அதிகாயன் 16
அத்தியாயம் : 16
அவளோ சிரித்துக் கொண்டு, "ஐயோ உணவு வேஸ்ட் பண்ணலாமா பண்ணக்கூடாது நீ இப்போ வேஸ்ட் பண்ணினா சிவகாமி அம்மா தான் பாவம் திரும்ப போய் எடுத்துட்டு வரணும். இதை பார்க்கும் பொழுது மாமா ரொம்ப கஷ்டப்படுவாரு உனக்கு மாமாவை பிடிக்கும் தானே நீ இப்படி பண்ணினா மாமாவுக்கு பிடிக்குமா?? நீ என்னை என்ன செஞ்சாலும் இனி உனக்கு நான் இருக்கேன் கர்ணா... மாமா எப்போவும் என்கிட்ட அது தான் சொல்வார்" என்று நயமாக பேச அவனும் அமைதியாக இருந்தான்..
பின்பு மறுபடியும் சிவகாமி அம்மாள் உணவை கொண்டு வர அந்த உணவை அவளே அவனுக்கு ஊட்டி விட முயல இந்த முறை மறுக்காமல் உணவை உண்டான் கர்ணா..
பிறகு அவனது வாயை சுத்தம் செய்தவள், அவனுக்கான பணிவிடைகளை செய்ய துவங்கினாள்.. அவனது வாயில் வழிந்துக் கொண்டிருந்த உமிழ்நீரை அவள் துடைக்க அதைக் கண்ட சிவகாமி அம்மாவுக்கு கண்கள் பனித்தன..
பாவம் அந்த காலத்து இந்த பெண்மணிக்கு இவர்களின் சூதுவாது தெரியாது... இப்படி நாட்கள் செல்ல தினமும் கர்ணாவுடன் தனது நாட்களை செலவிட்டாள் சாதனா. அதன்படி கொஞ்சம் கொஞ்சமாக அவன் இவளுடன் பழக ஆரம்பித்தான் சிவகாமி அம்மாவுக்கு பிறகு இவள் தான் எல்லாமே என்ற நிலைக்கு வந்தான் கர்ணா..
இப்படியே நாட்கள் செல்ல ட்ரஸ்ட் மற்றும் அம்மையப்பனின் ஒருசில தொழில்களை தணிகாசலம் மற்றும் சதாசிவம் தான் கவனித்து வர அவர்கள் இருவரும் வீட்டுக்கு வந்தனர்.. அப்பொழுது மகள் கர்ணாவுடன் விளையாடிக்கொண்டிருக்க கர்ணா அவளின் கைப்பாவையாகி விட்டான் என்பதை உறுதியாக்கி கொண்டு வீட்டுக்குள் நுழைய இவர்கள் இருவரும் விளையாடுவதை பார்த்துக்கொண்டிருந்த சிவகாமி அம்மாவிடம், "இப்போ கொஞ்சம் அவன்கிட்ட மாற்றம் தெரியுதே எப்படியோ என் நண்பன் அம்மையப்பன் கடவுளாய் இருந்து கர்ணாவை மாற்றினா போதும்" என்று அவரது காதுக்கு கேட்கும்படி பேச,
சிவகாமி அம்மாவும் ஓடி வந்து, "ஆமாங்கய்யா நானும் அதைத்தான் வேண்டிட்டு இருக்கேன் சாதனா பாப்பா தம்பியை நல்லா பார்த்துக்குது சின்ன பொண்ணு தான் ஆனாலும் நல்ல பொண்ணு யா ஒவ்வொரு விஷயமும் எவ்ளோ பொறுமையா செய்யுது தெரியுதுங்களா இப்போ தம்பி நான் வேண்டாம் பாப்பா தான் வேணும்னு சொல்லுது " என்று கூற,
அதை கேட்ட சதாசிவம் மெல்ல சிரித்து பொதுவாக தணிகாசலத்திடம் பேசுவது போல, " பேசாமல் நம்ம சாதனாவை கர்ணாவுக்கு கல்யாணம் செய்து கொடுக்கலாம்ன்னு இருக்கேன். அவனுக்கு யாரும் பொண்ணு கொடுக்க மாட்டாங்க. ஆனால் அவனுடைய வாழ்க்கைக்கு ஒரு துணை வேண்டாமா சாதனாவுக்கும் கர்ணாவை பிடிச்சிருக்கு அதனால அவங்க ரெண்டு பேரும் சேர்வது நல்லது" என்று கூற அதைக் கேட்ட தணிகாசலம், "உண்மை தான் நாம இத செய்யறதுதான் அம்மையப்பனுக்கு செய்யற நல்லதா இருக்கும் ஆனால் சாதனா சின்ன பொண்ணா இருக்கா" என்று கூற..
அதை கேட்ட சதாசிவமோ, " என்னயா வயசு எனக்கு என் நண்பன் மகன் தான் பெரிசு " என்று கூற...
இதைக்கேட்ட சிவகாமி அம்மாவுக்கு கண்கள் பனித்தன.. 'ச்சே இவர்களை போய் தவறாக நினைத்து விட்டோமே' என அவர் நினைத்து தன்னை தானே மானசீகமாக கொட்டி தனக்குப் பிறகு கர்ணாவை பார்த்துக்கொள்ள ஒரு நல்ல பெண் கிடைத்து விட்டாள் என்ற நம்பிக்கையில் அகம் குளிர இருக்கும் வேளையில் அவரும், " அது தான் சரிங்க அய்யா!" என தன் பங்கு இஷ்டத்தையும் கூற அவர்களும் அதை ஆமோதிக்க இருவருக்கும் திருமணம் அரங்கேறியது..
கர்ணாவுக்கு என்ன நடக்கிறது என்று கூட தெரியவில்லை ஆனால் அவனது தோழி அவனுடன் இருக்கப் போகிறாள் என்ற செய்தி அவள் வழியாக அவன் கேட்டதும் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அதற்கு அவள் முன்பே கூறி இருக்கிறாள். " யார் கேட்டாலும் என்ன உனக்கு ரொம்ப புடிக்கும் சொல்லு" என்று கூற வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் யார் வந்தாலும் தனக்கு சாதனாவை ரொம்ப பிடிக்கும் என்று அவன் கூறவும் எல்லோரும் சந்தோஷமாக இருந்தால் சரி என்று ஒரு சாரார் கூறினர்..
மற்றவர்களோ, "எதுக்குங்க இந்த சின்ன பிள்ளையை பிடிச்சு இவனுக்கு போய் கல்யாணம் பண்ணி கொடுக்குறீங்க" என்று வினவ,
" எல்லோரும் என் நண்பனோட கடைசி ஆசை அதை நிறைவேற்றத்தான் நாங்க இப்படி செய்திருக்கோம்" என்று அவர்கள் நல்லவர்கள் போல எப்படி இதுவரை நடித்து கொண்டிருக்கிறார்களோ அதையே அவர்கள் வெளிப்படுத்திக்கொள்ள ஒரு வழியாக திருமணமும் முடிய அன்றிரவு தான் தன் வேலையை காட்ட துவங்கினாள் சாதனா..
இவனிடம் நயமாக பேசி அவனை தன் கைக்குள் போட்டு கொண்டவள், தனக்கு போய் இந்த மூளை இல்லாதவன் கணவனா இவன் அப்பா கிறுக்குத் தனமா ஒரு உயில் எழுதி வச்சதுக்கு நான் இவன் கையால் தாலி வாங்க வேண்டியதா இருக்கு என எண்ணியவள் அவனை இருட்டு அறையில் அடைத்து வைத்தாள்..
அவனும் இருட்டு என்றால் மிகவும் பயப்படுவான். "சாதனா சாதனா" என அவன் கத்த அவளோ காதிலேயே விழாதது போல பாட்டில் மூழ்கிப் போனாள். சிவகாமி அம்மாள் எதற்காக சத்தம் போடுகிறான் என கதவை தட்ட போக பார்வதியும் மங்கலமும் வந்து தடுத்து விட்டனர் பின் ஒரு வழியாக அவன் உறங்கிப்போக மறுநாள் முதல் அவனுக்கு காரமும் மிளகாயுமாக அரைத்து உணவில் கலந்து அவனை துன்புறுத்த துவங்கினர்..ஆம் சதாசிவம் குடும்பம் இங்கேயே தங்க துவங்கி விட்டனர்..
சிவகாமி அம்மா முதலில் என்னவோ ஏதோவென்று நினைக்க பிறகுதான் அவளின் குணத்தை பற்றி தெளிவாக புரிந்துக்கொண்டார்.ஏனெனில் கர்ணாவின் தவிப்பை கண்டவரும் உணவை கண்டாலே அவன் அலறியடித்து ஓடுவதை கண்டு அவன் வேண்டாம் என ஒதுக்கிய உணவை உண்டு பார்த்த சிவகாமி அம்மா அலற,
அவரோ, "என்னம்மா இது" என்று அவளிடம் வினவ அவள் திமிராக, " உன் வேலை என்னமோ அதை பார்த்துட்டு போ கிழவி" என்று கூறியவள் தன்னை விட வயது முதிர்ந்த பெண் என்று கூட பாராமல் அவரது கழுத்தை பிடித்து நெருக்கி, " இதோ பார் ஒதுங்கி இருந்தால் உனக்கு நல்லது" என்று கூறிவிட்டாள்.. பின் அவளது ஆட்டம் தான் அவனிடம் தாலி வாங்கியவள் அந்த மொத்த சொத்துக்கும் அதிபதியாகி விட அவனை தான் பாவம் இரவு ஆனால் இருட்டு அறை உணவே சரிவர கொடுக்காமலும் கொடுக்க விடாமலும் தடுத்து அவனை எலும்பும் தோலுமாக ஆக்கினாள் சாதனா.. பொறுத்து பொறுத்து பார்த்த சிவகாமியம்மா இங்கே இருந்தால் கர்ணாவை கொன்றாலும் கொன்று விடுவாள் அந்த பாவி என எண்ணி அவனை அழைத்து கொண்டு எங்கேயாவது சென்று விடலாம் என நினைத்து அவள் வெளியே சென்று இருக்கும் சமயம் பார்த்து யாருமில்லாத தருணம் பார்த்து கர்ணாவை அழைத்து கொண்டு செல்ல முனைய பாவம் அவர் மாட்டி கொண்டார்..
தன் தந்தையிடம் அவள் நடந்த விஷயத்தைக் கூற தணிகாசலம் மற்றும் சதாசிவம் சிவகாமி அம்மாவை அடித்து மிரட்டினர், " இதோ பார் இங்கே என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு நீ கவனிச்சிட்டு இருக்க உனக்கு இது தேவையில்லாத வேலை ஊர்ல இருக்க உன்னோட மக உயிரோட இருக்க வேண்டாமா மரியாதையா உன் வேலையே பாத்துட்டு போ இது உனக்கு சம்பந்தம் இல்லாத வேலை" என்று கூற அதைக் கேட்ட சிவகாமி அம்மா பயந்து விட்டார். காலம் போன கடைசியில் இவர்களிடம் அல்லல்பட அவர் விரும்பவில்லை மேலும் தனக்கு இருக்கும் மகளை கொன்றுவிடுவேன் என்று இவர்கள் மிரட்டவும் அவர் அங்கிருந்து நழுவிக்கொண்டார்..
அவரது மனம் முழுக்க கர்ணா படும்பாட்டை எண்ணி குமுற அந்த வயதான பெண்மணிக்கு என்ன செய்ய இயலும் வெளியே யாரிடம் கூறினாலும் பிறகு தன் குடும்பம் உயிரோடு இருக்காது என மிரட்ட இங்கே இருந்து ஓடுவதை தவிர அவரால் என்ன செய்ய இயலும், " கர்ணா என்ன மன்னிச்சிடு பா உன்கிட்ட தின்ன சோத்துக்கு என்னால விசுவாசமா இருக்க முடியலை யா" என்று கூறிக்கொண்டே அந்த வயதான பெண்மணி அந்த வீட்டை விட்டு வெளியேறினார் ..
பிறகு கர்ணாவை கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுக்காமலும் இருட்டு அறையில் அடைத்து வைத்து விஷ ஜந்துக்களை உள்ளே விட்டும் அணு அணுவாக சித்ரவதை செய்தனர்..அவள் வீட்டு நாயை விட்டெல்லாம் அவனை கடிக்க வைத்து துன்புறுத்தி அதில் இன்பம் கண்டனர்..அவன் துடிப்பதை பார்த்து ரசித்தனர்..
அந்த வளர்ந்த குழந்தையை என்னவெல்லாம் செய்ய இயலுமோ அதுபோல எல்லாம் தண்டித்தனர்.. கிட்டத்தட்ட அவனை அடையாளம் தெரியாதது போல மாற்றினர் என்றே கூறலாம் பிறகு அவனை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக அழைத்து சென்று ஒரு ரயிலில் ஏற்றி ஊர் பெயர் தெரியாத இடத்தில் கொண்டு சென்று ரயிலில் இருந்து தள்ளி விட்டு கொன்றனர்..
பாவம் ரயில் போகும் வேகத்தை கண்டு பயந்த கர்ணாவை, " வா கர்ணா உனக்கு ரயில் பிடிக்கும் தானே அங்கே பார்" என கூறி அவனை அவள் தான் தள்ளி விட்டு கொன்றாள்.. வேறு யாரும் அழைத்து வந்து இருந்தால் வந்து இருப்பானோ என்னவோ ஆனால் இவள் அழைத்து வரவும் பாவம் அவன் நம்பி வர அவனை கொன்றே விட்டாள் இந்த படுபாவி..மறுநாள் அவன் இறந்து விட்டான் என்ற செய்தியில் ஊரே அதிரும்படி நடித்து அனைவரின் அனுதாபத்தை பெற்றாள் அந்த நயவஞ்சகி..
இறந்தது இவன் என்றால் இப்போது இவளையும் இவள் குடும்பத்தையும் பழி தீர்த்துக் கொண்டிருப்பது யாரோ??? அந்த மாயவன் யார்??? எதற்காக இந்த அவதாரம்?? ...
