அதிகாயன் 33
அத்தியாயம் :33
30 வருடங்களுக்கு முன்பு...
"சாந்தி நான் முடிவா கேக்கிறேன் இதுதான் உன்னுடைய முடிவா??" என்று அவர் கேட்க...
" ஆமாம் எனக்கு என்னுடைய வாழ்க்கையில் இப்படி இருக்க முடியாது யார் எந்த நிமிஷம் நம்மளை அடிப்பாங்க அப்படிங்கிற வாழ்க்கை எனக்கு வாழ முடியாது. நீங்க இந்த வேலை செய்யறது எனக்கு சுத்தமா பிடிக்கல. நீங்க ரவுடியா இருக்கீங்க இப்போ உங்களால இவ தான் என்னுடைய மனைவி அப்படின்னு யார்கிட்டயாவது சொல்ல முடியுமா?? எதுக்கு இந்த ஒழிந்து விளையாட்டு?? ஏன் உங்கள் நண்பர்கள் கிட்டயாவது சொல்ல முடியுமா முடியாதே அந்த அளவுக்கு பாதுகாப்பா யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் என்னை அடைத்து வைத்து குடும்பம் நடத்திட்டு வந்துட்டு இருக்கீங்க??? இப்போ நான் நிறைமாத கர்ப்பிணி இப்பவோ அப்பவோ குழந்தை பிறக்க காத்திருக்க இந்த சமயம் கூட நீங்க நான் சொல்வதை கேட்க மாட்டேன் அப்படின்னு சொல்றீங்க. எனக்கு இதுக்கு மேல இந்த அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாது. ஒன்னு நானும் நம்ம குழந்தைகளும்... இல்லைன்னா நீங்க செஞ்சுட்டு இருக்க உங்க தொழில் என்ன வேண்டும் அப்படி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்க" என்று கோபமாக அம்மையப்பனிடம் சாந்தி கூறினார்..
"சாந்தி நீ சொல்றது சரிதான் நான் ஒத்துக்குறேன் இல்லைன்னு சொல்லல ஆனால் இப்போ என்னால இந்த தொழிலை விட்டு வர முடியாது. என்னை நம்பி நிறைய பேர் இருக்காங்க தணிகாசலம் முதல் சதாசிவம் வரை நிறைய பேர் இருக்காங்க நிறைய குடும்பங்கள் இதுல வாழ்ந்துட்டு இருக்கு அதையெல்லாம் விட்டுட்டு வர சொல்றியா???"
" உங்களை நான் விட்டுட்டு வர சொல்லல வேற வேலையை பார்த்து அவர்களுக்கு உதவி செய்யுங்க வேண்டாம்ன்னு நான் சொல்லவே இல்லை. ஆனால் எனக்கு நீங்க மட்டும் தான் இருக்கீங்க அதை முதலில் புரிஞ்சுக்கோங்க பிறந்தது முதல் யாருமில்லாத எனக்கு நீங்க மட்டும் தான் எனக்கு உறவா இருக்கீங்க" என்று கண்ணீரில் சாந்தி கூற...
அம்மையப்பனுக்கு அவர் கூறுவதை கேட்டு வருத்தமாக இருந்தாலும் முடிவாக, " என்னால முடியாது சாந்தி நான் இப்போ ஏற்றிருக்கிற வேலையை செய்துதான் ஆகணும் என்னால உடனடியா அப்படியே விட்டுட்டு வர முடியாது" என்று கூற...
"அப்போ இது தான் உங்களுடைய முடிவா??" என்று சாந்தி கேட்க அம்மையப்பன் தன் ஆசை காதலி ஆசை மனைவி எல்லாமுமான அவளைப் பார்த்து, "எனக்கு நீ எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு என்னை நம்பி இருக்கிற குடும்பங்களும் முக்கியம் நான் செய்யுறது இந்த தொழில் தான்.. இல்லை அப்படின்னு சொல்லல ஆனால் இதனால வாழ்ந்துட்டு வர்றது பலபேர் அவங்களை என்னால விட்டுட்டு வர முடியாது எனக்கு கொஞ்சம் காலம் இதில் தான் இருக்க வேண்டி இருக்கும்" என்று கூற...
" அப்படினா என்னை மறந்து விடுங்க அவங்களையே கட்டிட்டு அழுங்க" என்று கூறிய அடுத்த நொடி நிறைமாத கர்ப்பிணியான சாந்திக்கு வயிறு வலி துவங்கியது வலி தாளாமல் அழுத அவர் அம்மையப்பனின் மீதே சரிந்து விழ அம்மையப்பன் என்ன செய்வதென்று தெரியாமல் பதறியவர் உடனே தன் மனைவியை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்..
அம்மையப்பன் ஒரு நிழல் உலக தாதா அவர் செய்யாத குற்றம் இல்லை செய்யாத தவறு இல்லை அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் இல்லாதவர்களுக்கு உதவி செய்வார் ஆனால் செய்வது என்னவோ ரவுடி தொழில்தான்..
அப்படி இருக்கும் பொழுது சாந்தி என்ற பெண்ணை பார்த்ததும் காதல் கொண்ட அம்மையப்பன் தனக்கு இருக்கும் எதிரிகளை மனதில் வைத்து தன் நண்பர்களிடம் கூட இப்படி ஒரு பெண்ணை தனக்கு பிடித்திருப்பதாகவும் தான் திருமணம் செய்து இருப்பதாகவும் கூறவில்லை..
உள்ளுக்குள்ளேயே மறைத்துக் கொண்டார். பொதுவாக அவரது தனிப்பட்ட வாழ்க்கையை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத மனிதர் என்பதால் அவர் யாரிடமும் சொல்லாமல் இருக்க சாந்திக்கோ யாரும் இல்லாத அனாதை பெண் அவருக்கு அம்மையப்பனை மிகவும் பிடித்திருந்தது.. அவரது குணம் எல்லாம் பிடித்திருக்கிறது ஒரு ஆபத்தில் தன்னை காப்பாற்றிய மனிதன் என்பதால் அவர் மீது மிகுந்த மரியாதையும் காதலும் கொண்ட பெண் அவரது கருவை தற்போது சுமந்து இப்பொழுது அவரிடமே அவர் வேண்டும் எனக்கு மட்டும் வேண்டும் என மன்றாடிக் கொண்டிருக்கும் சாந்திக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த வேளையில் தான் அவருக்கு இப்பொழுது பிரசவ வலி வர மருத்துவமனையில் அம்மையப்பன் சாந்தியை அனுமதிக்க கிட்டத்தட்ட மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு இரண்டு செல்வ களஞ்சியங்களை பெற்றெடுத்தார் சாந்தி..
இருவரும் இரட்டையர்கள் பார்க்க அழகாக இருக்க குழந்தை பிறந்து விட்டது என மருத்துவர் வெளியே வந்து கூறியதும் தான் அம்மையப்பனுக்கு உயிர் போய் உயிர் வந்தது என்று கூறலாம்...
தன் இரு குழந்தைகளை காண சென்ற அம்மையப்பன் முதலில் பார்த்தது என்னவோ தன் மனைவி சுகமாக இருக்கிறாளா என்று தான்..அவருக்கு அவர் மீது மிகுந்த பாசம் உள்ளது ஆனால் எல்லாம் தெரிந்த பின் தானே தன்னை திருமணம் செய்துக் கொண்டாள். பிறகு என்ன வந்தது அவளுக்கு என எண்ணியவர் மனைவி எழும் வரை காத்திருக்க,
அவரது மனைவியும் சிறிது நேர ஓய்வுக்குப் பின் கண்விழித்து பார்த்தவர் தன் கணவனைப் பார்த்து கலங்கிய விழிகளோடு, " கடைசி முறையாக கேட்கிறேன் சொல்லுங்க என் கூட வர முடியுமா முடியாதா??? இப்போ நமக்கு குழந்தைகள் பிறந்தாச்சு. இனியும் நீங்க இப்படியே இருக்க நான் விட மாட்டேன் என்ன பண்ண போறீங்க சொல்லுங்க உங்களுக்கு நாங்க முக்கியமா?? இல்லை உங்க தொழிலா??" என்று கேட்க ,
அம்மையப்பனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை தன்னை நம்பி இருப்பவர்களை அப்படியே விட்டுவிட்டு வர மனமில்லாமல், "என்னால இப்போதைக்கு வரமுடியாது" என்று கூறவும், "இதுதான் உங்க முடிவா??" என்று கடைசியாக கேட்டார்..
அந்த குரலில் சிறு மாற்றம் அதை அம்மையப்பன் உணர்ந்தாலும், "சாந்தி பிடிவாதம் பிடிக்காத நான் சொல்றதை கேளு" என்று கூற, " இதுதான் உங்க முடிவா??" என்று தீர்க்கமாக கேட்டார். அவர் பதில் கூறாமல் இருக்கவும், "இனி உங்க வாழ்க்கையில் நானும் நம்ம குழந்தைகளும் கிடையாது தயவு செஞ்சு கிளம்புங்க" என்று கூற அதைக் கேட்டதும் அம்மையப்பன் அதிர்ந்தார்..
ஏனெனில் பஞ்சு பொதியாக இருக்கும் தன் இரு மகன்களை பார்க்க பார்க்க அவருக்கு கண்கள் தெவிட்டவில்லை குழந்தையை பார்க்கவே கூடாது என்று மனைவி கூறும் பொழுது அதை ஏற்றுக்கொள்ள அம்மையப்பனின் கர்வம் ஒப்புக்கொள்ளவில்லை...
