்டும் எப்படி அமர்ந்து இருந்தானோ அதே போல அமர்ந்து இருந்தான்..
